தென்றல் வந்து என்னைத் தொடும் பகுதி-29

“தொர!” அழைத்த அம்மாவிடம் வாசல் வராண்டாவில் அமர்ந்திருந்த துரை “என்னா?” என்றான்.

“நா தையக் கடவர போயிட்டு வரேன். ஜாக்கெட் தைக்கக் குடுத்து பத்து நாளாகப் போவுது. இதோ அதோங்கிறா ஜோதி குடுக்க மாட்டேங்குறா.

ஊருக்கு போனேங்க்காங்குறா ரெண்டுநாளா காச்சலுங்குறா எதாச்சும் சாக்கு போக்கு சொல்லிக்கிட்டே இருக்குறா. தச்சுக் குடுக்கப் போறியா இல்லியா இல்லாட்டித் துணியக் குடுத்துடுன்னு சொல்லிடறேன்.

முன்னமாரி இல்ல ஜோதி! நெறையா பேரு துணி குடுக்கவும் பழகின எனக்கே சாக்கு போக்கு சொல்லுறா!” என்று புலம்பினார் அம்புஜம்மா.

“சரி சரி போய்ட்டு வா!” என்றான் துரை.

“வைஷாலிய பாத்துக்க கண்ணாடிய ஒடச்சாப்புல எதையாச்சும் ஒடச்சி வெச்சுடப் போறா!” சொல்லிக் கொண்டே வாசல் கேட்டைத் திறந்தவரின் பின்னால் ஓடினாள் வைஷாலி.

“நீ எங்க வர? போ உள்ள!” அதட்டினார்.

“சாக்கி!” என்றாள் அம்மாவிடம்.

“போ! போ! இதான் வேல” சத்தம் போட்டு விட்டுக் கேட்டைச் சாத்திக் கொண்டு நடந்தார் அம்புஜம்மா.

‘உம்’மென்று முகம்மாறியது வைஷாலிக்கு. உள்ளே சென்றவள் டிவியை ஆன் செய்து அலறவிட்டாள்.

அம்மா சாக்கி வாங்கி வருவதாய்ச் சொல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் ஹாலில் இங்குமங்குமாய் நடந்தாள்.

சட்டென என்ன தோன்றியதோ பார்வை திறந்து கிடந்த நிமிஷாவின் அறைக்குள்ளிருந்த பீரோவின் மீது சென்றது.

நிமிஷா சேரைக் கொண்டு போய் பீரோவின் அருகில் போட்டதும் அதன் மீது ஏறி பீரோவின் மேல் கை நீட்டியதும் கையை எடுத்ததும் கையில் சாக்லேட் பை வந்ததும் அதிலிருந்து நிமிஷாக்கா தனக்கு சாக்லெட் எடுத்துக் குடுத்ததும் என்று துண்டு துண்டாய் ஞாபகம் வந்தது வைஷாலிக்கு.

கூடவே சாக்லெட் பையைத் தன்னிடமிருந்து பிடுங்கி மீண்டும் சேரை பீரோ அருகில் போட்டு ஏறி நின்று சாக்லெட் பையை நிமிஷாக்கா பீரோ மீது வைத்ததும் ஞாபகம் வந்தது வைஷாலிக்கு.

ஹாலில் கிடந்த சேரை ‘தரதர’வென்று இழுத்துக் கொண்டே நிமிஷாவின் அறைக்குச் சென்று பீரோவின் அருகில் போட்டாள்.

டிவி சப்தமாய் அலறிக் கொண்டிருந்ததால் நாற்காலி இழுக்கப்படும் சப்தம் வாசலில் அமர்ந்திருந்த துரையின் காதில் விழவில்லை.

பீரோவின் அருகில் நாற்காலியை வைத்தவள் நாற்காலியின் ஒருபக்கக் கையைப் பிடித்துக் கொண்டு நாற்காலியில் ஏற முயல நாற்காலி ஒருபக்கமாய் ஓரியடித்து சாய்ந்தது.

