காரை அதன் இடத்தில் நிறுத்தி இஞ்சினை ஆஃப் செய்தான் ஆதி.
கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவனின் கால்களைச் சுற்றிச் சுற்றி வந்த அல்சேஷன் செல்லமாய் ஒருவிதமாய்க் குரல் கொடுத்தது.
“இரு.. இரு.. கார் கதவ சாத்த வேண்டாமா அல்லு?” என்று செல்லமாய்க் கேட்டுக் கொண்டே கதவை ஓங்கிச் சாத்தினான்.
அல்லு இன்னும் செல்லமாய்த் தன் உடலை ஆதியின் காலோடு ஈஷி ஈஷித் தேய்த்தது.
சட்டென ஒருகாலை முழந்தாளிட்டும் இன்னொரு காலை குத்திட ஊன்றியும் கீழே அமர்ந்து அல்லுவின் கழுத்தைக் கட்டிக் கொண்டவன் மெதுவாய் அதன் முதுகைத் தடவி விட்டான்.
ஆதியின் மனதிலிருக்கும் சந்தோஷம் அதற்குப் புரிந்ததுபோல் ரொம்பத்தான் அவனோடு கொஞ்சியது அல்லு.
“என்ன கார் சத்தம் கேட்டு அஞ்சு நிமிஷம் ஆச்சு. இன்னும் ஆதி உள்ள வரக் காணும்?” கேட்ட மனைவியிடம்
“நீன்னா போய்ப் பாரேன், நம்ம அல்லுவோட கொஞ்சிக் கிட்டு இருப்பான் நம்ம புள்ள!” என்றார் கோவர்த்தன்.
வெளியே வந்து எட்டிப் பார்த்த விமலாதேவி ஆதி அல்லுவைக் கொஞ்சிக் கொண்டிருப்பதைப் பார்த்துச் சிரித்து விட்டார்.
“அப்பா சொன்னது சரிதான். வாசல்ல போய்ப் பாரு. ஆதி அல்லுவக் கொஞ்சிக்கிட்டு இருப்பான்னு சொன்னது சரியாதா இருக்கு”
“ஆதி மணி ரெண்டு மணிக்கு மேல ஆச்சு சாப்ட வேண்டாம். கால நேரமில்லாம அல்லுவ கொஞ்சிக்கிட்டிருக்க” செல்லமாய்க் கடிந்து கொண்டார் மகனை.
அம்மாவின் சிரிப்பையும் தொடர்ந்து அம்மா கேட்ட கேள்வியையும் காதில் வாங்கி நிமிர்ந்து பார்த்தவன் “ஹாய் அம்மா!” என்று அழைத்தபடி அல்லுவைக் கொஞ்சுவதை நிறுத்திவிட்டு தாயை நோக்கி நடந்து வந்தான். முகமெங்கும் சந்தோஷம் அப்பிக் கிடந்தது.
ஆதியின் முகம் சந்தோஷத்தால் பிரகாசிப்பதைப் பார்த்த விமலாதேவியின் மனம் பூரித்துப் போனது.
“என்னடா ஆதி! ஆஃபீஸ்ல முதல்நாள் அனுபவம் ரொம்ப சூப்பரோ? மொகத்துல சந்தோஷம் தாண்டவமாடுது” என்று கிண்டலடித்தார் மகனை.
அம்மாவின் கழுத்தில் கை போட்டபடி தாயுடன் சேர்ந்து உள்நோக்கி நடந்தான் ஆதி.
சோஃபாவில் அமர்ந்திருந்த கோவர்த்தன் வேஷ்டியும் முண்டா பனியனும் அணிந்திருந்தார்.
தாயுடன் உள்ளே நுழைந்த ஆதியைப் பார்த்ததும், “ஆதி என்ன அம்மா கழுத்துல கைய வெச்சு தள்ளிக்கிட்டே வர” சிரித்தார்.
சிரித்தான் ஆதி. “சாப்டீங்களா அப்பா?” என்றான்.
