தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 31

வைஷாலிக்கு அடிபட்டு ரத்தம் ஓடியிருந்த இடங்களை டெட்டால் ஊற்றி அலம்பி சுத்தப்படுத்திதான் வைத்திருந்தாள் நிமிஷா.

ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஈக்கள் வந்து அந்த இடங்களில் அமர்வதும் சட்டென அந்த இடத்தைவிட்டுப் பறந்து வேறிடத்தில் அமர்வதுமாய் இருந்தன.

தனது படுக்கையில் நிமிஷா இங்குமங்கும் பறந்து பறந்து அமரும் ஈக்களையே வெறிக்கப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

பார்வைதான் ஈக்களைப் பார்த்தபடி இருந்தனவே தவிர மொத்தமாய் பயத்தால் நிரம்பிக் கிடந்த மனதில் எதுவும் பதியவில்லை.

ஆதியின் துரோகம், வீட்டைக்காலி செய்யும்படி வீட்டு ஓனர் கொடுக்கும் நெருக்கடி, வைஷாலிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை என அடுக்காய் வந்து தாக்கும் துன்பங்களைத் தாங்க மாட்டாதவளாய்த் தவித்தாள் நிமிஷா.

“ப்ச்!” என்றாள் வெறுப்புடன்.

‘இததான் மிஸ்ஃபார்ச்சூன்ஸ் நெவர் கம் சிங்கிள்ன்னு சொல்வாங்களோ? துன்பம் தனியாய் வருவதில்லைங்கிறது சரிதான்’ என நினைத்தவள் செல் அழைக்கவே ஃபோனைக் கையிலெடுத்தாள்; அம்மா.

“ம்.. சொல்லு!” என்றாள்.

“நிமிஷா!.சாப்டியா?”

“ம்..”

“வைஷாலிக்கு ஊசி போடனுமாம். மருந்து வாங்கிட்டுவர சொன்னாங்க. ஆயிரத்து நானூறு ரூவா ஆயிடுத்து. கைல மிச்சம் அறுநூறுதா இருக்கு!” அம்புஜம்மா குரலில் கவலை தெரிந்தது.

‘ஐயோ!’.என்றிருந்தது நிமிஷாவுக்கு. தலையில் கை வைத்துக் கொண்டாள்.

தன்னிடம் இருக்கும் மூவாயிரம்தான் கடைசியாய் இருப்பது. மேற்கொண்டு செலவுக்கு பணத்துக்கு எங்கே போறது? யாரக் கேக்குறது?’ திகில் நெஞ்சை அடைத்தது.

“நிமிஷா!”அம்புஜம்மா நிமிஷா ஃபோனை வைத்துவிட்டாளோ என நினைத்துக் கூப்பிட்டார்.

“ம்..ஃபோன்லதா இருக்கேன். நீ வெச்சுடு. நா வரேன்!” சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

“அக்கா நானும்க்கா!” என்றான் துரை.

தான் மட்டுமென்றால் மெயின் ரோடு வரை நடந்து சென்று ஷேர் ஆட்டோவில் ஏறி ஹாஸ்பிடல் வாசலில் இறங்கிக் கொள்ளலாம்.

தொர வந்தா வீட்டுவாசலுக்கு ப்ரைவேட் ஆட்டோவை அழைத்து ஏற வேண்டும். நூத்தி இருபது ரூபாய் தரவேண்டும்

ஆட்டோக்கு. ஒவ்வொரு பத்து ரூபாயும் பெரிசாய் தெரியும் இந்த நேரம் நூற்றிருபது ரூபாய் ஆட்டோவுக்கு செலவு செய்ய வேண்டுமே!’ எனக் கஷ்டமாய் இருந்தது நிமிஷாவுக்கு.

‘பாவம் தொர அவுனுக்கும் வைஷாலியப் பாக்கணும்னு இருக்காதா?’ என்று தோன்றவே தவிர்க்க முடியாத நேரங்களில் வீட்டுவாசலிலிருந்து ஏற வேண்டியிருந்தால் வழக்கமாய் அழைக்கும் ஆட்டோக்காரருக்கு ஃபோன் செய்து அழைத்தாள்.

மருத்துவமனை.

எந்த முன்னேற்றமும் இல்லை வைஷாலியிடம்.

துரை வைஷாலியைப் பார்த்துவிட்டு அம்மாவோடு கிளம்பி விட்டான்.