எப்படியோ சமாளித்து நாற்காலிமீது ஏறி நின்றாள். பீரோவின் மீது சாக்லேட் பை இருக்கிறதா என்று எம்பி எட்டிப் பார்த்தாள். கண்ணுக்கு எதுவும் படவில்லை.

நாற்காலியில் இரண்டு கால் விரல்களை மட்டும் வைத்து எக்கி எக்கி எம்பி எம்பி பீரோமீது பார்த்தவளின் கண்களில் பட்டது கோடியில் தள்ளினாற்போல் வைத்திருந்த சாக்லெட் பை.

ஆதி நிமிஷாவிடம் ஷாப்பிங்மாலில் வாங்கித் தந்திருந்த நாலு சாக்லெட்கள் அடங்கிய கேரிபேக்.

வைஷாலிக்கு நிமிஷா செய்தது ஞாபகம் வந்தது. வலது கையை நீட்டித் துழாவி கேரிபேக்கை எடுக்க முயன்றாள்.

ம்கூம் எட்டவில்லை. இடது கையை பீரோவின் தலை விளிம்பில் வைத்துக் கொண்டு எம்பி எம்பி
பையை எடுக்க முயன்றாள்.

பீரோ ஆடியது. பைக்குள் சாக்லேட் இருப்பது தெரிந்து போனதால் அதை எடுக்க வேண்டுமென்ற வெறி உண்டானது. மேலும் மேலும் வேகம் காட்டினாள்.

இவள் வேகம் காட்டக் காட்ட பீரோ வேகமாக ஆடியது. மிகவும் பழைய பீரோ என்பதால் அதன் கால்கள் ஏற்கனவே துருப்பிடித்துக் கிடந்ததால் ஆடும் பீரோவின் வேகத்தை அதன் கால்களால் தாங்க முடியவில்லை.

ம்கூம்.. என்ன முயன்றும் கேரிபேக் வைஷாலியின் கைக்கு அகப்படவில்லை; வெறியானாள் வைஷாலி.

‘எப்படியும் கேரிபேக்கை எடுத்துவிட வேண்டும்’ என்ற வெறியில், நாற்காலியின் ஒருபக்கக் கை மீது ஒருகாலை வைத்து மற்றொரு காலைச் சற்றே தூக்க நாற்காலி சாய, பீரோவின் தலை விளிம்பிலிருந்த இடதுகையை
பீரோவை அழுத்த, பட்டென முறிந்தன பீரோவின் துருப்பிடித்திருந்த நான்கு கால்களும்.

பீரோ முன்புறமாய் சாய்ந்து வைஷாலிமீது சாய நாற்காலி உடைய கீழே விழுந்தாள் வைஷாலி.

பழைய காலத்து கனமான பீரோ வைஷாலி மீது சாய்ந்து அவளைக் கீழே தள்ளி அவள் மீது குப்புறவிழுந்து கிடந்தது.

“ஆ!” என்ற அலறல் சப்தம் எழுந்து அடங்க ரத்தம் தரையை நனைத்து ஓடி அறையின் கதவின் அடிப்புறமாய் வெளியேறி ஹாலுக்குள் பிரவேசித்தது.

கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வர இருந்த அம்புஜம்மா பக்கத்து வீட்டுப் பெண்மணியைப் பார்த்துவிட்டு அவருடன் நின்று பத்து நிமிடம் பேசினார்.

பேசி முடித்துவிட்டு உள்ளே செல்ல நடந்தவர் “டிவிய ஏந்தான் இப்பிடி அலற விட்ருக்காளோ இந்த வைஷாலி!” என்று சொல்லிக் கொண்டே ஹாலுக்குள் கால் வைத்தார்.

நிமிஷாவின் அறையிலிருந்து ஓடி வந்து கொண்டிருந்த ரத்தத்தைப் பார்த்து அலறினார் அம்புஜம்மா.தெருவே வந்து கூடி நின்றது.

