தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 34

நாகேந்திரன் சென்று பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும். அப்பாவும் அம்மாவும் சமையலையில் மெதுவான
குரலில் பேசிக் கொள்வது ஹாலில் தலைகுனிந்து அமர்ந்திருந்த துரையின் காதில் விழுந்தது.

அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறியும் ஆர்வம் அவனுக்கில்லை. குனிந்த தலையை நிமிர்த்தி இங்குமங்கும் பார்த்தான்.

டைனிங் டேபிளில் புதிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தாம்பாளமொன்றில் நாகேந்திரன் வரும்போது வாங்கி வந்திருந்த பழங்கள் இருந்தன.

‘த்தூ.. யாருக்கு வேணும் பழமெல்லாம்? அப்பாவும் அம்மாவுமே திங்கட்டும்!’ என்று நினைத்தவனின் பார்வை டேபிளுக்கு அடியில் கிடந்த பேப்பரில் நிலைத்தது.

மெல்லத் தவழ்ந்து மேஜையருகே சென்றவன் மேஜையின் கீழே கிடந்த பேப்பரைக் கையிலெடுத்தான். ‘திக்’கென்றது துரைக்கு.

நிமிஷாக்காவுக்கும் அந்தப் பாழாய்ப்போன ராம்குமாருக்கும் கல்யாணம் செய்வதென எழுதப்பட்டு, நிமிஷா சம்மதம் தெரித்துக் கையெழுத்துப் போட்டிருந்த காகிதங்களின் ஒரு காப்பி.

இன்னொன்று நாகேந்திரனிடம் இருக்க வேண்டும். நிமிஷா தன் மகனைத் திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில் தான் நிமிஷா குடும்பத்திற்கு என்னென்ன செய்வேனென நாகேந்திரன் அளித்திருந்த உத்திரவாதங்களும் அவன் கையெழுத்தும்கூட அதில் இருந்தன.

‘மிக முக்கியமான இந்த பேப்பர் குப்பைக்குப் போயிருந்தால்?’ அதனை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டான் துரை.

இரவு முவழுவதும் நிமிஷா தன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை; சாப்பிடவும் இல்லை. துரையும் சாப்பிடவில்லை.யாருடனும் பேசவுமில்லை.

சனிக்கிழமை. மனது மிகவும் பாரமாய் இருந்தது மானஸாவுக்கு. இரவு ஒன்பது மணிக்கு மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேராய் ந்யூயார்க்குக்கு ஃப்ளைட்.

‘இனி அம்மாவைப் பார்ப்போமா? மாட்டோமா?’ என்று தவிப்பாய் இருந்தது. தானும் ஒரு மருத்துவர் என்பதால் அம்மா கௌவுன்ட்டிங் ஹெர் டேஸ் என்பது மானஸாவுக்கு நன்றாகப் புரிந்தது.

நெஞ்சும் மனசும் கலங்கியது. அடிக்கடி கண்களில் கண்ணீர் நிரம்பியது. ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை அம்மாவிடம் போய்ப் போய் நின்றாள்.

கண்மூடிப் படுத்திருக்கும் அம்மாவைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தாள். கால்களைத் தொட்டுத் தொட்டுக் கண்களில் வைத்துக் கொண்டாள். குனிந்து குனிந்து நெற்றியில் முத்தமிட்டாள்.

காதுக்கருகில் குனிந்து “அம்மா! அம்மா!” என்று அழைத்தாள். கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் கேவினாள்.

‘அம்மா நீ கண்குளிர என்ன மாலையும் கழுத்துமா பாக்கணும்னு படுற ஆசைய என்னால நிறைவேத்தி
வைக்க முடியலம்மா! மன்னிச்சிடுமா!

அம்மா ஒம்பொண்ணு நா மனசுக்குப் புடிச்ச ஒருவர கல்யாணம் பண்ணிக்கிட்டேம்மா.

