தென்றல் வந்து என்னைத் தொடும் - பகுதி 6

தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 6

அனைவரையும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி முடிந்து கோவர்த்தனும் ஆதித்யாவும் கண்ணாடிக் கதவு கொண்ட அறைக்குள் சென்று விட, அடுத்த கால்மணி நேரத்தில் அந்த அறையின் வெளிப்புறச் சுவற்றில் எம்கார்ட் நேம் ப்ளேட்ஸின் பளபளக்கும் பெயர்ப் பலகையில்

G. Aditya M.Arch., M.B.A.
Managing Director
K.R.G.Real Estate (P) Ltd.,

என்று எழுதப்பட்டிருந்த நேம் போர்டு மாட்டப்பட்டது.

மேனேஜரை அழைத்து நடந்து கொண்டிருக்கும் ஆன்கோயிங் ப்ராஜெக்ட்டுகள் பற்றிப் பேசிவிட்டு மகன் ஆதிக்கு வேலை நுணுக்கங்கள் சிலவற்றைத் தெளிவுபடுத்திவிட்டு,

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருந்தது ஆதிக்கு. ஆனாலும் ‘தொழிலில் நிச்சயம் ஷைன் பண்ணுவோம்’ என்ற நம்பிக்கை இருந்தது.

அப்பாவை நினைத்துப் பெருமையாக இருந்தது.

‘எப்படியொரு வர்த்தக சாம்ராஜ்ஜியத்தைத் தன்னந்தனியாய் நிர்வகித்து வெற்றிகரமாய் நிலைநாட்டியிருக்கிறார். இனி அப்பாவிற்கு துணையாய் இருந்து அவரின் பொறுப்பெனும் சுமையைத் தாங்கத் தோள் தரவேண்டியது தனது கடமை’ என நினைத்தான் ஆதி.

தினமும் அலுவலகம் வரவேண்டுமெனத் தீர்மானித்தான்.

‘அப்பாவுக்கு உதவியா இருக்கனும்; அப்பாவின் பொறுப்புகளை ஷேர் செய்து கொள்ள வேண்டும்; அதற்காக தினமும் ஆஃபீஸ் வந்து அப்பா கொஞ்சமாவது ஓய்வில் இருக்க ஒதவனும்னு நீ நெனைக்கிறது நல்லதுதா, ஆனா ஆதி அதுக்கு மட்டுமா நீ தினமும் ஆஃபீஸ் வர நெனைக்கிற? நெஜமா சொல்லு’ மனது மடக்கிக் கேட்டது.

‘பின்ன? வேற எதுக்காம்?’ மனதிடம் கேள்வி கேட்டுவிட்டுச் சிரித்துக் கொண்டான்.

‘சரி ஏதாவது முக்கியமான மெயில் வந்திருக்கிறதா? பார்ப்போம்’ என்ற எண்ணத்தில் கம்யூட்டரில் பார்வையைப் புதைத்தவன் கண்களில் பட்டது அரசு பொதுப்பணித்துறையிடமிருந்து டெண்டர் கோரி வந்திருந்திருந்த அந்த மெயில்.

அரசு பொது மருத்துவமனை கட்டுவது தொடர்பாய் டெண்டர்கள் வரவேற்கப்படுகின்றன.டெண்டரில் கலந்து கொள்வதற்கான நுழைவுக் கட்டணம் கட்டுவற்கான இறுதித் தேதியின் அறிவிப்போடு வந்திருந்த அந்த மெயிலை வெகு உன்னிப்பாய்க் கவனித்தான் ஆதி.

‘நேற்றே வந்திருந்த மெயில். நிச்சயம் அப்பா பார்த்திருப்பார்’ என்று நினைத்தான்.

மருத்துவமனை கட்ட வேண்டிய இடம், இடத்தின் விஸ்தீரணம், அந்த விஸ்தீரணத்திற்குள் மருத்துவமனை அமைய வேண்டிய பரப்பளவு, எத்தனை அறைகள்? எத்தனை தளங்கள்? எப்படியான தோற்றம்? என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலும், மருத்துமனைக்கட்டிடம் எவ்வளவு காலத்திற்குள் கட்டி முடித்து ஒப்படைக்கப்படும் என்ற கேள்வியும் என அனைத்து விபரங்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.

