இரவு மணி பதினொன்று. படுக்கையில் படுக்கக்கூட இல்லாமல் உட்கார்ந்தே இருந்தான் ஆதி.
“நிமிஷா! நா என்ன தப்பு பண்ணிட்டேன்னு இவ்வளவு கோவமா இருக்கீங்க நிமிஷா? சனிக்கிழம நைட்டுகூட நா ஒங்குளுக்கு கால் பண்ணேனே நிமிஷா?
ஆனா ஞாயித்துக் கெழம சாயந்திரம் வர ஒங்குளுக்குப் ஃபோன் பண்ணலங்குறது நிஜம்தான் நிமிஷா! நீங்க எங்கப்பா, அம்மா நம்ம காதல ஏத்துக்குலயோன்னு பயந்திருப்பீங்க!
அதுனாலதான் நாப்பத் ரெண்டு தடவ எனக்குக் கால் பண்ணிருக்கீங்க. பாத்தேன் நிமிஷா! ஸாரி நிமிஷா! நா வேணும்னு ஒங்குளுக்குக் கால் பண்ணாம இருப்பேனா?
என்னால ஒங்குளுக்கு கால் பண்ண முடியாத சூழ்நில நிமிஷா! இல்லாட்டி ஒங்குளுக்கு ஃபோன் பண்ணாம ஆதி இருக்க மாட்டேன்ல? அது ஒங்குளுக்கே தெரியும்ல?
அப்புறம் ஏ நிமிஷா இப்பிடி கோச்சுகிட்ருக்கீங்க? நா கால் பண்ணப் பண்ண ஏன் எடுக்காம இவ்வளவு பெரிய தண்டனைய குடுக்குறீங்க நிமிஷா?” தனக்குத்தானே பேசிக் கொண்டான் ஆதி.
‘ஆதி பேசி முடிச்சிட்டியா? புலம்பி முடிச்சாச்சா? நீ என்னமோ ரொம்ப ஒழுங்குமாறி! நீ ஃபோன் பண்ணப் பண்ண நிமிஷா ஏன் எடுக்கலன்னு பொலம்பித் தள்ளுற? நா ஒன்னு கேக்குறேன் பதில் சொல்லேன்.
நிமிஷாவ ஏத்துக்க மாட்டோம். மானஸாவதா நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லி ஒன்னப் பெத்தவங்க ஒன்ன கம்ப்பெல் பண்ணப்ப நீ மாட்டேனுதான் சொன்ன.
ஆனா அவுங்க தூக்க மாத்ர சாப்ட்டு செத்துடுவோம்னு சொல்லி மிரட்டினப்ப, அப்பவும் நீ தைரியமா நிமிஷாவதா கல்யாணம் பண்ணுவேன்னு உறுதியா இருந்தியா? பயந்திட்டீல்ல?
பெத்தவங்க மெரட்டலுக்குப் பயந்து பலியாடு மாதிரி அவுங்க பின்னாடி மானஸாவ பொண்ணு பாக்க போனதானே?
ஏதோ ஒன் நல்ல நேரம் மானஸா அமெரிக்கவுல தான் அமெரிக்கன் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டதா சொல்லிச்சோ நீ தப்பிச்சியோ? இல்லாட்டி அது கல்யாணம் பண்ணாம இருந்து ஒன்ன புடிச்சிருக்குறதா சொல்லிடுச் சின்னா ஒன் நெலம என்னாகியிருக்கும்?
பெத்தவங்க மெரட்டலுக்கு பயந்த நீ மானஸாவுக்குத் தானே தாலி கட்டிருப்ப? அப்ப நிமிஷா நெலம அம்போதானே?
ஒனக்கும் மானஸாவுக்கும் கல்யாணம் அப்பிடினு உறுதியாகியிருந்தா அதுக்கப்புறம் நிமிஷாவோட ஃபோன நீ எதிர்பாப்பியா? இல்ல நீதான் நிமிஷாக்குப் கால் பண்ணுவியா?
