தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 9

காலை மணி ஐந்து. தலைமாட்டில் கிடந்த செல்ஃபோன் எழுப்பிய அலாரத்தின் மெலிதான சப்தம் கேட்டு சட்டெனக் கண் விழித்தாள் நிமிஷா.

“முருகா!” என்றபடி படுக்கையில் எழுந்து அமர்ந்தவள் இரு கைகளையும் ‘பரபர’வெனத் தேய்த்து அருகருகே சேர்த்து வைத்துப் பார்த்தாள்.

வலது பக்கச் சுவற்றில் நிமிர்ந்து பார்க்கும் உயரத்தில் ஒட்டப்பட்டிருந்த கையளவேயான ‘யாமிருக்க பயமேன்’ என்ற வாசகத்தோடு கூடிய குழந்தை முகம் கொண்ட வேலேந்திய முருகனின் படத்தைப் பார்த்து “முருகா!” என்று உதடுகள் உச்சரிக்கக் கையெடுத்துக் கும்பிட்டாள்.

ஹால் கடிகாரம் ஐந்து ஐம்பது என்று நேரத்தைக் காட்டியபோது தன் அறைக் கதவைத் திறந்து கொண்டு நிமிஷா வெளியே வந்தாள்.

நிச்சயமாய் எந்தக் கொம்பு முளைத்த கவிஞனாக இருந்தாலும் சரி நிமிஷாவைப் பார்க்க நேர்ந்தால் அவளை வர்ணிக்க வார்த்தைகள் கிடைக்காமல் தவித்தேதான் போவான்.

இத்தனைக்கும் அறுநூறு ரூபாய் விலைக்குள் இருக்கும் டார்க் ப்ளு கலர் அவந்திகா ஃபேஷன் ஸாரிதான் கட்டியிருந்தாள் நிமிஷா.

டார்க் ப்ளுகலர் ஸாரியில் சாண்டல் கலரில் ஆங்காங்கே சின்னச் சின்னதாய் பூ டிஸைன், பார்டரும் முந்தியும் கான்ட்ராஸ்ட் கலரில் அமைந்து, புடவையின் அழகை எகிற வைத்திருந்தன.

புடவையின் பார்டருக்கு மேட்சாக அணிந்திருந்த டிசைன் ஜாக்கெட்டின் கைகள் அவளின் முழங்கைக்கு ஒரு இன்ச் மேல் வரை நீண்டிருந்தன.

அவளின் மேனியைக் கவ்விப்பிடித் திருந்த ஜாக்கெட் அளவெடுத்துத் தைத்தாற்போல் கனகச்சிதமாய் அமைந்திருந்தது.

புடவைத் தலைப்பை வெகு நேர்த்தியாய் அடுக்கடுக்காய் மடிப்பு வைத்து பின்புற முழங்காலுக்குச் சற்று கீழாய்த் தொங்கவிட்டு தொங்கும் அந்தத் தலைப்பையும் சேர்த்து இடுப்பைச் சுற்றி வெண்ணிற மணிகளால் கோர்க்கப்பட்ட இருவிரல் அளவு அகலம் கொண்ட அழகு வேலைபாட்டோடு கூடிய ஒட்டியாணம் அணிந்திருந்தாள். ‘சிக்’கென சின்னதாய் இடுப்பு.

அவளின் பொன்னிற மேனியை அவள் அணிந்திருந்த டார்க் ப்ளு கலர் ஸாரியும் மேட்சிங் ஜாக்கெட்டும் மேலும் ‘பளீரெ’னக் காட்டியது.

தலைக்கு ஷாம்பூபோட்டுக் குளித்திருந்ததால் கார் மேகம்போல் விரிந்து கிடந்த தலைமுடியைப் பின்னல் போடாமல் க்ளிப்பு போட்டு அடக்கியிருந்தாள்.

‘பஃப்’பென்று கொஞ்சம் புடைப்பாய் முதுகில் விரவிக் கிடந்த முடி நிமிஷாவின் பின்னழகை மேலும் கூட்டிக் காட்டியது.

