தென்றல் வந்து என்னைத் தொடும் - பகுதி 5

தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 5

ஏற்கனவே சோஃபாவில் இருவர் அமர்ந்திருக்க, மீதமிருந்த இடத்தில் வந்தமர்ந்த ஆதி மெல்ல நிமிர்ந்து ரிசப்ஷனில் அமர்ந்திருந்த நிமிஷாவைப் பார்த்தான்.

தன்னைப் பார்த்ததும் முகம் சுருங்க சட்டென அந்தப் பெண், தன் மனதைக் கவர்ந்த பெண், தன் மனதில் லைட் எரிய வைத்தவள், தன் மனதுக்குள் பச்சென ஒட்டியவள், தன்னைப் பார்த்ததும் லேசாகக் கடுப்பானதும் சட்டென கணினியில் பார்வையைச் செலுத்தியதையும் மறுபடியும் நினைத்துச் சிரித்துக் கொண்டான் ஆதி.

தன் மனதைக் கவர்ந்த அந்தப் பெண், தான் இந்த ஆஃபீஸுக்கு வந்ததும் மனதில் தன்னைப் பற்றி என்னவெல்லாம நினைத்திருப்பாள்,

‘ரிங்கை எடுத்துக் குடுத்த சாக்கில் தான் இந்த ஆஃபீஸ்ல வேல பாக்குறேனான்னு பாக்க வந்துட்டாம் பாரு’ன்னு நினைத்துத் திட்டிக் கழுவிக் கழுவி ஊற்றியிருப்பாள் என்று நினைத்தபோது வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போல் இருந்தது ஆதிக்கு.

‘அப்படி என்ன சொல்லி கழுவி ஊத்திருப்பா ஒன்னைய சொல்லேன்!’ ஒன்னுமே தெரியாத அப்பாவி போல் கேட்டது மனது.

‘இப்டீல்லாம் நெனச்சிருப் பாங்க’ அவன் விவரமாய்ச் சொன்னதும் ‘ஓ .. சமாளி! சமாளி!’ சொல்லிவிட்டு அமைதியாய் படுத்துக் கொண்டது மனது.

அவன் நினைத்தது போலவே நிமிஷாவுக்கு அவன் உள்ளே நுழைந்தைப் பார்த்ததிலிருந்து ஏகத்துக்கும் மனதில் கோபமும் எரிச்சலும் எட்டிப் பார்த்தன.

‘ரிங்க ரொம்ப யோக்கியம் போல அப்பிடியே எங்கை மேல தன் கை இடிச்சிகிடிச்சிடப் போறுதேன்னு சர்வ ஜாக்கிரதையா தன் கைய மேல தூக்கி எங்கைல போட்டு தன்னோட கண்ணியத்த பறைசாத்திக்கிட்டதுல ஒன்னும் கொறச்சலில்ல.

‘நாங்கூட பாரேன் எத்தன டீசன்டான ஆளுன்னு!’ மனசுக்குள்ள சர்டிஃபிகேட் குடுத்தேன். தேங்ஸ்ஸ கூட எதிர்பாக்காதவம்மாரின்னா நடந்து போனான்.

நான் தேங்யூன்னு சொன்னப்பகூட கழுத்த மட்டும் திருப்பி ‘வெல்கம்’னுட்டு படு கேஷுவலா போனான். ரொம்ப ஜென்டில்மேன்னு அடுத்தாப்ல இன்னோரு சர்டிஃபிகேட்டும்னா குடுத்துத் தொலச்சேன்.

ஆனா நா அப்பிடியெல்லாம் இல்லை..நானும் பத்தோடு பதினொன்னுதான்னு காட்டிட்டான்.

பாரு, நா இந்த ஆஃபீஸ்லதா வேல பாக்குறேனான்னு தெரிஞ்சிக்க வந்து, ஒக்காந்திருக்குறத. வெள்ளையா இருந்தா நல்லவனா இருப்பானான்னு கேக்குறாப்புல, ஆளு அழகா இருந்தா யோக்கியனாயிடுவானா?’