பெத்தவங்க பயமுறுத்தலுக்குப் பணிஞ்சி நிமிஷாவ கை கழுவகூட ரெடியாதானே இருந்த? என்ன ஆம்பள நீ?’
முகத்திலடிப்பதுபோல் கேவலம் கேவலமாய்ப் பேசி கழுவிக் கழுவி ஊற்றியது மனசு.
மனசின் அப்பட்டமான கேள்வியால் அப்படியே வெலவெலத்துப் போனான் ஆதி.
மனசு கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்தான் ஆதி; இரவு முழுதும் உறங்கவில்லை.
காலை வழக்கம்போல் அப்பாவோடும் நிச்சயதார்த்தத்துக்காக முன்கூட்டியே வந்திருந்த நெருங்கிய சொந்தங்கள் சிலபேர் வந்திருக்க அவர்களோடும் அமர்ந்து டிஃபன் சாப்பிட்டான்.
சாப்பிடும்போது மானஸவிடமிருந்து வந்த ஃபோன் காலை அட்டென்ட் செய்து சிரித்துப் பேசினான். “டிஃபன் சாப்ட்டாச்சா! என்ன டிஃபன்?” என்று கேட்டான்.
பேசி வைத்தபடி இருவருமே நடித்தார்கள். உறவுகளின் கிண்டல் கேலிகளை நாணப்பட்டு ஏற்று நடித்துச் சிரித்தான். மனம் மட்டும் ரணமாகியிருந்தது.
மணி பதினொன்று. அலுவலகம் பிஸியாக இருந்தது. நிமிஷாவின் இடம் காலியாக இருந்தது.
‘ம்.. நிமிஷா நீ ஆஃபீஸ் வரமாட்டேன்னு நெனைச்சேன். எப்டி வருவா? காதலிச்சவ அம்போனு கைவிட்டுட்டான்ல! அத நெனச்சி அழதானே நேரமிருக்கும். அழு! அழு! தகுதிக்கு மேல ஆசப்பட்டா இப்பிடித்தான்!’ ப்ரியம்வதா மனதுக்குள் சந்தோஷப்பட்டாள்.
மேனேஜர் அறை. கம்ப்யூட்டரில் பார்வையைப் பதித்திருந்தவர் பக்கத்திலிருந்த செல் அழைக்கவும் பார்வையைத் திருப்பி செல்மீது பதித்தார். எம்.டி.ஆதித்யா.
“ஹலோ! எம்.டி.சார்! குட் மார்னிங்! கங்ராஜுலேஷன்ஸ்.! வர்ர இருதாம் தேதி ஒங்களுக்கு கல்யாண நிச்சயதார்த்தம்னு ஒங்க ஃபாதர் சொன்னாரு. ரொம்ப சந்தோஷம்! வாழ்த்துக்கள் எம்.டி.சார்! நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்!” மேனேஜரின் குரலில் சந்தோஷம் வழிந்தது.
அதிர்ந்து போனான் ஆதி.
அதிர்ச்சியைக் குரலில் காட்டாமல் “ரொம்ப நன்றி மேனேஜர் சார்! அப்பா சொல்லிட்டாரா! எப்ப சொன்னாரு?”
“நேத்து காலேல சொன்னாரு. ஆஃபீஸ்ல எல்லாருக்கும் சொல்லிடும்படி சொன்னாரு. ஒங்க வருங்கால மனைவி பேரு மிஸ் மானஸான்னும் அவுங்க மருத்துப் படிப்பு படிச்சிருப்பதாவும் சொன்னாரு!”
அடிவயிற்றில் ‘பகீரெ’ன்றது ஆதிக்கு.
“ஆஃபீஸ்ல எல்லாருக்கும் சொல்லிட்டீங்களா?”