காதுகளில் ரிங்குக்குப் பதிலாய் புடவைக்கு மேட்சிங்காய் டார்க் ப்ளு கலரில் கற்கள் பதிக்கப்பட்ட மூன்றடுக்கு தொங்கட்டான்கள் தொங்கின.

தோள்பட்டையில் வந்து இடிக்கும் அளவிற்கில்லாமல் கனகச்சிதமாக அமைந்திருந்தன தொங்கட்டான்கள்.

முகத்தில் லேசான பவுடர். லிப்ஸ்டிக் போடாமலேயே சிவந்த உதடுகள், த்ரெட்டிங் செய்யப்பட்ட நேர்த்தியான புருவங்கள், அழகிய கண்கள், ரொம்பவும் குட்டிசைஸ் மெரூன் கலர்ப் பொட்டு நெற்றியில்.

எந்த கலரில் சேலை கட்டியிருந்தாலும் அந்த சேலைக்கு மேட்சாய் நெயில் பாலிஷ் போட மாட்டாள் நிமிஷா.

எப்போதுமே அவளுக்குப் பிடித்தது மெரூன் கலர் நெயில் பாலிஷ்தான். அதே கலரில்தான் இப்போதும் நெயில்பாலிஷ் போட்டிருந்தாள்.

ஆனாலும் புடவையின் பார்டரிலும் முந்தியிலும் சிறிய அளவில் மெரூன்கலர் இடம் பெற்றிருந்ததால் வித்தியாசமாய்த் தெரியவில்லை. பொட்டும் அப்படித்தான். கலர்க்கலராய் வைக்க ஏனோ அவளுக்குப் பிடிப்பதில்லை.

கழுத்தில் வழக்கமாய் அணியும் மெல்லிய செயின் போடாமல் மூன்று சரம் கொண்ட டார்க் ப்ளு கலரில் மணிகள் கோர்க்கப்பட்டு நெஞ்சுக்குழிக்கும் சற்றே கீழாய் வந்து நிற்குமாறு வட்டமாய் பதக்கம் போன்ற தங்கநிற டாலர் அமைக்கபட்ட மணிமாலை போட்டிருந்தாள்.

கழுத்தை ஒட்டினாற்போல் அணிந்திருந்த அந்த வெறும் எண்பது ரூபாய் மணிமாலை நிமிஷாவை தேவதைபோல் காட்டியது.

இடது கையில் டார்க் ப்ளு கலர் ஸ்ட்ராப்போடு கூடிய வாட்ச். வலது கையில் டார்க் ப்ளூ கலரில் மெலிது மெலிதாய் ஆறு வளையல்கள்.

ஷாம்ப்பூ போட்டுக் குளித்த தலைமுடி டிரையர் போட்டுக் காய வைத்ததில் நன்றாக ஈரம்போய் ஒன்றிரெண்டு முடிகள் சிலிப்பிக் கொண்டும் சுருண்டும் அவ்வப்போது அவளின் சிவந்த நெற்றியில் வந்து நின்று காற்றில் பறந்து பறந்து ஊசலாடியது. அவளின் வசீகரத்தை மேலும் எகிற வைத்தது.

தோளில் மாட்டியிருந்த ஹேண்ட்பேக் லைட் யெல்லோ கலரில் இருந்தாலும் அதன் வெளியே தெரியும் பகுதியின் நடுவில் தேசியக் கொடியிலிருக்கும் சக்கரம்போல் வட்ட வடிவிலான கொஞ்சமே பெரிதான டார்க் ப்ளு கலர் ப்ளாஸ்டிக் பட்டன் இணைக்கப்பட்டிருந்தது ஹேண்ட்பேக்கை செம லுக்காய்க் காட்டியது.

நிமிஷா அணிந்திருந்த அத்தனை அணிகலன்களும் சீப் அண்ட் பெஸ்ட் ரகம்தான்.

ஆனாலும் அவை அனைத்துமே அவள் மேனியை அலங்கரிப்பதைப் பெருமையாய் மகிழ்ச்சியாய் கருதினவோ என்னவோ! நிகரில்லா அழகினை வாரி வழங்கி அவளின் அழகுக்கு மேலும் அழகு சேர்த்தன.