வைஷாலியின் கட்டிலிக்குப் பக்கத்தில் கிடந்த ஒற்றை ப்ளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் நிமிஷா.

நீண்ட அகன்ற அந்தப் பெரிய அறையில் வைஷாலியைத் தவிர ஆறுபேர் சிகிச்சைக்காக ஐந்தாறு அடி இடைவெளி விட்டுப் போடப்பட்டிருந்த கட்டில்களில் படுக்க வைக்கப்பட்டிருந்தனர்.

டெட்டால், ஃபினாயில், இன்ஜெக்ஷன் மருந்தின் வாசனை, ஹோட்டல் டிபனின் மசாலா வாடை என அரசு மருத்துவமனைக்கே உரித்தான கதம்பமான நாற்றம்.

ரொம்ப சோர்வாய் இருந்தது நிமிஷாவுக்கு.

ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளில் மூழ்கித் தவித்துக் கிடந்த மனதில் ‘இப்போது கே.ஆர்.ஜி. நிறுவன வேலையைத் தொடர்வதா? வேண்டாமா?’ என்ற எண்ணம் வேறு பாடாய்ப்படுத்த ஆரம்பித்திருந்தது.

‘ச்சீ! இனிமேகூட அங்க வேலைக்குப் போவதா? துரோகம் செய்த ஆதியை ஆஃபீஸில் தினமும் பார்ப்பதும் அலுவலகம் சம்மந்தமான விஷயங்களை ஆதியின் முகம் பார்த்துப் பேசுவதும் ஐயோ! இனி முடியவே முடியாது.

கே.ஆர்.ஜி. நிறுவனத்தில் வேலை பார்த்துக் கைநீட்டிச் சம்பளம் வாங்குவது கேவலம்!’ நினைத்தாலே கசப்பாய் இருந்தது.

அமேசான் கிஃப்ட் வவுச்சரைக்கூட யூஸ் பண்ணக் கூடாது என்ற முடிவுக்கு வந்தாள்.

‘சரி வேலய விட்டுடறோம், வருமானம்? உன் ஒருத்தி சம்பளத்த நம்பிதானே குடும்பம் நடக்குது? நீ வேலயவிட்டு நின்னுட்டா சோத்துக்கு என்ன வழி?

சாப்பாடு மட்டுமா! ஒரு குடும்பம் நடத்த என்னென்ன தேவையோ அத்தனையும் உன் சம்பளத்த நம்பிதானே இருக்கு?

ஒருமாசம் சம்பளம் வல்லேன்னா கூட குடும்பம் திண்டாடிப் போகாது?’ நினைத்துப் பார்க்கவே என்ன செய்யப் போகிறோம் என்று பயமாய் இருந்தது.

மணி பத்தே கால். செல்ஃபோன் அழைத்தது.

ஆஃபீஸ் மேனேஜர்.

‘என்னது மேனேஜர் சார் கூப்புடறாரு? லீவு சொல்லனு கேக்கப் போறாரு!’ என்று நினைத்தபடி “சார் குட்மார்னிங் சார்!” என்றாள்.

“என்னம்மா குரல் என்னமோ மாதிரி இருக்கு? ஒடம்பு இன்னும் சரியாகலயா? அதா ஆஃபீஸ் வல்லையா?

நீங்களும் வல்ல; லீவும் சொல்லல அதாங் கேக்கலாம்னு ஃபோன் பண்ணேன். ஒரு முக்கியமான விஷயம்!”

“சொல்லுங்க சார்!”

“ஒங்கள மதுரவாயல் பிராஞ்சுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணி மெயில் வந்திருக்குமா. எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியா இருக்கு. சொல்லவே தயக்கமா இருந்துது. ஆனாலும் சொல்லாம இருக்க முடியாதே!”

தூக்கிவாரிப் போட்டது நிமிஷாவுக்கு.

‘ஆதியின் வேலையாய் இருக்குமெ’ன்று தோன்றியது.

‘தினமும் ஆஃபீஸில் சந்திக்கவேண்டிருக்குமே! துரோகக்திற்கு பதில் சொல்ல வேண்டியிருக்குமே!’ என்று மதுரவாயலுக்குத் தன்னை மாற்றியிருக்கலாமென்று தோன்றியது.

“நிமிஷா கேட்டுகிட்டிருக்கீங்களா?”

