தெய்வத் தமிழ்

தெய்வத் தமிழ்

தொன்மை வாய்ந்த நம் பாரத நாட்டில் சிறந்த கலாசாரத்தோடும் பண்பாட்டுடனும், வாழ்வியல் முறையில் தனித்துவம் பெற்றதாகவும், மற்றவர்க்கு எடுத்துக்காட்டாகவும் தமிழ் பேசும் நல்லுலகம் விளங்கியது.

சமயக் கருத்துகளும் தத்துவ விளக்கங்களும் சிறந்து விளங்கின. ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் ஆச்சாரியர்கள் அனைவரும் இருந்தது நம் பகுதியில்தான். பதினெண் சித்தர்கள் இருந்ததும் இங்குதான்.

சங்கரர், இராமாநுஜர் மற்றும் மத்வர் ஆகிய மூன்று முதன்மையான தத்துவப் பெரியோர்கள் தோன்றியதும் இங்குத்தான். 108 வைணவத் திவ்ய தேசங்களில் பெரும்பாலான திருத்தலங்கள் தென்னகத்தில்தான் இருக்கின்றன.

சைவத் திருத்தலங்களில் பெரும்பான்மையான திருத்தலங்கள் இங்குதான் உள்ளன. முருகனின் ஆறுபடைவீடுகளும் இங்குதான் உள்ளன. திகம்பர சமணக் கோயில்களும் அநேகம் இங்கு உள்ளன.

ஆழ்வார்கள் அமுதத் தமிழால் பாடியருளிச் செய்த கோயில்களே திவ்ய தேசங்கள் எனப்பட்டன.

நாயன்மார்கள் தம் தேனினும் இனிய தமிழில் பாடிய கோயில்களே பாடல் பெற்ற தலங்கள் எனப் போற்றப்படுகின்றன.

ஆகவே, தமிழும் சமயமும் ஒன்றில் ஒன்று கலந்துள்ளதை அறியலாம்.

திருஞானசம்பந்தர் தமிழ் ஞானசம்பந்தர் என்று போற்றப்படுகின்றார். பேயாழ்வாரை, அமுதனார் ‘தமிழ்த் தலைவன்’ என்றே போற்றுகின்றார்.

இறைவன் தந்த தமிழை அகத்தியன் தந்ததாகக் கம்பன் சொல்லுகின்றார்.

‘தழற்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் தந்தான்’ (அகத்தியப் படலம் 41)

தமிழ் எழுத்துக்களை உயிரெழுத்து, மெய்யெழுத்து எனறு சொல்லுகின்றோம்.

சமயப் பெரியோர்கள் உயிரையும் மெய்யையும் பற்றி விவரிக்கின்றனர். ஆகத் தெய்வமும் தமிழும் வேறல்ல என்பதே என் கருத்து.

காலத்தின் கோலத்தில் சரித்திரத்தை மறந்தோம். பழம்பெரும் புகழைத் தொலைத்துக் கொண்டுள்ளோம். நாம் வாழும் நிலப்பகுதி என்றும் தெய்வத் தமிழ்ப் பகுதியே ஆகும். 

விதண்டாவாதமாகப் பேசலாமே தவிர, உண்மை நிலையை மறுக்க இயலாது. ஆகவே, இக்கட்டுரையில் முதல் நூலான தொல்காப்பியக் கருத்துக்களில் இருந்தே தொடங்குகின்றேன்.

தொல்காப்பியக் கருத்துக்கள்

தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரத்தில்,

‘தமிழ்கூறும் நல் உலகத்து

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்

புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்

நிலம் தருதிருவில் பாண்டியன் அவையத்து

அறம் கரை நாவின் நான்மறை முற்றிய’

என்னும் பாடலில் நான்கு வேதங்களை ஆராய்ந்து தெளிந்தவர்களைக் குறிப்பிடுகின்றார்.

