தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 32

சிவப்ரகாஷ் டிரேடிங் கம்பெனி அலுவலக வாசற்படிகளின் மூன்றாவது படியில் கால்வைத்து இறங்கிக் கொண்டிருந்த நிமிஷாவின் கண்களில், டூவீலரில் அமர்ந்திருந்த ஆதியும் அவனின் பின்புற சீட்டில் அமர்ந்திருந்த மானஸாவும் விழ, வினாடிநேரம் இதயம் துடிப்பதை நிறுத்தி ‘சடாரெ’ன அதிவேகமாய்த் துடிக்க ஆரம்பித்தை உணர்ந்தாள்.

மனமும் உடலும் செயலிழந்து போனதுபோல் தோன்றியது.

‘நிமிஷா உணர்ச்சிவசப்படாத! மொகத்துல எந்த உணர்ச்சியும் காட்டாத. இதா உலகம். ஏழையான உன்னப்போல பொண்ணுங்கள நம்ப வெச்சு ஏமாத்துற உலகம்.

நீ பாட்டுக்கு இறங்கிப் போ! அதிர்ச்சியயோ, ஏமாற்றத்தையோ மொகத்துல காட்டிடாத! நிச்சயமா கண்ணுல கண்ணீரக் காட்டிடாத!’ மனம் எச்சரித்தது.

தரையில் கால் வைத்தாள் நிமிஷா.

“என்ன இன்னிக்கி இவ்வளவு கூட்டம்!” என்ற மானஸாவின் கேள்விக்கு “அதா தெரியல!” என்றபடி எதேச்சயாய் இடதுபக்கம் திரும்பிய ஆதி, படியிலிருந்து இறங்கித் தரையில் கால் வைத்த நிமிஷாவைப் பார்த்து அப்படியே அதிர்ந்து போனான்.

வண்டியே ஆடும்போல் கைகள் நடுங்கின. உடல் முழுதும் ரத்த ஓட்டம் நின்று போனதுபோல் தோன்றியது; மூச்சு முட்டியது. தன்னை அறியாமல் “நிமிஷா!” என்று கத்திவிட்டான்.

ஆதி, ‘நிமிஷா!’ என்று கத்த, கத்திய அவனை வலதுபக்கம் பார்த்துக் கொண்டிருந்த மானஸா சட்டென முகம் திருப்பிப் பார்த்தாள்.

ஆதியின் பார்வை செல்லுமிடம் மானஸாவின் பார்வையும் விழுந்தது.

தரையில் கால் வைத்து இரண்டடி வைத்த நிமிஷாவைப் பார்த்த மானஸா, ‘அப்பாடி! என்னவொரு அழகு இந்தப் பொண்ணு! இந்தப் பொண்ணுதா ஆதித்யா நேசிக்கும் நிமிஷாவா?’ நிமிஷாவின் அழகு மானஸாவை வியக்க வைத்தது.

முகத்தில் எந்த சலனமுமின்றி ஆதியும் மானஸாவும் அமர்ந்திருக்கும் வண்டியைக் கடந்து இடதுபுறமாய்த் திரும்பி நடக்கத் தொடங்கினாள் நிமிஷா.

இதயம் கனத்துப் போய் இருந்தது. நடப்பதே சிரமமாக இருந்தது.

ஆனாலும் பொங்கும் மனதை சமாதானப்படுத்திக் கொண்டு சமாளித்தபடி வேகமாய் நடந்தாள்.

‘நிமிஷா’வென்று வேகமாய்க் கத்தியவன் வண்டியிலிருந்து குதித்து விடுவான் போலிருந்தது.

அவன் மனநிலையைப் புரிந்துகொண்ட மானஸா ‘சட்’டென சீட்டிலிருந்து இறங்கினாள்.

எப்படித்தான் எஞ்சினை நிறுத்தி வண்டிக்கு ஸ்டாண்ட் போட்டானோ, மானஸாவிடம் எதுவும் சொல்லாமல் நிமிஷா நடந்து சென்ற திசைநோக்கி வேகமாய் நடந்தான்.

கண்கள் ஜனக்கூட்டத்தில் நிமிஷாவைத் தேடித் தேடி அலைந்தன.

ம்கூம்.. நிமிஷா தென் படவில்லை. ‘நிமிஷா எங்க இருக்கீங்க நிமிஷா?’ மனம் புலம்பியது.

