அடுத்து வந்த இரண்டு நாட்களும் ஆதி அலுவலகம் போவதும் வருவதுமாய் இருந்தானேயொழிய நிமிஷாவிடம் பேசும் சூழ்நிலை எதுவும் உண்டாகவில்லை.
ஆனாலும் அந்த இரண்டு நாட்களிலும் தொழில் நிமித்தமாய் வருபவர்களிடம் பேசுவதும், அப்படி வருபவர்களின் சம்பந்தப்பட்ட ஃபைல்களைப் பார்க்கும் அலுவலகப் பணியாளர்களை அழைத்துப் பேசுவதுமாய் இருந்தான்.
அந்த முறையில் ப்ரியம்வதாவைக்கூட அழைத்துப் பேசியிருக்கிறான். நிமிஷாவை அழைத்துப் பேசும் சூழ்நிலை உருவாகவில்லை.
‘ஐந்தாம்தேதி நிமிஷாவின் பிறந்தநாள். அன்னிக்குதா நிறுவனம் தொடங்கின நாளும். அன்னிக்கு கிஃப்ட் கூப்பன் எல்லாருக்கும் குடுக்கப் போறோம்ல.
அப்ப அவுங்களுக்கும் குடுக்கனும் தானே. நாமதானே குடுக்கப் போறோம்.அப்பிடி அவுங்களுக்கும் குடுக்கும்போது பர்த்டே விஷஸ் சொல்லிடனும்’ என்று தீர்மானித்துக் கொண்டான் ஆதி.
‘நாம நிமிஷாவுக்கு பர்த்டே விஷஸ் சொன்னா அவுங்க ரியாக்சன் எப்டியிருக்கும்? இவுருக்கு நம்ம பர்த்டே இன்னிக்கின்னு எப்பிடித் தெரியும்னு ஷாக்காயிடுவாங்க இல்ல’ என நினைத்தான்.
‘அவுங்க ஷாக்காகி தெகச்சுப் போய் நம்மளப் பாத்தா என்ன சொல்லுறது? முணுநாளு முந்தி லஞ்ச் டைம்ல நீங்க யார்ட்டியோ ஃபோன்ல பேசும்போது அடுத்த மாதம் அஞ்சாந்தேதி எனக்கு பர்த்டேன்னு சொல்லிக்கிட்டிருந்தத நாங்கேட்டேன்னு சொல்ல முடியுமா? தாம் பேசுனத நா ஒட்டுக்கேட்டதா அவுங்க நெனைக்க மாட்டாங்க?’ எனத் தோன்றியது.
‘என்ன செய்யலாம்?’ பின்னந் தலையைச் சொரிந்து கொண்டு யோசித்தான் ஆதி.
‘மிஸ் நிமிஷா ஒங்க பர்த்டே எனக்கெப்பிடித் தெரியும்னு குழம்பிப் போயிட்டீங்க.. சரியா? அதொன்னுமில்ல மிஸ் நிமிஷா.
இந்த நம்ம அலுவலகத்துல பணிபுரியிற ஒவ்வொருவரோட பர்த்டே அன்னிக்கு அவுங்கள விஷ் பண்றதுன்னு முடிவு பண்ணிருக்கேன். அதுக்காக எல்லாரோட ரெஸ்யூமயும் பாத்தேன்.
அப்பிடி பாத்தபோதுதான் ஒங்குளுக்கு இன்னிக்கு பிறந்தநாள்னு தெரிஞ்சிகிட்டேன். அதா வாழ்த்து சொன்னேன்னு சொல்லிட்டா?’.
‘அட ஆதி..சூப்பரான ஒரு வழிய ‘கண்டு பிடிச்சிட்டடா’ தன்னைத் தானே மெச்சிக் கொண்டான்.
‘அவுங்கள பாக்குறோம்; கிஃப்ட் கூப்பன் குடுக்குறோம்; பர்த்டே விஷ் பண்றோம்; மருத்துவமனை கட்டுவதற்கான டெண்டர்ல கலந்துக்க நுழைவுக் கட்டணம் கட்டுறோம்’
மனமகிழ்ச்சியோட ஹேப்பி வைப்ரேஷனோட ஆரம்பிக்கிற எந்த காரியத்துலயும் நிச்சயமா ஜெயிக்கலாம்.