“இல்ல ஒனக்காகதா வெயிட்டிங் வா வா சீக்கிரம் ஃப்ரெஷ்ஷப் ஆகிட்டு வா. அம்மாக்குப் பசிக்கும்ல!”
“ஐயோ அம்மா, அப்பா ரெண்டுபேரும் இன்னும் சாப்படலயா? நாதா ஃபோன்ல சொன்னேன்ல சாப்புடுங்கன்னு அடபோங்கம்மா, போங்கப்பா” அம்மாவின் கழுத்திலிருந்து கையை எடுத்துவிட்டு இரண்டிரண்டு படியாய்த் தாவி மாடி ஏறினான்
தன் அறைக்குள் சென்று அணிந்திருந்த டிரஸ்ஸைக் களைந்துவிட்டு த்ரீஃபோர்த் பெர்முடா ஷார்ட்ஸ்ஸை மாட்டிக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்துத் தண்ணீரை இருகைகளிலும் பிடித்து முகத்தில் ‘பளீர்ப் பளீரெ’ன அடித்துக் கொண்டான்.
கைகால்களை அலம்பிக் கொண்டு துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டே குளியலறையிலிருந்து வெளியே வந்தவன் டீஷர்ட்டை அணிந்து கொண்டு அறையைவிட்டு வெளியே வந்து ‘தடதட’வெனப் படிகளில் இறங்கி வந்தான்.
நேரம் 2.30 என ஹால் கடிகாரம் காட்ட, “ஸாரிப்பா.. ஸாரிம்மா.. என்னாலதா நீங்க ரெண்டு பேரும் சாப்ட லேட்டு.. வாங்கப்பா வாங்கம்மா மூணுபேரும் சேர்ந்து சாப்புடுவம்” டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான்.
சாப்பிடும்போது பேசக்கூடாது என்பது விமலாதேவியின் அன்பு உத்தரவு என்பதால் மூவருமே எதுவும் பேசவில்லை.
“போதும் போதும்” “கொஞ்சமா வைங்கம்மா” “அள்ளிப் போடாதீங்கம்மா” “ஏ, ஆதி ஒழுங்காவே சாப்டல” “புரையேறுது பாரு ஆதிக்கு” “எம்புள்ளைய யாரோ நெனைக்கிறாங்க” இப்பிடி ஓரிரு வார்த்தைகளோடு சாப்பாடு முடிந்தது.
சாப்பிட்டு முடித்து கை கழுவிவிட்டு வந்ததும் ஒரே ஒரு கடலைமிட்டாய் தின்னும் வழக்கம் கோவர்த்தனுக்கு உண்டு என்பதால் டைனிங் டேபிளில் ஒருதட்டில் வைத்திருந்த கடலைமிட்டாய் பாக்கெட்டிலிருந்து ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார் கோவர்த்தன்.
“சரிப்பா நீங்க ரெஸ்ட் எடுங்கப்பா. நா ரூமுக்குப் போறேன்” என்றவனை,
“இரு! இரு!” என்ற கோவர்த்தன் வாஷ்பேசினிலில் வாய் கொப்பளித்துவிட்டு வந்து, “ஆதி அலுப்பா இருந்தா நீன்னா போய் ரெஸ்ட் எடு. அப்புறம்னா பேசலாம்” என்றார்.
“ஐயோ அப்பா! என்னப்பா இது? எனக்கென்னப்பா அலுப்பு. நீங்க ரெஸ்ட்டெடுக்க வேண்டாமா? அதாம்ப்பா நா ரூமுக்குப் போறேன்னேன்”
“அதெல்லாம் ரெஸ்ட்டெல்லாம் ஒன்னும் எடுக்க வேண்டாம் ஆதி. நானும் அம்மாவும் நம்ம ஆஃபீஸ்ல ஒன்னோட முதல்நாள் அனுபவம் பத்தி நீ சொல்றதக் கேக்கனும்னு காத்துக்கிட்ருக்கோம்.
