தேடல் – சிறுகதை

அவன் அந்த தெருவின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தான். அங்கும் இங்கும் பார்த்தபடி அவன் கண்கள் எதையோ தேடியபடி இருந்தது. காலை நேரம் என்பதால் போவோர் வருவோர் எனத் தெருவில் கூட்டம் அதிகம் இருந்தது.

ஆளுக்கு ஒருபொழுது எனக் காலம் சிதைந்து கிடப்பதை அவன் கண்கூடாகப் பார்த்தான். அவன் தன் எதிரே வந்த ஒரு ஆளை நிறுத்தி அத்தெருவிலிருந்த ஒரு வீட்டைக் காண்பித்து அந்த வீட்டில் இருக்கும் மனிதர் இப்பொழுது அந்த வீட்டில் இருக்கிறாரா என்று கேட்டான். சிறிது நேரம் கழித்து அவன் அந்த வீட்டிற்குள் நுழைந்தான்.

அவன் அந்த வீட்டில் காத்துக் கொண்டிருந்தான். அவன் வருவான் என்று. அது ஒருபொழுது அல்லது ஒரு நாளின் ஒரு பகுதி. நிச்சயமாகக் கனவு அல்ல. அவன் பெயர் முன்னா.அவனது நம்பிக்கை என்றாவது ஒருநாள் நிறைவேறலாம் அல்லது இன்றுகூட நடக்கலாம். யாரது? யார் வர வேண்டும்? என்று அவன் நினைத்து காத்திருக்கிறானோ, அவனை அவனுக்குத் தெரிந்திருப்பது கூட ஒரு நியமமாகப்படலாம். அப்படி யார் வந்தாலும் அவன் ஒன்றும் சொல்லிவிடமுடியாது. மாறாக அது ஒரு ஆரம்பம் என்றும் கூட அவன் முடிவு செய்யலாம். யாருமே வராத போது எப்படி அவன் காத்திருந்தானோ, அதேபோல் வந்தவர்களிடமும் அவன் நல்லமாதிரியாக நடந்து கொள்வான் என்று நம்பிக்கையுடன் இருந்தான். 
 
சிறிது நேரத்தில் ஏதாவது நடக்கும் என்கிற காலப்பொழுதில் வீட்டின் அழைப்பு மணி அடிக்கும் ஓசை கேட்டது. அவன் மெல்லமாகவும் இல்லாமல், வேகமாகவும் செல்லாமல் ஒரு மயக்க நிலையில் போய் கதவைத் திறந்தான். கதவுக்கு வெளியே தெருவின் பின்புலத்திலே ஒரு மனிதர்  நின்று கொண்டிருந்தார்.

அவர் முன்னா எதிர்பார்த்த ஆள் இல்லை என்றாலும். “யார் நீங்கள்?” என்றான். வந்தவர் ஒரு பெயரைச் சொல்லி அவர் இங்கு இருக்கிறாரா என்றார்.

“அப்படி யாரும் இல்லை, இருந்தாலும் உள்ளே வாருங்கள்.” என்று சொல்லி அவர் உள்ளே வருவதற்கு வழியை விட்டான்.

வந்தவர் வீட்டின் உள்ளே நுழைந்து ஹாலில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார். வந்தவர் பேசத் தொடங்கினார். முன்பு சொன்ன அதே பெயரைச் சொல்லி அவரை தேடி வந்ததாகவும் இத்தெருவை ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை சுற்றி அலைந்து திரிந்த பின்பும் அவரையும் அவர் வீட்டையும் கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் கூறினார். 
 
வந்தவர் வீட்டைச் சுற்றிப் பார்த்தார். வீட்டில் இருக்கும் பொருட்களெல்லாம் முன்பே அவர் பார்த்திருந்தது போல் உணர்ந்தார். இருந்தாலும் இப்பொழுது அவர் வேறு வேலையாய் வந்திருப்பதாக அவர் தன்னை அறிவித்து கொண்டவராக, தான் தேடி வந்த மனிதரைக் கண்டுபிடிப்பதற்கு முன்னா உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.   

முன்னாவிற்கு ஓரளவு புரிந்தது. இருந்தாலும் அவனால் நம்பமுடியவில்லை. “அவர் எப்படியிருப்பார்?” என்று முன்னா கேட்டு வைத்தான்.