ஆம்புலன்ஸ் வந்து நிற்க அதில் நினைவின்றிக் கிடந்த வைஷாலி ஏற்றப்பட்டாள்.

“நிமிஷாவுக்கு ஃபோன் செய்யி தொர!” கத்தினார் அம்புஜம்மா.

துரை நிமிஷாவுக்குப் ஃபோன் செய்து செய்து பார்த்தான். ‘ஸ்விட்ச்ஸாஃப்’ என்றே வந்தது.

அரசு மருத்துவமனை. வைஷாலியைச்சுற்றி நான்கைந்து மருத்துவர்கள் நின்றனர்.

ஆளாளுக்கும் ஆங்கிலத்தில் ஏதோ சொன்னார்கள்.

‘எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க வேண்டும். சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டும்’ என்றார்கள்.

அம்புஜம்மாளுக்கோ கருணாகரனுக்கோ எதுவும் புரியவில்லை.

மருத்துவமனையில் ஸ்கேனிங் மெஷின் பழுதடைந்துள்ளதால் தனியார் மருத்துவமனைக்கு வைஷாலியை கொண்டு செல்லச் சொல்லி முதலுதவி மட்டும் செய்து உடனடியாய் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி சொன்னார்கள்.

வைஷாலியை வீட்டிலிருந்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வர ஆம்புலன்ஸ் டிரைவர் கேட்ட பணத்தைக் கொடுக்கவே தவித்தவர்கள் மீண்டும் ஆம்புலன்ஸில் போனால் டிரைவருக்குப் பணம் தரவே காசில்லை..

இதில் ஸ்கேன் எடுக்கப் பணம்? அதுவும் தனியார் மருத்துவமனையில்?

கையைப் பிசைந்துகொண்டு நின்றார்கள் கருணாகரனும் அம்புஜாம்மாளும்.

என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார்கள்.

‘நிமிஷா வராமல் எதுவும் செய்ய முடியாது!’ என்று உணர்ந்தபோதுதான் கருணாகரனுக்குத் தன் கையாலாகாத்தனமும் நிமிஷாவின் முக்கியத்துவமும்
புரிய ஆரம்பித்தது.

நிமிடங்கள் கரைந்து கொண்டிருந்தன.

செங்கல்பட்டு ரெயில்வே ஸ்டேஷனில் இறங்கினாள் நிமிஷா.

வழக்கமாய் ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்தவுடன் வைஷாலியின் நினைவு வரும்.

வீட்டுக்குள் நுழைந்ததுமே வைஷாலி “நிமிக்கா! நிமிக்கா!” என்று ஓடி வருவாள் நிமிஷா அவளுக்குத் தின்ன ஏதாவது வாங்கி வருவாளென்று.

பெரும்பாலும் கடையில் எதாவது வாங்கிச் செல்வது நிமிஷாவின் வழக்கம்தான்.

ஆனாலும் இப்போது நிமிஷாவின் மனமிருந்த நிலையில் வைஷாலியின் நினைப்பெல்லாம் தோன்றவே இல்லை.

கால்கள் தினம் தினம் ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்குப் போய்ப் போய் பழக்கப்பட்டிருந்ததால் அவைபாட்டுக்குத் தாமாகவே வீடு நோக்கி நடந்தன.

கேட்டில் கை வைத்ததுமே நிமிஷாவைப் பார்த்து விட்டுக் கதறினான் துரை.

“அக்கா! அக்கா!” கதறினான்.

நொடி நேரத்தில் பயந்து போனாள் நிமிஷா.

“தொர! தொர! என்னாச்சு தொர?” துரையை நோக்கி ஓடினாள்.

“அக்கா! அக்கா! வைஷாலி! வைஷாலி!”

“ஐயோ! வைஷாலிக்கு என்னாச்சு? என்னாச்சு தொர!” பயத்தில் கத்தினாள்.