நம்பிக்கை கொடுத்த மகிழ்ச்சியோடு ஐந்தாம் தேதிக்காகக் காத்திருந்தான் ஆதி.
நான்காம் தேதி இரவு மணி ஏழு.
“அக்கா! அக்கா! நாளைக்கு ஒனக்கு பர்த்டேல்லக்கா!” இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி தவழ்ந்து தவழ்ந்து வந்து அக்கா நிமிஷா அமர்ந்திருந்த சேரின் அருகே வந்து உட்கார்ந்து நிமிஷாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்துக் கேட்டான் ராஜதுரை.
செல்லில் கூகுளில் எதையோ சர்ச் பண்ணியபடி சேரில் அமர்ந்திருந்த நிமிஷா செல்லை ஆஃப் செய்துவிட்டு தம்பி துரையை முகத்தைத் தாழ்த்திப் பார்த்தாள்.
“தொர! என்ன கேட்ட? நாளைக்கு எனக்கு பர்த்டேயான்னா கேட்ட?” சிரித்தாள்.
“அக்கா நாளைக்கு என்னக்கா ஸ்பெஷல்?”
“ஸ்பெஷலா?” விரக்தியாய் சிரித்தாள். நம்ம பிறந்த நாளுக்கெல்லாம் என்ன ஸ்பெஷல் இருந்துடுடப் போவுது தொர?”
“ஏங்க்கா! என்னோட பொறந்த நாளு வைஷாலி பொறந்த நாளுக்கெல்லாம் புது ட்ரெஸ்ஸு, சாக்லேட்லாம் வாங்கித் தருவீல்லக்கா? அப்ப ஒம் பொறந்த நாளுக்கு புது ட்ரெஸ்ஸு வாங்கிக்கில!”
பாசமாய்க் கேட்கும் தம்பியின் தலைமுடியைக் கைகளால் அளைந்தாள் நிமிஷா.
“இல்ல தொர! அக்காகிட்ட புது ட்ரெஸ் இருக்கு. அதா வாங்கல”
‘அக்கா சொல்வது பொய்!’ என்று அவனுக்குத் தெரியும்.
“ப்ச்! எதற்கும் பயனின்றி அக்காவுக்கு சுமையாய் தான் இருப்பது குறித்து ஒவ்வொரு நாளும் மனதுக்குள் மறுகுவது மட்டுமே தன்னால் முடிந்தது..’நான் எதற்கும் உதவாதவன்’ என்று நினைத்தவனின் கண்களில் கண்ணீர் திரையிட்டது.
“தொர அழுவுறியா? விடு தொர நமக்கும் நல்ல காலம் வரும்” தம்பியின் முதுகில் தட்டிக் கொடுத்தாள் நிமிஷா.
“பாவம் தொர! சின்னதா ஒரு ஃபேன்ஸி ஸ்டோராவது ஆரம்பிச்சுக் குடுக்கனும். வீட்டுலயே எத்தன காலம்தா அடஞ்சு கெடப்பான். அதுக்குப் பணம் வேணுமே! தீக்ஷிதா கல்யாணத்துக்கு வாங்கின மூணு லட்சம் கடனே இன்னும் அடையில!’
மூணு லட்சம் கடனை நினைத்ததுமே அடிவயிற்றில் ‘பகீரெ’ன்றது நிமிஷாவுக்கு.
‘கடன் வாங்கி மூணு வருஷம் முடியப் போவுது; வட்டிதா கட்றோம்; அசல் அப்டியே நிக்கிது; மூணு வருஷம் முடிஞ்சதுமே மொத்த பணத்தையும் கட்டனும்னு பத்தரத்துல எழுதி நம்ம கையெழுத்த வாங்கிருக்கான். என்னிக்கி நோட்டீஸ் விடுவானோ நாகேந்திரா வட்டி கடைக்காரன்!’ பீதி வந்து நெஞ்சை அடைத்தது நிமிஷாவுக்கு.