“சார் பதினொன்னு முப்பத்தஞ்சுக்கு விஷயத்த சொன்னாரு! நா பதினொன்னு நாப்பதுக்கெல்லாம் ஹாலுக்கு வந்து மைக் வெக்காத கொறையா சத்தமா ‘யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்!’னு சொல்லி எல்லார் காதுலயும் விழுறாப்புல சொல்லீட்டேன்ல! சந்தோஷ சமாசாரம் இல்லையா?” சிரித்தார் மேனேஜர்.
வேர்க்க ஆரம்பித்தது ஆதிக்கு.
“நேத்து யாரும் லீவுல்ல?”
“இல்ல எல்லாரும் வந்திருந்தாங்க! ஆனா, நிமிஷாப் பொண்ணுதா தீடீர்னு ஒடம்பு முடியலன்னு சொல்லி அரைநாள் லீவு போட்டுட்டு ஒருமணிக்கெல்லாம் போய்ட்டாங்க..ரொம்ப முடியல போல மொகமே வாடியிருந்திச்சி பாவம்!”
‘அய்யோ!’ என்றது ஆதியின் மனம்.
“எம்.டி.சார் இன்னொரு விஷயம். மிஸ் நிமிஷாவ மதுரவாயல் பிராஞ்சுக்கு மாத்தியிருக்குறாதா ஒங்க ஃபாதர் மெயில் அனுப்பிருக்காரு.
எனக்கு ஒன்னும் புரியல. ஆனா நிமிஷாப் பொண்ணு இன்னிக்கு ஆஃபீஸ் வல்ல; லீவும் சொல்லல. அவுங்களுக்கு மதுரவாயல் ப்ராஞ்சுக்கு டிரான்ஸ்பர் ஆகிருக்குற விஷயம் தெரியாது!”
நன்றி சொல்லிவிட்டு வைத்துவிட்டான் ஆதி.
நின்று கொண்டிருந்த இடத்திலேயே ஆடாமல் அசையாமல் சிலைபோல் நின்றுவிட்டான் ஆதி.
‘நிமிஷாவுக்கு நேற்றே தெரிந்து விட்டது நிச்சயதார்த்த விஷயம் பற்றி. கேட்ட வினாடி என்ன நினைத்திருப்பாங்க!அதிர்ச்சியாகியிருப்பாங்கள்ள! கடவுளே!
என்னைப் பத்தி என்ன நெனச்சிருப்பாங்க? எவ்வளவு கேவலமா நெனைச்சிருப்பாங்க? தன்ன ஏமாத்திட்டதா தனக்கு நா துரோகம் பண்ணிட்டதாதானே முடிவுக்கு வந்திருப்பாங்க?
அப்பாக்கு அப்பிடி என்ன ஆஃபீஸ்க்கு தெரிவிக்கனும்னு அவசரம்? நிச்சயமா ஆதிக்கு திருமண நிச்சயதார்த்தமுனு நிமிஷா காதுல விழணும்.
அவுங்க என்னைவிட்டு நகரணும்னுதா திட்டம் போட்டு தெரிவிச்சிருப்பாரு!’ வெறுப்பு மண்டியது அப்பாவின் மேல்.
நிமிஷாவ மதுரவாயல் பிராஞ்சுக்கு மாத்த வேண்டிய அவசியம் இப்ப எங்க வந்தது? நிமிஷா என்னை விரும்பினதால அவுங்களுக்குக் குடுக்குற தண்டனையா தெரியிது இந்த ட்ரான்ஸ்பர்.
நிமிஷாவால நிச்சயமா தினசரி மதுரவாயல் போய் வரமுடியாது. தானா அவுங்க வேலய ரிசைன்
பண்ணிடுவாங்கன்னு நெனச்சு வேணும்னே மாத்தினா மாதிரி தெரியுது. பாவம்ல நிமிஷா!
பேசாம அப்பாகிட்ட போய் இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பமில்ல. நிச்சயதார்த்தத்த நிறுத்துங்கன்னு சொல்லிடுவமா?