சற்று தூரத்தில் நின்றிருந்த ஷேர் ஆட்டோவுக்குள் ஆதி கண்களைச் செலுத்தியிருந்தால் நிச்சயம் நிமிஷாவைப் பார்த்திருப்பான்.

பார்க்க வைக்காமல் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவதுதான், விதி ஆடும் விளையாட்டோ?

தளர்ந்த நடையோடும் முகம் முழுதும் ஏமாற்றமுமாய் வண்டியை நோக்கி நடந்து வரும் ஆதியைப் பார்த்ததும் மிகுந்த வேனையும் குற்ற உணர்ச்சியுமாய் இருந்தது மானஸாவுக்கு.

‘பொண்ணு பாக்க வந்த அன்னிக்கே இவரப் புடிக்கிலன்னு அப்பாட்ட சொல்லிருக்கலாமோ! சரி வேற மாப்ள பாகுறேன்னு அப்பா சொல்லிருப்பாருல்ல.

அப்பிடிச் சொல்லிருந்தா இவருக்கும் நிமிஷாவுக்குமான காதல் சிதைஞ்சிருக்காதுல்ல. இல்லாட்டி இவராவது என்ன புடிக்கிலன்னு சொல்லிருக்கலாமில்ல.

என் சுயலாபத்துக்காக நா போடுற நாடகத்துல வேற நடிக்கச் சொல்லிப் பெரும் பாவத்தல்ல செய்யிறேன்.

இவரும் நிமிஷாவும் பிரிய நான் காரணமாயிட்டேன். இதுக்கு என்ன பிராயச்சித்தத்த நான் செய்யப் போறேன்’ மனதின் வேதனை மானஸாவை தவிக்க வைத்தது.

வண்டியில் ஏறினான் ஆதி.

“ஏறுங்க!” என்றான்.

பெயர் பெற்ற ஜவுளிக்கடை.

நிச்சயதார்த்த டிரஸ் என்றதும் கடைப் பையனொருவன் குறிப்பிட்டப் பகுதிக்கு இருவரையும் அழைத்துச் சென்றான்.

அந்தப் பையனின் பின்னால் செல்லும்போது “எம்.டி. சார் வணக்கம்!” என்ற குரல் பின்னாலிருந்து அழைப்பது காதில் விழ, பழகிய குரலாய் இருப்பதுபோல் இருக்கவே சட்டெனத் திரும்பிப் பார்த்தான்.

மேனேஜர். முகமெங்கும் மலர்ச்சியோடு நின்றிருந்தார் அவர்.

செயற்கையாய் முகத்தில் மலர்ச்சியை வரவழைத்துக் கொண்டான் ஆதி; கஷ்டப்பட்டுச் சிரித்தான். “வணக்கம் சார்! எங்க இங்கே?” என்றான்.

“இன்னிக்கு நா ஆஃபீஸ் லீவு. இந்தக் கடை மொதலாளியோட சன்ன பாக்க வந்தேன். மொதல்ல ஒங்களுக்கு நிச்சயதார்த்த அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்!” என்றார்.

மானஸாவைப் பார்த்து வணக்கம் சொன்னார். நாங்க ஆஃபீஸ்லேந்து எல்லோரும் நிச்சயதார்த்த ஈவென்ட்டுக்கு வந்துடுவோம் எனச் சொல்லி சிரித்துத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மனதின் வேதனைகளை மறைத்துக் கொண்டு “நன்றி! நன்றி!” என்றான் ஆதி. மனது ‘நிமிஷாவைப் பற்றி ஏதாவது சொல்ல மாட்டாரா?’ என ஏங்கியது.

ம்கூம் மேனேஜர் எதுவும் சொல்லவில்லை.

தனது ஆர்வத்தை வெளிக்காட்டாமல் வெகு சாதாரணமாய்க் கேட்பது போல் “மிஸ்.நிமிஷா மதுரவாயல்ல ஜாயின் பண்ணிட்டாங்களா?” எனக் கேட்டான்.

சட்டென முகம் மாறியது மேனேஜருக்கு.