மற்றோர் இடத்தில் ‘ஆறு அறிவதுவே அவற்றோடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே’ (தொல்காப்பியம் 1517 ) என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, உடலால், வாயால், மூக்கால், கண்ணால், செவியால் உணர்ந்தும், உண்டும், முகர்ந்தும், பார்த்தும், கேட்பதும் அன்றி மனத்தால் பகுத்தறிந்து எண்ணிப்பார்க்கும் சிறப்பறிவு கொண்டவரே ஆறறிவு உடையோர். ‘மக்கள் தாமே ஆறறிவு உயிரே'(தொல்காப்பியம்1523)

இப்படி தெளிந்தவர்கள் தத்தம் இருப்பிடங்களைக் கொண்டு தம் வாழ்க்கையை முறைப்படுத்திக் கொண்டனர்.

இருப்பிடங்கள் ஐந்தாக வகைப்படுத்தப்பட்டன.

குன்றும் அதைச்சார்ந்த பகுதியும் குறிஞ்சி நிலம் எனப்பட்டன. அந்த நிலப்பகுதியில் வாழ்ந்தோர் முருகனை வணங்கினர்.

காடும் அதை சார்ந்த நிலங்களும் முல்லைநிலம் எனப்பட்டன. முல்லை நிலத்தில் இருப்போர் இறைவனாகத் திருமாலை வணங்கினர்.

வயலும் அதைச் சார்ந்த பகுதியும் மருத நிலம் எனப்பட்டன. அந்த மருத நிலத்தில் வாழ்ந்தோர் இந்திரனை வணங்கினர்.

கடல் சார்ந்த நிலப்பகுதிகள் நெய்தல் நிலம் எனப்பட்டன. அந்த நெய்தல் நிலத்தில் வாழ்ந்தோர் வருணனை வணங்கினர்.

குறிஞ்சி நிலத்திற்கும் முல்லை நிலத்திற்கும் இடைப்பட்ட நிலப்பகுதிகள் பாலை நிலம் எனப்பட்டன. அந்தப் பாலை நிலத்தில் வாழ்ந்தோர் கொற்றவையை வணங்கினர்.

இதன்மூலம், பண்டைய காலம் முதல் இறைவழிபாடு நம்மக்களிடையே இரண்டறக் கலந்திருந்துள்ளதைத் தொல்காப்பியம் மூலமாக அறிகின்றோம்.

தொல்காப்பியத்தில் நிலப்பகுதிகளுக்குக் கருப் பொருள் சொல்லும்போது

‘தெய்வம், உணாவே, மா, மரம், புள், பறை,

செய்தி யாழின் பகுதியோடு தொகைஇ,

அவ்வகை பிறவும் கரு என மொழிப’ (தொல்காப்பியம் 966)

மக்களுக்கு வாழ்க்கையின் இன்றியமையாத தேவைகளைக் குறிக்கும் போது, முதலில் தெய்வத்தைச் சொல்லியுள்ளமை நோக்கத் தக்கது.

கடவுள் வாழ்த்து

மேலும், தாம் மேற்கொள்ளும் முயற்சி நல்ல முறையில் அமையக் கடவுள் வாழ்த்து முக்கியமானது என்பதைத் தொல்காப்பியர் இயம்புவதை,

‘ கொடி நிலை கந்தழி வள்ளி என்ற

வடுநீங்கு சிறப்பின் முதலான மூன்றும்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.'(1031)

என்ற நூற்பா வழி அறியலாம்

ஆசாரக்கோவையில் தினம்தினம் செயல்களைத் தொடங்கும் முன் கடவுள் வழிபாடு குறித்துச் சொல்வதைக் காணலாம்.

‘நாளந்தி கோல்தின்று கண்கழீஇத் தெய்வத்தைத்

தானறியு மாற்றால் தொழுதெழுக அல்கந்தி

நின்று தொழுதல் பழி’ 9

(காலையில் எழுந்து குச்சியினால் பல்துலக்கிக் கண்களைக் கழுவித் தான் வணங்கும் தெய்வத்தை அறிகின்ற வழியினால் வணங்குக. அதன் பின்னே செயல்களைத் தொடங்க வேண்டும். மாலைப் போதில் அமர்ந்து இறைவனை வணங்க வேண்டும்.)