அதான் அவுருக்கு நாங்குடுக்குற பதிலடி. நிமிஷாவுக்கு அப்பா குடுத்த தண்டனைக்கு அவருக்கு இப்பிடி பதிலடி குடுக்குறதுதான் சரி.
கீழே இறங்கிச் சென்று அப்பாவிடம் நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நிறுத்தும்படி சொல்ல நினைத்து ஓரடி
எடுத்து வைத்தவனை மனம் தடுத்தது.
‘ஆதி! நீ காலங்கடந்து முடி வெடுக்குற. காலங்கடந்து எடுத்த முடிவுதான்னாலும் நல்ல முடிவுதான். ஆனா மானஸாவுக்கு நீ குடுத்திருக்குற உறுதி மொழி?
சனிக்கிழம நைட்டு அவுங்க ஃப்ளைட் ஏறுற வர நீ அவுங்களோட டிராமாவுல நடிக்கிறதா சொல்லிருக்குற
அந்த சொல்ல காத்துல பறக்க வுட்ருவியா? பாவம்ல மானஸா?’ சட்டென நின்றான்.
பாவம் ஆதி! எந்த முடிவையும் எடுக்க முடியாமல் தவித்தான்.
எனக்கும் மானஸாவுக்கும் திருமண நிச்சயதார்த்தமென்ற செய்தியைக் கேட்ட பிறகும் நிமிஷா என் ஃபோன் காலை எப்படி எடுப்பாங்க?
என்னோடு பேசுவாங்களா என்ன? அதான் நான் செய்த ஃபோனையெல்லாம் எடுக்கல நிமிஷா!” என்று நினைத்தவன் கண்களில் கண்ணீர் நிறைந்தது.
புதன் கிழமை. காலை எட்டு மணிக்கு அம்புஜம்மா வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு வரவும் அம்மாவை வைத்துவிட்டு நிமிஷா வீட்டிற்கு வந்தாள்.
“அக்கா! வைஷாலி எப்பிடிருக்கா?” என்று கேட்டு அழும் துரையைத் தேற்றினாள்.
“அக்கா நானும் ஒன்னோட ஹாஸ்பிடல் வரேன்க்கா! வைஷாலியப் பாக்கணும்!”
“அழச்சிட்டுப் போறேன் தொர!” தம்பியைத்தொட்டு ஆறுதல் கூறினாள்.
குளித்தாள்.அம்மா வைத்திருந்த நான்கு இட்டிலியில் வெகுசிரமப்பட்டு மூன்றை சாப்பிட்டாள்.
சாப்பிடாமலேயே இருந்து சாப்பிட்டதால் உடம்பை என்னவோ செய்தது.
தன் அறைக்குச் சென்று படுக்கையில் படுத்தவள் எதை நினைத்து அழுகிறோம் என்று தெரியாமல் விம்மி அழுதாள்.
கடந்த மூன்று நாட்களாக மனதாலும் உடலாலும் ரொம்பவுமே தளர்ந்து போயிருந்தாள் நிமிஷா.
ஆதி தந்த ஏமாற்றம்! வைஷாலியின் உடல்நிலை, பணப்பற்றாக்குறைப் பிரர்ச்சனை, சரியாய் சாப்பிடாதது, தூக்கமின்னை என பலதும் சேர்ந்து நிமிஷாவை
நிலைகுலைய வைத்திருந்தன.
ஃபோன் அழைத்தது; வீட்டு ஓனர்.
‘மூணாந்தேதியே வாடகப் பணத்த அனுப்பிட்டனே! அப்புறம் எதுக்கு ஃபோன் பண்றாரு?’ என
நினைத்தவளாய் “ஹலோ சார்!” என்றாள்.
“யாரு நிமிஷா பொண்ணு தானே?”
“ஆமா சார்!”
“சொல்ல கஷ்டமாதா இருக்கு. ஆனாலும் சொல்லித்தான் ஆகணும். இன்னும் பதினைந்து நாள்ள வீட்ட காலி பண்ணிக் குடுத்துட்டா தேவல. வீட்ட மொத்தமா இடிச்சிட்டு நவீன மோஸ்தருல கட்டலாம்னு இருக்கேன்.