‘என்ன சொன்ன? என்ன சொன்ன? ஆளு அழகா இருக்கானா?’ மனம் கிண்டலடிக்க, ‘அது வந்து அது வந்து அப்பிடி இருந்தா சொல்லித்தானே ஆக வேண்டிருக்கு..அதா சொல்லித் தொலச்சேன்..விடு, ரொம்ப வால ஆட்டாத’

“ஹேய்! நிமி!” ப்ரியம்வதா அழைத்தபடி அருகில் வந்து நின்றாள்.

லேசாய்க் கழுத்தை மேற்புறம் தூக்கி..பக்கத்தில் நிற்கும் ப்ரியம்வதாவைப் பார்த்தாள் நிமிஷா.

“ஏய் பாரேன்! எதுத்தாப்புல சோஃபாவுல ஒக்காந்திருக்குற கை ரொம்ப ஹேண்ட்சம்ல!” நிமிஷாவின் காதில் ரகசியமாய்க் கிசுகிசுத்தாள்.

“க்கூம்! ரொம்பத்தா அழகு! போறுமே!”

‘ஏய்! ஏய்! நில்லு! நில்லு! சித்தநேரம் முன்னாடி நீயே அவன அழகாருந்தா யோக்கியனாயிடுவானான்னு நெனக்கில? அப்ப அழகாயிருந்தான்னு நெனச்சிட்டு இப்ப இப்பிடி சொல்ற!’ மனசு இடித்தது.

‘வர வர ஒன் உபத்ரவம் ரொம்ப ஆயிடுத்து!’ மனசைத் திட்டினாள்

“அடி! போடி! ஒனக்கு ரசனையே கெடையாது..கல்லுடி நீ!” ப்ரியம்வதா சொல்லிவிட்டுத் தன் சீட்டுக்குப் போய் விட்டாள்.

‘நாம நெனைக்கிறது தப்போ? எதுத்தாப்ல ஒக்காந்திருக்குற ஆளுக்கு இந்த ஆபீஸ்லயும் எதாவது வேல இருக்கோ என்னவோ? நா யாரு தப்பா நெனைக்க?’ என்று தோன்றியது.

தொடர்ந்து தன் வேலையில் ஈடுபட்டிருந்த நிமிஷாவை, “எக்ஸ்க்யூஸ்மி!” என்ற குரல் நிமிர்ந்து பார்க்க வைத்தது.

லேசாய்த் தடுமாறிப் போனாள். எதிரில் அவ்வளவு அருகாமையில் அவனைப் பார்த்து.

‘அந்த கை ரொம்ப ஹேண்ட்ஸமால்ல!’ என்று ப்ரியம்வதா கேட்டது நினைவு வந்தது.

‘ஆமா! ஆமா! நெஜந்தா!’ பறந்தடித்துக் கொண்டு மனது சொல்ல, அவன் ‘எக்ஸ்க்யூஸ்மீ!’ எனச் சொன்னதை மறந்து போனாள்.

மீண்டும் “எக்ஸ்க்யூஸ்மீ!” என்றான் ஆதி மிகலேசான புன்முறுவலுடன்.

“எஸ்!” என்றாள் நிமிஷா படபடப்பை மறைத்துக் கொண்டு.

“நான் ஆதித்யா.நான் கே.ஆர்.ஜி. நிறுவன உரிமையாளர் திரு.கோவர்த்தன் அவர்களைச் சந்திக்க வந்துள்ளேன். கொஞ்சம் சீக்கிரமாய் அவரை சந்தித்தால் நல்லது. ஏற்பாடு பண்ண முடியுமா?” மிக வினயமாய் ஆங்கிலத்தில் கேட்டான்.

“ஏற்கனவே அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருக்கீங்களா?”

“இல்ல!”

“அதோ சோஃபாவுல உட்கார்ந்திருக்காங்களே அவங்க ரெண்டு பேரும் ஏற்கனவே அப்பாயின்ட்மென்ட் வாங்கிருக்காங்க. நீங்க ஓனர் சாரைப் பாக்கணும்னா இதோ இந்த பேப்பருல்ல உங்க பேரு, மற்ற டீட்டெயில்ஸ எழுதிக் குடுங்க!