இதனால் நாம் தெரிந்து கொள்வது, நம் பண்டைய மரபில், இறைவழிபாடு என்பது இரண்டறக் கலந்திருந்துள்ளது என்று அறியலாம்.

இதன் படியே புறநானூறு, அகநானூறு நூல்கள் கடவுள் வாழ்த்தோடு தொடங்குவதைக் காண்கின்றோம்.

திருவள்ளுவர் தம் முதல் குறளில் எல்லாவற்றிற்கும் மூலகாரணனான இறைவனை ஆதி பகவன் என்று கூறித் தொடங்குகின்றார்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. (பகவானே- மாயோன் சினனே புத்தன். நிகண்டு)

‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்பது தமிழ்.

‘ஆதிபகவன் முதற்றே உலகு’ என்பது சமயம். முதல் குறளிலேயே தமிழும் சமயமும் கமழ்வதைக் காண்கின்றோம்.

அடுத்ததாகப் பரிபாடல் என்ற பழம் நூலில் தெய்வத்தை எவ்வாறு போற்றினர் என்று குறிப்பிட்டுள்ளதைப் பார்ப்போம்.

‘தீயினில் தேறல் நீ பூவினுள் நாற்றம் நீ

கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ

அறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ

வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ

வெஞ்சுடர் ஒளியும் நீ திங்களும் அளியும் நீ

அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ ஆதலின் ‘

இப்பாடலின் மூலம் இறைவனைப் போற்றிப், பக்தி நிலையை உணர்த்தும் வழிமுறை அறிகின்றோம்;.

கலித்தொகை பாடல்மூலம் ஆதிகாலத்தில் மும்மூர்த்திகள் வழிபாடு இருந்துள்ளதை அறியலாம்.

‘பொரு முரன் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமித்

திரு மறு மார்பன் போல் திறல் சான்ற காரியும்

மிக்க ஒளிர் தாழ்சடை மேவரும் பிறை நுதல்

முக்கண்ணான் உருவே போல் முரன் மிகு குராலும்

மா கடல் கலக்குற மா கொன்ற மடங்காப் போர்

வேல் வல்லான் நிறனே போல் வெருவந்த சேயும்’ ( முல்லைக்கலி 4)

இனியவை நாற்பது நூலும்

கண்மூன்று உடையான்தாள் சேர்தல் கடிதினிதே

தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே

முந்துறப்பேணி முகநான் குடையானைச்

சென்றமர்ந் தேத்தல் இனிது.

என சிவன், திருமால், பிரம்மா என்ற மூம்மூர்த்திகள் வழிபாடு குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினெண் கீழ்க்கணக்கு நூலில் நான்மணிக்கடிகையில் கடவுள் வாழ்த்தாக இருக்கும் பாடல்களைப் பார்ப்போம்

‘மதிமன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும்

கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்

முதுநீர் பழனத்துத் தாமரைத் தாளின்

எதிர்மலர் மற்றவன் கண்ஒக்கும் பூவைப்

புதுமலர் ஒக்கும் நிறம்’ 1

திருமாலின் அவதாரச் சிறப்பினை உணர்த்தும் பாடல்

‘படியை மடியகத்திட்டான் அடியினால்

முக்காற் கடந்தான் முழுநிலம்–அக்காலத்து

ஆப்பனி தாங்கிய குன்றெடுத்தான் சோவின்

அருமை அழித்த மகன்’.2

பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படையில் கந்தபுராணச் செய்திகளோடு முருகப்பெருமானின் புகழ் பாடப்பட்டுள்ளது.

பெரும்பாணாற்றுபடையில் காஞ்சியில் வைணவத் திருத்தலத்தைப் பற்றிச் சொல்லி உள்ளது.