நீயானா ரூமுக்குப் போறேங்குற. சாப்புடும் போதே கேக்கலாம்னுதா நெனச்சேன். ஆனா உங்கம்மாதான் சாப்புடும்போது பேசக்கூடாதுன்னு சாஸ்த்திரம் சொல்லிருக்குனு பேச தடை போட்டுருக்காங்களே! அதான் ஒன்னும் கேக்காம அமைதியா இருந்தேன்” சிரித்தார் மனைவியைப் பார்த்து.
“மனைவி சொல்லே மந்திரமாப்பா?” சிரித்தான் ஆதி.
“ஆமாமா. நாளைக்கு ஒனக்குப் பொண்டாட்டி வந்ததும் நீ மட்டும் என்ன பண்ணப் போற” கடகடவெனச் சிரித்தார் கோவர்த்தன்.
கணவனும் மகனும் பேசும் உரையாடலை ரசித்துக் கொண்டிருந்த விமலாதேவி, “அப்பாவும் பிள்ளையும் ஒன்னா சேந்தாச்சில்ல. நா வசமா சிக்கிட்டேன் .எந்தலைய ரெண்டு பேருமா சேந்து உருட்டுங்க” பொய்க் கோபம் காட்டிச் சிரித்தார்.
“சரி சரி சொல்லுப்பா ஆதி. ஒனக்கு சேப்பாக்கம் ஆஃபீஸ் புடிச்சிருக்கில்ல?”
“காலேல பதினோரு மணிக்கு ஆஃபீஸ்ல அப்பாவப் பாத்தேன். அப்பா நம்ம ஆஃபீஸ்ல வேல பாக்குறவுங்ககிட்ட என்னை இவரு என்மகன் ஆதித்யா. நம்ம நிறுவனத்தோட புது எம்.டி.ன்னு அறிமுகப்படுத்தி வெச்சாரு.
அப்புறம் மேனேஜர் வேல பாக்குறவங்கள ஒவ்வொருத்தரா எனக்கு அறிமுகப்படுத்தி வெச்சாரு. அடுத்த அரைமணில அப்பா வீட்டுக்குக் கிளம்பி வந்துட்டாரு.
அதுக்கப்பறம் நா ஒன்னர மணிவரைதா அங்க இருந்தேன். மொத்தமா ரெண்டர மணி நேரந்தா ஆஃபீஸ்ல இருந்திருப்பேன். நான் என்னோட ரூமுக்குள்ளயே தான் இருந்தேன். யார்கிட்டயும் பேசல. அதுனால பெரிசா ஒரு அனுபவமும் எனக்கு ஏற்படல!”
‘நிமிஷாவால் தனக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை அவசரப்பட்டுச் சொல்ல வேண்டாமெ’ன முடிவெடுத்திருந்ததால் சொல்லாமல் தவிர்த்தான்.
“ஆனா அப்பா! நேத்து ஒரு மெயில் வந்திருக்கே நிச்சயம் நீங்க அதப் பாத்துருப்பீங்க.”
“என்னது மெயிலா?” கேள்வியாய் ஆதியைப் பார்த்தார் கோவர்த்தன்.
“ஆமாம்ப்பா! தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறையிலிருந்து மருத்துவமனை கட்டுவது சம்பந்தமா. நீங்க பாக்கல?”
“ம்.. ம்.. பாத்தேன். அதெல்லாம் சரிப்பட்டு வராது ஆதி” சொல்லிக் கொண்டே சோஃபாவில் போய் அமர்ந்தார் கோவர்த்தன்.
“என்னதுப்பா? சரிப்பட்டு வராதா? என்னப்பா சரிப்பட்டு வராது?” அப்பாவிடம் கேட்டுக் கொண்டே தானும் போய் அப்பா அமர்ந்திருக்கும் சோஃபாவுக்கு எதிரில் கிடக்கும் மற்றொரு சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.
“ஹாவ்!” கொட்டாவி விட்டார் விமலாதேவி.
“நீங்க ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சா இப்போதைக்கு நிறுத்த மாட்டீங்க. நாம் போய்க் கொஞ்ச நேரம் படுக்குறேன்” என்று சொல்லிவிட்டுத் தன் அறைநோக்கி நடந்தார் விமலாதேவி.
