தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 33

தாழிட்ட அறைக்குள் லைட்டைக்கூடப் போடாமல் கும்மிருட்டில் கட்டிலில் சுருண்டு கிடந்தாள் நிமிஷா.

ஃபேன்கூடப் போடாததால் கொசுக்கள் வெகுதீவிரமாய் நிமிஷாவின் உடலைப் பதம்பார்த்து ரத்தத்தை உறிஞ்சின.

தன்னைக் கொசுக்கள் பிடுங்குவதைக்கூட உணராமல் மரக்கட்டைபோல் கிடந்தாள் நிமிஷா.

சரியான சாப்பாடுமின்றி தூக்கமுமின்றி உடலளவிலும் ஓய்ந்து போயிருந்தாள்.

‘பேசாம எதையாவது தின்னு செத்துடுவமா?’ என்று தோன்றியது.

‘நிமிஷமா செத்துடலாம். ஒருவயசுப் பொண்ணு தற்கொல பண்ணிச் செத்தா பாழும் ஒலகம் சும்மாவா இருக்கும்?

நாக்குல நரம்பில்லாமப் பேசாது? என்ன நடந்துதோ? எவங்கிட்ட ஏமாந்துதோன்னு வாய்க்கு வந்ததப் பேசும்.

அந்தப் பாவி நாகேந்திரன்ட்ட அந்த ஃபோட்டே வேற இருக்கு. அத ப்ரஸ்ஸுக்குக் காட்டிட்டா போதுமே விதவிதமா கதை கட்டமாட்டாங்களா? எம்பேரு நாறிதான் போகும். ஆதியயும் விசாரிப்பாங்க.

வேண்டாம்! வேண்டாம்! என்னால யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வேண்டாம்.’ அழுதழுது முகம் வீங்கி முகமே சுடுவதுபோல் தோன்றியது. கண்களிரண்டும் எரிச்சலாய் எரிந்தன.

‘நிமிஷா நீ எத்தன நேரம் அழுதாலும் அழுவதால் தீர்வு எதுவும் கிடைத்துவிடாது. இப்ப ஒனக்கு நேர இருக்குற பிரச்சனைக்கு முடிவு என்ன எடுக்கப் போற?’ மனம் கேட்டது.

‘எனக்கு முன் இருக்கும் பிரச்சனை இந்த எக்ஸாமை எழுதுவதா வேண்டாமா என்ற பிரச்சனையா? இந்த புடவையை எடுப்பதா வேண்டாமா என்ற பிரச்சனையா?

இந்த இன்ட்டர்வ்யூவ அட்டென்ட் செய்வதா வேண்டாமா என்ற பிரச்சனையா? ரெண்டு படத்துல இதுக்கா அதுக்கா எந்த படத்துக்குப் போவது என்ற பிரச்சனையா? சட்டென முடிவு எடுக்க? வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் பிரச்சனை.

நிமிஷா என்னமோ ஒனக்கு முன்னாடி ரெண்டு மாப்ள பையனுக நிக்கிறா மாரியும் கைல இருக்குற மாலைய நீ விரும்புற எந்த பையங்கழுத்துலயும் போடலாம்னு சாய்ஸ் குடுத்துருக்குறா மாரி வாழ்க்கைய தேர்ந்தெடுக்குற பிரச்சனைங்கிற.

ஒனக்கு முன்னாடி நிக்கிறவன் நாகேந்திரன் மகன் ராம்குமார் மட்டும்தான். அவன ஏத்துக்கப் போறியா இல்லையாங்குற ஒரே கேள்விதான் ஒனக்கு முன்னாடி நிக்கிது.

மனது சொல்லும் அப்பட்டமான உண்மையைத் தாங்க மாட்டாதவளாய் ‘ஐயோ!’ என்றபடி இருகைகளாலும்
முகத்தை மூடிக்கொண்டாள் நிமிஷா.