“அக்கா! வைஷாலி மேல ஒ ரூமுல இருக்குற பீரோ விழுந்திடுச்சி. தலேல அடிபட்டு ரத்தமா கொட்டி
வைஷாலி மயக்கம் போட்டுட்டா!

ஆம்புலன்ஸ் வந்து ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போயிருக்காங்க..ஒனக்கு அம்பது தடவயாச்சும் ஃபோன் பண்ணிருப்பேன். சுச்சாப்னே வந்திச்சிக்கா!” கதறினான் துரை.

வாய்விட்டுக் கதற ஆரம்பித்தாள் நிமிஷா.

நிமிஷாவின் அழுகுரல் கேட்டுப் பக்கத்து வீட்டுப் பெண் ஓடி வந்தாள்.

“நிமிஷா, அழாத நிமிஷா!” என்று ஆறுதலாய்ச் சொன்னவர் “நிமிஷா வா! நா வண்டில ஹாஸ்பிடல் வர கொண்டு விடுறேன்!” என்றபடி வண்டியை எடுத்து வர வீட்டிற்குச் சென்றார்.

வைஷாலி மீது அதிக பாசம் வைத்திருப்பவள் நிமிஷா

‘சின்னதாய் நகம் பிய்ந்து வலித்தால்கூட தன்னிடம் காட்டிக் காட்டி அழும் வைஷாலி பீரோ விழுந்து தலையில் அடிபட்டு ரத்தமாய்க் கொட்டியபோது வைஷாலிக்கு எப்படி வலித்திருக்கும்!’ நெஞ்சு விம்ம அழுதாள் நிமிஷா.

அழுதவளுக்கு சட்டென ‘வைஷாலியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டால் போதுமா? செலவுக்குப் பணம்?’

பணத்தைப் பற்றிய எண்ணம் தோன்ற பயந்து போனாள் நிமிஷா.

தேதி பதினஞ்சாகப் போகுது. சம்பளப் பணத்தை வீட்டுச் செலவுக்கு அம்மாவிடம் கொடுத்தது போக மிச்சம் எவ்வளவு இருந்துவிடப் போகிறது நிமிஷாவிடம்.

ஹேண்ட் பேக்கைத் திறந்து பார்த்தபோது வெறும் எண்ணூறு ரூபாய் மட்டுமே மீதி பதினைந்து நாட்களுக்கான செலவுக்காய் இருக்க பயந்தே போனாள் நிமிஷா.நிச்சயமாய் அம்மா கையில் பணமே இருக்காது.

ஏற்கனவே தீக்ஷிதாவை அவள் மாமியார் வீட்டிலிருந்து அழைத்து வர மீண்டும் கொண்டுவிட என்று கையிலிருந்த மாச செலவுக்கான பணமெல்லாம் தீர்ந்து விட்டதாய் மூக்காலழுதது ஞாபகம் வந்தது நிமிஷாவுக்கு.

‘பணத்துக்கு என்ன செய்வது?’ என்ற பயம் நிமிஷாவை தவிக்க வைத்தது.

வாசலில் பக்கத்து வீட்டுப் பெண் ஸ்கூட்டியுடன் வந்து நின்று “நிமிஷா வரீங்களா!” குரல் கொடுக்க, “மீனுக்கா ஒருநிமிஷம்!” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் நிமிஷா.

தனது அறைக்குள்ளிருந்து ஹால் வரை வந்து உறைந்து கிடந்த ரத்தம் பார்த்து மீண்டும் அழுதாள் நிமிஷா. “வைஷாலி!” என்றாள் அழுகையுடன்.

ரத்தத்தில் கால் வைக்காமல் வெகு ஜாக்கிரதையாய் அறைக்குள் நுழைந்தாள்.

அறையில் ப்ளாஸ்டிக் சேர் தரையில் உடைந்து கிடக்க, நான்கு கால்களும் முறிந்து போய் தரையோடு தரையாய் நின்றிருந்தது பீரோ.