தோளில் மாட்டியிருந்த ஹேண்ட் பேக்கை மேஜைமீது வைத்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.

தனியாய் சுவாமி அறை என்று கிடையாது என்பதால் சமையலறையிலேயே சின்னதும் பெரிதுமாய் சாமி படங்கள் வைக்கபட்டிருந்த அலமாரியின் முன்புபோய் நின்றாள் நிமிஷா.

காமாக்ஷி விளக்கை ஏற்றினாள். கண்மூடி கைகூப்பி வணங்கி நின்றாள். நமஸ்கரித்து விட்டு எழுந்து நின்றபோது அம்புஜம்மா சமையலறைக்குள் நுழைந்தார்.

“அம்மா! நமஸ்காரம் பண்றேன்மா!” என்றாள் நிமிஷா.

தனது பிறந்தநாளில் தாயின் ஆசிகளைப் பெற காலில் விழுந்த மகளை, “ம்.. நல்லாரு” என்று ஒற்றை வார்த்தையோடு நிறுத்திக் கொண்டவர்

அடுத்த வார்த்தையாய் “தீக்ஷிதாவ அழச்சிட்டு வரனுமே! யார் போவுறது? என்னிக்குப்போய் அழச்சிட்டு வர்ரது. யோசிச்சியா?” என்று கேட்டபோது அதிர்ந்து போனாள் நிமிஷா.

‘தனது பிறந்தநாளில் தாயின் நெஞ்சாற வாயாற வாழ்த்தும் வாழ்த்துக்களைப் பெற நமஸ்கரிக்கும் மகளை ஒரு தாய் இப்பிடியா இப்பிடியா பட்டும் படாமலும் நல்லாருன்னு ஒற்றை வார்த்தையை சொல்லி முடித்துவிட்டு ரெண்டாவது பொண்ண அழச்சிகிட்டு வரது பத்தி யோசிச்சியானு கேப்பாங்க?’

வெறுத்துப் போனது நிமிஷாவுக்கு.

“ராத்திரி தூங்கினியா?” அம்மாவைக் கேட்டாள்.

“ஏங்கேக்குற?”

“இல்ல, தீக்ஷிதாவ எப்பபோய் அழச்சிக்கிட்டு வர்ரதுன்ற கவலேல ராத்திரி முழுக்க தூங்கினியோ இல்லியோன்னு கேட்டேன்” சொல்லிக் கொண்டே அம்மாவின் பதிலுக்கு காத்திராமல் ஹாலுக்கு வந்தாள்.

மேஜைமீது வைத்த ஹேண்ட்பேக்கை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டவள் வாட்சில் மணி பார்த்தாள். மணி ஆறு பத்து.

“காபி குடிக்கில?” கிச்சனிலிருந்து எட்டிப் பார்த்து கேட்ட அம்மாவிடம்,

“வேண்டாம்! நான் கருணாசாகரம் ஆஸ்ரமம் வரை போய்ட்டு வரேன்!” என்று சொல்லிவிட்டு செருப்புகள் வைக்கும் ஸ்டேண்டருகில் வந்தாள்.

‘கட் ஷு போடுவதா? சப்பல் போடுவதா?’ யோசித்தாள்.

கோல்ஹாபுரி கங்ரூ ஃப்ளேட் சப்பல் சமீபத்தில் வாங்கியது என்பதால் புதிதாய்த் தெரிந்தது.

தனக்காக எதையுமே சட்டென வாங்கி விடுபவள் அல்ல நிமிஷா. ஒருமுறைக்குப் பலமுறை யோசித்தே வாங்குபவள்.

அந்தப் பொருளை வாங்க செலவழிக்கும் காசு வீட்டுச் செலவுகளைச் செய்ய முடியாமல் கஷ்டப்படுத்துமோ என யோசிப்பவள்.

ஏற்கனவே உபயோகப்படுத்திக் கொண்டிருந்த செருப்பில் ஒன்றைக் காணவில்லை. ‘நாய் தூக்கிச் சென்றிருக்கலாம்!’ என நினைத்து வேறு வழியின்றி நானூறு ரூபாய் கொடுத்து இந்த சப்பலை வாங்கினாள் நிமிஷா.