‘நிமிஷா பொண்ணு நீ மட்டும் எம்மவன கட்டிக்க சம்மதிக்கிலன்னு வெய்யி, அதனால ஒன்னுமில்ல. நாள வெள்ளிக்கெழம சாயந்திரத்துக்குள்ள அஞ்சு லட்சம் பணத்தக் குடுத்துடு.

இல்லாட்டி அரஸ்ட் வாரண்ட் வரும். நீ ஜெயிலு கம்பி எண்ணிக்கிட்டு இருக்கையிலே இங்க ஒங் குடும்பத்துக்கு என்ன வேணா நடக்கும். அதுக்கு நா ஜவாப்தாரியில்ல!’ நாகேந்திரனின் மிரட்டல் மனதில் எழ அடிவயிறு பயத்தால் ‘சிலீரெ’ன்றது.

‘நீ சம்மதிச்சேனு வையி பணத்தால ஒனக்கு அபிஷேகம் பண்ணுவேன். நீ கடனு வாங்கின பணத்த திருப்பிக் குடுக்க வேண்டாம்.

நீ கையெழுத்துப் போட்ட பத்திரத்த நிச்சயதார்த்தம் முடிஞ்ச அடுத்த நிமிஷம் கிழிச்சிப் போட்டுடறேன்.ஒங் குடும்பம் கோடீஸ்வர குடும்பம் ஆயிடும்.

அந்த கபோதி பய ஒங்குள கை கழுவிட்டு பணக்கார டாக்டர் பொண்ண கட்டிக்கப் போறான்ல. ஒங்குளுக்கு
ஆண்டவ எல்லா கதவயும் சாத்திட்டாலும் எம் மூலம் ஒரு ஜன்னல தொறக்குறாரு பாருங்க!’

நாகேந்திரனின் பேச்சு மாறி மாறி பிட்டுபிட்டாய் நிமிஷாவின் நெஞ்சில் எழுந்து எழுந்து நெஞ்சை அடைத்தது.

ஃபோட்டோவில் தெரிந்த நாகேந்திரனின் மகன் முப்பத்தெட்டு வயது ராம்குமாரின் படுகேவலமான நாகேந்திரனின் ஜெராக்ஸாய்த் தெரிந்த உருவம் கண்களில் வந்து போனது.

மூடிய கண்களிலிருந்து கட்டுப்பட மறுத்துக் கண்ணீர் வழிந்தது.

‘ம்கூம். அழக்கூடாது .இதுதான் நமக்கான வாழ்க்கையென நம் விதியென ஆண்டவன் தீர்மானித்துதான் வைத்திருக்கிறான்.

அதான் இப்படியெல்லாம் நடக்கிறது. நாம் அழுது கதறுவதால் ஆண்டவன் போட்டு வைத்திருக்கும் முடிச்சு அவிழப் போவதில்லை’

மனதைக் கல்லாக்கிக் கொண்டாள் நிமிஷா. நடைபிணமாய் வாழப்போகும் வாழ்க்கைக்குத் தன்னைத் தயார் படுத்திக்கொண்டாள்.

தன் வாழ்க்கையைப் பிணையம் வைத்து குடும்பத்தை வாழ வைக்கத் தீர்மானித்தாள்.

இனியும் எப்படி யோசித்தாலும் மாற்று வழிக்குப் பாதையே இல்லை என்பது புரிந்து போனவளாய் நாகேந்திரன் மகனைத் திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்க முடிவு செய்தாள்.

ஜவுளிக்கடையில் மேனேஜர் சொன்ன தகவலால் தவித்துப்போய் தனது அறையில் கட்டிலில் அமர்ந்திருந்தான் ஆதி.

‘நிமிஷா நாம வண்டிய நிறுத்துன அந்த டிரேடிங் கம்பெனிலதான் இன்ட்டர்வ்யூ போய்ட்டு வந்திருக்கணும்.