“ப்ச்.. இல்ல சார்! அவங்க வேலைய ரிஸைன் பண்ணிட்டாங்க. ரொம்ப பாவம் சார் அவங்க. இப்பதா அவங்க இன்ட்டர்வ்யூ ஒன்னுல கலந்துகிட்டதா ஃபோன் பண்ணாங்க.

மூணுநாள் முந்தி அவங்க தங்கச்சி மேல இரும்பு பீரோ விழுந்துட்டதாவும் தலையில அடிபட்டு கோமா ஸ்டேஜுல செங்கல்பட்டு கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல இருக்குறதாகவும் தானும் மருத்துவமனையிலேயே இருக்குறதால நாளைக்கு நடக்கவிருக்குற இன்ட்டர்வ்யூவுல தன்னால கலந்துக்க முடியாது போல இருக்குன்னும் சொன்னாங்க..

நாந்தான் அவுங்களுக்கு ரெண்டு இன்ட்டர்வ்யூக்குமே ஏற்பாடு பண்ணினேன்.

அவங்க குடும்பத்துல அவங்க மட்டும்தான் ஏர்னிங் பர்சன் போல. நல்ல பொண்ணு பாவம்!” என்றார் அந்த நல்ல மனசு கொண்ட மேனேஜர்.

“ஆஃபீஸ்ல யார்ட்டியும் எதையும் சொல்ல வேண்டாம்னு கேட்டுக்கிட்டாங்க. நாந்தான் சொல்லிட்டேன். தப்புதான். மனசு கேக்கமாட்டேங்குது.

தேவையில்லாததெல்லாம் பேசி ஒங்க டைம வேஸ்ட் பண்ணிட்டேன் ஸாரி! வரேன்” இருவரையும் கைகூப்பி வணங்கி விட்டுச் சென்று விட்டார் மேனேஜர்.

அப்படியே ஆடிப் போனான் ஆதி; நின்ற இடத்திலேயே சிலை போல் நின்றான்.

“சார் வரீங்களா?” கடைப்பையன் அழைக்கவும் மெதுவாய் அவன் பின் நடந்தான்.

நிச்சயதார்த்த டிரெஸ்களின் பிரிவில் இரண்டு ஜோடிகள் மட்டுமே இருந்தார்கள்.

அந்த இரு ஜோடிகளும் சந்தோஷ முகத்தோடு தங்களுக்குப் பிடித்த ஆடைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க, ஆதியும் மானஸாவும் கடனே என்று புரட்டிப் புரட்டிப் பார்த்தார்கள்.

அரைமணி நேரத்திற்குள் கைக்குக் கிடைத்த டிரெஸ்ஸை எடுத்துக் கொண்டு பில் செக்சனில் எழுபதாயிரம் ரூபாயைக் கட்டிவிட்டு கடையைவிட்டு பைகளோடு வெளியே வந்தார்கள்.

இன்ட்டர்வ்யூவை முடித்துக் கொண்டு நேரடியாய் வீட்டுக்கு வந்துவிட்டாள் நிமிஷா.

வீட்டில் துரை மட்டுமே இருந்தான். சோர்வாய் உள்ளே நுழைந்த நிமிஷாவைப் பார்க்க வேதனையாய் இருந்தது அவனுக்கு.

‘பாவம்ல அக்கா!’ என்று தோன்றியது; மனம் பரிதவித்தது.

“சாப்டியா தொர!”

“சாப்டேங்க்கா!”

“தொர எனக்கு ரொம்ப தலைய வலிக்கிது. நான் போய்ப் படுக்கிறேன்.அவசியமா இருந்தா மட்டும் எழுப்பு!.சரியா?”

“சரிக்கா!” என்றான் துரை.

அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டாள்; ‘தொப்’பென்று கட்டிலில் விழுந்தாள்; கண்களை மூடினாள்.

மூடிய கண்களுக்குள் ஆதியும் அந்தப்பெண் மானஸாவும் டூவீலரில் முன்னும் பின்னுமாய் அருகருகே நேருக்கு நேராய் பார்த்து விட்ட அந்தக் காட்சியை, மனதை விட்டு அகற்ற முயன்று தோற்றுப் போனாள்.

அடக்கி அடக்கி வைத்த மனம் இப்போது அடங்க மறுத்தது; கட்டுக்களைத் தகர்த்தெரிந்தது.