நீங்க அஞ்சாயிரம் அட்வான்ஸ் குடுத்துருக்கீங்க. அதக்குடுத்துடறேன்.வீட்டக் காலி பண்ணிக் குடுத்துடுங்க!” நிமிஷாவின் பதிலுக்குக் காத்திராமல் ஃபோனை வைத்துவிட்டார் வீட்டு ஓனர்.
அதிர்ந்து போனாள் நிமிஷா.
‘அய்யோ! இது என்ன புதுப் ப்ரர்ச்சன? இப்ப இருக்குற நெலமைக்கி வீடு எங்க போய்ப் பாக்குறது? மாசம் பத்தாயிரத்துக்குக் கொறஞ்சி வாடக வீடு கெடைக்காதே? அட்வான்ஸ் பத்து மாச வாடகைனா கேப்பாங்க? மாசம் பத்தாயிரமெல்லாம் வாடக குடுக்க முடியவே முடியாது! அட்வான்ஸுனு ஒரு லட்சம்னா வேணும்?’ பயந்து போனாள் நிமிஷா.
மறுபடியும் வீட்டு ஓனருக்கு ஃபோன் செய்து வைஷாலி பற்றியும் கட்டுக்கடங்காத செலவு பற்றியும் கூறி ஆறுமாதம் டைம் கேட்டாள்.
“நீ சொல்லுறதக் கேட்டா கஷ்டமாதா இருக்குமா! ஆனாலும் எம்புள்ள புடிவாதமா இருக்குறான். என்னால ஒன்னும் செய்ய முடியாது. காலி பண்ணுற வழியப் பாருங்க!” சொல்லி கட் செய்தார். பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள் நிமிஷா.
“ஹோ! ஹோ! ஹோ!” செல்ஃபோனைக் காதில் வைத்துப் பேசிக்கொண்டே அதிரடியாய்ச் சிரித்தான் வட்டிக்கடை நாகேந்திரன்.
“ம்.. சொல்லிட்டிங்களா சபாபதி அண்ணே? என்னா சொல்லிச்சி அந்தப் பொண்ணு!”
“நீங்க சொல்லுன்னீங்க. ஒங்க பேச்சத் தட்டுவனா? சொல்லிட்டேன்ல! தடுமாறி போயிடுச்சில்ல அந்தப் பொண்ணு!
மறுபடி ஃபோன் பண்ணி கெஞ்சுது இன்னும் ஆறுமாசம் டைம் கேட்டு தங்கச்சி ஆஸ்பத்திரில பேச்சு முச்சில்லாம கெடக்கு. செலவு தாக்கு புடிக்க முடியல டைம் குடுங்கனு அழாத கொறையா கேக்குது!”பாதி நிஜமும் பாதி பொய்யுமாய் நாகேந்திரனிடம் கதை விட்டார் சபாபதி.
“ஹோ! ஹோ! ஹோ!” சப்தமாய் மீண்டும் சிரித்தான் நாகேந்திரன்.
“சபாபதி அண்ணே கவலப்படாதிங்க! சொன்னபடி ஒங்கள கவனிக்குறேன்; வெச்சுடறேன்” ஃபோனை வைத்தான்.
நாகேந்திரனுக்கு எதிரில் மேஜை மீதிருந்தது கடற்கரையில் ஆதியோடு நிமிஷா நெருக்கமாய் அமர்ந்திருந்த அந்த ஃபோட்டோ.ஆதியின் கைக்குள் நிமிஷாவின் கை.
நாகேந்திரனின் ஆள் கடற்கரையில் எடுத்த ஃபோட்டோ.