‘பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்

வெயில் நுழைபு அறியாக் குயிலை நுழை பொதும்பர்

குறுங்காற் காஞ்சி’

முல்லைப்பாட்டிலும் திருமாலைக் குறித்துப் பாடியுள்ளதைக் காணலாம்.

‘நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு

வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை

நீர் செல நிமிர்ந்த மாஅல் போல’

மேலும், சங்க இலக்கியங்களில் மாயோன்;, முக்கண்ணன், மணிமிடற்றான், ஆதிரையான், சேயோன் என்று திருமால், சிவன், முருகன்,மற்றும் பலராமன் ஆகியோரை வழிபட்டுள்ளதை அறிகின்றோம்.

திருக்குறள்

படிப்பதன் பயன் அறிவு பெறுவது. அப்படியானால் நம் அறிவுக்கெல்லாம் எட்டாத ஒருபொருள் இருப்பதை உணர்ந்து அதை வணங்காவிட்டால் படிப்பதனால் மட்டும் என்ன பயன்?.

‘கற்றதனால் ஆய பயன் என்கொல் வால் அறிவன்

நற்றாள் தொழார் எனின்’.

விருப்பு வெறுப்பு இல்லாத, நம் மனத்துறையும் இறைவனின் திருவடிகளைப் போற்றி வணங்குபவர்கள் தீங்கின்றி இவ்வுலகில் வாழ்வார்கள்.

‘வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல’.

‘மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்

நிலமிசை நீடு வாழ்வார்’.

(மனனகம் மலமற மலர் மிசை எழுதரும். நம்மாழ்வார்)

இறைவனை வணங்கி அவனைச் சரணடைந்தவர்களே பிறவித்துன்பம் என்ற கடலிலிருந்து கரை ஏறுவார்கள். மற்றவர் பிறவித் துன்பக் கடலில் கரையேறாது தத்தளிப்பார்கள்.

‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடி சேராதார்’.

இறைவன் உண்டு, அவனை நாம் சரணடைய வேண்டும். அப்போதுதான் நம் வாழ்க்கை சீரான பாதையில் அமையும், மகிழ்ச்சியும் கிடைக்கும் என்று சொன்ன திருவள்ளுவரின் கருத்துக்களை நினைப்பதுமில்லை போற்றுவதுமில்லை. இது காலத்தின் கோலமே !

சிலப்பதிகாரம்

அடுத்ததாகக் காப்பியங்கள் வாயிலாகப் பார்த்தால், இராமாயணத்தில் இராமபிரானின் அவதார நிகழ்ச்சிகளைச் சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளதைக் காணலாம்.

‘ பெருமகன் ஏவல் அல்லது யாங்கணும்

அரசே தஞ்சமென்று அருங்கான் அடைந்த

அருந்திறல் பிரிந்த அயோத்தி போல’ (புறஞ்சேரி இறுத்த காதை)

‘தாதை ஏவலின் மாதுடன் போகிக்

காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்

வேத முதல்வன் பயந்தோன் என்பது

நீ அறிந்திலையோ நெடுமொழி அன்றோ.’ (ஊர்காண் காதை)

உலகளந்த அவதாரம்

‘மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகை முடிய

தாவிய சேவடி’ (ஆய்ச்சியர் குரவை)

இராம அவதாரம்.

‘தம்பியொடும் கான்போந்து

சோ அரணும் போர்முடியத் தொல்லிலங்கை கட்டழித்த

சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே'( ஆய்ச்சியர் குரவை)

மேற்சொன்ன அவதாரங்கள் எல்லாம் திருமாலினுடையது என்று காட்டவே

‘திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே’? என்று காட்டுகின்றார்.

மேலும் சிலப்பதிகாரத்தில் கண்ணபிரானை அவர்தம் அவதாரச் சிறப்புக்களை, மகாபாரத நிகழ்வுகளைக் காட்டிச் சொல்லியுள்ளதைக் காணலாம்.