“ம்.. கேட்டுகிட்டுதா சார் இருக்குறேன். ரொம்ப அதிர்ச்சியா இருக்கு சார்! என்னை மதுரவாயலுக்கு மாத்த வேண்டிய அவசியம் புரியல. நான் வேலை ரிசைன் பண்ணுறத தவிர வேற வழியில்ல சார்!”

“வேலைய ரிசைன் பண்ணிட்டு?”

“வேறென்ன செய்யிறது புரியல சார்!”

“நீங்க வேலைக்குப் போகாட்டி குடும்பத்துக்கு ஒன்னும் பிரச்சன இல்லியேம்மா!” கரிசனம் தெரிந்தது குரலில்.

“இல்ல சார்! என்னை நம்பிதான் சார் என் குடும்பம் இருக்கு!”

“ப்ச்!” என்றார் வருத்தத்துடன்.

“சரிம்மா எந்த முடிவுன்னாலும் எழுத்து மூலம் தெரிவிச்சிடுமா! மேலிடத்துக்குத் தெரியப்படுத்தனும்ல! எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்குமா! வெச்சுர்றேன்” பேச்சை முடித்துக் கொண்டார்.

தாங்க முடியாத வேதனையோடு கண்களை மூடிக் கொண்டாள் நிமிஷா.

‘இவ்வளவு மோசமானவரா ஆதி? நா ஏழைப் பொண்ணு நா ஒங்குளுக்கு பொருத்தமில்லாதவன்னு எத்தன தடவ ஆதியோட காதல மறுத்துருக்கேன்.

எவ்வளவு தேன் தடவின வார்த்தைங்களப் பேசி என்னை ஐ லவ்யூ ஆதினு சொல்ல வெச்சாரு?

உருகி உருகி காதலிக்குறா மாதிரி நடிச்சிட்டு பணக்காரப் பொண்ணு கெடச்சதும் என்ன கை கழுவிட்டாரு.

எத்தன கெட்ட புத்தியிருந்தா எங்க என்னை ஆஃபீஸ்ல தினம் தினம் பாக்க வேண்டிருக்குமேன்னு மதுரவாயலுக்கு மாத்திருப்பாரு.

நா என்ன அவ்வளவு மானங் கெட்டவளா? ஆதிகிட்ட வேல செஞ்சு சம்பளம் வாங்க.

குடும்பத்தோடு செத்தாலும் சாவேனே தவிர ஆதியோட மொகத்த என் வாழ்க்கையில இன்னொரு முறை பாக்கக் கூடாது!’ என வைராக்கியம் செய்து கொண்டாள் நிமிஷா.

ஆனாலும் மனம் ஆதியை மறக்க முடியாமல் தவிக்கதான் செய்தது.

‘ஒங்க வாழ்க்கை நல்லா இருக்கட்டும். நீங்க சந்தோஷாமா இருங்க ஆதி!’ என்று நினைத்துக் கொண்டாள்.

மெல்ல எழுந்து வைஷாலியின் அருகில் சென்று அவள் முகத்தைக் குனிந்து பார்த்தாள்.

‘நிமிக்கா! நிமிக்கான்னு வாய் ஓயாம கூப்புடுவயேடி! இப்பிடி அசைவில்லாம படுத்துக் கிடக்கியேடி வைஷாலி!’ கண்ணீர் கண்களை மறைத்தது.

‘தெய்வமே! நீ இன்னும் எத்தன வேதனைய எனக்குக் குடுக்கக் காத்துகிட்டு இருக்க? திருப்போரூர் முருகா! என்னை ஒங்கோயிலுக்கு வா, வான்னு கூப்டியே!

நானும்தானே வந்தேன்! உன் கோவில்ல வெச்சுதானே ஆதி என்னைக் காதலிப்பதா சொன்னாரு.

ஆனா ஒங்கோயில்ல வெச்சு சொன்ன காதல் தோத்துப் போச்சுல்ல! காதல் மட்டுமா தோத்து போச்சு. இதோ வைஷாலி கோமாவுல படுத்துக் கெடக்கா!

நா வேலைய ராஜினாமா பண்றாப்புல நெலம உண்டாகிருக்கு. அடுத்த மாசத்துலேந்து குடும்பத்த நடத்த பணத்துக்கு எங்க போறுதுண்ணு பயமாருக்கு.