சார் ஓகே சொன்னா இன்னிக்கு சந்திக்கலாம். இல்லாட்டி நாளைக்குதா! சீக்கிரம் கிளம்பிடுவாரு… தங்கு தடையின்றி ஆங்கிலத்தில் பேசி அசத்தும் நிமிஷாவை வைத்த கண் எடுக்காமல் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி.

அவன் கண்களுக்கு அழகுப் பெட்டகமாய்த் தெரிந்தாள் நிமிஷா. கண்களை நகர்த்தவே தோன்றவில்லை. ‘பார்த்துக் கொண்டே இருந்தால் தேவலாம் போல் இருந்தது. ஆனாலும் அப்படிப் பார்க்க முடியுமா?’ என நினைத்தவனாய் நேரம் பார்ப்பவன் போல் வாட்சைப் பார்த்தான்.

நிமிஷா கொடுத்த பேப்பரில் தன் பெயர் மற்றும் ஃபோன் நம்பரை எழுதிக் கொடுத்தான்.

“ஓ.கே.உட்காருங்க!”

மீண்டும் வந்து சோஃபாவில் அமர்ந்தான்.

ஆதிக்கு முன்பாக அப்பாயின்ட்மென்ட் வாங்கிய இருவரும் ஒருவரடுத்து ஒருவர் நிறுவன உரிமையாளர் கோவர்த்தனைச் சந்தித்துவிட்டுச் செல்ல, நிமிடநேர இடைவெளியில், “மிஸ்டர் ஆதித்யா!” அழைத்தாள் நிமிஷா..

சோஃபாவிலிருந்து எழுந்த ஆதி, “எஸ்!” என்றான் நிமிஷாவைப் பார்த்து.

“நீங்க போய் சாரை சந்திக்கலாம்!”

“தேங்ஸ் எ லாட்!” என்று நிமிஷாவைப் பார்த்துச் சொல்லிவிட்டு தன் தந்தை இருக்கும் அறைக்குச் சென்றான் ஆதி.

அவன் ஓனரின் அறை நோக்கி நடந்து செல்வதைப் பார்த்துக் கொண்டே இருந்தவளின் மனது, ‘ஆமா! சும்மா வந்துட்டமே எதாவது செய்யனுமேன்னு, பம்மாத்து வேல செய்ய வேண்டிது,

அப்டியே நாலு கிரவுண்டு வாங்கி நாலு கோடிக்குக் பில்டிங் கட்டப் போறாப்லதான்.டுபாக்கூ.ர் பார்ட்டி! பாரு! போன ரெண்டாவது நிமிஷம் வெளிய வரப் போறத.

அப்டியே ட்ரிம்மா ட்ரெஸ் பண்ணிகிட்டு வந்துட்டா, வெட்டி ஆபீஸர்!’ மீண்டும் மனக்குரங்கு ஆட்டம் போட்டு ஆடியது.

மறுநொடி ‘ஏய் நிமி! நீ அந்த ஆள இப்பிடி கண்டம் பண்ணக் கூடாது..ஏன்? நீ இங்க வேல பாக்குறயான்னு தெரிஞ்சிக்க வந்ததா நெனைக்கிற, நெஜமாவே ஒனரப் பாக்க வந்துருக்குலாம்ல!’ மாற்றி மாற்றி மனதை ஆட்டி வைத்தது மனக்குரங்கு.

மாறி மாறி மனதை ஆட்டி வைக்கும் குரங்கிடம் மாட்டிக்கொண்டு விழித்துக் கொண்டிருந்த நிமிஷாவின் தோளைப் பிடித்து ஆட்டினாள் ப்ரியம்வதா.

