தேங்காய் சாதம் செய்வது எப்படி?

தேங்காய் சாதம் எளிமையான முறையில் தயார் செய்யக்கூடிய கலவை சாத வகைகளுள் ஒன்று. பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வபவர்கள் மதிய உணவிற்கு எடுத்துச் செல்லும் சுவையான உணவு வகைகளுள் ஒன்று. எனவே இது ‘லன்ஞ் பாக்ஸ் சாதம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சுவையான தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

அரிசி – 400 கிராம்

தேங்காய் – 1 பெரியது

உப்பு – தேவையான அளவு

தாளிக்கத் தேவையான பொருட்கள்

வத்தல் – 4

நெய் – 4 ஸ்பூன்

கடுகு – 1 ஸ்பூன்

கடலைபருப்பு – 1 ஸ்பூன்

முந்திரிபருப்பு – 15

கருவேப்பிலை – 1 கொத்து

உளுந்தம்பருப்பு – 1 ஸ்பூன்

மல்லி இலை – சிறிதளவு

செய்முறை:-

அரிசியை சாதமாக (உதிரி உதிரியாக இருக்குமாறு) தயார் செய்து கொள்ளவும். வாணலியில் நெய்விட்டு கடுகு, கடலைபருப்பு, உளுந்தம்பருப்பு, முந்திரிபருப்பு,வத்தல், மல்லி இலை,  கருவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

பருப்பு வகைகள் பொன்னிறமானவுடன் தேங்காய் துருவலைச் சேர்க்கவும். நன்கு வதக்கவும், தேங்காய் வதங்கி நல்ல மனம் வரும். மனம் வந்தவுடன் இறக்கி விடவும். பின் உதிரி உதிரியாக உள்ள சாதத்தில் தாளித்த கலவையை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கிளறவும். சுவையான தேங்காய் சாதம் தயார்.

குறிப்பு:-

தேங்காய் சாதம் தயார் செய்வதற்கு தேங்காய் தேர்வு செய்யும் போது நல்ல முற்றிய தேங்காயை தேர்வு செய்யவும்.

விருப்பமுள்ளவர்கள் வத்தலுக்குப் பதில் பச்சை மிளகாய் சேர்த்தும் தயார் செய்யலாம்.

நெய்க்கு பதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தாளிதம் செய்யலாம்.

குக்கரில் சாதம் தயார் செய்பவர்கள் சாதம் உதிரி உதிரியாக வருவதற்கு எப்போதும் வைக்கும் தண்ணீர் அளவை விட சற்று குறைத்து வைத்து சாதம் தயார் செய்யவும்.

தேங்காய் துருவலின் அளவு சாதத்தின் அளவுக்கு சமமாக இருக்குமாறு எடுத்துக்கொண்டால் தேங்காய் சாதம் சுவையாக இருக்கும்.

ஜான்சிராணி வேலாயுதம்.

Comments are closed.