வைசாலிக்கு வைத்தியம் பாக்க கைல காசு இல்ல. வீட்டு ஓனர் வீட்ட காலி பண்ணச் சொல்லிட்டாரு!

முருகா முருகான்னு ஒன்னையே நம்பிக்கிட்டிருக்குற எனக்கு நீ வேதனைய மட்டும்தா குடுப்பியா?’ என நினைத்தபடி பெருமூச்சு விட்டவளின் கையிலிருந்த செல்போன் அழைக்கவே சுவாரசியமின்றி ஃபோன் ஸ்கிரீனைப் பார்த்தாள்; ‘ஆதி!’

‘ச்சே! எவ்வளவு ஈனபுத்தி? காதலிக்கிறாதா சொல்லி பழகிட்டு பணக்கார பொண்ணு கெடச்சதும் என்னைத் தூக்கி எறிஞ்சதோட இல்லாம என்னைப் பாக்குறதையும் தவிர்க்கணும்னு மதுரவயலுக்கு என்னை மாத்திட்டு ஃபோன் பண்றத பாரு.

பச்சைத் துரோகத்தப் பண்ணிட்டு பேச வர்றதுக்கு எத்தனை அகம்பாவம் இருக்கணும்.ஏழைனா கிள்ளுக்கீரையா இவுங்களுக்கு!’ சட்டென ஆதியின் அழைப்பைக் கட்செய்தாள்.

கட் செய்தவள் இனி ஆதியிடமிருந்து ஃபோன் காலே வரக்கூடாதென ஆதியின் நம்பரை ப்ளாக் செய்தாள்.

“எல்லாம் முடிஞ்சிடுத்து!” என உதடுகள் முணுமுணுத்தன; மனம் விம்மியது.

மணி பதினொன்று.

மறுபடியும் மேனேஜரிடமிருந்து அழைப்பு.

“சார்!” என்றாள்.

“மிஸ் நிமிஷா! நீங்க வேலய ரிசைன் பண்ணுறதுன்னா மெயில் அனுப்பிடுறீங்களா? ஒங்குளுக்கு சேர வேண்டிய பிடித்தம் செய்யப்பட்ட அமவுண்ட்ட ஒங்குளுக்கு கொடுக்க ஏற்பாடு பண்ணனும். ஒங்க எடத்துக்கு வேறொரு நபர நியமிக்கணும்!”

“அனுப்பிடறேன் சார்! ஆனா எனக்கு சேர வேண்டிய பணம் வேண்டாம் சார்!”

“அய்யோ! ஏம்மா?”

“இல்ல! வேண்டாம் சார்!”

அதற்குமேல் அவர் அதுபற்றிப் பேசவில்லை.

“மிஸ் நிமிஷா! நான் ஒன்னு சொன்னா தப்பா நெனைக்க மாட்டீங்களே?”

‘திக்’கென்றானது நிமிஷாவுக்கு. ‘தனக்கும் ஆதிக்குமிருந்த காதல் மேட்டர் தெரிந்து போயிருக்குமோ!’ என்று பயந்து போனாள்.

இருந்தாலும் “தப்பா நெனைக்கிற மாதிரி நீங்க எதுவும் கேக்க மாட்டீங்ககுற நம்பிக்க இருக்கு சார்!” என்றாள் சமாளித்துக் கொண்டு.

“இல்லம்மா! டி.நகருல ஒரு டிரேடிங் கம்பெனிலயும், டிவில வருதே விளம்பரங்க அத தயாரிக்கிற நிறுவனத்துலயும் வேல இருக்குறதா சொன்னாங்க. ஒங்குளுக்காகவே கேட்டேன்.

நல்ல நம்பகமான கம்பெனிங்க. அந்த கம்பெனி ஓனருங்கள எனக்குத் தெரியும். ஒங்குளுக்கு விருப்பமுனா அவுங்ககிட்ட சொல்லிர்றேன். இன்டர்வ்யூக்கு வரச் சொல்லு வாங்க!

ஒங்குளுக்கு எது விருப்பமோ அந்தக் கம்பெனில சேந்துக்குலாம்மா. நா மோசமான இடத்தையெல்லாம் சிபாரிசு பண்ண மாட்டேன்மா!” என்றார் இதமாக.