புறங்காலை மூடும் பட்டையில் அழகாய் பூ டிஸைன்கள் போடப்பட்டுக் கண்ணைக் கவரும் விதமாய் இருந்த சப்பலை அதை வாங்கிய சமயம் முதல்நாள் அலுவலகம் அணிந்து சென்றபோது

ப்ரியம்வதாகூட, “வாவ்ப்பா! என்னவொரு ரிச் லுக்கா இருக்கு சப்பல். சுடிதாராகட்டும், புடவையாகட்டும், ஃபேன்ஸி அயிட்டங்களாகட்டும் ஏன் கால்ல போடுற சப்பலக்கூட ஒனக்குன்னே பாத்து பாத்து தயாரிப்பானுக போல!” என்று சிரித்துக் கொண்டே வயிற்றெரிச்சலைத் துப்பினாள்.

கொஞ்சம் புதிதாய்த் தெரிந்த கோல்ஹாபுரி சப்பலை மாட்டிக் கொண்டுத் திரும்பியபோது, வாசல் படியில் இருகைகளையும் ஊன்றிபடி அமர்ந்திருந்த ராஜதுரை “அக்கா ஹேப்பி பர்த்டேக்கா!” என்றான்.

“நீ நல்லாருக்கனும்னு சாமிய வேண்டிக்குறேங்க்கா!”

“தொர! தேங்க்ஸ் தொர!” தம்பியின் தலையில் கை வைத்து தலையை அப்படியும் இப்படியும் ஆட்டித் தன் அன்பை வெளிப்படுத்தினாள் நிமிஷா.

தம்பியின் அன்பும் பாசமும் அவளை நெகிழ வைத்தது.

“தொர வைஷாலி எழுந்தப்புறம் அக்கா வர்ரப்ப சாக்கி வாங்கிண்டு வர்ரதா சொன்னதா சொல்லு. நா வரேன் தொர!”

“சரிக்கா”வென்று அவன் சொல்வதைக் காதில் வாங்கிக் கொண்டே கேட்டைத் திறந்து கொண்டுத் தெருவில் கால் வைத்தாள் நிமிஷா.

எலக்ட்ரிக் ட்ரெயினில் போவதைவிட பேருந்தில் தாம்பரம் செல்வதே எளிது என்பதால் எம்.பி.யின் நிதி ஒதிக்கீட்டிலிருந்து அமைக்கப்பட்ட சின்னதான பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பும் தாம்பரம் செல்லும் பேருந்ததைப் பிடிக்க பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தாள் நிமிஷா.

கிளம்பத் தயாராய் இருந்தப் பேருந்தில் காலை நேரம் என்பதால் அவ்வளவாய்க் கூட்டமில்லை. ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாள் நிமிஷா.

இடது கையை லேசாய் உருட்டி மணி பார்த்தாள். மணி ஆறு நாற்பது.

காலை நேர ட்ராஃபிக் குறைவாகவே இருந்ததாலும் அதிகம்பேர் அடுத்தடுத்து இறங்காததாலும் வேகமெடுத்துச் சென்றது பேருந்து.

முதல்நாள் இரவு சாப்பிடாமல் படுத்ததும் காலையிலும் காபிகூடக் குடிக்காமல் கிளம்பி வந்ததும் நிமிஷாவுக்கு அந்தக் காலை நேரத்திலேயே களைப்பாய் இருந்தது.

நேற்று மதியம் அலுவலத்தில் லஞ்ச் டைமில் டிஃபன் பாக்ஸ் தோசை ரெண்டு சாப்பிட்டது தான்.

மனமும் உடலும் களைத்துப் போனவளாய் சீட்டின் பின்புறம் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

‘பெற்றவர்கள், தீக்ஷிதா மூவருமே சுயநலமிகள். மூவருமே அவளின் சம்பாத்தியத்தை மட்டுமே எதிர்பார்ப்பவர்கள். அவளின் உழைப்பில் கவலையின்று உண்டு உடல் வளர்ப்பவர்கள்.