துன்பமும் துயரமும் வேதனைகளும் வலிகளும் ஏமாற்றமும் துரோகமும் ஒன்றாய்ச் சேர்த்து வெடித்துச் சிதறி கேவலாய், விம்மலாய், கண்ணீராய், அழுகையாய் அடி நெஞ்சிலிருந்து பீறிட்டுக் கிளம்பி தொண்டைக் குழியைத் தொட்டு சப்தமாய் வெளியே வந்தது. கதறினாள் நிமிஷா.

ஆதி காதலிப்பதாய் நடித்து ஏமாற்றித் துரோகம் செய்து விட்டதாய் நினைத்து மட்டும் அழுகிறாளா?

இல்லை வேலையும் இல்லாத நிலையில் இனி மாச சம்பளமின்றி குடும்பம் என்னாகும் என்று அழுகிறாளா?

வைஷாலியின் மருத்துவ செலவுக்கு என்ன செய்வது என்று அழுகிறாளா?

வீட்டைக்காலி செய்துவிட்டு எங்கே செல்வது அட்வான்ஸ் எப்படிக் கொடுப்பது, இனி சம்பளமே வராது என்ற நிலையில் வாடகை எப்படிக் கொடுப்பது என்று அழுகிறாளா?

வட்டிக்கடைக்காரனிடம் வாங்கிய மூன்று லட்சம் கடனை வட்டியோடு எப்படித் திருப்பித் தருவது என்று அழுகிறாளா?

வரும் மாதத்திலிருந்து வருமானமே நின்று போகும் நிலையில் குடும்பத்தினரின் சாப்பாட்டுக்கு வழி என்ன என்பதை நினைத்து அழுகிறாளா?

தோள் தொட்டுத் தேற்று வாரின்றி அழும் நிமிஷாவுக்கு காலம் என்ன செய்யக் காத்திருக்கிறதோ?

எத்தனை நேரம் அழுதாளோ அவளுக்கே தெரியவில்லை. அழுதால் பிரச்சினைக்கு வழி கிடைத்து விடுமா என்ன? பாவம்தான் நிமிஷா!

பாத்ரூம்போய் முகம் கழுவி அறைக் கதவைத் திறந்து கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

வாசலில் கேட் திறந்து மூடும் சப்தம். உள்ளே நுழைந்தார் கருணாகரன்.

“நிமிஷா! வந்துட்டியா? அம்புஜம் சொன்னா நீ இன்ட்டர்வ்யூவுக்காக டி நகர் போயிருக்கனு!”

பதில் சொல்லவில்லை நிமிஷா.

“நிமிஷா! நீ பதில் சொல்ல மாட்டேனு தெரியும்.நா முன்ன கருணாகரன் இல்ல நிமிஷா! நா திருந்திட்டேன் நிமிஷா! ஒன்னோட அருமைய புரிஞ்சிக்கிட்டேன் நிமிஷா!” தொண்டை அடைத்தது கருணாகரனுக்கு.

“நிமிஷா! நீ என்கூட பேசுறயோ இல்லியோ.நா ஒங்கிட்ட சொல்லனும்னு நெனைக்கிறத சொல்லிடறேன்.

நா இப்பதா ஒரு குடும்பத் தலைவனா ஒரு அப்பனா எம் பொறுப்ப உணர்ந்தேன்.

இந்தக் குடும்பத்த சம்பாதிச்சுக் காப்பாத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் என்னோடது.

அத ஒணராம எல்லா பொறுப்பையும் உன் தோள்ள சொமத்திட்டு ஊர் சுத்திக்கிட்டு சீட்டாடிக்கிட்டு பொறுப்பத்தவனா இருந்திட்ட நா இப்ப வேல பாத்து சம்பாதிச்சு குடும்பத்தக் காப்பாத்த நெனைக்கும்போது எனக்கு வேல தர யாரும் தயாரா இல்ல.

அம்பது வயசு தாண்டின ஒனக்கு வேலயான்னு கிண்டல் பண்ணி வெரட்டுறாங்க..

இன்னிக்குக் காலேல வட்டிக்கடைக்காரன் நாகேந்திரன் என்னை கூப்பிட்டு அனுப்பினாரு.

சரி வேலதா தரப் போறாருன்னு நெனச்சுப் போனேன்.

‘வேலயா?’ன்னு சொல்லிட்டுச் சிரிச்சாரு.