ஆகும் மொத்த செலவாக அரசு நிர்ணயத்து வைத்திருக்கும் தொகைக்குள் கட்டி முடித்து ஒப்படைக்க முன்வரும் ஒப்பந்தக்காரர்களில் எவரின் தொகை குறைவாக இருக்கிறதோ அது ஒரு ரூபாயாக இருந்தாலும் அந்த ஒப்பந்தக்காரருக்கே ஒப்பந்தம் அளிக்கப்படும்.

சனி, ஞாயிறு அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக இருபது நாட்களுக்குள் ஒப்பந்தத் தொகையைத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியிருந்தது அந்த மெயில்.

‘நாம் நிர்வாகப் பொறுப்பேற்றதும் வந்திருக்கும் முதல் டாஸ்க் இது. இதில் நாம் பங்கேற்க வேண்டும்’ என ஆசைப்பட்டது ஆதியின் மனது. ‘அப்பாவிடம் இது பற்றிப் பேச வேண்டும்’ என நினைத்துக்கொண்டான்.

ரோலக்ஸில் டைம் பார்த்தான். மணி ஒன்னரை ஆகியிருந்தது. லேசாகப் பசித்தது.

‘வீட்டுக்குப் போலாம்’ என நினைத்தவனாய் சேரிலிருந்து எழுந்தவனுக்கு நிமிஷாவின் ஞாபகம் வந்தது.

‘இப்ப லஞ்ச் பிரேக்காச்சே! சாப்புடுவாங்களோ?’ என்று தோன்றியது.

கண்ணாடிக் கதவை மெல்லத் திறந்து கொண்டு வெளியே வர முயன்றவனின் கண்களில் விழுந்தாள் நிமிஷா.

வலது கை டிபன் பாக்ஸுக்குள் இருக்க, இடதுகை செல் ஃபோனை இடதுகாதில் வைத்திருந்தது. பணி செய்பவர்கள் எவரையும் மதிய இடைவேளை என்பதால் காணவில்லை. அதனால் சப்தம் ஏதுமின்றி அமைதியாய் இருந்தது.

நிமிஷா மட்டுமே காணப்பட்டாள். அவள் ஃபோனில் யாருடனோ பேசுவது மெதுவாய் அவன் காதில் விழுந்தது. இத்தனைக்கும் நிமிஷா மிகதாழ்ந்த குரலில்தான் பேசிக் கொண்டிருந்தாள்.

“ஆமாம் மேம், எனக்கு வர்ர அஞ்சாம் தேதிதான் பர்த்டே. எப்பிடி மேம் நெனவு வெச்சுருக்கீங்க? க்குக்கும்” சிரித்தாள்.

“ரொம்ப தேங்ஸ்மேம். நிச்சயமா வரேன் மேம். நானே ஒங்களப் பாக்கனுனு நெனச்சுக்கிட்டு தா மேம் இருக்கேன். கட்டாயம் வரேன் மேம். ஓகே மேம்” செல்லை ஆஃப் செய்துவிட்டு டிஃபன் பாக்ஸை மூடிவிட்டுத் தலை நிமிர்ந்தபோது ஆதி அவளைக் கடந்து நடத்து கொண்டிருந்தான். மெல்லத் திரும்பிப் பார்த்து மெல்லிய முறுவல் செய்தான்.

“சாப்டீங்களா! மிஸ்? நா வீட்டுக்குக் கிளம்புறேன். ரொம்பப் பசிக்குது. வரேன்!” என்றான் வெகு இயல்பாய்..

ரொம்ப நாளாய்த் தெரிந்தவர்களிடம் பேசுவதைப் போல் “வரேன்..” என்று ராகமிழுத்துச் சொன்னான் குறும்புடன்.

ஆதியை சற்றும் எதிர்பார்க்காத நிமிஷா அவனைப் பார்த்ததும் ‘சடாரெ’ன்று எழுந்தாள். ‘குப்’பென்று வியர்த்தது.

எழுந்த வேகத்தில் டிஃபன் பாக்ஸில் கைபட, டிஃபன்பாக்ஸ் மேஜையிலிருந்து உருண்டு கீழே விழுந்து ‘கண கண’ என்ற சப்தத்தை உண்டாக்க, சிறு சிறு தோசை விள்ளல்கள் இங்குமங்கும் சிதறின. பதறிப் போனாள் நிமிஷா.

