தெய்வமாக வந்தவர்!

என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

என் பெயர் முருகன். நான் வசிப்பது மதுரை அனுப்பனடி.

ஒருஞாயிற்று கிழமை நானும் என் மனைவி சுந்தரியும் அழகர் கோயிலுக்கு செல்வதற்காக புறப்பட்டோம்.

எங்களுக்கு திருமணம் முடிந்து ஒருவாரம் தான் ஆகியிருந்தது. புதுமண தம்பதி என்பதால், நாங்கள் இருவர் மட்டும் இருசக்கர வாகனத்தில் அழகர்கோவிலுக்கு புறப்பட்டோம் .

நானும் என் மனைவியும் நிறைய பேசியபடி அழகர் கோயிலுக்கு சென்றோம்.

ஒருமணி நேரம் பயணத்திற்கு பிறகு அழகர்கோவிலை அடைந்தோம்.

சிறப்பாக சாமி தரிசனம் முடித்து, கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து இயற்கை அழகை ரசித்து விட்டு புறப்பட்டோம்.

அழகர் கோவிலில் இருந்து புறப்படும்போது வானம் இருண்டது. கோட்டை வாசலை தாண்டி இரண்டு கிலோமீட்டர் கடந்த போது வாகனத்தின் வேகம் தடுமாற ஆரம்பித்தது.

வண்டி பஞ்சர். ஞாயிறு மாலை நேரம் என்பதால் பெரும்பாலும் கடைகள் மூடி இருந்தன.

வாகனத்தின் பின் சக்கரம் ஆணி குத்தப்பட்டு பஞ்சர் ஆகி இருந்தது. மழை தூர ஆரம்பித்தது.

எங்களுக்கு இந்நிகழ்வு சுத்தமாக பிடிக்கவில்லை. “கடவுளே! நினைக்கக் கும்பிட்டு வரும் போது இப்படி தனிமையில் தவிக்க விட்டாயே!” என்று இருவரும் புலம்பியபடி நின்று இருந்தோம்.

வாகனத்தை சரி செய்ய கடை இருப்பது சந்தேகமே! அதுவும் இன்று ஞாயிறு மாலை நேரம் என்பதால்.

என் மனைவி சுந்தரி தங்க நகைகள் சற்று அதிகமாக அணிந்து இருந்தாள்.

அவளை தனிமையில் விட்டு விட்டு பக்கத்தில் கடைகள் இருக்கிறதா? என்று பார்க்க முடியவில்லை. அவள் தனியாக இருக்க தயங்கினாள்.

‘என்ன செய்வது?’ என்பது தெரியாமல் கடவுளை நினைத்து கொண்டு இருந்தோம்.

அப்போது மழை அதிகமாக பெய்ய ஆரம்பித்தது.

ஒதுங்க சிறுஇடம் இருந்தது.

அப்போது என் அப்பா வயது உள்ள ஒருவர் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்தார்.

எங்கள் இருவரையும் பார்த்து ஓரமாக நின்றார். ‘நாங்கள் மழைக்கு ஒதுங்கி நிற்கிறோம்!’ என்று புரிந்து கொண்டவர் “என்ன தம்பி எந்த ஏரியா?” என்று கேட்டார்.

“நாங்க அனுப்பனடி! அழகர் கோயிலுக்கு வந்தோம்; வண்டி பஞ்சர் ஆகிருச்சு. மழை வேற வந்திருச்சு. என்ன பண்ண என்று புரியல!” என்று அவரிடம் கூறினேன்.

அதற்கு அவர், “பஞ்சர் ஆகிருச்சா! அடடே இன்னைக்கு ஞாயித்து கிழமை சாயங்காலம் கடை இருக்காதே. இங்க இருந்து ஒன்றை கிலோமீட்டர் போனா கடை இருக்கும்!” என்று அவர் சந்தேகமாக கூறினார்.

“ஐயா வண்டிய தள்ள முடியல! பின் சக்கரத்தில் ஆணி குத்திருக்கு.“ என்று கூறினேன்.

அதற்கு அந்த பெரியவர் “இந்தா தம்பி! என் வண்டிய கொண்டு போயி , பஞ்சர் கடை இருக்கான்னு பார்த்துட்டு வா. இருந்தா அந்த கடைக்காரனை, என் பெயர் சொல்லி கூப்பிட்டு வா.

என் பெயர் மீனாட்சி சுந்தரம். நான் கூப்பி டேன்னு சொல்லு. அந்த பையன் வந்திருவான். நான் போன் கொண்டு வரல.

இருந்தா போன் பண்ணி கேட்டு இருப்பேன். அவன் நம்பர் போன்ல தான் இருக்கு! “ என்று அந்த பெரியவர் (மீனாட்சி சுந்தரம் ) கூறி , அவரின் வண்டி சாவியை என் கையில் நீட்டினார்.

நான் அந்த சாவியை வாங்க முயன்ற போது , என் மனைவி சுந்தரி தடுத்தாள்.

‘அந்த ஆள பார்த்தா சரியில்லாத மாதிரி தெரியுது, நீ என்னை தனியா விட்டு போகாத!’ என்ற பாவனை காட்டினாள் சுந்தரி.