“ஏய்! கண்ணத்தொறந்துண்டே தூங்குறியா?..நம்ம ஓனர் சார் வெளிய வந்து நம்மகிட்ட ஏதோ பேசப் போறாறாம். பாரு மத்தவங்கள்லாம் அங்க போயி நிக்குறத. நீ பாட்டுக்கு ஒக்காந்திருக்க”

“ஸாரி! ஸாரி!” சொல்லிக் கொண்டே எழுந்தாள் நிமிஷா.

“என்ன ப்ரியா! ஓனர் சார் பேசப் போறாறா? என்ன பேசப் போறாரு?”

“ஏய், எங்கிட்ட கேட்டா? எனக்கென்ன தெரியும்?” உதட்டைப் பிதுக்கித் தோளைக் குலுக்கினாள் ப்ரியம்வதா.

“சரி! சரி! சீக்கிரம் வா!” என்றாள்.

மொத்தமாய்ப் பதினாறு ஸ்டாஃப்ஸ்.அவரவர்கள் பார்க்கும் வேலையின் தரவரிசைப்படி அதற்கேற்ப வரிசையாக நின்றார்கள்.

ஆனாலும் ஆணாதிக்க சமூகம் நிமிஷாவைவிடக் குறைவான கேடரில் வேலை பார்க்கும் ஆண்கள் சிலரை அவளுக்கு முன்பு நிறுத்திவிட்டு நிமிஷாவைக் கடைசியாய் நிறுத்தியது.

தான் அங்கு பணியாற்றும் அனைவரைக் காட்டிலும் வயதில் சிறியவளென்பதால் கடைசியாய் நிறுத்தப்பட்டிருப்பதாய்த் தன்னைச் சமாதானம் செய்து கொண்டாள் நிமிஷா.

அனைவரின் பார்வையும் நிறுவன உரிமையாளரின் அறைக் கதவின் மீதே நிலைத்திருந்தது.

கண்ணாடிக் கதவு நகரும் மிக மெல்லிய ஓசை. ஓசையைத் தொடர்ந்து கே.ஆர்.ஜி.நிறுவனத்தின் உரிமையாளர் திரு.கோவர்த்தன் அறையிலிருந்து முதலில் வெளியே வந்தார். அவரைத் தொடர்ந்து ஆதித்யா.

இருவரும் பணியாளர்களை நோக்கி நடந்து வந்தனர். கோவர்தனின் பின்னால் நடந்துவரும் ஆதித்யாவின் வசீகரம் ப்ரியம்வதாவை மிரட்டியது.

பார்வையை அவன் மீதிருந்து அவளாள் எடுக்க முடியவில்லை.தேனில் விழுந்த ஈயாய் மீளமுடியாமல் தவித்தாள்.

‘ஓ! புது நியமனம் போலருக்கு இந்த ஆளு! ஒருவேள புது மேனேஜரா இருக்குமோ? பழைய மேனேஜர வேற ப்ராஞ்சுக்கு மாத்திருப்பாங்களோ? அதா அந்தாள புது மேனேஜர்னு அறிமுகப்படுத்த வராறோ ஓனர்!’ என நினைத்தாள் நிமிஷா.

நிற்கும் அனைவரையும் பார்த்து கை கூப்பியபடி பேச ஆரம்பித்தார் கோவர்த்தன்.

“எனதன்புக்கும் மரியாதைக்குமுரிய அனைவருக்கும் வணக்கம்!

இன்று இங்கு இப்பொழுது முக்கியமான ஒருவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இதோ என்னருகில் நிற்கும் இவர் மிஸ்டர் ஆதித்யா!எனது ஒரே மகன்!”

‘இவர் மிஸ்டர் ஆதித்யா! எனது ஒரே மகன்!’ என்று உரிமையாளரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் நிமிஷாவை மின்சாரம் தாக்கியதைப்போல் நிலைகுலைய வைத்தது.

ஏசி வாரியடிக்கும் ஜில்லிப்பால் குளிர்ந்து போயிருக்கும் அந்த ஹாலிலும் ‘குப்’பென்று வியர்த்தது.