சப்தம் கேட்டுத் திரும்பிய ஆதி சட்டென நிமிஷாவைப் பார்த்தான். .

‘அய்யய்யோ! காலேல கீழ விழுந்த காதுரிங்க எடுத்துக் குடுத்தாப்புல கீழே விழுந்த டிஃபன்பாக்ஸ எடுத்துக் குடுத்துடப் போறாரே?’ என்ற பதட்டத்தோடு அவசரமாய்க் குனிந்து டிஃபன் பாக்ஸை எடுக்க முயன்றாள் நிமிஷா.

அசிங்கமாகிப் போனது நிமிஷாவுக்கு.

‘ச்சே! இப்பபாத்தா இந்த டிஃபன் பாக்ஸ் கீழ விழனும்!’ டிஃபன்பாக்ஸ் மூடியை எடுத்து பாக்ஸை கோவத்தோடு அடித்து மூடினாள்.மனது சமாதானமாக மறுத்து அடம் பிடித்தது.

“க்கும்!” கனைக்கும் சப்தம் கேட்டுத் திரும்பினாள். ப்ரியம்வதா நின்றிருந்தாள்.

‘அய்யோ! இவுங்க எப்ப வந்தாங்க தெரியலயே!’ பீதியோடு நினைப்பதற்குள்,

“ம்.. ம்.. அழகா மட்டும் இருந்தா போதும். எல்லாரும் தானா வந்து பேசுவாங்க!” குரலில் பொறாமைத் தெறித்தது.

“ஒன்னும் பேசலியே ப்ரியா!” என்றாள் நிமிஷா.

“நாந்தாம் பாத்தேனே, நீ டிஃபன் பாக்ஸ நழுவ விட்டதும், பாஸ் திரும்பிப் பாத்தாதும், நீ குனிஞ்சி எடுக்க முயன்றதும், பாஸ் நீ இடிச்சிகிட்டா என்ன செய்யுறதுன்னு அக்கறையா பாத்து பாத்துன்னு பதறிப்போய் சொல்றதையும்..”

“ஏங்க ப்ரியா இப்பிடி பேசுறீங்க? நா டிபன் பாக்ஸ வேணுமின்னே நழுவ விட்டாப்லன்னா பேசுறீங்க?”

“பின்ன, தானாவா உருண்டு விழுந்திச்சி!” கன்னிங்காய் சிரித்தாள் ப்ரியம்வதா.

ப்ரியம்வதாவின் பேச்சு வருத்தத்தை ஏற்படுத்தியது நிமிஷாவுக்கு.

மனம் முழுதும் பரவசமாய் காரை ஸ்டார்ட் செய்தான் ஆதி.

நிமிஷாவிடம் பேசியது அவனை சந்தோஷத்தால் திணற அடித்தது.

‘வர்ர அஞ்சாந் தேதி என்னோட பர்த்டே!’ என்று நிமிஷா ஃபோனில் யாரிடமோ சொன்னது நினைவில் வர, மனசு பரபரத்தது.

‘எதாவது கிஃப்ட் வாங்கித் தர வேண்டும்!’ என்று தோன்றியது.

‘ஆனாலும் சட்டுனு ஒரு பொண்ணுக்கு நம்ம ஆஃபீஸ்லயே அவுங்க வேலை பாத்தாலும் ஒரு ஆண் கிஃப்ட்லாம் வாங்கிக் குடுத்தா ஏத்துப்பாங்களா என்ன? நா யாரு அவுங்களுக்கு வாங்கித் தரன்னு நெனைக்க மாட்டாங்களா? வேலை பாக்குற நிறுவனத்து எம்.டி ன்னா பயந்துகிட்டு வாங்கிப்பாங்களா என்ன? அப்பிடி தர்ரதெல்லாம் தப்புல்ல. மத்தவங்களுக்குத் தெரிஞ்சா என்ன நெனைப்பாங்க? நிமிஷாவ தப்பா நெனைக்க மாட்டாங்க?’

செல்ஃபோனின் ரிங்டோன் அவனை நிமிஷாவைப் பற்றிய சிந்தனையிலிருந்து மீட்டது.

தனக்குப் பக்கத்திலேயே கிடந்த செல் ஃபோனை பார்த்தான். அப்பாதான்.

“ஹலோ! அப்பா!” என்றான்.