“அப்பா! சொல்லுங்கப்பா நாம அந்த ப்ராஜெக்ட எடுத்து செய்யறதுல என்ன பிரர்ச்சன இருக்கு?”
“ஆதி! இப்பல்லாம் டெண்டர் எடுத்து வேல செய்யுறது முன்போல இல்ல. அப்பல்லாம் போட்டி ஆரோக்யமானதா இருக்கும்.
ப்ராஜக்ட்ட எடுத்து வேல செய்யமுடியும்னு நெனைக்கிறவங்க டெண்டர்ல கலந்துவுக்குவாங்க. நியாயமா நடக்குற போட்டீல யாரு ஜெயிக்கிறாங்களோ அவுங்க எடுத்து செய்வாங்க. மத்தவங்க நகந்துடுவாங்க.
சிலபேரு ஜெயிச்சவுங்களுக்கு வாழ்த்துகூட சொல்லுவாங்க. அப்பிடியான காலம்லாம் மலையேறிப் போச்சு. இப்ப அநியாயத்துக்கும் போட்டி பொறாம. பெரிய இடத்து சிபாரிசு மறைமுக ஆதரவுன்னு மோசமானவுங்க கைக்கு டெண்டருங்க போயிடுது.
நல்லவங்க கையில வேல கெடைக்கிறதில்ல. உண்மையச் சொல்லனும்னா அரசியல்வாதிகளோட தலையீடு ரொம்ப அதிகமாயிட்டு பெரும்பாலும் அரசியல்வாதிங்களோட சொந்த பந்தம் தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க அல்லக்கைக இவுங்களுக்குத்தான் கெடைக்கிது.
வெளி ஆளுங்களுக்குக் கெடைக்குறது ரொம்ப அபூர்வம். அப்பிடியே கெடச்சாலும் பெரிய எடத்துல ஆரம்பிச்சு, நண்டுசிண்டு, நார்த்தங்கா வரைக்கும் ஒப்பந்தத் தொகையில நாப்பது பர்ஸன்ட்டுலேந்து அவுங்களுக்கு ஏத்தபடி கமிஷன் வெட்டனும்.
அந்தத் தொகைய நேர்மையா வேல செய்யனுனு நெனைக்கிறவன் கொடுக்க யோசன பண்ணுவான். அப்படிக் குடுத்தா மிச்சத் தொகைய வெச்சு எடுத்து செய்யுற வேலைய தரமானதா செய்ய முடியாது.
மனசாட்சிக்குப் பயந்து வேல செய்யிறவனால நிச்சயமா அப்படி தரங் கெட்ட வேலைய செய்யவே முடியாது.செஞ்சி முடிச்சிட்டுப் பாத்தா உழுதவன் கணக்குப் பாத்தா ஒழக்கு கூட மிஞ்சாதுன்னு சொல்றாப்புல பத்து காசுகூட லாபம் கெடைக்காது.
கைய சுட்டுக்கிறதுதான் மிச்சமாகும். எத்தனை பேரால நஷ்ட்டத்த ஏத்துக்க முடியும்? அதுமட்டுமில்ல ஆதி இந்த கேம்ல எதிரிங்க ரொம்ப அதிகம்.கண்ணுக்குத் தெரியுற எதிரிங்கள சமாளிச்சிடலாம். கண்ணுக்குத் தெரியாத எதிரிங்கள சமாளிக்கிறது ரொம்ப கடினம்.
சிலபேரு நம்மகூடவே நின்னு சிரிச்சுப் பேசி கை குடுப்பாங்க.. ரொம்ப ஃப்ரெண்ட்லியா காட்டிப்பாங்க. அவுங்களே வெளியில தெரியாம குடைச்சல் கொடுப்பாங்க.
ஆதி இப்பிடியெல்லாம் சொல்லி ஒன்ன பயமுறுத்துறதா நெனைக்காத. நீ இப்பதா தொழில ஏத்துக்கிட்டிருக்க. நெறையா அனுபவம் வேணும்.