சன்னமாய் ரிங்டோனின் சப்தம்.கையிலிருந்த செல்ஃபோன் திரை ‘தீக்ஷிதா’ என்ற பெயரைக் காட்டியபடி ஒளிர்ந்தது.
‘கடவுளே! இவ என்ன குண்ட வீசப் போறாளோ? என்ன செலவ வெக்கப் போறாளோ?’ பயத்தோடவே ஃபோனை ஆன் செய்தாள்.
இவள் ஹலோ என்பதற்குள் தீக்ஷிதாவே முந்திக்கொண்டு “அக்கா!” என்றாள்.
“சொல்லு தீக்ஷி!”
“அக்கா ஒரு குட் ந்யூஸ்!” குரலில் பெருமை வழிந்தது.
‘கணவனுக்கு வேலையில ப்ரமோஷன் கெடச்சிருக்குமோ! அதா இவ்வளவு பெருமயும் சந்தோஷமும் தெரியிது குரல்ல.!’ வினாடிக்கும் குறைவான நேரத்தில் நினைத்து முடித்தாள் நிமிஷா.
“சொல்லு!” என்றாள்.
“அக்கா! நா முழுவாம இருக்கேன். இப்பதா லேடி டாக்டர் கன்ஃபார்ம் பண்ணிணாங்க. மூணுமாசம்கா! ஆனாக்கா, ஒரே உமட்டலும் குமட்டலுமா இருக்குக்கா! வாந்தி வாந்தியா வருது; தலைய சுத்துது; டாக்டர் என்னை ரெஸ்ட் எடுக்கனும்னு சொன்னாங்க.
அதுனால ஒரு நல்ல நாளா பாத்து நீயோ அம்மாவோ வந்து என்ன அழச்சிக்கிட்டு போறீங்களா! போன தடவ சிசேரியன் பண்ணிதானே கொழந்த பொறந்துது. அதுனால இந்த மொறையும் சிசர்தா பண்ணணுமாம் டாக்டர் சொன்னாங்க.”
எல்லா செலவுக்கும் பணத்துக்கு அக்கா என்ன செய்வாள் என்ற எந்தக் கவலையுமின்றி பெருமை பொங்கி வழிய சொல்லி முடித்தாள் தீக்ஷிதா.
‘திகீரெ’ன்றானது நிமிஷாவுக்கு.
இமயமலை சைஸுக்கு பெருஞ்சுமை வந்து தலையில் வந்து அமர்ந்து அழுத்துவது போல் உணர்ந்தாள்; வெல வெலத்துதுப் போனது மனசு.
“ஓ! ரொம்ப சந்தோஷம் தீக்ஷி!” ஒப்புக்குச் சொல்லிவிட்டுப் போனை ஆஃப் செய்தாள்.
‘ஓ’வென்று அழவேண்டும் போல் இருந்தது நிமிஷாவுக்கு.
‘இப்ப தான் மொதல் டெலிவரி பாத்து ஆறுமாசம் இங்கேயே வெச்சு பார்த்துக் கொண்டு பிறந்த குழந்தைக்கு பவுன்ல கழுத்துக்கு செயின், கைக்கு வளையல் பண்ணி புருஷன் வீட்டுக்குக் கொண்டுவிட்டு வந்தாப்புல இருக்கு. அதுக்குள்ள அடுத்ததா?
மொதல் பிரசவம் சிசேரியன் ஆஸ்பத்திரி செலவே எண்பதாயிரம் ஆச்சு. அதத் தொடர்ந்து அந்த செலவு இந்த செலவுன்னு ஒரு ஒரு லட்சம் ஆயிடுத்து.
மறுபடியும் ஒன்னர லட்சம் ரெண்டு லட்சத்துக்கு நா எங்க போவேன்’ தளர்ந்துபோய் நாற்காலியில் ‘தொப்’பென்று அமர்ந்தாள் நிமிஷா.
“நிமிஷா!” என்று அழைத்தபடி எதிரில் வந்து நின்ற அம்மாவின் குரல் கேட்டு நிமிர்ந்தாள் நிமிஷா. அம்மாவின் முகமெங்கும் சந்தோஷம் பரவிக் கிடந்தது.