அப்பா பொறுபற்றவர்; தாய் வாய் திறக்காமலே காரியம் சாதிப்பவர்; தீக்ஷிதா கணவன் வீடு சென்ற பிறகும் அட்டைப்பூச்சியாய் நிமிஷாவின் உழைப்பின் ஊதியமெனும் ரத்தத்தை ஏதொவொரு விதத்தில் உறிஞ்சுபவள்.

தம்பி ராஜதுரை மட்டுமே அவளிடத்தில் பாசம் கொண்டவன். தன் உடல் இயலாமையால் அவளுக்கு சுமையாகிப் போனதை நினைத்து வருந்துபவன்.

அவ்வப்போது வீட்டில் அவளில்லாத நேரத்தில் அப்பா அவளைத் திட்டுவதையும் அம்மா அதுபற்றி அப்பாவை எதிர்த்துக் கேள்வி கேட்காமல் இருப்பது பற்றியும், தீக்ஷிதாகூட சமயதில் அப்பாவோடு சேர்ந்து கொள்வது பற்றியும் சொல்லி வருந்தவதுண்டு. மனம் வலிக்கும் நிமிஷாவுக்கு.

‘வைசாலி..ப்ச்..’ எதையும் புரிந்து கொள்ளத் தெரியாதவள்.

பெருமுச்சு விட்டாள் நிமிஷா.

‘எது எப்படி இருந்தாலும் அந்த குடும்பதைவிட்டு நகர முடியாது நிமிஷாவால். குடும்பதில் மூத்தவளாய்ப் பிறந்த பாவத்துக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துத்தான் ஆகவேண்டும்.

இதுவே ஒரு ஆண் இது போன்ற குடும்பதில் மூத்தவனாய்ப் பிறந்திருந்தால் தன்னைப் போல் உழல்வானா?’ என்று யோசித்தாள்; சந்தேகமாய் இருந்தது.

தாம்பரம் பேருந்து நிலையத்தின் உள்ளே பேருந்து நுழைந்து நின்றது.மணி ஏழு நாற்பது.

பேருந்து நிலையத்தை விட்டு வெளியில் வந்தாள் நிமிஷா. ப்ரைவேட் ஆட்டோவில் கருணாசாகரம் செல்ல நூறு ரூபாய் என்று கூசாமல் கேட்டார் டிரைவர்.

யோசித்த வேளையில் ‘சரக்’கென்று வந்து நின்றது ஷேர் ஆட்டோ. ஆட்டோ செல்லும் நிறுத்தங்களை கத்திச் சொல்லி பயணிகளை அழைத்தார் ஷேர் ஆட்டோ டிரைவர்.

‘கருணாசாகரம்’ என்ற வார்த்தை அவர் வாயிலிந்து வெளிவந்த நிலையில் சட்டென அந்த ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள்.

ஏற்கனவே இரண்டுபேர் மட்டுமே அமர்ந்திருந்தனர் அதில்.நிமிஷா ஏறிய பிறகு யாரும் வந்து ஏறவில்லை.

‘கருணாசாகரம் ஆதரவற்ற பெண்கள் காப்பகம்’ என்று அம்புக் குறியோடு எழுதப்பட்ட போர்டு நின்றிருந்த அந்த தெருவின் முகப்பில் வந்து நின்றது ஆட்டோ.

டிரைவரிடம் இருபது ரூபாயைக் கொடுத்துவிட்டு தெருவில் நுழைந்து கருணாசாகரக் கட்டிடத்தின் முன் வந்து நின்று வாட்சில் மணி பார்த்தாள் நிமிஷா. மணி ஏழு ஐம்பத்தாறு எனக்காட்டியது வாட்ச்.

தன் வாழ்க்கையில் ஏற்படப் போகும் மாற்றங்கள் அனைத்துக்கும் பிள்ளையார் சுழி இங்கேதான் போடப்படவிருப்பது தெரியாமல், அந்தப் பிரம்மாண்ட கட்டிடத்தின் வாசலை அடைத்து நின்ற ரெட்டைக் கிரில்கேட்டின் தாழ்ப்பாளில் கை வைத்தாள் நிமிஷா.

(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்