எல்லாம் என்னாலதான். நா அவுங்கள சுத்தி சுத்தி வந்து காதல சொல்லிச் சொல்லி அவுங்குளும் என்னை விரும்புற அளவுக்கு கொண்டு வந்து நிறுத்துனது நாந்தானே!

அப்பிடி உருகி உருகி காதலிச்சேனே பெத்தவங்கள எதுத்துகிட்டு அவுங்கள கல்யாணம் பண்ண எனக்கு தைரியம் வந்துதா? பெத்தவங்க மெரட்டலுக்கு பயந்த நால்லாம் ஒரு ஆம்பளயா?

பாவம் நிமிஷா என்னக் காதலிச்ச பாவத்துக்கு வேல போனதுதா மிச்சம். அவுங்க வீட்டுல அவுங்க சம்பாதிச்சிதா குடும்பம் நடக்கும்னு சொல்லிருக்காங்க.

இப்ப வேலையையும் ரிஸைன் பண்ணிட்டாங்க. குடும்பத்தோட கதி? அவுங்க தங்க வேற கோமால இருக்காங்களாம்.

செங்கல்பட்டு கவர்மென்ட் ஹாஸ்பிடல்லதானே இருக்குறதாவும் நிமிஷாவும் தங்கையப் பாத்துக்க ஹாஸ்பிடல்ல தங்கியிருக்குறதாவும் மேனேஜர் சொன்னாருல்ல.

‘விருட்’டென எழுந்தான். கார் சாவியை எடுத்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கீழே வந்தான்.

“ஆதி மணி நாலு ஆகுது. வெயிலுகூட தணியல. இப்ப போய் எங்க..?” ஆரம்பித்த அம்மாவை..”ம்.. கட்டிங் ஷேவிங் பண்ணிக்க சலூனுக்குப் றேன். போலான்ல..”கடுப்படித்தான். அடங்கிப் போனார் விமலாதேவி.

செங்கல்பட்டை நோக்கிப் பறந்தது கார்.

“நிமிஷா ஃபோனும் எடுக்க மாட்டேங்கிறீங்க..என் நம்பர ப்ளாக்கே பண்ணிட்டீங்க. ஒங்க வீடும் எனக்குத் தெரியாது. தெரிஞ்சாலும் வீட்டுக்கெல்லாம் ஒங்களத் தேடி வர்து தப்பு. நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க.

இப்ப நீங்க ஹாஸ்பிடல்ல தானே இருக்கீங்க..அங்கவந்து ஒங்கள பாக்குறதுல தப்பில்லையே நிமிஷா. ப்ளீஸ்! ப்ளீஸ் நிமிஷா! என்ன ஒருஅஞ்சு நிமிஷம் பேச அனுமதிங்க நிமிஷா!

என்ன பேசவிட்டாதானே ஒங்குளுக்கு உண்ம புரியும். நா சொல்றத கேட்டப்புறம் நீங்க எனக்கு என்ன தண்டன குடுத்தாலும் சரி” என தனக்குத்தானே பேசிக்கொண்டான்.

ஆதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வாசலில் காரை நிறுத்தியபோது மணி ஐந்தேகால் ஆகியிருந்தது.

மருத்தவமனைக்குள் நுழைந்து “ஒரு பதினைந்து வயசிருக்கும் கோமாவுல இருக்காங்க. அவுங்களப் பாக்க வந்தேன் அவுங்க எங்க இருக்காங்க?” வார்டு பாய் நர்ஸ்கள் என்று பலரிடமும் விசாரித்தான்.

யாரும் நின்று பதில் சொல்லவில்லை. கடைசியாய் மருத்துவர் ஒருவர் இரண்டு நர்ஸ்கள் சகிதம் ‘டக் டக்’கென
ஷுக்கள் சப்தம் எழுப்ப நடந்துவர, அந்த மருத்துவரிடமே “எக்ஸ்க்யூஸ்மி” என்று ஆரம்பித்து ஆங்கிலத்திலேயே விபரம் கேட்டான்.