‘கரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்

விரிகமல உந்தியிடை விண்ணவனைக் கண்ணம்

திருவடியும் கையும் திருவாயும் செய்ய

கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே

கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே?

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்

கடந்தானை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்றப்

படர்ந்து ஆரணமுழங்கப் பஞசவர்க்குத் தூது

நடந்தானை ஏத்தாத நாஎன்ன நாவே

நாராயணா வென்னா நாஎன்ன நாவே’ ( ஆய்ச்சியர் குரவை)

இப்பாடல்கள் மூலமாக நாம் தெரிந்து கொள்வது யாதெனில், சங்ககாலம் மற்றும் காப்பிய காலங்களுக்கு முன்பே இராமாயணம், மகாபாரத நிகழ்வுகளை, நம் முன்னோர்கள் நன்றாக அறிந்துள்ளனர்.

இடையில் வந்தவர்கள் நம் வரலாற்றை மாற்றி எழுத முற்படுகின்றனர். அதில் ஓரளவு சாதித்தும் உள்ளனர். இளைய சமுதாயம் நம் கலாசாரங்களை மதிக்காமல் இருந்தால் கெடுவது ஒட்டு மொத்த நாடும் என்று அறிதல் வேண்டும்.

இப்பகுதி முழுவதும் ஆன்மீக பூமியே என அறியச் செய்ய வேண்டும். பிற்காலச் சமயங்கள் தோன்றுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, சிறந்த வழிபாட்டு முறைகளை நாம் கொண்டுள்ளோம்.

வேதக்கருத்துகளையும் நம் முன்னோர் அறிந்துள்ளனர். ஆகவேதான், நம்மாழ்வார் வேதம் தமிழ் செய்த மாறன் என்று போற்றப்படுகின்றார். அவர் அருளிச்செய்த திருவாய்மொழி தமிழ் வேதம் என்று போற்றப்படுகின்றது.

ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவையை வேதமனைத்திற்கும் வித்து என்று போற்றுகின்றோம்.

இவற்றின் மூலம் நாம் அறிவது யாதெனில் நம் சமூகத்தில்  ஆதி காலத்தில் இருந்தே இறை வழிபாடு இருந்துள்ளது. 

அறம் காக்கப் பலவித அவதாரங்கள் எடுத்து அறநெறி காக்கப்பட்டதையும், அவதார நிகழ்வுகளையும் சொல்லப்பட்டுள்ளன. 

சில அன்னிய சுயநலக் கூட்டத்தார் நம் பண்டைய கலாசாரங்களைக் கெடுத்தும் இலக்கியங்களைப் படிக்காதவாறு செய்தும், சமூகத்தைச் சீர்கெடுத்து விட்டார்கள்.

சம்பளம் பெறுவதற்குத் தேவையானவற்றை மட்டும் படித்துவிட்டுப் பண்பாட்டையும் கலாசாரத்தையும் தொலைத்துவிட்டோம்.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று‘ என்ற முது சொல்லைச் சிறுவர் பாடப்பகுதியில் நீக்கி விட்டோம்.

தொல்காப்பியம் தொடங்கி, பரிபாடல், கீழ்க்கணக்கு மற்றும் தொகை நூல்கள் வாயிலாகத் தமிழர்கள் இறைவழிபாட்டை முதன்மையாகக் கொண்டிருந்தனர் என்பதைத் தெள்ளத் தெளிவாக அறியலாம். விரிவிற்கஞ்சி மற்றை நூல்களைக் குறிப்பிட முடியவில்லை.

               பக்தியே தமிழ் தமிழே பக்தி

இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்
திருநின்றவூர் ‍ 602024
கைபேசி: 9444410450

Comments

“தெய்வத் தமிழ்” மீது ஒரு மறுமொழி

  1. அருமையான கருத்துகள். இவை அனைவரையும் சென்று அடைய வேண்டும்.