“நிமி! கேட்டியா? நம்ம தீக்ஷிதா மூணுமாசம் முழுவாம இருக்காளாம். இப்பதாம் ஃபோன் பண்ணினா. ஒனக்கு பண்ணினாளா?”
பதில் சொல்லாமல் அமைதியாய் இருந்தாள் நிமிஷா.
“அவுளுக்கு ஒடம்பே முடியலயாம். மசக்கயா இருக்கும்போல. பொண்ணு பொறக்கப் போவுதோ என்னவோ? நாளு பாத்து வந்து அழச்சிகிட்டுப் போகச் சொல்றா!” சந்தோஷத்தில் அம்மா திளைப்பது தெரிந்தது.
எரிச்சல் மண்டியது நிமிஷாவுக்கு.
‘என்னவோ கல்யாணமாகி பத்து வருஷங் கழிச்சி உண்டானா மாதிரி அப்பிடியென்ன சந்தோஷம். முதல் குழந்த பொறந்து முழுசா ரெண்டு வருஷம் ஆகல; அதுக்குள்ள அடுத்தது. இதுல சந்தோஷம் கர புரண்டுன்னா ஓடுது பேச்சுல.நாளு பாத்து அழச்சிகிட்டு வரனுமாம்’
‘அவ இங்க இருக்குற சாக்குல பாதிப் பொழுது அவ புருஷன் இங்கயே டேரா அடிச்சிடுவாரு. மாப்ள மாப்ளன்னு தெனமும் விதவிதமா சமையல்னும் டிஃபன்னு அதிரடி காட்டுனும்பா தங்கச்சிக்காரி.
மூணாம் மாசம் மசக்கையினு பொறந்த வீட்டுக்கு வரவ கொழந்த பொறந்து ஆறுமாசம் ஆனபிறகும் புருஷன் வீட்டுக்கு கிளம்ப மனசு வராது.
இதுக்கெல்லாம் பணத்துக்கு எங்க போறது?..கொஞ்சமாவது அம்மா கவலப்படறதா தெரியல. என்னை இவுங்க சம்பாதிச்சிப் போடற மிஷினா நெனைக்கிறாங்களே தவிர நானும் ஆசாபாசங் கொண்ட
ஒரு பொண்ணுதான்னு நெனைக்க மாட்டேங்குறாங்க..
பெத்த தாயே நினைக்கிலேன்னா வேறு யாரு நெனைக்கப் போறாங்க. வீட்டுக்கு மூத்த பொண்ணா பொறந்ததால நா அக்கா வாயிட்டேன்.
அதுக்காக எனக்கு நாப்பது வயசா ஆயிடுத்து. தீக்ஷிதாவ விடவும் ரெண்டு வயசுதானே பெரியவ. ஒருதடவ, ஒரே ஒருதடவ அம்மா சொன்னதுண்டா?
நிமிஷா இந்த குடும்பத்துலேந்து ஒனக்கு என்னிக்கு விடுதல கிடைக்கும்? என்னிக்கு ஒனக்கு ஒரு நல்லது நடக்கும்?
ஒனக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கை என்னிக்கு அமையும்னு? அப்படி நிஜமான அக்கறையோடு ஒருமொற கேட்ருந்தா கூட மனசுக்கு ஆறுதலா இருக்குமே?
அந்த செலவுக்குப் பணம் இந்த செலவுக்குப் பணம்னு மாறிமாறி கடனும் லோனுமா வாங்கிக்கிட்டே இருந்தா காலம் முழுக்க உழைத்தாலும் அடைக்க முடியாது போலன்னா இருக்கு.சலிப்பாய் இருந்தது’ நிமிஷாவுக்கு.
“பச்!” என்று நிமிஷாவின் வாயிலிருந்து வெளி வந்த ஒற்றை வார்த்தை சுட்டெரிக்கும் பாலைவனமாய் வரண்டு போயிருந்த அவள் மனதின் வெளிப்பாடாய் இருந்தது. மிகவும் ஆயாசமாய் இருந்தது நிமிஷாவுக்கு.