ஆங்கிலம் நன்றாகவே வேலை செய்தது.

பொதுவாய் கோமாவிலிருக்கும் பேஷண்ட்டுகளின் வார்டு இருக்குமிடம் ஆதிக்கு சொல்லப்பட்டது.

குறிப்பிட்ட வார்டின் முகப்பில் கேபினுக்குள் அமர்ந்து கணிணியில் பார்வையைப் பதித்திருந்த ரிசப்ஷனிஸ்ட்டிடம் விபரம் கேட்டான்.

“பேஷண்ட் பேரு?”

“தெரியல!”

“எத்தன வயசிருக்கும்?”

விழித்தான்.

“இருவதுக்குள்ள இருக்கும்” தோராயமாய்ச் சொன்னான்.

“ப்ச்! அந்த பேஷண்டோட பேரண்ட்ஸ் பேராவது?”

“தெரியல! ஆனா அந்த பேஷண்ட்டோட சிஸ்டர் பேரு நிமிஷா!”

“ஓ! அவுங்களா? அப்ப பேஷண்ட் பேரு வைஷாலி!”

“ஒங்க பேரு?”

“ஆதித்யா!”

“பேஷண்ட் வைஷாலி.காட் நம்பர் ஃபைவ். படுக்கை எண் 5” என்றாள்.

“நேரா போய் திரும்பினா வலது பக்கத்துல தேர்ட் ரூம்ல, அஞ்சாவது காட்”

நன்றி சொல்லிவிட்டு நடந்தான்; மனது படபடத்தது; கண்கள் பரபரத்தன.

திறந்திருந்த அறையின் ஜன்னல் வழியே மொத்த அறையையும் பார்த்தான். மொத்தமாய் ஆறு படுக்கைகள் இருந்தன.எதுவும் காலியாக இல்லை ஒன்றைத்தவிர.

மற்ற ஐந்து பேஷண்ட்டுகள் அருகேயும் போடப்பட்டிருந்த நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருக்க ஒரே ஒரு கட்டிலருகில் கிடந்த நாற்காலி மட்டும் காலியாகக் கிடந்தது.

‘சின்னப் பெண்ணாய் எந்தக் கட்டிலிலாவது தென்படுகிறதா?’ என்று பார்த்தான்.

‘எந்த சேர் காலியாகக் கிடக்கிறதோ அந்த சேரின் பக்கதிலிருந்த கட்டிலில் கிடந்த பெண் சிறுபெண்ணாய்த் தெரிய இந்தப் பெண்தான் நிமிஷாவின் தங்கையாய் இருக்குமெ’ன நினைத்தான்.

‘நாற்காலி காலியா இருக்கு? நிமிஷா எதாவது வாங்கப் போயிருப்பாங்களோ அல்லது ரெஸ்ட்ரூம் அதுயிதுனு எங்கியாவது போயிருப்பாங்களோ?” தவிப்போடு நின்றான்.

படுக்கையோடு படுக்கையாய் ஈஷிக் கிடந்த நிமிஷாவின் தங்கையைப் பார்த்து ஆதியின் கண்களில் கண்ணீர் கசிந்தது.

அரைமணி, ஒருமணி என்று நேரம் கரைந்துகொண்டே இருந்தது. கால் கடுக்க நின்றிருந்தான் ஆதி. நாற்காலி காலியாகவே கிடந்தது.

ஐந்தரை மணிக்கு ஜன்னலருகே நிற்க ஆரம்பித்தவன் வாட்சில் மணி பார்த்தபோது ஏழரை என்று காட்டியது.

பலமுறை ஆதியைக் கடந்து கடந்து சென்று திரும்பும் நர்ஸ் ஒருவர் பொறுக்க முடியாமல் ஆதியை நெருங்கி தானாகவே கேட்டுவிட்டார்.