வந்தவர் “என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை, ஆனால் அவரை எனக்கு நன்றாகத் தெரியும்” என்றார்.

“நீங்கள் எப்படி அவனைக் கண்டு பிடிக்கப் போகிறீர்கள், மன்னிக்க வேண்டும் நீங்கள் தேடும் நபரை பற்றி நான் மிகவும் உரிமை எடுத்துக் கொள்கிறேன்” என்றான்.

“பரவாயில்லை, நானே அவனைக் கண்டுபிடிக்காத நிலையில் அப்படித்தான் மனதில் அவனை திட்டிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

முன்னா இப்பொழுது தான் கவனித்தான். வந்தவர் ஒல்லியாக இருந்ததோடு மட்டும் அல்லாமல் அவனில் சரிபாதியாக இருந்தார். முன்னாவால் அதெல்லாம் முடியாது. இருந்த இடத்திலிருந்து அவன் மனதால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் அவனால் பயணம் செய்ய முடியும். அவனால் அவ்வளவுதான் முடியும். அதனால் தான் வந்தவர் யார் என்று தெரியாத போதும், அவரும் ஒருவனைத் தேடுகிறார் என்கிற போது, அவரை ஒத்துக்கொள்ளவும் அவரை அழைத்து உட்கார வைக்கவும் அவனால் முடிந்தது. 

“நீங்கள் தேடி வந்த நபரை கண்டுபிடிக்க முடியாவிட்டால் என்ன செய்வீர்கள்?” என்று முன்னா கேட்டான். 

“விடாமல் தேடிக் கொண்டிருப்பேன்” என்றார் அவர்.

“கண்டுபிடித்து விட்டால்?” என்றான் முன்னா.

அவர் சிரித்தார். முன்னாவும் சிரித்தான்.
 
வந்தவர் தான் தேடிவந்ததை விட்டு விட்டு, இங்கு இவர் வீட்டில் வந்து உட்கார்ந்து இருக்கிறோமே? என்று நினைத்தார். அதே சமயம் தான் தேடுவதில் இதுவும் ஒரு முறையே என்று நினைத்தார். இவன் (முன்னா) அப்படி இப்படி என்று விலகிப் போனால், இந்த வீட்டை இண்டு இடுக்கு விடாமல் தேடிப் பார்த்து விடலாம் என்று நினைத்தார். முடிந்தவரை அவர் கண்ணில் படும் தூரம் வரை அந்த வீட்டை அலசி பார்த்தார். அவர் தேடிவந்த ஆள் கிடைக்கவில்லை.

கடைசியாக முன்னாவை பார்த்தார். முன்னா அவரை பார்த்துக் கொண்டிருந்தான்.

இப்பொழுது முன்னா அவருக்கு உதவும் பொருட்டு அலமாரியிலிருந்த புத்தகங்களில், ஒரு புத்தகத்தில் மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு வரைபடத்தைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தான். 

“பிறகென்ன இதில் நானும் நீங்களும் கூட இருக்கப் போகிறோம்”  என்று சொல்லியபடி “நான் புறப்படுகிறேன்” என்று வீட்டை விட்டு வெளியே புறப்பட்டுப் போனார். 

அப்பொழுது முன்னா மௌனமாக அப்படியே நின்றிருந்தான். சிறிது நேரம் மூடப்பட்ட வாசல் கதவை வெறித்துப் பார்த்தபடி இருந்தான். யாரையோ எதிர்பார்த்தபடி இருந்தது அவன் பார்வை. இப்பொழுது எதுவும் பேசாமல் எதையும் செய்யாமல் சும்மா இருக்கவே அவன் விரும்பினான்.அவன் மனம் மட்டும் ஊசலாடிக்கொண்டேயிருந்தது. இது ஒன்று தான் அவனுக்கு வழி. வேறு என்ன இருக்கிறது? கடைசி வரையிலும் என்றும் அவனுடன் இருப்பது அது ஒன்று  தானே.

இப்பொழுது அவன் தனியாளாக அந்த வீட்டிலிருந்தான்.