“சார்! சார்! ரொம்ப நன்றிங்க சார்! நானே கே ஆர்.ஜி.லேந்து ரிசைன் பண்ணின பிறகு எங்க வேலைக்குப் போறதுன்னு புரியாம தவிச்சிக்கிட்டு இருந்தேன் சார்!”

“நல்லதும்மா! ரெண்டு கம்பெனியோட முகவரியையும் அனுப்புறேம்மா. ஒடனே அப்ளை பண்ணிடுங்க. அவுங்க உடனடியா பதில் குடுத்துடு வாங்க.

இன்ட்டர்வ்யூவுக்கு அழைப்பாங்க. பேருக்குதா இன்ட்டர்வ்யூ. நா சொல்லி வெச்சுருக்கேன். நிச்சயமா ஒங்குளுக்கு வேல கிடைக்கும்மா. அட்ரஸ் அனுப்புறேன்.”

“ரொம்ப தேங்ஸ் சார்!”

“இருக்கட்டும்மா. ஃபோன வெச்சுடறேன்.”

அடுத்த பத்து நிமிடங்களில் முகவரிகளையும் ஃபோன் நம்பர்களையும் அனுப்பி விட்டார் மேனேஜர்.

அப்ளை செய்த அரைமணி நேரத்தில் மறுநாள் வியாழனன்று காலை பதினோரு மணிக்கு நடக்கவிருக்கும் இன்ட்டர்வ்யூவில் கலந்து கொள்ளும்படி டிரேடிங் கம்பெனியிலிருந்து அழைப்பு வந்தது.

கும்மிருட்டில் மின்மினிப் பூச்சி காட்டும் சிறுவெளிச்சம் போல் சின்னதாய் ஓர் நம்பிக்கை நிமிஷாவின் மனதில் துளிர்த்தது.

“வேறு வேலைக்குப் போக இன்ட்டர்வ்யூ போகிறேன்!” என்று அம்மாவிடம் சொன்னாள்.

“என்னது இப்பிடி சொல்லுற? ஏன் பழைய வேல என்னாச்சு? அஞ்சு வருஷம் சர்வீஸு வீணாதானே போகும். ஆஃபீஸ்ல எதாவது ப்ரர்ச்சனையா?” அம்மாவின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்தாள்.

ஒருகட்டத்தில் “அம்மா கொஞ்சம் சும்மா இருக்கியா? நானே ஏண்டா இன்னும் உசிரோட இருக்கம்னு நெனச்சிக்கிட்ருக்கேன். நீ வேற கேள்விமேல கேள்வி கேக்காத!” என்றாள்.

மறுநாள் காலை மணி ஏழு.

எட்டேகால் ட்ரெயின புடிச்சி மாம்பலத்துல எறங்கி டி.நகருக்கு ஆட்டோல போனாதான் அந்த ஆஃபீஸ்க்கு பதினோரு மணிக்குப் போக முடியும் என நினைத்து கிளம்பிக் கொண்டிருந்த நிமிஷாவின் மனமும் உடலும் சோர்வாய் இருந்தன.

‘என்ன பொழைப்பு! என்ன வாழ்க்க!” சலிப்பாக இருந்தது.

“இந்தா வைஷாலிக்கி இன்ஜெக்ஷன் மருந்து வாங்க!” என்று சொல்லி ஆயிரத்து அறுநூறு ரூபாயை அம்மாவிடம் எண்ணிக் கொடுத்தாள்.

‘மூவாயிரத்தில் மிச்சம் இருப்பது ஆயிரத்து நானூறுதான். இனி ஆஸ்பத்திரி செலவுக்கு என்ன செய்வது?’ என்ற கேள்வியும் பயமும் பூதாகாரமாய் மனதில் எழுந்தது.

பெற்றவர்களிடமும் நிச்சயதார்த்தத்திற்காக முன்னமே வந்துவிட்ட உறவினர்களிடமும் சந்தோஷமாய் இருப்பதுபோல் நடித்து நடித்து அலுத்துப் போயிருந்தான் ஆதி; எதுவும் பிடிக்கவில்லை.

அப்பாவைப் பார்க்கவோ பேசவோ பிடிக்கவேயில்லை.

‘எனக்கும் மானஸாவுக்கும் நிச்சயதார்த்தம் நடக்க விருப்பதை நிமிஷா அறிய வேண்டுமென்றே ஆஃபீசுக்குத் தெரியப்படுத்தி அவுங்கள மதுரவாயல் பிராஞ்சுக்கு மாத்தி!’ நினைக்க நினைக்க அப்பாமேல் வெறுப்பாய் இருந்தது.