அம்மா மன்னிச்சுடுமா! தோ இன்னிக்கு ராத்திரி நா ஒன்னவிட்டுப் பிரிஞ்சுடுவேன்மா! இனிமே மறுபடியும் ஒன்ன நா பாப்பேனா தெரியலமா!

அப்பா, நா எனக்குப் பிடிச்சவர கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு தெரிஞ்சா மறுபடி இந்த வீட்டுக்குள்ள நுழையவும் ஒன்னப் பாக்கவும் அனுமதிக்கமாட்டாரும்மா! அம்மா! அம்மா!’ என்று அழுதாள் மானஸா.

மணி பதினொன்று. அடுத்தடுத்து வாசலில் கார்கள் வந்து நிற்க, மறுநாள் ஞாயிறன்று நடக்கவிருக்கும் நிச்சயதார்த்தத்திற்கு நெருங்கிய சொந்தங்கள் வந்திறங்கினார்கள். வீடு சொந்தக்காரர்களால் நிரம்ப
ஆரம்பித்தது.

எல்லோரோடும் மகிழ்ச்சியாய் இருப்பதாய்க் காட்டிக் கொள்ளச் சிரித்துப் பேசினாள் மானஸா. கிண்டலடித்தபோது பொய்யாய் வெட்கப்பட்டாள்.

நாளை அப்பா சொந்த பந்தங்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் அனைவரின் முன்பும் அவமானப்படப் போவதை நினைத்து வேதனைப்பட்டாள்.

‘தான் தப்பு செய்துவிட்டோமோ!’ எனக் கலங்கினாள்; குழம்பிப் போனாள். முன் வைத்த காலைப் பின் வைக்கக் கூடாதென தன்னைத் தானே தைரியப்படுத்திக் கொண்டாள். மானசீகமாய்த் தந்தையிடம் மன்னிப்புப் கேட்டாள்.

மணி பனிரெண்டு.

செல் அழைக்க ஆதியெனக் கண்டு, தன் அறைக்குச்சென்று “ஹலோ!” என்றாள்.

முதல்நாள் மாலை தான் நிமிஷாவை சந்திக்க செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சென்றதையும் நிமிஷா வராததால் ஏமாற்றத்தோடு திரும்பியதையும் சொன்னான்.

வருத்தப்பட்டாள் மானஸா. தன்னால் எத்தனை பேருக்கு நிம்மதி இழப்பு என்று வருந்தினாள். “ஸாரி ஆதித்யா!” என்றாள். ஆதி யாரோ அழைப்பதாய்ச் சொல்லிப் பேச்சை முடித்துக் கொண்டான்.

சட்டென ஒருமுடிவுக்கு வந்தாள் மானஸா. வேறு ட்ரெஸ்ஸுக்கு மாறினாள். ‘ஹேண்பேக்கில் விமான டிக்கெட்டின் ப்ரிண்ட்டவுட் உள்ளதா?’ எனப் பார்த்தாள்.

செல்லிலும் டிக்கெட்டின் விபரங்களைப்பார்த்துக் கொண்டாள். பணம் எவ்வளவு உள்ளது என்பதை கணக்கிட்டாள்.

யு.எஸ்.ஸிலிருந்து வரும்போது கொண்டு வந்த பெட்டியைக்கூட எடுத்துக் கொள்ளாமல் ஹேண்ட்பேக்கைத் தோளில் மாட்டிக் கொண்டு கண்ணாடியில் தன்னை ஒருமுறை பார்த்து முகத்தில் லேசாய் ஒப்பனை செய்து கொண்டு விட்டு அறையிலிருந்து வெளியே வந்தாள்.