வைஷாலி கோமாவுல ஆஸ்பத்திரியில கெடக்குறது. வீட்டுக்காரர் பதினஞ்சு நாள்ள காலி பண்ணச் சொன்னது. நீ வேலய ரிஸைன் பண்ணிட்டது. நாம செலவுக்கு பத்துகாசு கைல இல்லாம தவிக்கிறது எல்லாமே தெரிஞ்சிருக்கு.

ஆனாலும் அவுரு ஒனக்கு மூணு லட்சம் கடன் குடுத்து மூணுவருஷம் முடிஞ்சிடுத்தாம்.

எழுதிக் குடுத்தபடி மூணுவருஷம் முடிஞ்சதும் வட்டியோட பணத்தக் கட்டணுமாம்.

பணத்தத் திரும்பக் குடுக்குற காலம் முடிஞ்சி மூணுமாசத்துக்கு மேல ஆயிட்டதால ஸ்பீடு வட்டி கந்துவட்டினு மாறி இப்ப அஞ்சு லட்சமாயிடுத்தாம்.

இன்னும் ரெண்டு நாளுல பணத்த திருப்பிக் குடுக்காட்டி போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் குடுத்துடுவாராம்!”

“ஐயோ!” என்று கத்தி விட்டாள் நிமிஷா; உடல் பயத்தில் நடுங்கியது; மனம் முழுதும் பீதி வந்து அடைத்துக் கொண்டது. அழக்கூட தெம்பற்றவளாய் ஆனாள் நிமிஷா.

மகளின் நிலைகண்டு அழுது விட்டார் கருணாகரன். “நிமிஷா!” என்றார் அழுத படியே.

“நிமிஷா! நாகேந்திரன நேர்ல போய்ப் பார்த்து போலீஸ்குப் போகவேண்டாம்னு கேட்டுப் பாப்பமா? கெஞ்சிப் பாப்பமா?” உடைந்து போய் கதறினார்.

மாலை மணி ஐந்தரை.

வட்டிக்கடைக்காரர் நாகேந்திரன் எதிரில் அமர்ந்திருந்தார்கள் நிமிஷாவும் கருணாகரனும்.

“நீங்க கெஞ்சினா ஆச்சா? நா இன்னும் எத்தினி நாளு பணத்துக்காக காத்துக்கிட்டுக் கெடக்கிறது.

ஒருரூவாயா ரெண்டு ரூவாயா? அஞ்சு லட்சம்.ரொம்ப சுளுவா டைம் கேக்குறீங்க.

ஒங்க கஷ்டத்தெல்லாம் சொல்லுறீங்க. எத்தனையோ குடும்பத்துல எவ்வளவோ கஷ்டமிருக்கும்.

அதெல்லாம் கேட்டுக்கிட்ருக்கவா நா வட்டிக்கட வெச்சுகிட்டு கடன் குடுத்துக்கிட்டு ஒக்காந்திருக்கேன்.

அப்பிடியே நீங்க கேக்குறீங்களேன்னு பதினஞ்சுநாளு டைம் குடுக்குறேன்னு வையும்மா.

பதினாறாவது நாளு மொத்தப் பணத்தையும் கொணாந்து குடுத்துடுவியா? அப்ப மட்டும் இம்மாம் பெரிய தொக எங்கேந்து வரும்?

ஒனக்கும் வேல இல்ல; மாச சம்பளமும் இனிமே வராது. புவாக்கே இனிமே திண்டாட்டம்; இதுல கோமாவுல கெடக்குற தங்கச்சிக்கு மருந்து வாங்கக்கூட காசு கெடையாது இன்னும் பத்து நாளுல இருக்குற வாடக வீட்டையும் காலி பண்ணனும்.

வேற வீடு பாத்தா ஒரு லட்சம் அட்வான்ஸு குடுக்கணும். மாச வாடக தரணும்.

காலில்லாத தம்பிக்கு ஏதாச்சும் வழிகாட்டணும். பெரிய தங்கச்சிக்கு பிரசவம் பாக்கணும்!” அடுக்கடுக்காய் நாகேந்திரன் சொல்லச் சொல்ல

இந்தாளுக்கு எப்பிடி நம்ம குடும்ப விஷயம் அனைத்தும் தெரியுமென்று அதிர்ந்து போனாள் முதலில்.