‘இவர் மட்டும் தெரியப்படுத்தலேன்னா நானே நிமிஷாவுக்கு எல்லாத்தியும் சொல்லி மானஸாவுக்கு ஒதவ அவுங்க சம்மதம் வாங்கிருப்பேன்.

என்ன நடக்குது எது உண்மையினு தெரியாத நிமிஷா என்னை எந்த அளவுக்கு கேவலமா நெனச்சு வெறுத்துட்டாங்க!

சனிக்கிழமை தொடங்கி இன்னிக்கு வியாழன் ஆறுநாள் ஆயிடுத்து நிமிஷாவைப் பார்த்து அவுங்க குரலக்கேட்டு.

ஃபோனயே எடுக்க மாட்டேங்கிறாங்களே? ஒரு தடவ ஒரே ஒரு தடவ என் ஃபோன் அழைப்ப அவுங்க ஏத்து நா சொல்லுறத கேட்டா போதும் எல்லாம் புரிஞ்சிடும். நேத்துகூட பண்ணினேனே எடுக்கலயே!

இப்பன்னா பண்ணிப் பாப்பமா நிமிஷாவுக்கு!’ ஆர்வமாய் செய்தான்.

‘ம்கூம்! எந்த சப்தமும் இல்லை. தனது நம்பர் ப்ளாக் செய்யபட்டிருப்பது புரிந்து போனது ஆதிக்கு. ‘பக்’கென்றானது மனது.

ஆதி கீழேயிருந்து அம்மா அழைக்க இறுக்கமான மனதோடு கீழே இறங்கினான்.

“இந்தா உன் வருங்கால மாமனார் பத்ரி பேசுறார்!” சிரித்துக் கொண்டே அப்பா கொடுத்த செல்ஃபோனை வேண்டா வெறுப்பாய் வாங்கிக் காதில் வைத்தான்.

“ஹலோ!” என்றான்.

“ஹலோ ஆதித்யா! எப்பிடி இருக்கீங்க?” தேவையில்லாமல் சிரித்தார்.

“ம்.. நல்லாருக்கேன்!”

“ஆதித்யா இன்னிக்கு வியாழக் கெழம. நாளு நல்லாருக்கு. நிச்சயத்துக்கு ரெண்டு நாள்தா இருக்கு. அதுனால நீங்களும் மானஸாவும் டி.நகர் போயி நிச்சயதார்த்த டிரெஸ் எடுத்துட்டு வந்துடுங்க.

மானஸா ஹாட் சிப்ஸ் கடை ஸ்டாப்பிங் வரை கார்ல வருவா! அவள அந்த ஸ்டாப்பிங்ல எறக்கி விட்டுட்டு கார் வீட்டுக்குத் திரும்பிடும்.

நீங்க டூவீலர்ல அந்த ஸ்டாப்பிங் வந்து மானஸாவ பிக்கப் பண்ணிக்குறீங்களா? ஏன்னா கார் டி நகர் கடைத்தெருக்குள்ள நுழையாது. தூரக்கவே நிறுத்திட்டு நடந்து போகணும். அதா டூவீலர்!

திரும்பி வரும்போது கார் அதே ஸ்டாப்பிங்ல வந்து மானஸாக்காக வெயிட் பண்ணும். என்ன சொல்றீங்க ஆதித்யா?

கோவர்த்தன் ஓகே சொல்லிட்டாரு. மானஸாவும் ஓகேதான். இன்னிக்கிப் போனாதா உண்டு. நாளைக்கு நாள் நல்லால்ல. சனிக்கிழம வேண்டாம்.”

கொஞ்சம்கூட மனசுக்குப் பிடிக்காமல் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டான்.

கிளம்பினான்.

“ஆதி! வெளிய போணும்னா டீக்கா ட்ரெஸ் பண்ணுவ. இப்ப ஏனோதானோன்னு எதையோ மாட்டிகிட்டுக் கெளம்புற?” சிரித்தபடி கேட்கும் அம்மாவுக்கு பதில் சொல்லாமல் வெளியே வந்தான்.

கவஸாக்கி நிஞ்சா 530 ‘பளிச்’சென்று துடைக்கப்பட்டுப் பளபளப்பாய் நின்றிருந்தது.