‘அய்யோ! இவுரு.. இவுரு.. இந்த கே.ஆர்.ஜி. நிறுவன ஓனரோட ஒரே மகனா? இவரையா நா அவ்வளவு கேவலமா மனசுக்குள்ள திட்டினேன்’ உடல் நடுங்கியது. பக்கத்திலிருந்த டேபிளைப் பிடித்துக்கொண்டாள் நிமிஷா.

கோவர்த்தன் தொடர்ந்து பேசுவது கேட்டது.

“இதுவரை இந்த நிறுவனத்தின் உரிமையாளன் என்ற முறையில் நானே மேனேஜிங் டைரக்டராகவும், சி.இ.ஓ.வாகவும், சேர்மேனாகவும் நிறுவன நிர்வாகத்தைக் கவனித்து வருகிறேன் என்பது உங்களனைவர்க்கும் தெரியும்.

எனக்குக் கொஞ்சம் ஓய்வு தேவைப்படுவாதால், இனி நமது கே.ஆர்.ஜி. நிறுவனத்தில் எம்.டி.யாய் இருந்து எனது மகன் ஆதித்யா நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வார் என்பதைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

ஆனாலும் நான் முழுவதுமாய் ஓய்வெடுக்கப் போவதில்லை. நீங்கள் அனைவரும் உங்களின் கடின உழைப்பைத் தந்து இந்த நிறுவனத்தின் உயர்வுக்கு வழிகாட்டியாய் உள்ளீர்கள். எனக்கு உறுதுணையாய்
இருக்கிறீர்கள்.

அதற்காக உங்கள் அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றி.நீங்கள் அனைவரும் எனக்குத் தந்த அதேஅளவு உறுதுணையைப் புதிதாய் நிர்வாகப் பொறுப்பேற்கவிருக்கும் எனது மகன் ஆதித்யாவுக்கும் அளிக்க வேண்டுமென உங்களனைவரையும் வேண்டி, விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசி முடித்தார் கோவர்த்தன்.

அனைவரின் கைதட்டலால் அந்த பிரம்மாண்ட அலுவலக ஹாலே அதிர்ந்தது.

அடுத்து அனைவரையும் ஒவ்வொருவராய் ஆதித்யாவுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

மேனேஜர் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மேனேஜரே அடுத்தடுத்து ஒவ்வொருவரையும் ஆதித்யாவுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே வந்தார்.

கடைசியாய் நிமிஷாவிடம் வந்து நின்றார்கள் மேனேஜரும். ஆதித்யாவும். பரபரத்துப் போனான் ஆதித்யா.

தன் மனதைக் கவர்ந்தவள் நேருக்கு நேராய் அறிமுகப்படுத்தப்படப் போகிறாள். அவளின் பெயரைத் தெரிந்து கொள்ளப் போகிறோம் என்ற நினைப்பே பேரின்பமாக இருந்தது ஆதிக்கு.

“இவுங்க மிஸ்.நிமிஷா! நம்ம நிறுவனத்துல ரிசப்ஷனிஸ்ட் கம் கிளார்க்கா பணி புரியறாங்க..ரொம்ப திறமைசாலியான பொண்ணு!” சொல்லிக் கொண்டே போன மேனேஜரின் வார்த்தைகளில் ‘இவுங்க பேரு நிமிஷா!’ என்ற வார்த்தைக்குப் பிறகு வேறு எதுவும் ஆதியின் காதுகளுக்குள் செல்லவில்லை.

‘நிமிஷா! ஸ்வீட்! ஸ்வீட்! வெரி ஸ்வீட் நேம்!’ மனதுக்குள் நினைத்தவன். ‘நிமிஷா! நிமிஷா!’ என தனக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.

ஆதியின் உதட்டில் மெல்லிய முறுவல் இழைந்தது. புருவங்கள் லேசாய் மேலே ஏறி இறங்கின.

தனது புதிய பாஸின் சிறிய அசைவுகளைத் திகைப்போடு பார்த்தபடி நின்றாள் நிமிஷா.

அதே நேரம் ஆதியின் வசீகரம் அவளின் இளம் மனதை லேசாய்க் கிள்ளிப் பார்த்தது.

(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்