பின்னர் ‘பெற்றவன் சொல்லியிருக்கக் கூடும்!’ என்று நினைத்துக் கொண்டாள்.

வீட்டில் ‘நாகேந்திரனுக்கு நம் வீட்டு விஷயம் அத்தனையும் தெரிந்திருக்கிறது என்றுதானே சொன்னார் அப்பா!’

உண்மையில் நாகேந்திரனுக்கு அனைத்தும் தானாய்த் தெரிந்ததா? அப்பாதான் சொன்னாரா? புரியவில்லை நிமிஷாவுக்கு.

மௌனமாய் அமர்ந்திருந்தாள்.

பதில் சொல்லமுடியாமல் நிமிஷா தவிப்பது கண்டு நாகேந்திரனுக்கு சந்தோஷமாய் இருந்தது. பணத்துக்கு கெடுபிடி செய்தான்.

இத்தனை நாளாய் தான் அர்ஜ் செய்யாமல் இருந்ததே தன் பெருந்தன்மை என்று தன்னைப் புகழ்ந்து கொண்டான்.

தான் நினைந்திருக்கும் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளும் காலம் வந்திருப்பதாய்த் தோன்றியது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவும் நினைத்தான்.

“எனக்கு ஒங்களப் பாத்தாலும் பாவமா இருக்கு. ம்.. என்ன செய்யலாம்?” என்று சொல்லிக் கொண்டே யோசிப்பது போல் நடித்தான்.

“கருணாகரன் நீங்க கொஞ்சம் வெளீல போய் ஒக்காருங்க!” என்றான்.

காரணம் புரியாமல் விழித்தனர் நிமிஷாவும் கருணாகரனும். ஆனாலும் எழுந்து வெளியே சென்றார் கருணாகரன்.

சில வினாடிகள் மௌனமாய்க் கரைந்தன.

“நிமிஷா! அதானே ஒங்க பேரு?” என்று சொல்லிக் கொண்டே “இங்க பாருங்க!” என்று மேஜை டிராவிலிருந்து ஃபோட்டோ ஒன்றை எடுத்து நிமிஷாவின் கண்ணெதிரே காட்டினான்.

அதிர்ந்து போனாள் நிமிஷா.

ஆதியும் அவளும் கடற்கரையில் கைக்குள் கைவைத்தபடி நெருக்கமாய் அமர்ந்திருந்த நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

வியர்த்துப் போனாள்.

“பயப்படாதிங்க! ஒங்க அப்பாட்டகூட காமிக்கில. கேஆர்ஜி ரியல் எஸ்டேட் கோவர்த்தனோட ஒரே புள்ள
ஆதித்யாதானே இந்தப் பையன்.

இந்த பையனுக்கும் இன்னொரு ரியல் எஸ்டேட் ஓனரோட டாக்டர் பொண்ணுக்கும் வர்ர இருபதாம் தேதி நிச்சயதார்த்தம்.

ஒங்குளுக்குத் தெரியாம இருக்காது. கபோதி பய, காதலிச்சா மாதிரி ஒங்ககிட்ட நடிச்சி ஏமாத்திட்டு பணக்கார வூட்டு டாக்டர் பொண்ணுக்கு தாலி கட்டுறா!

என்ன அக்ரமம்! பாவம் நீங்க! வாழ்க்கையில நீங்க நம்பியிருந்த ஒரே நம்பிக்கையும் போய்ட்டு.

எல்லா பக்கமும் கதவ சாத்தினாலும் ஏதாவது ஒரு ஜன்னலயாவது ஆண்டவ தொறந்து வைப்பான்னு சொல்லுவாங்க!”

ஏதோ தானே புதிதாய் பொன்மொழி சொல்வதைப் போல் அதிரச் சிரித்தான்.

சிலையாய் அமர்ந்திருந்தாள் நிமிஷா.

“இதோ பாருங்க நிமிஷா! நா வட்டிக்கு கடன் குடுக்குற வந்தான். ஆனாலும் எனக்கும் இளகின இதயம் உண்டு. சுத்தி வளைக்காம நேரிடையா விஷயத்துக்கு வரேன்.