வைஷாலியை பீரோவுக்கு அடியிலிருந்து எடுக்க பீரோவை நிமிர்த்தி நிறுத்தியிருக்க வேண்டும்.

அதன் முன்புறம் தரையில் ரத்தம் உறைந்து போய் தேங்கிக் கிடக்க ஈக்கள் மொய்த்துக் கொண்டு கிடந்தன.
அழுதாள் நிமிஷா.

ரத்தக் குட்டையில் கால்படாமல் தாண்டி கப்போர்டு அருகில் சென்றாள்.

கப்போர்டிலிருந்து சாதாரண ப்ளாஸ்டிக் மணிமாலை ஒன்றை எடுத்து கழுத்தில் போட்டுக் கொண்டு, கழுத்திலிருந்த மூன்று பவுன் செயினைக் கழற்றி ஹேண்ட் பேக்கில் போட்டுக் கொண்டாள்.

செல்ஃபோன் அழைத்தது.

“அம்மா!” என்றாள்.

“நிமிஷா!” அழைத்தபடியே அம்மா அழுதாள்..

“அம்மா அழாத! நா வீட்டுக்கு வந்துட்டேன். இதோ அங்க வர கிளம்பிட்டேன்!”

வாசலுக்கு வந்தாள்.

“தொர சாப்டியா?”

“வேண்டாக்கா!” அழுதழுது முகம் வீங்கிக் கிடந்தது துரைக்கு.

“ம்கூம்!.பட்னில்லாம் கெடக்காத! நாங்க ஹாஸ்பிடல்லே எப்ப வருவமோ! ஸ்விக்கில ஆர்டர் போடுறேன். சாப்பாடு வரும். இந்தா!” முன்னூறு ரூபாயை துரையிடம் நீட்டினாள்.

“அக்கா வேண்டாக்கா!” மறுத்தான் துரை.

வலுக்கட்டாயமாய் அவன் கையில் பணத்தைத் திணித்துவிட்டு வாசலுக்கு வந்து மீனுவின் ஸ்கூட்டியில் ஏறினாள்.

“அக்கா!”

“சொல்லு நிமிஷா!”

“அக்கா! ஹாஸ்பிடல் செலவுக்குப் பணம் வேணுமில்லக்கா. செயின் ஒன்னு இருக்கு அத நகைக் கடைலன்னா குடுத்து வித்துடலாம்னு நெனைக்கிறேன். நகைக்கடை எதுக்குனா போவமா?”

“ப்ச்! பாவம் நிமிஷா நீ!. ரொம்ப பாவம் நீ!” நிஜமான பச்சாதாபம் இருந்தது பக்கத்து வீட்டு மீனுக்காவின் குரலில்.

நகைக்கடை.உள்ளே நுழைந்து ஹேண்ட் பேக்கிலிருந்து செயினை எடுத்தபோது ஃபோன் ஸ்கிரீன் ஒளிர ‘அம்மாவோ!’ என்று பார்த்தாள் நிமிஷா. ‘ஆதி!’

ரிங் ஒலித்து முடியும் வரை எடுக்காமலிருந்தாள். மதியம் மணி மூன்றாகும் இந்த நேரம் வரை பதினெட்டு முறை கால் செய்திருந்தான் ஆதி. ஒலித்து முடிந்து மீண்டும் ஒலித்தது. ஸ்விட்ச் ஆஃப் செய்தாள்.

“நிமிஷா ஃபோன் வந்துகிட்டே இருக்கு ஏன் எடுக்கல? அம்மாவா இருக்கப் போவுது!” என்றார் பக்கத்து வீட்டுப்பெண் மீனுக்கா.

“இல்ல ஆஃபீஸ்லேந்து!”

பிரபலமான அந்த நகைக்கடையில் மூன்று பவுன் செயினை இரண்டரைப் பவுன் இருப்பதாய்ச் சொன்னார்கள்; பழைய பவுன் என்றார்கள்; இத்தனை சதவிகிதம் சேதாரம்
என்றார்கள்.