அம்மாவின் அறைக்குச் சென்று அம்மாவைப் பார்த்தபோது அழுகை நெஞ்சை அடைத்தது; கண்களில் கண்ணீர் தேங்கியது. கர்ச்சீப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

மெல்லக் குனிந்து அம்மாவின் காதருகில் “பாய்மா!” என்றாள்; நெற்றியில் முத்தமிட்டாள்; அறையை விட்டு வெளியே வரும்போது பத்ரி எதிரில் வந்தார்.

தோளில் ஹேண்பேக்கோடு மகளைப் பார்த்தவர் “மானஸா என்னம்மா? ஹேண்பேக்கும் அதுவுமா மணி இப்பதா ஒன்னாகப் போவுது.

பதைபதைக்கிற வெயிலு! எங்க போகுறனு கேக்கக் கூடாது.. ஆனாலும் கேக்குறேன். வெயிலுல எங்க?” கேள்வியை இழுத்தார்.

திக்கென்றது மானஸாவுக்கு.

“இல்லப்பா! ப்யூட்டி பார்லர் போறேன்பா. ஃபேஷியல் பண்ணிக்கணும், ஹேர்ஸ்டைல் மாத்தணும், மெகந்தி போட்டுக்கணும்!”

“ஏம்மா ஃபோன் பண்ணா வீட்டுக்கே வருவாங்கள்ள?”

“அப்பா பார்லருக்கே போனாதாம்ப்பா எல்லாத்தியும் ஒரே எடத்துல முடிச்சிடலாம். தோ! ஒன்னர மணிக்குக் கெளம்புறேன்ல ப்யூட்டி பார்லருக்கு, ரெண்டு மணிக்குப் போவேன். எல்லாத்தையும் முடிச்சிகிட்டு நாலு மணி அஞ்சு மணிக்குள்ள வந்துடுவேன்பா!” என்றாள்.

“அதுவும் சரிதான்!” என்றார் பத்ரி.

சட்டெனக் குனிந்து அப்பாவின் கால்களைத் தொட்டுக் கண்களில் வைத்துக் கொண்டாள்.

“அட என்னம்மா! ப்யூட்டி பார்லருக்குப் போய்ட்டு வரலாம் கால்ல விழற!” சிரித்தார்.

“வரும்போது நல்லா அழகா வரணுமில்ல. அதா ஆசிர்வாதம் வாங்குறேன்!”

சுற்றி நின்ற சொந்தங்கள் கைதட்டிச் சிரித்தன.

அனைவரிடம் சொல்லிக் கொள்வதுபோல் கையாட்டினாள்.

வாசலுக்குவந்து காரில் ஏறினாள். காருக்குள்ளிலிருந்து ஆசை தீர வீட்டை ஒருமுறை பார்த்தாள்.

“சின்னம்மா! எங்கம்மா?” என்றார் டிரைவர்.

பெயர் பெற்ற ப்யூட்டி பார்லர் பெயரைச் சொன்னாள்.

மணி இரண்டு. ப்யூட்டி பார்லர் வாசலில் நின்றது கார்.

“டிரைவரண்ணே! நீங்க வீட்டுக்குப் போயிடுங்க. நா ஃபோன் பண்ணதும் வந்தா போதும்!” என்றாள்.

கார் திரும்பிச் சென்றது.

அது கண்ணிலிருந்து மறையும் வரை நின்றாள்.

ப்யூட்டி பார்லருக்குள் நுழையாமல் சிறிது தூரம் நடந்து சென்றாள்.

வாடகைக்கார் பேசி செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நோக்கி விரைந்தாள்.

காரில் போகும்போது ‘ஹாஸ்பிடலில் நிமிஷா இருக்க வேண்டுமென அமெரிக்காவில் தானிருக்கும் இடமான
நியூஜெர்ஸியில் கோயில் கொண்டிருக்கும் வலம்புரி பிள்ளையாருக்கு பிடிக்கொழுக்கட்டை செய்து நைவேத்தியம் வைப்பதாய்’ மனமுருக நேர்ந்து கொண்டாள்.