ஏறி அமர்ந்து வண்டியை விரட்டினான். அரேபிய குதிரையாய் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய் வண்டி சீறிப் பாய்ந்தது.

எட்டே நிமிடத்தில் வண்டி ஹாட்சிப்ஸ் ஸடாப்பிங்கைத் தொட்டு நின்றது.

ஐந்து நிமிட காத்திருப்பில் படகு போன்ற சொகுசு காரில் வந்து இறங்கினாள் மானஸா.

மானஸா இறங்கிக் கொள்ள கார் ‘யூ’டர்ன் அடித்துத் திரும்பிச் சென்றது.

ஆதியும் மானஸாவும் உற்சாகமின்றி பரஸ்பரம் “ஹாய்!” சொல்லிக் கொண்டார்கள்.

“மிஸ்டர் ஆதித்யா ரொம்ப டல்லா இருக்கீங்களே ஏன்?”

“ப்ச்!” என்றான் ஆதி சுரத்தில்லாமல்.

“என்னாச்சு? சொல்லலாம்னா சொல்லுங்க ஆதித்யா!”

“மிஸஸ் மானஸா! நிமிஷாவுக்கு நம்ம நிச்சயதார்த்தம் பத்தி தெரிஞ்சு போச்சு .எங்கப்பா நிமிஷா நம்ம நிச்சயதார்த்தம் பத்தித் தெரிஞ்சுக்கணும்.

அப்பிடி தெரிஞ்சா அவுங்க என்னவிட்டு நகந்துடுவாங்கன்னு திட்டம் போட்டு ஆபீஸுக்குத் தெரிவிச்சு நிமிஷா தெரிஞ்சுக்கும்படி செஞ்சிட்டாரு.

அதோட எங்க நான் அவுங்கள தினமும் ஆஃபீஸ்ல சந்திச்சா மனம் மாறிடுவனோன்னு அவுங்கள மதுரவாயல் ப்ராஞ்சுக்கு மாத்திட்டாரு. எவ்வளவு கொடூர மனசு எங்கப்பாவுக்கு.

நிமிஷா நிச்சயதார்த்தம்லாம் நடக்காது; நானும் மிஸஸ் மானஸாவும் நாடகம் போடுறோம்.அவுங்க பத்தொம்பதாம் தேதியே அமெரிக்கா போய்டுவாங்க; பயப்படாதிங்க; என்ன கேவலமா நெனச்சுடாதிங்க.

ஒங்கள ஏமாத்திட்டதா நெனைக்காதிங்கன்னு அவுங்க கிட்டத் தெளிவா எடுத்துச் சொல்லலிடனும்னு கொறஞ்சது இருநூறு தடவையாவது கால் பண்ணிருப்பேன்.

அவுங்க ஒருமுறைகூட என் போஃன் கால எடுக்கல. என் நம்பரையே ப்ளாக் பண்ணிட்டாங்க. நிச்சயமா நிமிஷா என்ன தப்பா நெனைச்சிருப்பாங்க.

அவுங்கள நா காதலிக்கிறதா சொல்லி ஏமாத்திட்டதா நெனச்சிருப்பாங்க. நா என் காதலையும் நிமிஷாவையும் இழந்துட்டேன் மிஸஸ் மானஸா!” என்று சொன்னவன் அழுதுவிடுவான் போலிருந்தது. மானஸாவுக்கு மிகுந்த வேதனையாய் இருந்தது.

“வண்டில ஏறுங்க!” என்றான்.

பின் இருக்கையில் இரு கால்களையும் இருபக்கமும் போட்டுக்கொண்டு ஆதிக்கும் தனக்குமான இடைவெளியில் தனது ஹேண்ட்பேக்கை செருகினாற்போல் வைத்துக் கொண்டு அமர்ந்தாள் மானஸா.

“தேவையில்லாமல் நடக்கப் போகாத நிச்சயதார்த்தத்திற்கு ட்ரெஸ் வாங்கப் போறோம் மிஸ்டர் ஆதித்யா!” என்றாள் மானஸா.

“ப்ச்! ஆமாம் மிஸஸ் ஜேம்ஸ்!” என்றான் ஆதி.

வண்டி வேகமெடுத்து விரைந்தது.