கடைசியாய் “அறுபதாயிரத்திற்குதான் போகும்!” என்றார்கள் அநியாயமாய்.

வேறு வழியில்லை. அடுத்தடுத்த கடைக்குச் செல்லவெல்லாம் நேரமில்லை.

பணத்தை வாங்கிக் கொண்டு மீனுக்காவின் வண்டியில் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தபோது அம்புஜம்மா நிமிஷாவைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

தலையில் பெரிய கட்டோடு சுயநினைவின்றி ஸ்ட்ரெக்சரில் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டி கிடந்தாள் வைஷாலி.

கதறினாள் நிமிஷா.

தனியார் மருத்துவமனை.

சி.டி. ஸ்கேன் சாதாரணமாய் ஐயாயிரம்தான் என்ற நிலையில் ஏழாயிரம் என்று கூசாமல் சார்ஜ் செய்தார்கள். பணம் தண்ணீராய்க் கரைந்தது.

வைஷாலிக்குப் ப்ரெய்ன் ஹெமரேஜ் என்ற நிலையில் கோமா ஸ்டேஜுக்குச் சென்றதை மருத்துவமனை மறைத்தது. முடிந்தவரை பணம் பறிக்க முயன்றது.

அன்று மாலை ஏழுமணிக்குள் கையில் வெறும் இருபதாயிரமே இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாள் நிமிஷா.

பயமாய் இருந்தது நிமிஷாவுக்கு. இருபதாயிரமும் தீர்ந்துவிட்டால் விற்பதற்கு ஏதுமில்லை.தவிப்பாய் இருந்தது.

கவலையோடு நாற்காலியில் அமர்ந்திருந்த நிமிஷாவை நெருங்கினார் அந்த மருத்துவமனையில் வேலைபார்க்கும் நர்ஸ் ஒருவர்.

“ஹலோ!” என்றார் தணிந்த குரலில். தலை குனிந்த யோசனையாய் அமர்ந்திருந்த நிமிஷாவிடம்.

நிமிர்ந்து பார்த்த நிமிஷாவிடம் சுற்றும் முற்றும் பார்த்தபடி “த பாரும்மா வைஷாலிங்கிறது!”

“என் தங்கச்சி!”

“நா சொன்னதா சொல்லிடாதிங்க. ஒங்க தங்கச்சிய டிஸ்சார்ஜ் பண்ணி அழச்சிட்டுப் போயிடுங்க .

இல்ல லட்சக்கணக்குல பணம் வெச்சுருந்தீங்கன்னா இங்க வெச்சு ட்ரீட்மென்ட் குடுங்க. தயவு செய்து என்னக் காட்டிக் குடுத்துடாதிங்க!” சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள் வைஷாலி.

தற்போது நிமிஷாவின் கையிருப்பு வெறும் ஐந்தாயிரம் மட்டுமே.

இரவு மணி ஒன்பது. வீட்டிலிருந்து நிமிஷாவுக்கு கருணாகரன் சாப்பாடு கொண்டு வந்தார்.

நிறைய மாறிப் போயிருந்தார்.

“நிமிஷா!” என்றார்.

“நிமிஷா என்ன மன்னிச்சுடும்மா!” என்றார்.

அந்த ‘மன்னிச்சுடுமா!’ என்ற ஒற்றை வார்த்தை கருணாகரனின் மாற்றத்தைக் காட்டியது.

“நிமிஷா! ஒன்னு ஒங்கிட்ட சொல்லனும்!”

முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அவரைப் பார்த்தாள் நிமிஷா.

பின்னர் வைஷாலி படுக்க வைக்கப் பட்டிருந்த அறையின் வாசலில் போடப்பட்டிருந்த நாற்காலியில் போய் அமர்ந்து கொண்டாள்.

கருணாகரனிடம் அம்மா கொடுத்தனுப்பிய சாப்பாட்டை சாப்பிடவும் பிடிக்கவில்லை நிமிஷாவுக்கு.