இப்படித்தான் இருக்கிறாள் என்று சொல்ல முடியாத அளவில் மனதாலும் உடலாலும் நைந்துபோய் இருந்நாள் நிமிஷா.

நிச்சயதார்த்தத்துகுக் கட்டவேண்டிய புடவை. புடவைக்கேற்ற ரெடிமேட் ஜாக்கெட்டுகள் (பல சைஸுகளில் ஏதாவது ஒரு ஜாக்கெட் உடலளவுக்குப் பொருந்தாதா என நினைத்திருக்க வேண்டும்) மேக்கப் கிட், மல்லிப்பூ, கில்ட்டு நகைகள் என நாகேந்திரனின் ஆள் கொண்டுவந்து கொடுத்து விட்டுப் போனான்.

எது ஒன்றையும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை நிமிஷா.

வீட்டிலிருக்கவும் பெற்றவர்களைப் பார்க்கவும் பிடிக்கவில்லை. பகல் ஒருமணிக்கெல்லாம் மருத்துவமனைக்குக் கிளம்பி விட்டாள்.

“அக்கா நானும் வரேங்க்கா! வீட்டுல இருக்கவே புடிக்கிலக்கா!” கெஞ்சிய துரையையும் அழைத்துக் கொண்டாள்.

மணி இரண்டு. வைஷாலியின் கட்டிலருகே கிடந்த நாற்காலியில் கண்களை மூடித் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் நிமிஷா.

அடிக்கடி எழுந்து எழுந்து வைஷாலியைப் பார்த்தாள்.
‘தளதள’வென்று இருந்த வைஷாலி கரைந்துபோய் மெலிந்து போயிருந்தாள்.

அசைவின்றிக் கிடக்கும் வைஷாலியைப் பார்த்து நெஞ்சு தவித்துப் போனது நிமிஷாவுக்கு.

‘வைஷாலி! நா என்னடி செய்வேன் வைஷாலி? நிமிக்கா நிமிக்கானு எம் மூஞ்சியத் தொட்டுத் தொட்டுத் திருப்பி பேசுவியே! இப்பிடி பேச்சில்லாமக் கெடக்கியேடி. நா எதுக்குன்னு அழுவேண்டி வைஷாலி!’ அழக்கூட சக்தியற்றுப் போய் மனதால் புலம்பியபடி நிற்பாள்.

மீண்டும் நாற்காலியில் அமர்வாள். அப்படித்தான் இப்போதும் நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.

அறைவாசலில் காலடிகள் ஓசை.மருத்துவர் ஒருவரும் இரு நர்ஸ்களும் உள்ளே நுழைந்தார்கள். எழுந்து நின்றாள் நிமிஷா.

வைஷாலியை நிமிட நேரம் நின்று பார்த்தார் டாக்டர்.

“டாக்டர்! வைஷாலி!” என்று நிமிஷா ஆரம்பிக்கும் முன்பே “ஏம்மா பேஷண்ட்ட வீட்டுல வெச்சு பாத்துக்க முடியாது?” என்று நிமிஷாவை முந்திக்கொண்டு கேள்வி கேட்டார் மருத்துவர்.

“வீட்டுல வசதி பத்தாது டாக்டர்!” என்றவளிடம்,

“ப்ச்!” என்று மட்டும் சொல்லிவிட்டு அடுத்த பெட்டுக்கு நகர்ந்தார்.

ஆறு பெட்டையும் பார்த்து முடித்துவிட்டு நர்ஸ்கள் சகிதம் மருத்துவர் அறையை விட்டு வெளியேறும் தருணம் இரண்டு நர்ஸ்களிள் ஒருவர் நிமிஷாவை அணுகி “நீங்க நிமிஷாதானே!” என்றார்.

“ஆமாம்!” என்றாள் நிமிஷா.