கேம்ல கலந்துகிட்டாதா வெற்றி கிடைக்குதா தோல்வி கெடைக்குதான்னு தெரிஞ்சிக்க முடியும்.வெற்றி தோல்வி ரெண்டுமே சகஜம்தான்.லாபம் நஷ்டம் ரெண்டுமே வரும்.
அனுபவமும் கெடைக்கும்னு நீ நெனைக்கிலாம்.நீ நெனைக் கிறதுல ஒன்னும் தப்பில்ல.நா ஒன்ன டிஸ்கரேஜ் பண்ணுல. நீ விரும்பினா டெண்டர்ல கலந்துக்க… ஒனக்கும் அனுபவம் கெடைக்க வேண்டாமா?
நீ தனியாளாவே இருந்து செய்யனும்னு ஆசப்பட்டீன்னா செய்யி ஆதி. யோசன எதும் தேவப்பட்டா நீ விரும்புனா, இந்த அப்பா ஒனக்கு என் அனுபவ யோசனய சொல்லுவேன் ஆதி!” அன்பும் ஆதரவுமாய் மகனிடம் பேசி முடித்தார் கோவர்த்தன்.
அப்பா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் தற்போதைய நடைமுறைகளில் இருக்கும் இடர்பாடுகளை உண்மை நிலையை உணர்த்தியது ஆதிக்கு.
“சரிங்கப்பா, நீங்க என்ன முடிவு சொல்றீங்களோ அதுதாம்பா என்னோட முடிவு!”
“நோ! நோ! மை சன். நீ இன்னும் சின்னப் பையனில்ல. அப்பாவோட நிழல்ல நிக்க, துணிஞ்சு முடிவெடு. அப்பா ஒனக்கு ஆலோசன வேணும்னா சொல்வேனே தவிர, ஆர்டர்லாம் போட மாட்டேன்” சிரித்தார்.
பாசம் நிறைந்து கிடந்தது அந்த சிரிப்பில்.
“அப்பா!” நெகிழ்ந்து போய் அழைத்தான் ஆதி.
அப்படி நெகிழ்ச்சியோடு அப்பா என்று அழைத்த ஆதியின் மனதில் மருத்துவமனை கட்டும் டெண்டரில் கலந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை இருப்பது கோவர்த்தனுக்குப் புரிந்தது.
“ஓ.கே. மை சன். நீ டெண்டர் எடுக்குற போட்டியில கலந்துக்குற!” சொல்லிக் கொண்டே எழுந்து மகனின் அருகில் சென்று கைபிடித்து வாழ்த்துச் சொன்னார்.
“அப்பா! தேங்ஸ்பா!” தழுதழுத்த குரலில் சொன்ன மகனை வாஞ்சையோடு அணைத்துக் கொண்டார் கோவர்த்தன்.
“ஆதி! டெண்டர்ல கலந்துக்க கட்ட வேண்டிய நுழைவுக் கட்டணத்த நீ கட்டிடு!”
“ஆனா ஆதி நீ நுழைவுக் கட்டணத்தக் கட்டின மறுவினாடியே நீ டெண்டரெடுக்கக் கலந்துக்கப் போறத அதாவது நம்ம கே.ஆர்.ஜி. நிறுவனம் கலந்துக்கப் போறத கண்ணுக்குத் தெரியாத எதிரிங்க மோப்பம் புடிச்சிடுவானுங்க
அடுத்த வினாடி அவுங்க தில்லாலங்கடி ஆட்டம் ஆரம்பமாயிடும். எப்போதும் நீ விழிப்போட இருக்கணும் அலெர்ட்டா இருக்கணும். நா எங்க போகப் போறேன். நான் உன் கூடவே இருப்பேன் மை சன்!” என்றார் கோவர்த்தன்.
“சரிப்பா!” என்றான் ஆதி.
“எப்ப நுழைவுக் கட்டணம் கட்டுற ஆதி?”
“அஞ்சாம் தேதி!” சட்டெனத் தன்னை அறியாமல் பதில் சொன்னான் ஆதி, நிமிஷாவின் பிறந்தநாளை மனதில் வைத்து.