“நானும் கிடத்தட்ட ரெண்டு மணி நேரமா பாக்குறேன். அசையாம நின்னுக்கிட்டு இருக்கீங்க? யாரப் பாக்க வந்தீங்க?”

“ஐந்தாம் நம்பர் படுக்கையில இருக்குற சொந்தக்காரங்கள!”

“ஓ! வைஷாலியோட சொந்தக்காரங்களயா? அந்தப் பொண்ணோட அம்மா அஞ்சு மணிக்கு வைஷாலியப் பாத்துக்குங்க வீட்டுக்குப் போய்ட்டு வந்துடறேனு போனாங்க இன்னும் வல்ல” எனச் சொல்லி விட்டுப் போய்விட்டார்.

மணி எட்டைத் தொடவிருந்தது.

‘கிளம்பி விடுவோமா?” என நினைத்த நேரம் அம்புஜம்மா ஜன்னலருகே நிற்கும் ஆதியைப் பார்த்தபடி உள்ளே நுழைந்தார்.

உள்ளே நுழைந்தவர் குனிந்து வைஷாலியைப் பார்த்தார். பின்னர் கட்டிலருகே காலியாய்க் கிடந்த சேரில் அமர்ந்தார்.

பார்த்துக் கொண்டேயிருந்த ஆதிக்கு ‘அந்தப் பெண்மணி, நிமிஷாவின் தாயாய் இருக்குமெ’னத் தோன்றியது.

ஏமாற்றமாய் இருந்தது ஆதிக்கு.

“நிமிஷா வல்ல!” தானாய்ச் சொல்லிக் கொண்டான்.

‘கிளம்பிடுவோம்’ என நினைத்தவனாய் மருத்துவமனையின் வாசல் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

மனம் சோர்வாய் தளர்வாய் ஆகிப் போனது.

எதுவும் பிடிக்கவில்லை ஆதிக்கு.வீட்டுக்குச் செல்லவே வெறுப்பாய் இருந்தது.

நிமிஷாவின் அறைக்கதவு மூடியும் மூடாமலும் பாதியளவு கதவு திறந்திருந்தது.

ஹாலில் அறைவாசலில் அமர்ந்தபடி மெதுவாய் பாதியளவு திறந்திருந்த கதவை கையைக் குவித்துத் தட்டினான் துரை.

அழுதபடி கட்டிலில் அமர்ந்திருந்த நிமிஷா “தொர!” என்றாள்.குரல் கம்மிக் கிடந்தது.
தவழ்ந்து தவழ்ந்து உள்ளே சென்றான் துரை.

அறை லைட் போடாததால் இருட்டாய் இருந்தது. ஹாலில் போடப்பட்டிருந்த ட்யூப் லைட்டின் வெளிச்சச் சிதறலால் உற்றுப் பார்த்தால் அறையிலிருக்கும் பொருட் களை இன்னதென்று புரிந்து கொள்ளக்கூடிய அளவு
நிழல் வெளிச்சமாய் இருந்தது.

நிமிஷாவின் கட்டிலின் கீழ் அமர்ந்து கட்டிலின் விளிம்பைப் பிடித்துக் கொண்டு “அக்கா!” என்றான் துரை; தொண்டை அடைத்தது.

“தொர!” என்றாள் நிமிஷா.

“வேண்டாக்கா இந்த கல்யாணம்! வட்டிக்கடைக்காரன் மகன கல்யாணம்லா பண்ணிக்காதக்கா!”

“தொர!”

“ஆமாக்கா! சொல்றேனேனு நெனைக்காதக்கா! அப்பாவும் அம்மாவும் நல்லவுங்க இல்லக்கா. அவுங்க சௌக்கியத்துக்காக ஒன்னோட வாழ்க்கைய பலி குடுக்க அவுங்க தயார்தாங்க்கா. அவுங்குளுக்குத் தேவ பணம்தாக்கா! அந்தப் பணம் கெடைக்கும்னா அதுக்காக எத வேண்ணா செய்வாங்கக்கா! யார வேணா காவு குடுப்பாங்கக்கா!”