நா சொல்லுறதுக்கு நீங்க சம்மதம் தெரிவிச்சீங்கனா நீங்க தர வேண்டிய அஞ்சு லட்சம் கடனத் திருப்பித் தர வேண்டாம். கடன் பத்திரத்த கிழிச்சி எறிஞ்சிடறேன். புது வீடே வாங்கித் தரேன்.

தங்கச்சி மருத்துவ செலவ நானே ஏத்துக்குறேன். மாசாமாசம் ‘டாண்டாண்’ணு வீட்டுச் செலவுக்குப் பணம் தரேன். ஒங்க தம்பிக்கு கடையோ கிடையோ வெச்சுத் தரேன்.

பணத்தால ஒங்குளுக்கு அபிஷேகமே பண்ணுறேன். ஒங்கப்பா அம்மா ஒக்காந்து சாப்புட பேங்குல பணம் போடுறேன்” அடுக்கி கொண்டே போனான்.

‘அவன் சொல்லப் போகும் எதற்கு தான் சம்மதம் சொல்ல வேண்டுமென’ பயந்து போனாள் நிமிஷா.

“ஹி! ஹி! ஹி!” என பற்களைக் காட்டினான்; முகத்தில் ஆசை டாலடித்தது.

“நிமிஷா! நீங்க எம் மகனைக் கட்டிக்க சம்மதிக்கணும்!” என்றான் இறுதியாய்.

உடைந்து பொடிப் பொடியானாள் நிமிஷா. அப்படியே செத்து விட மாட்டோமா!’ என்று தோன்றியது.

“நிமிஷா எம் புள்ள ராம்குமாருக்கு வயசு முப்பத்தெட்டு ஆவுது. பொண்டாட்டி கொரோனா காலத்துல கொரோனா வந்து செத்துடிச்சி. அஞ்சு வருஷமாச்சி செத்து. தனிக்கட்டையாதா இருக்குறா. புள்ளகுட்டிலா இல்ல.

தோ பாருங்க! எம் புள்ள ராம்குமாரு!” ஃபோட்டோ காட்டினான். நாகேந்திரனின் அக்மார்க் ஜெராக்ஸாய் படு கேவலமாய் இருந்தான். மொடாக் குடியனாய்த் தெரிந்தது முகக்களை.

நாகேந்திரனை முறைத்துப் பார்த்தாள் நிமிஷா.

“எம்புள்ளையக் கட்டிக்க மறுத்தீங்கனா எனக்கு ஒன்னுமில்ல. நாளைக்கு சாயந்திரத்துக்குள்ள அஞ்சு லட்சத்தக் குடுத்துடுங்க. இல்லாட்டி அரஸ்ட் வாரண்ட் வரும். அதுமட்டுமில்ல நீங்க ஜெயில்ல கம்பி எண்ணும் போது இங்க ஒங்க குடும்பத்துக்கு என்னென்ன நடக்கும்கிறதுக்கு நா ஜவாப்தாரியில்ல!” மிரட்டினான்.

“நீங்க சம்மதிச்சா கோடீஸ்வர வாழ்க்கதா ஒங்குளுக்கும் ஒங்க குடும்பத்துக்கும்!” என்றான் நரித்தனமாய்.

வேடனின் வலையில் மாட்டிய மானானாள் நிமிஷா.

“நீங்க ஓகே ஒங்க புள்ள ராம்குமாரக் கட்டிக்கிறேன்னு வாய் வார்த்தையா சொன்னாப் போதாது.எழுதி கையெழுத்துப் போடணும். வர்ர ஞாயித்துக் கெழம சாயங்காலம் நிச்சயதார்த்தம் வெக்கணும்.

அப்பிடி நிச்சயம் முடிஞ்ச வொடனேவே அப்பவே அந்த நொடியே ஒங்க வீட்டு செலவுக்கு நீங்க கேக்குற பணத்த லட்ச ரூவான்னாலும் சரி தருவேன்.

கல்யாண செலவ நானே ஏத்துப்பேன்.கடன் பத்திரத்த கிழிச்சுப் போடுவேன். மாசாமாசத் துக்கான ஒங்க குடும்பத்துக்கான அத்தன செலவயும் நானே ஏத்துப்பேன்.

நாளைக்கு வெள்ளிக்கிழம. நாள சாயந்திரத்துக்குள்ள யோசன பண்ணி பதிலு சொல்லுங்க. சரின்னா ஞாயித்துக்கெழம நிச்சயத்துக்கு ஏற்பாடு பண்ணணுமில்ல.