சுவற்றில் மாட்டியிருந்த சின்ன சைஸ் கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்தாள்.மணி எட்டு இருபது.
சற்று முன் லேசாய்ப் பசிக்க ஆரம்பித்திருந்த பசி உணர்வு இப்போது ஏனோ மரத்துப் போயிருந்தது. சேரின் பின்னால் தலை சாய்த்துக் கண்களை மூடினாள் நிமிஷா.
‘சரக் சரக்’கென செருப்பு சத்தம். அத்தர், ஜவ்வாது வாசனையுடன் குரலைச் செருமியபடி அப்பா உள்ளே நுழைவது புரிந்தது நிமிஷாவுக்கு.
இப்போதெல்லாம் கருணாகரன் முன்போல் அழுக்குத் துண்டும் வேட்டியுமாய் பரட்டை தலையும் காவிப் பற்களுமாய் இல்லை.
ராம்ராஜ் வேட்டியும் பீட்டர் இங்லாண்ட் ஷர்ட்டும் ஜவ்வாது வாசனையும் பன்னீர்ப் புகையிலையுமாய் ஜபர்தஸ் காட்டுகிறார்.
நிமிஷாவிடம் சீட்டாட நூறுரூபாய்க்குக் கையேந்துவதில்லை. அவளை ஒருபொருட்டாகவே நினைப்பதில்லை. ஆனால் வீட்டுக்காக எதையும் செய்வதில்லை என்பதில் எந்த மாற்றமுமில்லை.
இவரின் இந்த புதுஅவதாரத்துக்கு படியளப்பது நாகேந்திரா வட்டிக்கடைக்காரன் என்பதையும், தன்னை தனதாக்கிக் கொள்ளவே அப்பா கருணாகரனை வளைத்துப் போட்டிருக்கிறான் என்பதையும் நிமிஷா எப்படி அறிவாள்?
அப்பா கருணாகரன் உள்ளே நுழைந்ததுமே அவரைப் பார்ப்பதைத் தவிர்க்க சேரை விட்டு எழுந்து தன் அறையை நோக்கி நடந்தாள்.
“நிமிஷா! சாப்ட வா!” அழைத்த அம்மாவிடம், “எனக்குப் பசிக்கில, சாப்பாடு வேண்டாம்!” சொல்லிக் கொண்டே தன் அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுவிட்டு கையிலிருந்த செல்லை பெட்டில் போட்டாள்.
போட்ட அடுத்த நொடி ‘நந்தினி அம்மா’ என்ற பெயரைக் காட்டியபடி சன்னமாய் சப்தமெழுப்பியபடி செல் திரை மிளிர்ந்தது.
‘நந்தினி மேம்! என்ன இந்த நேரத்துல!’ என்று நினைத்தபடி செல்லை ஆன் செய்து காதில் வைத்து “மேம், சொல்லுங்க மேம்!” என்றாள்.
“ஸாரி நிமிம்மா! இந்த நேரத்துல கால் பண்ணி தொந்தரவு பண்றேனோ?”
“ஐயோ மேம். ஏம் மேம் இப்பிடி சொல்றீங்க. ஒங்ககிட்ட பேசறதவிட சந்தோஷமான விஷயம் எனக்கு வேறது மேம்!”
“நிமிஷா கண்ணு நாளைக்கு ஒனக்கு பர்த்டேல்ல. என்னோட அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள் பா!”
“தேங்க் யூ மேம்!”
“நிமிஷா நா ஒரு முக்கியமான காரியமாதா ஒனக்கு கால் பண்ணேன்!”
“சொல்லுங்க மேம்!”
“வழக்கமா ஒன்னோட பிறந்த நாள் அன்னிக்கி நீ இங்க வருவீல்ல. இந்த முறை அதுல மாற்றமொன்னுமில்லியே நிமிஷா கண்ணு!”
“நிச்சயமா இல்ல மேம்! அங்கதா வருவேன். ஆஃபீஸ்க்கு லீவுகூட சொல்லிட்டேன். ஏம் மேம், எதாவது” அவள் கேட்டு முடிப்பதற்குள் நந்தினியம்மாவே தொடர்ந்தார்.