“தொர!” உடல் குலுங்க அழுதாள் நிமிஷா.

“நா வேறென்ன செய்வேன் தொர. இந்த கல்யாணத்துக்கு நா சம்மதிக்கிலேன்னா நாளைக்கு சாயந்தரத்துக்குள்ள அஞ்சுலட்ச ரூவா கடனத் திருப்பிக் குடுக்கணும் இல்லாட்டடி போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் குடுப்பேன் அரஸ்ட் வாரண்ட் வரும்ன்றானே வட்டிக்கடைக்காரன் நாகேந்திரன். பணத்துக்கு நா எங்க போவேன் தொர?”

“அதுக்காக! கடனத் திருப்பிக் குடுக்கலன்னு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி மெரட்டுறது. வற்புறுத்துறது குத்தமில்லையா?..நாம ஏங்க்கா போலீஸ்ல புகார் குடுக்கக் கூடாது?”

“புகார் குடுக்கக்கூட பணம் வேணும் தொர! நாகேந்திரனையெல்லாம் நம்மால எதிர்க்க முடியாது. அவ பணத்த வெச்சு எத வேண்ணா செய்வான்!”

“அதோட இல்ல தொர! எனக்கு வேல இல்ல. இனிமே மாச சம்பளம் வராது. குடும்பம் நடத்த பணம்?வேறு வீடு மாற பணம்? வைஷாலிக்கு வைத்தியம் பண்ணப் பணம்? இப்பிடி எல்லாத்துக்கும் பணம்
வேணுமே தொர! அது நாகேந்திரன் கிட்ட நெறையவே இருக்கு. அதான்..”சொல்லி முடிக்காமல் அழுதாள் நிமிஷா.

‘பட் பட்’டென்று தலையில் அடித்துக் கொண்டான் ராஜதுரை.

“என்னால ஒனக்கு ஒரு ஹெல்ப்புமில்லக்கா! நா ஆம்பளயா பொறந்தும் எதுக்கும் ஒதவாதவனா வெளங்காத கபோதியா இருக்கேனே! ஒனக்கு பாரமாவுமில்ல இருக்கேன்க்கா!” நெஞ்சு வெடித்து விடும்போல் அழுதான் துரை.

“தொர! அழாத தொர!” சொல்லிக் கொண்டே தம்பியின் கை பிடித்துத் தானும் அழுதாள் நிமிஷா.

‘யார் அழுதால் என்ன? எது நடக்காமல் நின்றுவிடப் போகிறது?’

வெள்ளிக்கிழமை.காலை மணி எட்டு.

அம்புஜம்மா மருத்துவமனையிலிருந்து வந்தாயிற்று.

முதல் நாளே தானும் கணவர் கருணாகரனும் நிமிஷாவிடம் சம்மதம் வாங்க பேசி நடிக்க வேண்டிய நாடகத்தை ரிகர்சல் பார்த்து வைத்திருந்ததை அப்படியே நடிக்கத் தயாராக, கருணாகரனும் தனது நடிப்புத்திறனை வெளிக்காட்டத் தயாரானார்.

நிமிஷா அறியாதவளா என்ன? பெற்றவர்களின் அழுகையையும் நடிப்பையும்?

“அக்கா வேண்டாங்க்கா! வேண்டாங்க்கா! சம்மதம் சொல்லாதக்கா! சம்மதம் சொல்லாதக்கா!” என்று தன்
காலைப்பிடித்து அழும் தம்பி துரையின் கெஞ்சலையும் கதறலையும் கேட்டும் வேறெந்த வழியும் தெரியாத
நிமிஷா நாகேந்திரன் மகனை மணக்கச் சம்மதமெனச் சொல்விட்டு அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு படுக்கையில் விழுந்து கதறினாள்.