ஃபோட்டோவைப் பார்த்துப் பார்த்து ஆத்திரப்பட்டான் நாகேந்திரன். ஆத்திரத்தோடு
முஷ்டி மடக்கி மேஜையில் குத்தினான். ஃபோட்டோ மேலே எம்பி மீண்டும் கீழே வந்து அமர்ந்தது.
நிமிஷாவின் பேரைச் சொல்லி கேவலமாய்ப் பேசினான்.
“ஒன்ன நா வளச்சுப் போடனும்னு நெனச்சு தானே மூணு லட்சம் குடுத்து மூணு வருஷமா திருப்பிக் கேக்காம விட்டு வெச்சுருந்தே!”
மூணு மாசமா வட்டியுமில்ல நீ கட்டுல. கடன மூணு வருஷம் முடிஞ்சதுமே குடுத்துடனும் இல்லாட்டி அஞ்சுவட்டி, மீட்டர் வட்டியாகி, ஜாண் வட்டியாகி, ஒன்னவர் வட்டியாகி, நிமிஷ வட்டியாகி, கந்துவட்டியா மாறும்னு பத்திரத்துல எழுதி ஒங்கையெழுத்த வாங்கிருக்கேன்ல.
மூணு வருஷம் முடிஞ்சி மூணு மாசமாயிட்டுல. நீ இப்ப ஆறு லட்சக் கடனாளி. ஒன்னால மூணு லட்சம் கடன திருப்பிக் குடுக்க முடியாதுனு தெரிஞ்சேதானே கடன் குடுத்தேன்.
ஒன்னால கடன திருப்பிக் குடுக்க முடியாம தவிப்ப; திண்டாடுவ. ஒனக்கு கடனையும் வட்டியையும் குடுக்கச் சொல்லி நெருக்கடி குடுக்கணும். குடுக்க முடியாட்டி என்னையோ, எம்புள்ளையையோ கட்டிக்கனு செக் வைப்பம்முனு நெனச்சேன்..
இன்னும் ஒருவாரத்துல ஸ்டெப் எடுக்கலாமுனு இருந்தப்ப எவனோடையோ நெருக்கமா ஒக்காந்திருக்க. காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவங் கொண்டு போன கதையால்ல இருக்கு.
எவனோ ஒங்கையப் புடிச்சிக்கிட்டு ஒக்காந்திருக்குறது? நா என்ன இலவு காத்தக் கிளியா? விட்ருவேனா ஒன்னைய. நீ வீட்ட காலி பண்ண சொல்லச் சொல்லி ஏற்பாடு பண்ணி எவ்வேலய ஆரம்பிச்சிட்டேன்ல!
ஒங்கப்பன் அதா ஒன்னுக்கும் ஒதவாத வெட்டிப்பய கருணாகரனு காலேல வந்து அழுதான்ல. தங்கடேசி பொண்ணு ஆஸ்பத்திரியில கோமாவுல கெடக்கு.
செலவுக்குப் பணமில்ல நீங்கதான் ஒதவணம்னு அழுதான்ல. நா சொல்லிட்டேனே ஒம் பொண்ணு வாங்கின கடனு காலத்தோட திருப்பிக் கொடுக்காததால ஆறு லட்சமாயிட்டு மேக்கொண்டு பணம் வேணுமின்னா ஒம்பொண்ண வரச்சொல்லுனு சொல்லிட்டேன்ல.
வரும்! வரும்! அந்த அழகு பொண்ணு! என்னத் தவிர அடமானம் வாங்காத வேற எவங்குடுப்பான் கடனு லட்ச லட்சமா? மொதல்ல என்ன இருக்கு அடமானம் வெக்க அந்த பராரி குடும்பத்துல அந்த பொண்ணோட அழகத் தவிர!
மீள முடியாம வளச்சுப் போட்டுடமாட்டேன். வரும்! வரும்! அந்த அழகுப் பொண்ணு! வரட்டும்! வரட்டும்! கெக் கெக் கெக் கெக்” கண்ராவியாய் சிரித்தான் கந்து வட்டிக்காரன் நாகேந்திரன்.
(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!