டி நகர் கடைத்தெரு வருவதற்கு முன்பே கூட்டம் அலை மோதியது. வண்டியின் வேகத்தைக் குறைத்தான் ஆதி.

சில இடங்களில் இரு கால்களையும் தரையில் உந்தி உந்தி வண்டியை நகர்த்த வேண்டியிருந்தது. அத்தனை கூட்டம் ஊர்ந்தபடி.

டி நகரின் பரபரப்பான பகுதியான ஜவுளிக் கடைகள் அணிவகுத்து நிற்கும் இடத்தில் தானும் ஒன்றாய் சிவப்ரகாஷ் டிரேடிங் கம்பெனி அலுவலகம் அமைந்திருந்தது.

அந்தக் கம்பெனி அலுவலகத்துக்குள் பத்தரை மணிக்கே உள்ளே நுழைந்து விட்டாள் நிமிஷா. அவளுக்கு முன்பே ஐந்தாறு பேர் இன்ட்டர்வ்யூக்காக வந்திருந்தார்கள்.

மேனேஜர் கொடுத்திருந்த நம்பிக்கை நிமிஷாவுக்கு ‘இந்த வேலை நமக்குக் கிடைத்து விடும்!’ என்ற நினைப்பைக் கொடுத்திருந்தது.

மணி பதினொன்று பத்து. நான்காவதாய் அழைக்கப்பட்டாள் நிமிஷா.

கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிக நன்றாகவே பதிலளித்தாள்.

‘கே.ஆர்.ஜி. நிறுவனத்து மேனேஜரால் சிபாரிசு செய்யப்பட்ட பெண்!’ என்று நேர்காணல் நடத்தியவர்கள் அறிந்தே இருந்தனர்.

உடனடியாக ரிசல்ட் சொல்லாமல் ஒருவாரத்தில் தெரிவிப்பதாகச் சொன்ன போது கொஞ்சம் நம்பிக்கை இழந்தாள் நிமிஷா.

இன்னொரு வெயிட்டான சிபாரிசுடன் வந்து நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட நபருக்கு வேலை உறுதியாகிவிட்டதை நிமிஷா எப்படி அறிவாள்?

சிலசமயம் நமக்குமுன் நம் விதிபோய் நின்று விடுவதுண்டு.

இன்னும் ஒரு வாரத்தில் முடிவு தெரிவிப்பாதாகச் சொன்னவுடனேயே நம்பிக்கை கொஞ்சம் ஆட்டம் காண, ‘அய்யோ! இந்த வேலையும் கெடைக்காட்டா?’ என்ற பயம் அடிவயிற்றில் எழும்பி நெஞ்சை அடைத்தது நிமிஷாவுக்கு.

தனது க்வாலிஃபிகேஷன் சர்டிஃபிகேட்டுக்கள் அடங்கிய சர்டிஃபிகேட் ஃபைல் ஃபோல்டரை நெஞ்சில் அணைத்தபடி முகத்தில் மிகுந்த சோர்வோடு நிறுவனத்தின் வெளியே வந்து படிகளில் இறங்க ஆரம்பித்தாள்.

தரையில் கால் வைக்க மீதம் மூன்று படிகளே இருந்த நிலையில் என்ன காரணமோ போக்குவரத்து தடைபட்டு ஸ்தம்பித்துப்போனது.

மேற்கொண்டு வண்டியை செலுத்த முடியாமல் ஆதி சிவப்ரகாஷ் டிரேடிங் கம்பெனியின் படிக்கருகே ஐந்தாறு அடி இடைவெளியில் கொண்டு வந்து வண்டியை நிறுத்தினான்.

நான்காவது படியில் கால் வைத்த நிமிஷாவின் பார்வையில் வண்டியில் அருகருகே அமர்ந்திருந்த ஆதியும் மானஸாவும் முழுவதுமாய் விழுந்தார்கள்.

“என்ன இன்னிக்கி இவ்வளவு கூட்டம்?” என்றாள் மானஸா.

“அதா ஏன்னு தெரியல!” என்று சொன்னபடி இடது பக்கம் எதேச்சயாய்த் திரும்பினான் ஆதி.

கடைசி படியில் கால் வைத்து தரையில் கால் வைத்த நிமிஷா ஆதியின் பார்வையில் விழுந்தாள். அதிர்ந்து போனான் ஆதி.

(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

Comments

“தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 31” அதற்கு 2 மறுமொழிகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.