“ஆதி ஆஃபீஸ்லயா இருக்க? சாப்ட வேண்டாம்? காலைல ரெண்டு இட்லிதான் சாப்டதா அம்மா சொன்னாங்க பசிக்கில? கிளம்பி வீட்டுக்கு வந்துடு!” அப்பா இடைவிடாது பேசினார்.

“அப்பா! கிளம்பி வந்துகிட்ருக்கேன்பா! மணியாச்சு நீங்க சாப்டீங்களா? நீங்க சாப்பிடுங்கப்பா! இப்பதா கிளம்பிருக்கேன்.எப்பிடியும் நா வர அரைமணிக்கு மேல ஆகும். நீங்க டேப்லெட் போடனுமில்ல. அம்மா சாப்டாங்களாப்பா?”

“இல்ல இனிமேதா!”

“நீங்க ரெண்டு பேரும் சாப்டுங்கப்பா! நா வந்து சாப்டுக்கிறேன்”

“ஓகே.மைசன்!”

நிமிஷாவின் நினைப்பால் ஆதி மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு இருந்ததால் அவனுக்கு ஒன்னரை மணிக்கு எடுத்த பசி இப்போது இல்லை.

சின்னதாய் ஒருகேள்வி எழுந்தது ஆதியின் மனதில்.

அம்மாவும் அப்பாவும் ‘டேய் ஆதி! எப்பதாண்டா கல்யாணம் பண்ணிக்கப் போறன்னு?’ ஒரு எதிர்பார்ப்போடு கேட்கும் போதெல்லாம்,

‘கல்யாணந்தானே தோ! பாருங்கம்மா! பாருங்கப்பா! எந்தப் பொண்ணப் பாத்தா பாத்ததுமே எம் மனசுக்குள்ள லைட்டு எரிஞ்சு ‘பச்சு’னு அந்தப் பொண்ணோட உருவம் வந்து மனசுல ஒட்டிக்கிதோ, அந்தப் பொண்ணதா நா கட்டுவேன்னு’ சொல்வதும்,

அதற்கு அப்பா ‘டேய்! டேய்! என்னடா ஆதி? இப்பிடியொரு வேண்டாத ஆசை. அப்பிடியொரு பொண்ண நீ பாக்குறேன்னு வையி. அந்தப் பொண்ணு கல்யாணம் ஆன பொண்ணா, இருந்தா?’ சிரித்துக் கொண்டே கேட்பதும்,

அதற்கு அம்மா, ‘ஏங்க புள்ள ஆசைப்படுறது போல நடக்கனும்னு ஆசிர்வாதம் பண்றத விட்டுப்பிட்டு, இப்பிடி பேசுறீங்க?’ என்று ஆதிக்குப் பரிவதும் அடிக்கடி நிகழும் ஒன்று.

‘அம்மா, அப்பா, நீங்க நம்ம புள்ள எதிர்பார்குற அந்த பொண்ண சீக்கிரமே எங்க புள்ள கண்ணுல காட்டு ஆண்டவா!ன்னு சொல்லுவீங்கள்ள அது நடந்திடுச்சு.

நம்ம அலுவலகத்துல வேல பாக்குற நிமிஷாங்குற பொண்ணப் பாத்த அந்த நொடி மனசுல லைட்டெரிஞ்சிது. அந்தப் பொண்ணோட உருவம் மனசில பச்சுனு ஒட்டிடிச்சின்னு சொல்லலாமா?’ என்று தோன்றியது.

‘க்கும்.. ரொம்பதா அவசரப்படுற. ஒனக்கு அந்தப் பொண்ணப் பாத்ததுமே மனசுல லைட்டு எரிஞ்சிச்சினா போதுமா? அந்தப் பொண்ணு என்னா நெனைக்குமோ? அதுண்ட நீ பேசி, அதும் மனசக் கவர்ந்து, நீ ஒன் லவ்வ சொல்லி, அது சம்மதிச்சி, பெரிய ப்ராஸஸ் இருக்கு தெரியுமில்ல? படக்குனு போயி அம்மா அப்பாட்ட சொல்லலாமான்னு நெனைக்கிற. ரொம்ப சின்னப் புள்ளத்தனமான்னா இருக்கு ஒன் நெனப்பு!’ மனசு ஆதியின் நினைப்புக்கு ஆப்பு வைத்தது.

(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்