“நேத்து சாயந்திரம் ஒங்க தங்கச்சியப் பாக்க ஒருத்தரு வந்திருந்தாரு. ஒங்கம்மா வைஷாலிய பாத்துக்குங்க
வீடு வரைக்கும் போயிட்டு வந்துடறேன்னு போயிட்டாங்க. வைஷாலிட்ட யாருமே இல்ல.

பாக்க வந்தவரு அந்த ஜன்னலுகிட்டயே கால் கடுக்க ரெண்டு ரெண்டர மணிநேரம் நின்னுகிட்டே இருந்தாரு. அப்புறம் பாவம் கிளம்பிப் போய்ட்டாரு.

நா அவுரு பேர கேக்குல. ஆனா நிச்சயமா ஃப்ரென்ட் ஆஃபீஸ்ல கேட்டுருப்பாங்க..” என்று சொல்லிவிட்டுப் போனார்.

‘யாரா இருக்கும்?’ எனக்கூட தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை நிமிஷாவுக்கு. ஆனாலும் அவளையும் மீறி அடி மனம் பிராண்டியது. அதன் பிராண்டலைத் தாங்க முடியாதவளாய் ஃப்ரென்ட் ஆஃபீஸ் நோக்கி நடந்தாள்.

அறைவாசலில் கிடந்த நான்கு நாற்காலிகள் ஒன்றில் ஒருமாதிரி பொட்டலம் போல் மடிந்து அமர்ந்திருந்தான் துரை.

“குட் டாஃப்டர் நூன்” என்றாள் ஃப்ரென்ட் ஆஃபீஸில் பணிபுரியும் பெண்ணிடம். நிமிர்ந்து பார்த்த அந்தப் பெண்
நிமிஷாவைப் பார்த்து ஸ்நேகமாய்ச் சிரித்தாள்.

“ஹலோ! நிமிஷாதானே நீங்க?”

“ஆமா! நேத்து ஈவினிங் யாராவது பேஷண்ட் வைஷாலியப் பாக்க வந்தாங்களா?”

“ஒருநிமிஷம்!” விஸிட்டர்ஸ் பதிவேடு பார்த்தாள்.

“யெஸ்! ஆதித்யா என்பவர் நேத்து மாலை ஐந்து பதினைந்துக்கு வந்ததா பதிவாயிருக்கு!” என்று சொன்னவர் அடுத்ததாய் இன்னொருவர் வந்து ஏதோ கேட்க அவரிடம் பேச ஆரம்பித்தார்.

“ஆதித்யா!” என்று அந்தப் பெண் சொல்லவும் அதிர்ந்து போனாள் நிமிஷா.

‘ஆதி! ஆதி! ஆதியா? ஆதியா? ஆதி ஏன் இங்க வரணும்?’ உணர்ச்சிக் கலவையாய் மாறிப் போனாள்

நிமிஷா.ஆதியின் பெயரைக் கேட்டபோது கோபமா, வெறுப்பா, ஆத்திரமா, அழுகையா, சுயபச்சாதாபமா,
ஏமாற்றமா எதுவென்று வரையறுக்க முடியாத அனைத்தும் ஒன்றாய்ச் சேர்ந்த கலவையாய் ஓர் உணர்வு நெஞ்சுக்குள் கொப்பளித்தது.

‘ஓ!’வென்று கத்திக் கொண்டே இங்குமங்கும் ஓடவேண்டும் போல் இருந்தது.

நெஞ்சுக்குள் எத்தனை விதமான வேதனைகளைத் தான் சுமக்க முடியும்? கை கோர்த்து மெய்யணைத்து தோள் சாய்த்து ஆறுதல் கூற யாருமின்றி அனாதை போல் நினைவு தெரிந்த நாள் முதல் சோதனைகளும் வேதனைகளுமாய் விடிவே இல்லாத வாழ்க்கையாய், இடையே மேஜிக் ஷோ பார்ப்பது போல் பொய்யை நிஜமென நம்பி, பாலைவனத்தைச் சோலையென்றும், கானல் நீரை நிஜ நீரென்றும் நம்புவதைப்போல் ஆதியை நிஜமானவன் என நம்பிப் பழகி ஏமாந்து, வருங்கால வாழ்க்கையும் இருண்ட வாழ்க்கையாய்தான் இருக்குமென்று தெரிந்தும் அந்த இருட்டுக்குள் வேறு வழியேயின்றிக் கால் வைக்கத் துணிந்து மீண்டும் அறைக்குள் நுழைந்து நாற்காலியில் அமர்ந்தாள்