உட்கார்ந்திருந்த இடத்திலேயே சுருண்டு படுத்தான் ராஜதுரை.

இத்தனை சீக்கிரம் தான் ஆசைப்பட்டது நடக்குமென கொஞ்சமும் எதிர்பார்க்காத நாகேந்திரன் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனான்.

எச்சில் தெறிக்கச் சத்தமாய்ச் சிரித்தான்; கைகளைத் தட்டினான்; மேஜையைத் தட்டினான்; விகாரமாய் இளித்தான்.

எதிரில் அமர்ந்திருந்த கருணாகரனைப் பார்த்து “யோவ்! என்னையா சொல்லுற? என்னையா சொல்லுற?. நெஜமாவா சொல்லுற! நெஜமாவா ஒம்பொண்ணு சம்மதம் சொல்லிச்சினு சொல்லுற! என்றான்.

மேஜை டிரைவைத் திறந்து எண்ணிப் பார்க்காமல் கனமான ஒருநூறு ரூபாய்ப் பணக்கட்டை எடுத்து கருணாகரன் முன்பு போட்டு “எடுத்துக்கையா!” என்றான்.

இறைச்சித் துண்டினைக் கண்ட நாய் அதனை ஆசையாய்க் கவ்விக் கொள்வதைப் போல இளித்துக் கொண்டே ‘லபக்’கென பணக்கட்டை எடுத்துக் கொண்டார் கருணாகரன்.

‘இனி தன்காட்டில் மழைதான்!’ எனக் கணக்குப் போட்டது அவரின் கேடு கெட்ட மனம்.

வெகு நீட்டாய் சாமர்த்தியமாய் வெள்ளைப் பேப்பரொன்றில் திருமண ஒப்புதலுக்கான வாசகங்களை எழுதித் தயார் செய்தான் நாகேந்திரன்.

“அய்யா அந்தப் பொண்ண நீங்க கட்டிக்கணும்னு நெனச்சீங்க. இப்ப சின்னையாக்குப் போயி ” என்று இழுத்த அல்லக்கையைப் பார்த்து வில்லங்கமாய்க் கண்ணடித்துச் சிரித்தான்.

மாலை மணி ஐந்தரை. தன் மகனோடும் நான்கைந்து சகாக்களோடும் தனக்குச் சொந்தமான வேனொன்றிலிருந்து இறங்கி வீட்டுக்குள் ஜபர்தஸாய் நுழைந்த நாகேந்திரனை கருணாகரன் கைகூப்பிக் கூழைக்கும்பிடு போட்டு வரவேற்றார்.

நாகேந்திரனின் மகன் ராம்குமாரைப் பார்த்த மாத்திரத்தில் அதிர்ந்து போனான் துரை. வாய்விட்டுக் கத்திவிடாமலிருக்க இரு கைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டான்.

நாகேந்திரன் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படுமென எழுதப்பட்டிருந்த அந்த பேப்பரில் நிமிஷா ராம்குமாரைத் திருமணம் செய்து கொள்ள சம்மதத்தை தெரிவிக்கும் வாசகங்கள் எழுதப்பட்டு நீட்டப்பட முகத்தில் எவ்வித சலனமும் காட்டாமல் கையெழுத்திட்டாள் நிமிஷா; யாரையும் நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை.

ஞாயிற்றுக்கிழமை மதியம் மூணு டு நாலரைக்குள் ஜெயசூர்யா திருமண மஹாலில் நிச்சயதார்த்தம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

‘இனி அக்கா மீள வழியில்லை!’ என நினைத்து துரை அழுதான். அதைத் தவிர தன்னால் வேறெதுவும் செய்ய முடியாதெனத் தோன்ற ‘செத்து விடலாமா!’ எனத் தோன்றியது.

நடைபிணமானாள் நிமிஷா.

(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

Comments

“தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 33” அதற்கு 2 மறுமொழிகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.