சரின்னு தெரிவிச்சீங்கனா நானே ஒங்க வீட்டுக்கு வந்து சம்மதம்னு எழுதி ஒங்ககிட்ட கையெழுத்து வாங்கிக்கிறேன்!” என்றான் நாகேந்திரன்.

எழுந்து கொண்டாள் நிமிஷா. தலை சுற்றுவதுபோல் இருந்தது.

நாகேந்திரன் அழைக்க உள்ளே வந்த கருணாகரனிடம் “பொண்ணக் கொண்டு வீட்டுல விட்டுட்டு திரும்ப வாங்க! பேசணும்” என்றான்.

இரவு மணி எட்டு.

விளக்கு கூடப் போடாமல் வீடு இருளில் மூழ்கிக் கிடந்தது.

படுக்கையில் கிடந்த நிமிஷாவின் முகம் அழுதழுது வீங்கிப் போயிருந்தது.

நாகேந்திரனிடம் பேசிவிட்டு வீட்டுக்குத் திரும்பி விட்டார் கருணாகரன்.

நாகேந்திரன் தருவதாய்ச் சொன்ன பெரும் பணம் அவருக்கு மறுபடியும் கேவல புத்தியைத் தந்து விட்டிருந்தது.

பணத்துக்காக பெற்ற பெண் நிமிஷாவுக்கு எந்த துரோகத்தையும் செய்யத் தயாராக மாறியிருந்தார்.

திரும்பி வரும்போதே மனைவி அம்புஜம்மாவுக்கு ஃபோன் செய்து வீட்டுக்கு உடனடியாய் வரச் சொல்ல வைஷாலியை பார்த்துக் கொள்ள நர்ஸிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தார் அம்புஜம்மா.

நாகேந்திரன் சொல்லிய அனைத்தையும் கருணாகரன் மனைவியிடம் தாழ்ந்த குரலில் சொன்னார்.

முதலில் இருவருமே நிமிஷாவுக்காகப் பாவப்படுவதுபோல் பேசினார்கள். நாகேந்திரனை பிடிப்பிடியாய்த் திட்டி சாபம் கொடுத்தார்கள்.

ஆனால் அவன் அமைத்துத் தருவதாகச்சொன்ன சௌகரியமான வாழ்க்கையையும் கொடுக்க முன்வந்த பெரும் பணத்தையும் பற்றித் திரும்பத் திரும்பப் பேசினார்கள்.

இந்த வழியைத் தவிரக் குடும்பம் மீள வேறு வழியே இல்லை என்று சொல்லிக் கொண்டார்கள்.

பெற்றவர்களும் கூடப் பிறந்தவர்களும் சந்தோஷமாய் வாழ நிமிஷா தன் வாழ்க்கையைத் தியாகம் செய்வதில் தவறில்லை என்றார்கள்.

வாழ்க்கைக்குப் பணம்தான் முக்கியமென்றார்கள்.

“நாகேந்திரனோட மகன் ராம்குமாரு எப்பவுமே குடிச்சிட்டு கண்ட எடத்துலயும் விழுந்துதான் கெடப்பான்.
மொடாக்குடியன்தான்!” என்று கருணாகரன் சொல்லி முடிப்பதற்குள்,

“அதுனால என்ன தினக்கூலி வாங்குறவனே தெனம் தெனம் குடிக்கிறான்; பணக்கார வீட்டுப் புள்ள குடிச்சா என்ன தப்பு?” என்றார் அம்புஜாம்மாள்.

பெற்ற மகளை விட, அவளின் வாழ்க்கையை விட, அவளின் நலனை விடப் பெரிதாகத் தோன்றியது பணமும் வசதியும் இருவருக்கும்.

முடிவில் பெற்ற மகளை நிமிஷாவை அவளின் வாழ்க்கையை பணத்திற்காக விற்க எவ்வித மன உறுத்தலுமின்றி முடிவு செய்தார்கள்.

தாயும் தந்தையும் பேசிய அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்த ராஜதுரையின் வாயிலிருந்து “அடப்பாவிகளா!” என்ற வார்த்தை வெளியே வந்து விழுந்தது.

(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

Comments

“தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 32” அதற்கு 2 மறுமொழிகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.