அதை நான் புரிந்து கொண்டாலும் தற்போது இதை விட்டால் வேறு வழி இல்லை.

நான் புரிந்து கொண்டதை விட அந்த பெரியவர் எங்களின் மவுன உரையாடலை புரிந்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

“நல்ல வேளை நீ தடுத்த! அந்த ஆள பார்த்தியா, உன் சைகைய புரிஞ்சிட்டு கொட்டுற மழையில் கெளம்பிட்டான். யாரையும் நம்ப கூடாது!”என்று நானும் என் மனைவியும் அந்த பெரியவரை தவறாக நினைத்து பேசி கொண்டு இருந்தோம்.

மழையின் வேகம் அதிகமாக இருந்தது. இருட்ட தொடங்கியது. ஆள் நடமாட்டம் இல்லை என்பதால் சற்று பயம்.

அப்போது அந்த பெரியவர், மீண்டும் எங்கள் முன் வந்தார். அவருடன் மற்றும் ஒருநபர் வந்திருந்தார்.

அவரை பார்த்ததும் எங்களுக்கு சற்று பீதி ஆனது. ‘இவருக்கு என்ன தான் வேண்டும் என்று தெரியவில்லையே. எங்களிடம் உள்ள நகையை பறிக்க பார்கிறாரோ!’ என்ற எண்ணம் மனதிற்குள் வந்தது.

என் மனைவி சுந்தரி கழுத்தில் இருந்த நகையை சேலை முந்தானையை வைத்து மறைத்து கொண்டாள். என் கையை இறுக பற்றிக் கொண்டாள்.

“என்ன தம்பி! மழை விடமாட்டேங்குது. பஞ்சர் கடைகாரனை பார்த்து கையோட கூட்டிட்டு வந்துட்டேன்!” என்று தன்னுடன் வந்த ஒருவரை அறிமுகம் செய்தார் பெரியவர்.

வந்த நபர் என் வண்டியின் பின் சக்கரத்தை கழட்டி கொண்டான். “பஞ்சர் பார்த்து கொண்டு வருகிறேன்!” என்று கூறி மீண்டும் அந்த பெரியவருடன் புறப்பட்டான்.

‘அந்த பெரியவர் நல்லவரா? கெட்டவரா?

அவர் எனக்கு ஏன் உதவி செய்ய வேண்டும்?

அதுவும் இந்த கொட்டும் மழையில். அவருக்கு என்ன லாபம்?

சக்கரத்தை கழட்டி விட்டு சென்றவர்கள் மீண்டும் வருவார்களா?’ என்ற பல கேள்வி எனக்குள் ஓடி கொண்டு இருந்த நேரம் அது.

பதினைந்து நிமிடம் கழித்து, மீண்டும் எங்கள் முன் அந்த பெரியவர் மற்றும் பஞ்சர் கடைக்காரன் வந்தனர்.

சில நிமிட இடைவெளியில், வண்டி சரி செய்து விட்டு, அதற்கான கட்டணம் என்னிடம் பெற்று கொண்டு அந்த பெரியவர் மற்றும் பஞ்சர் கடைக்காரன் அங்கிருந்து புறப்பட்டனர்.

நான் அவர்களுக்கு நன்றி கூறினேன்.

அதனை அந்த பெரியவர் பெரிதாக நினைக்கவில்லை.

“இருக்கட்டும் தம்பி, யாரா இருந்தாலும் இப்படி கஷ்டப்படும் நேரத்தில் உதவி செஞ்சோம்னா, அன்னிக்கு நல்லா தூக்கம் வரும்.

மனசுக்கு கொஞ்சம் இதமாக இருக்கும். என்னா இன்னைக்கு மழை வந்திருச்சு. மழையில் நனைஞ்சு கொஞ்சம் உடம்பும் இதமாக இருக்கு.

உங்கள பார்த்தா என் பிள்ளைகள் மாதிரி இருக்கு. பிள்ளைகளுக்கு ஒருகஷ்டம்னா அப்பா சும்மா விட்ருவேனா! நல்ல படியா வீட்டுக்கு போய்ட்டு வாங்க!” என்று கூறி விட்டு அங்கிருது அந்த பெரியவர் (மீனாட்சி சுந்தரம்) புறப்பட்டார்.

இக்கட்டான நேரத்தில் , எங்களுக்கு இந்த மனித உருவில் வந்து உதவி செய்தார் அழகர் மலையான்.

அந்த பெரியவரை தவறாக நாங்கள் புரிந்து கொண்டதை நினைத்து நானும் என் மனைவி சுந்தரியும் கண் கலங்கினோம்.

மனிதருள் ஒரு தெய்வமாக வந்தார் அந்த மீனாட்சி சுந்தரம்.

மணிராம் கார்த்திக்
மதுரை
கைபேசி: 9842901104

Comments

“தெய்வமாக வந்தவர்!” மீது ஒரு மறுமொழி

  1. […] தெய்வமாக வந்தவர்! நல்ல சகுனம் […]

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.