நிமிஷா.இதயம் மொத்தமாய் கட்டுக்கடங்காத வேதனைகளால் நிரம்பி அந்தச் சுமைகளைத் தாங்க முடியாமல் தவித்தது.

அக்காவின் வேதனையின் அளவு அக்காமுகம் பார்த்தே தெரிந்தது துரைக்கு. யாரிடமும் சொல்லி அழக்கூட ஆளில்லாமல் வேதனையாய் அமர்ந்திருந்தான்.

மணி மூனேகால். மருத்துவமனை வாசலில் நின்றது கார்.

கோமாவில் இருப்பவர்களின் வார்டு இருக்குமிடம் எளிதில் தெரிந்து போக, முதல்நாள் ஆதி வந்து நின்றிருந்து மூன்றாம் நம்பர் அறை வாசலில் வந்து நின்றாள் மானஸா.

அறை வாசலில் நாற்காலியில் ஆமர்ந்திருந்த துரைமீது மானஸாவின் பார்வை பட்டது. துரையும் மானஸாவைப் பார்த்தான்.

‘யாரையோ பாக்க வந்திருப்பாங்க போல’ என நினைத்துக் கொண்டான்.

மானஸா ஜன்னல் வழியாய் உள்ளே பார்த்தாள். பெட்டில் கிடந்த வைஷாலி தென்பட்டாள்.

வைஷாலியைப் பார்த்ததுமே மருத்துவம் படித்திருக்கும் மானஸாவுக்கு ‘ப்ச்.. அடக்கடவுளே!” என்று தோன்றியது.

பார்வை நகர்ந்து நாற்காலியில் சோகமே உருவாய் நாற்காலியில் அமர்ந்திருந்த நிமிஷாவின் மீது விழுந்தது.

‘இவுங்கதா நிமிஷா! முந்தா நாளு ஆதித்யா வண்டிய நிறுத்துன சிவப்ரகாஷ் டிரேடிங் கம்பெனிலேந்து படி எறங்கி வந்தவுங்க இவுங்கதான்.

இவுங்குளப் பாத்துதான் ஆதித்யா நிமிஷான்னு கத்தினாரு; பின்னாடியே ஓடினாரு.நிமிஷாதான் இவுங்க’ என்று உறுதியானாள் மானஸா.

உள்ளே நுழைந்து தலை குனிந்து சேரில் அமர்ந்திருந்த நிமிஷாவின் முன் நின்றாள். சோகமே உருவாய் அமர்ந்திருந்த நிமிஷாவைப் பார்த்த மானஸாவுக்கு வேனையாய் இருந்தது.

‘ரொம்பப் பாவம் நிமிஷா!’ என்று தோன்றியது.

கண்களை மூடி நாற்காலியில் அமர்ந்திருந்த நிமிஷாவுக்கு தன்னை நோக்கி வந்த காலடி ஓசையும் தனக்கு மிக அருகே வந்ததும் ஓசை நின்று விட்டதும் புரிந்தது.

மூடியிருந்தக் கண்களைத் திறந்து மெல்லத் தலை நிமிர்த்திப் பார்த்தாள். தனக்கு எதிரில் நிற்கும் மானஸாவைப் பார்த்து அப்படியே அதிர்ந்து போனாள்.

(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

Comments

“தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 34” மீது ஒரு மறுமொழி

  1. […] தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 3… தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 33 […]

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.