“அஞ்சாம் தேதியா? வெரிகுட் மை சன்! வெரிகுட்! வெரிகுட்! சரியான நாளைத்தான் தேர்ந்தெடுத்திருக்க ஆதி. அன்னிக்கி நம்ம கே.ஆர்.ஜி. நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நாளில்லயா?
சின்ன அளவுல ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் இன்னிக்கு பெரிய பெரிய நிறுவனங்களோட போட்டி போடுற அளவுக்கு வளந்து நிக்கிது. அபரிமிதமான வளர்ச்சி.
அதே தேதில நீயும் மொதல் மொதலா டெண்டர்ல கலந்துக்குறது ரொம்ப நல்லது ஆதி. நல்ல முடிவு எடுத்திருக்க!”
நிமிஷத்தில் திக்கு முக்காடிப் போனான் ஆதி.
நிறுவனம் தொடங்கிய நாளை மறந்து போயிருந்தான்.அப்பா சொன்னதும் தான் ‘எப்படி அதை மறந்து போனோம்?’ என நினைத்து வெட்கமாகிப் போனது அவனுக்கு. ‘ஙே!’ என்று விழித்தான். பின் சமாளித்தான்.
அன்னிக்கு நிமிஷாவோட பர்த்டே என்பது மட்டுமே மனதில் நின்று அனைத்தையும் மறக்க அடித்திருந்தது நினைத்து தனக்குள் சிரித்து அசடு வழிந்து கொண்டான்.
“ஆதி! தாம்பரம் கருணை இல்லம், கருணாசாகரம் நந்தினி அம்மாவுக்கு ஃபோன் பண்ணி அங்க இருக்குற குழந்தைங்களுக்கும் பெண்களுக்கும் டிரஸ்ஸும் ஸ்பெஷல் உணவும் வருடா வருடம் கொடுக்கறா மாதிரி இந்த வருடமும் வர்ர அஞ்சாம்தேதி குடுக்க ஏற்பாடு பண்ணும்படி போன வாரமே சொல்லிட்டேன்.
இந்தமுறை நம்ம நிறுவனத்து எல்லா பிராஞ்ச் அலுவலகத்து பணியாளர்களுக்கும் ரூவா 5000 க்கான அமேசான் கிஃப்ட் கூப்பன் குடுக்க ஏற்பாடு பண்ணிட்டேன். நாளை நீ சேப்பாக்கம் பணியாளர் ளுக்கு ஒன் கையால குடுத்துடு. என்ன சொல்ற ஆதி நீ?” என்றார்.
“நான் வேளச்சேரி மதுரவாயல் பிராஞ்ச் பணியாளர்களுக்கு கொடுத்திடறேன்.
நாளை காலை பதினோருமணி வாக்குல தாம்பரம் கருணை இல்லம் போய் உணவும் உடையும் வழங்குற நிகழ்ச்சில நீ வந்து கலந்துக்குவன்னு நந்தினியம்மாட்ட சொல்லிட்டேன். ஒன்ன கேக்காம நீ வருவன்னு சொல்லிட்டேனே ஆதி! தப்பில்ல?”
அப்பாவின் பேச்சை வாயடைத்துப்போய் பிரமிப்போடு கேட்டுக் கொண்டிருந்த ஆதி அசைவற்றுப் போய் அமர்ந்திருந்தான்.
‘என்னவொரு தெளிவான சிந்தனை, முன்னேற்பாடுகள். வாழ்க்கையில் அப்பாவிடம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமாயுள்ளது!’ என்ற எண்ணம் ஆதியின் மனதுக்குள் ஆழமாய்ப் பதிந்தது.
“ஆதி!.என்னஆதி பதிலையே காணும்? நீ கருணா சாகரத்துக்குப் போவீல்ல?” ஆதியின் தோளைத் தொட்டு அசைத்தார் கோவர்த்தன்.
“ம்.. ப்பா..” சட்டென இயல்புக்கு வந்த ஆதி, “நிச்சயமா போவேன் ப்பா!” என்றான்.
அங்கே தனக்கு என்ன அனுபவம் கிடைக்கக் காத்திருக்கிறது என்பதை அறியாதவனாய்.
(தென்றல் வீசும்)
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்