தேங்காய் சட்னி எல்லா இடங்களிலும் பரவலாக பயன்படுத்தக் கூடிய சட்னியாகும்.
இது செய்வதற்கு எளிமையானதும், சுவையானதும் ஆகும்.
இனி தேங்காய் சட்னி செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் – ½ மூடி (மீடியம் சைஸ்)
பொரிகடலை – ஒரு கைபிடி (தோராயமாக இரண்டு குழிக்கரண்டி)
பச்சை மிளகாய் – ஒன்று (மீடியம் சைஸ் உருண்டையானது)
இஞ்சி – சுண்டு விரல் அளவு
வெள்ளைப்பூண்டு – 2 பற்கள் (மீடியம் சைஸ்)
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)
மிளகாய் வற்றல் – 1 எண்ணம்
கறிவேப்பிலை – இரண்டு கீற்று
கடுகு – ½ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் தேங்காயை சிறுசிறு துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை அலசி காம்பினை நீக்கவும்.
முதலில் மிக்ஸியில் தேங்காய் துண்டுகளை போட்டு அடித்துக் கொள்ளவும்.
தேங்காய் பூவுடன் பொரிகடலை, இஞ்சி துண்டுகள், வெள்ளைப் பூண்டு, பச்சை மிளகாய், தேவையான உப்பு, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
பின் அரைத்த கலவையுடன் தேவையான தண்ணீர் சேர்த்து வைக்கவும்.
பின் அடுப்பில் வாணலியை வைத்து நல்ல எண்ணெய் ஊற்றவும்.
நல்ல எண்ணெய் காய்ந்ததும் சதுரமாக நறுக்கிய சின்ன வெங்காயத் துண்டுகள், கறிவேப்பிலை, கடுகு, உளுந்தம் பருப்பு சேர்க்கவும்.
கடுகு வெடித்ததும் தேங்காய் கலவையுடன் தாளிதம் செய்யவும்.
சுவையான தேங்காய் சட்னி தயார்.
இதனை இட்லி, தோசை, சப்பாத்தி, கலவை சாத வகைகளுடன் சேர்த்து உண்ணலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் பச்சை மிளகாய்க்குப் பதில் மிளகாய் வற்றலை சேர்த்து தேங்காய் சட்னி தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் சிறிதளவு மல்லி இலையை தேங்காய்ப்பூவுடன் சேர்த்து அரைக்கலாம்.
–ஜான்சிராணி வேலாயுதம்