தெய்வீக இசை என்பது மாமன்னர் அக்பரின் வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி.
தான்சேன் அக்பரின் அரசவையை அலங்கரித்த இசை மேதை ஆவார். அவர் கேட்போரின் மனதை மயக்கும் வகையில் மிகச்சிறப்பாக பாடக் கூடியவர்.
ஒரு நாள் அக்பரின் அவையில் பாடிக் கொண்டிருந்தார்.
தான்சேனின் இசையில் மயங்கிய அக்பர் தான்சேனிடம் “தாங்கள் மிகச்சிறப்பாக பாடுகிறீர்கள். தங்களின் இசையினைக் கேட்கும்போது மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. உங்களின் சிறந்த இந்த இசை ஞானத்திற்கு காரணம் என்ன?” என்று கேட்டார்.
தான்சேனும் “என்னுடைய இசை ஞானத்திற்கு காரணம், எனக்கு இசையைக் கற்றுக் கொடுத்த என்னுடைய குருவே.” என்று கூறினார்.
உடனே அக்பர் “உங்களுடைய குருவை இங்கு அழைத்து வந்து பாடச் சொல்லுங்கள். நான் அவருடைய பாடல்களைக் கேட்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.” என்றார்.
இதனைக் கேட்டதும் தான்சேன் மிகவும் மெல்லிதாகப் புன்னகைத்தார்.
பின்னர் அக்பரிடம் “மன்னர் அவர்களே, என்னுடைய குரு இங்கு அழைத்தால் வர மாட்டார். நாம் வேண்டுமானால் அவரின் இருப்பிடம் சென்று அவருடைய பாடல்களைக் கேட்கலாம்.” என்றார்.
தெய்வீக இசை
மறுநாள் தான்சேனும், அக்பரும் தான்சேனுடைய குருவினைக் காண அவருடைய இருப்பிடத்திற்குச் சென்றனர். அப்போது அவர் கடவுளை நினைத்துப் பாடிக் கொண்டிருந்தார்.
அதனைக் கேட்ட அக்பர் மெய் மறந்து போனார். பின்னர் தான்சேனின் குருவுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு அரண்மனை திரும்பினார்.
மறுநாள் முழுவதும் அக்பரின் மனமானது, தான்சேன் குருவினுடைய பாடலையே நினைத்துக் கொண்டிருந்தது.
‘தன்னுடைய மனம் முழுவதும் ஏன் தான்சேன் குருவினுடைய பாடலை நினைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கான காரணம் என்ன? நாளை தான்சேனிடமே அதனைக் கேட்டுத் தெரிந்து கொள்வோம்’ என்று எண்ணிக் கொண்டார்.
மறுநாள் தான்சேனிடம் “உங்கள் குருவின் இசையை என்னால் மறக்க இயலவில்லை. அவரின் பாடல்களைக் கேட்கும் போது சொர்க்கத்தில் இருப்பது போல் இருக்கிறது.
தங்களின் பாடல் ஆனந்தத்தைக் கொடுக்கிறது என்றால் அவரின் பாடல் பேரானத்தையும், அமைதியையும் கொடுக்கிறது. அதற்கு காரணம் அவர் தங்களின் குரு என்பதாலா?” என்று கேட்டார்.
அதற்கு தான்சேன் “மன்னா, நான் மனிதரான தங்களின் முன்னால் தங்களுக்காகப் பாடுகிறேன். என்னுடைய குருவோ உலகின் மாமன்னரான இறைவனைப் பற்றி இறைவனுக்காகப் பாடுகிறார்.” என்றார்.
தான்சேனின் பதிலைக் கேட்டதும் அக்பர் தான்சேன் குருவின் தெய்வீக இசை இறைவனுக்கானது; எனவே மிக இனிமையானது என்பதை நினைத்து மெய்சிலிர்த்தார்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!