இரவு மணி பத்து.

மனதுக்கு எதுவும் பிடிக்கவில்லை. மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் தன் அறையில் படுக்கையில் அமர்ந்திருந்தான் ஆதி.

“நேத்திலேந்து கிட்டத்தட்ட நூறு தடவ உனக்கு ஃபோன் பண்ணிட்டேன் நிமிஷா! ஏன் எடுக்கவே மாட்டேங்கிற?

நிமிஷா! முந்தா நாளு நைட் ஃபோன் பண்றேன்னு சொன்னேந்தா! ஆனா ஃபோன் பண்ண முடியாத நெலமைல நா இருந்தேன் தெரியுமா நிமிஷா உனக்கு?

நேத்து ஞாயித்துக் கெழம சாயந்திரம் ஏழு மணி வர நா
சூழ்நிலைக் கைதியா இருந்தேன் தெரியுமா நிமிஷா!

எல்லா காரணத்தையும் உங்கிட்ட சொல்லிடனும். நா ஒரு பொண்ணுக்கு ஒதவ வேண்டி வர்ர சனிக்கிழம
நைட் வர ஒருநாடகத்துல நடிக்கப்போறேன்னு சொல்லனும்னு எத்தன தடவ உனக்கு ஃபோன் பண்ணேந் தெரியுமா நிமிஷா?

உன் ஃபோனு ஸ்விட்ச் ஆஃப்லயே இருந்துது நிமிஷா. ஆன்ல எப்பவாவது இருக்கும். அப்ப பண்ணினா எடுக்கவே மாட்டேங்கிற நிமிஷா. எனக்கு பயமா கவலையா இருக்கு நிமிஷா..

இன்னிக்கு சாயந்திரம்கூட நீ ஆஃபீஸ் விட்டு வந்து பீச் ஸ்டேஷன்ல உன்னப் பாக்கலாம்னு அஞ்சர மணிக்கே பீச் ஸ்டேஷன்ல வந்து ஒக்காந்திருந்தேன்.ஏழு மணி வரைக்கும் ஒக்காந்திருந்தேன். நீ வரவே இல்ல நிமிஷா.

தெரியுமா நிமிஷா? அந்த அஞ்சர டு ஏழு மணி வர எத்தன தடவ உனக்கு ஃபோன் பண்ணேன்னு?

வாட்ஸப் மெஸேஜ். வாய்ஸ் மெஸேஜ்னு எத்தன அனுப்பினேன்.எதையும் நீ பாக்கவே இல்ல நிமிஷா. நா என்ன நிமிஷா தப்பு பண்ணினேன்?” தனக்குத்தானே பேசிக் கொண்டு புலம்பித் தள்ளினான் ஆதி.

நிமிஷாவின் செல்ஃபோன் ஆனில் இருப்பது கண்டு அவசரமாய் ஆர்வமாய் கால் செய்தான்.

ரிங் போனது.

‘நிமிஷா! எடுங்க நிமிஷா! ப்ளீஸ் நிமிஷா! ப்ளீஸ் நிமிஷா!” வாய்விட்டுக் கெஞ்சினான் ஆதி.

மருத்துவமனை நாற்காலியில் கண்மூடி கவலையோடு அமர்ந்திருந்த நிமிஷா கண்களைத் திறந்து ஒளிரும் செல்லைப் பாத்தாள்.

‘ஆதி!’; அழைப்பைக் கட் செய்தாள்.

“நிமிஷா!” என்றபடி தலையில் கை வைத்துக் கொண்டான் ஆதி. அழுது விடுவான் போலிருந்தது. இனம் தெரியாத பயம் மனதில் பற்றிக் கொண்டது.

(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

Comments

“தென்றல் வந்து என்னைத் தொடும் பகுதி-29” மீது ஒரு மறுமொழி

  1. […] தென்றல் வந்து என்னைத் தொடும் பகுதி-29 […]

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.