தமிழ்நாட்டில் 5 தேசியப் பூங்காக்கள் உள்ளன. அவற்றின் சிறப்புக்களைப் பற்றிப் பார்ப்போம்.
முதுமலை தேசியப் பூங்கா
முதுமலை தேசியப்பூங்கா தமிழ்நாட்டில் நீலகிரி மலைத்தொடரில் அமைந்துள்ளது. 1940-ல் வனவிலங்குச் சரணாலயமாக 62 சதுர கி.மீ பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 321 சதுர கி.மீ பரப்பளவுப் பகுதி சரணாலயமாக உள்ளது. இதில் 108 சதுர கி.மீ பகுதி தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மலையின் 6000 சதுர கி.மீ பகுதி யுனஸ்கோவினால் உலக பாராம்பரிய தளமாக அறிவிக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் இத்தேசியப்பூங்காவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்பூங்காவினைப் பார்வையிட பிப்ரவரி முதல் மே வரையிலும், செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலும் உள்ள காலம் ஏற்றதாகும்.
இப்பூங்காவில் வங்கப்புலிகள், சிறுத்தைகள், யானைகள், காட்டெருமைகள், லங்கூர் குரங்குகள், சீத்தல் மான்கள், மலபார் அணில்கள், மலைப்பாம்புகள், பறக்கும் ஓணான்கள், காட்டு நாய்கள், சாம்பார் மான்கள், குரைக்கும் மான்கள், 226 வகையான பறவையினங்கள், உயர்ந்த புல்வெளிகள், அடர்ந்த காடுகள், மூங்கில்கள், அழகிய நீரோடைகள் காணப்படுகின்றன.
முக்கூர்த்தி தேசியப் பூங்கா
இப்பூங்கா தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீலகிரி பீடபூமியில் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது வரையாடுகளை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பிரத்யோகமான அமைப்பாகும். இது ஆரம்பத்தில் நீலகிரி தார் தேசியப்பூங்கா என்று அழைக்கப்பட்டது.
இது சுமார் 78.46 சதுர கி.மீ பகுதியினை தனது பரப்பாகக் கொண்டுள்ளது. இப்பூங்காவில் மலைசார் புல்வெளிகளும், குற்றுச் செடிகளும் காணப்படுகின்றன.
இங்குள்ள உயரமான மலைப்பகுதிகளில் மழை மற்றும் காற்றுடன் சூரிய ஒளி ஊடுருவதைப் பார்ப்பது கண்கவரும் நிகழ்ச்சியாகும்.
இப்பூங்கா இந்தியாவில் உள்ள முதல் சர்வதேச பாதுகாக்கப்பட்ட உயிர்கோளப் பகுதியாகும். யுனஸ்கோ அமைப்பு இதனை உலகப் பாராம்பரியத் தளமாக 01.07.2012 அன்று அறிவித்தது.
இங்கு ஆசிய யானைகள், வங்கப்புலிகள், சிறுத்தைகள், நீலகிரி கீரிகள், நீலகிரி லங்கூர்கள், சாம்பார் மான்கள், குரைக்கும் மான்கள், காட்டுப்பூனைகள், காட்டு நாய்கள், கருப்புக்கழுகுகள், மரப்புறாக்கள், மரத்தவளைகள், பலவித வண்ணத்துப்பூச்சிகள் காணப்படுகின்றன.
இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப் பூங்கா
இப்பூங்கா மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆனைமலைப் பகுதியில் அமைந்துள்ளது. ஆனைமலைப் பகுதியானது கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை வட்டங்களில் அமைந்துள்ளது.
இப்பூங்கா டாப்சிலிப் என்றே பொதுவாக அறியப்படுகிறது. 1974-ல் 958 சதுர கி.மீ பரப்பிற்கு இவ்விடம் இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் என்று அறிவிக்கப்பட்டது. பின் இவ்வுய்வகத்தின் 108 சதுர கி.மீ பரப்பானது 1989-ல் தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது.
இப்பகுதியில் இருந்து உருவாகும் ஆறுகள் பரம்பிகுளம், ஆழியார், திருமூர்த்தி, சோலையாறு, அமராவதி ஆகிய அணைகளை நிரப்புகின்றன.
இப்பூங்காவில் வங்கப்புலிகள், இந்திய யானைகள், ஆசியக் காட்டு நாய்கள், வரையாடுகள், சிங்கவால் குரங்குகள், கீரிகள், காட்டெருமை, நீலகிரி லங்கூர்கள், சாம்பார் மான்கள், கரடி, பெரிய அணில்கள், சிறுத்தைகள், எறும்புண்ணிகள், மரங்கொத்திகள், மீன்கொத்திகள், வாத்துக்கள், நாரைகள், கொக்குகள் உள்ளிட 250 வகையான பறவையினங்கள், 315 வகையான வண்ணத்துப்பூச்சிகள், நட்சத்திர ஆமைகள், பறக்கும் பல்லிகள், காட்டு ஓணான்கள், 2000 வகையான தாவர வகைகள் காணப்படுகின்றன.
இப்பூங்காவினைப் பார்வையிட மே முதல் ஜனவரி வரை ஏற்ற காலமாகும்.
கிண்டி தேசியப் பூங்கா
இப்பூங்கா சென்னை நகர்பகுதியினுள் அமைந்துள்ள மிகச்சிறிய பூங்காவாகும். இதன் பரப்பு 2.7 சதுர கிமீ ஆகும். 1978-ல் இவ்விடம் தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது.
இப்பூங்காவில் உலர்ந்த மற்றும் வறண்ட பசுமைக்காடுகளும், புதற்காடுகளும் காணப்படுகின்றன. இப்பூங்காவில் கலை மான்கள், புள்ளிமான்கள், நரி, கீரி உள்ளிட்ட 14 வகையான பாலூட்டிகளும், 60 வகை வண்ணத்துப்பூச்சிகளும், நத்தைகள், நண்டுகள் உள்ளிட்ட ஊர்வன வகையினமும் காணப்படுகின்றன.
இப்பூங்காவினைப் பார்வையிட தினமும் சுமார் 70,000 பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். இப்பூங்காவினைப் பார்வையிட வருடத்தின் எல்லா மாதங்களும் ஏற்றவை.
மன்னார் வளைகுடா கடல்சார் தேசியப்பூங்கா
இப்பூங்கா தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் சுமார் 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இது 21 சிறிய தீவுகளையும், பவளப்பாறைகளையும் கொண்டுள்ளது.
இது தூத்துக்குடியிலிருந்து தனுஷ்கோடி வரை 160 கி.மீ தூரத்திற்கு பரவியுள்ளது. இது 560 சதுர கிமீ பரப்பளவினைக் கொண்டுள்ளது. பல்வேறு வகையான விலங்குகளையும், தாவரங்களையும் கடல்பகுதிகளிலும் மற்றும் கடற்கரை ஓரங்களிலும் கொண்டுள்ளது.
இப்பூங்காவினைப் பார்வையிட பொதுமக்கள் கண்ணாடிப் படகுகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
மிக அருமையான பயனுடைய தகவல்கள். நன்றி