தேங்காய் பால் பணியாரம் செய்வது எப்படி?

தேங்காய் பால் பணியாரம், உளுந்து மற்றும் தேங்காய் பால் கொண்டு செய்யப்படும் அருமையான சிற்றுண்டி ஆகும். இதனுடைய சுவையை எல்லோரும் விரும்புவர்.

விருந்தினர்களின் வருகையின்போதும் இதனை செய்து அசத்தலாம். இனி சுவையான தேங்காய் பால் பணியாரம் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

உளுந்தம் பருப்பு – 250 கிராம்

சர்க்கரை – 100 கிராம்

தேங்காய் – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)

ஏலக்காய் – 3 எண்ணம்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

தேங்காய் பால் பணியாரம் செய்முறை

முதலில் உளுந்தினை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பின் அதனை நன்கு வடித்து விட்டு கிரைண்டரில் தண்ணீரினை தெளித்துக் கொண்டே மையாகவும் கெட்டியாகவும் அரைக்கவும்.

 

கெட்டியாக அரைத்த உளுந்தம் மாவு
கெட்டியாக அரைத்த உளுந்தம் மாவு

 

தேங்காயை உடைத்து துருவி பால் எடுத்துக் கொள்ளவும். சுமார் 5 டம்ளர் அளவு தேங்காய் பால் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

 

தேங்காய் பால்
தேங்காய் பால்

 

ஏலக்காயைத் தட்டி தேங்காய் பாலில் போடவும்.

ச‌ர்க்கரையை தேங்காய் பாலில் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

தேங்காய் பாலினை வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றிக் காய விடவும்.

எண்ணெய் காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள உளுந்த மாவினை சிறுகரண்டியை வைத்து பணியாரங்களாக ஊற்றவும்.

 

பணியாரங்களை ஊற்றும் போது
பணியாரங்களை ஊற்றும் போது

 

பணியாரங்கள் ஒரு புறம் வெந்ததும் திருப்பி விடவும்.

பணியாரங்கள் நன்கு சிவந்து வெந்ததும் வெளியே எடுத்து எண்ணெயை வடிய விடவும்.

 

பணியாரங்கள் வேகும் போது
பணியாரங்கள் வேகும் போது

 

பின் பணியாரங்களை தேங்காய் பாலில் போடவும்.

இவ்வாறாக எல்லா மாவையும் பணியாரங்களாக சுட்டு தேங்காய் பாலில் ஊற விடவும்.

சுவையான தேங்காய் பால் பணியாரம் தயார்.

 

பணியாரங்களை தேங்காய் பாலில் சேர்த்ததும்
பணியாரங்களை தேங்காய் பாலில் சேர்த்ததும்

 

சுவையான தேங்காய் பால் பணியாரம்
சுவையான தேங்காய் பால் பணியாரம்

 

சுமார் ஒரு மணி நேரம் ஊறிய பின் பணியாரங்களை பரிமாறவும்.

இதனை மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு செய்து தரலாம்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் சர்;க்கரைக்குப் பதில் கருப்பட்டியை தேவையான அளவு நன்கு தூளாக்கி தேங்காய் பாலில் சேர்த்து பணியாரங்களைத் தயார் செய்யலாம்.

மாவினை நன்கு கெட்டியாக ஆட்டவும். மாவு கெட்டியாக இல்லாமல் இருந்தால் சிறிதளவு பச்சரிசி மாவினை சேர்த்து பணியாரங்கள் தயார் செய்யலாம்.

மாவினை கரண்டியால் ஊற்றும்போது முதலில் தண்ணீரில் நனைத்து மாவினை எடுத்தால் மாவு கரண்டியில் ஒட்டாமல் வரும்.

– ஜான்சிராணி வேலாயுதம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.