“நாளைக்கு நம்ம காப்பகத்துக்கு வி.ஐ.பி.ஒருத்தரு வராரு. நம்ம கருணை இல்லத்துல இருக்குற ஆதரவற்ற குழந்தைகளுக்கும் ஆதரவற்ற வயதான பெண்களுக்கும் நாளைக்கு அந்த வி.ஐ.பி. உணவும் உடையும் வழங்குறாரு. நீ வந்தீன்னா எனக்கு கொஞ்சம் உதவியா இருக்கும்.”
“நிச்சயமா நா வரேன் மேம். காலை டாண்ணு எட்டு மணிக்கெல்லாம் நா அங்க வந்திடுவேன் மேம். இது எனக்குக் கிடைத்த பாக்யம் மேம்!”
“ஓ.கே. தேங்க் யு மை டியர்!”
“என்ன மேம் நீங்க போய் எனக்குத் தேங்ஸ்லாம் சொல்லிக்கிட்டு”
“ஓகே ப்பா. நாளை சந்திப்போம்.. காட் ப்ளஸ் யூ. குட் நைட்.”
“தேங்க்யூ மேம். குட் நைட் மேம்.”
செல் ஃபோனை அணைத்து விட்டு பெட் லைட்டைப் போட்டுவிட்டு ட்யூப் லைட்டை ஆஃப் செய்துவிட்டு படுக்கையில் படுத்தாள் நிமிஷா.
‘நந்தினியம்மா.நந்தினியம்மாவை நினைக்கும் போதே விரக்தி மட்டுமே விரவிக் கிடக்கும் நிமிஷாவின் நெஞ்சை சலசலத்து ஓடும் குளிர்ந்த நீரோடைபோல் குளிர்ச்சியும் அமைதியும் தொட்டுத் தடவிப் பார்த்தது.
நிமிஷாவின் பள்ளியாசிரியையாகப் பணியாற்றியவர். நிமிஷாவின் பதினோராம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு ஆங்கில ஆசிரியராக இருந்தவர்.
நிமிஷாவின் குடும்பத்தைப் பற்றியும் அவளின் ஏழ்மை பற்றியும் நன்கு அறிந்தவர். நிமிஷாவின் புத்திசாலித்தனமும் அவளின் அமைதியான குணமும் ஆசிரியை நந்தினியம்மாவை வெகுவாகவே கவர்ந்தன.
அதேபோல் தனது ஆசிரியர் நந்தினியம்மாவின் அன்பும் அமைதியும் நிமிஷாவை ஈர்த்தது.
பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிப் படிப்பை முடித்து வேலைக்குச் சென்ற பிறகும் நந்தினியம்மாவுக்கும் நிமிஷாவுக்கான அன்பான பாசமான உறவு விட்டுப் போகவில்லை.நந்தினியம்மா
ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஆதரவற்ற சிறார்கள் காப்பகமான கருணை இல்லம் மற்றும் ஆதவற்ற வயதான பெண்களின் காப்பகமான கருணாசாகரம் ஆகியவற்றிற்குத் தலைவியான பிறகும் தொடர்கிறது.
திடீரென ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதாவதொரு ஞாயிறன்று நிமிஷா நந்தினியம்மாவை சந்திக்க கருணை இல்லம் கிளம்பி விடுவாள்.
அதுவும் தனது பிறந்த நாளன்று நந்தினியம்மாவைச் சந்தித்து ஆசி பெறாமல் இருக்கவே மாட்டாள் நிமிஷா.
அந்த வகையில் மறுநாள் தாம்பரத்திலுள்ள கருணை இல்லம் செல்வதாய் இருந்த நிமிஷாவுக்கு நந்தினியம்மாவின் அழைப்பு சாரல் மழையாய் இதமாய் இருந்தது.
மறுநாள் தனது பிறந்தநாளில் கருணை இல்லத்தில் தனக்கு ஏற்படப்போகும் அனுபவத்தை அறியாதவளாய் மெல்லக் கண்களை மூடியவளை ஆழ்ந்த உறக்கம் ஆசையோடு அணைத்துக் கொண்டது.
(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்