கடிகாரத்தின் வினாடி முள் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அவன் இங்கும் அங்கும் நடந்தபடி இருந்தான்.

வீட்டின் சுவர்கள் அவனைக் காப்பது போல் ஒரே நிறத்தைக் கொண்டு வலுவுடன் நின்று கொண்டிருந்தன .

அவனுக்கும் அந்த அறையினுள் இருக்கும் மற்ற பொருள்களுக்கும் நிறைய இடைவெளி இருந்தது. அந்த இடைவெளி கனமான தனிமையை அவனுக்கு வழங்கியது.

அவன் காத்திருந்தான். அது ஒன்று தான் அவன் செயலாக இருந்தது. மேலும் அது ஒரு நம்பிக்கையாக வளர்ந்து, இப்பொழுது இருக்கும்  நிலைமை சரியானது தான், இப்படி இருக்கும் பட்சத்தில், அவன் காத்திருப்பது நியாயம் தான் எனத் தோன்றும்படியாக அவன் இருந்தான்.

அவனுக்குத் தெரியும் யாரும் வரப்போவதில்லை என்று. ஆனாலும் அவன் மிகுந்த அர்த்தத்துடன் நடந்து கொண்டான்.

அவனது தனிமையின் சுமையால் அவன் மனதில் கலக்கம் ஏற்பட்டது. அவனைத் தவிர அந்த வீட்டில் யாரும் இல்லை என்பதால் அவனே அந்த வீட்டின் எல்லா இடத்திற்கும் போய் வர வேண்டி இருந்தது. அப்படி அவன் நடந்து கொண்டிருந்த‌போது ஓரளவு அந்த வீட்டில் ஆட்களின் நடமாட்டம் இருப்பது போல் தோன்றியது அவனுக்கு. இப்படித்தான் அவன் தனிமையை அவன் போக்கிக் கொள்ள வேண்டியிருந்தது.

இப்பொழுது அவன் கட்டிலில் போய் படுத்துக் கொண்டான். அதே சமயம் அவனும் அந்த அறையும் தனித் தனியே இருந்தார்கள் என்பதை அவன் பார்த்தான். அவன் ஒரு மூலையிலும் அறை மிகப்பெரிதாக நின்று பார்ப்பது போலவும் தோன்றியது அவனுக்கு.

ஒரு சித்திரத்தில் வரையப்பட்ட அந்த அறையும் அந்த அறையில் இருக்கும் பொருட்களும், அதே சித்திரத்தில் ஒரு ஓரத்தில் அவனது உருவமும் வரையப்பட்டிருந்தது. அது ஒரு ஓவியம் சலனமற்ற ஒரு ஓவியம். ஆனால் அந்த ஓவியத்திலிருந்ததை போல், அதேபோல் அந்த அறையில் அவன் இருக்கவில்லை. 

அவன் சிந்தித்துக் கொண்டிருந்தான். எங்கும் செல்லும் அவன் எண்ணம் அவன் கைவசம் இருந்தது. அதற்கான உத்வேகத்தைப் பெறாத நிலையில் அவன் இருந்ததாலே அவன் சும்மா  இருக்க வேண்டிய நிலையிலிருந்தான்.

நிச்சயமாக அவனுக்கு என்று சில விருப்பங்கள் இருக்கத்தான் செய்தன. அப்படியில்லாமல் இவ்வளவு தூரம் அவன் பயணித்து இருக்க முடியாது. ஒருவனது இயல்பான வாழ்க்கை முறையே அவனது எல்லாவிதமான வாழ்க்கைக்கும் அச்சு என தோன்றியது அவனுக்கு. அதிலிருந்து தான் அவன் கற்றுக் கொள்கிறான் எல்லாவற்றையும் என்பதை அவன் அறிந்திருந்தான்.
 
ஒரு சில நேரத்தில் முன்னாவை நம்ப முடியாமலும் இருந்தது. அவன் நடிக்கிறானோ என்றும் தோன்றியது. அவன் நடித்துத் தான் ஆக வேண்டும். அவனுக்கு வேறு வழியில்லை. அவன் உயிர் வாழ வேண்டும் என்றால் இதையெல்லாம் செய்து தான் தீரவேண்டும்.

அவனது சாமர்த்தியம், எதுவும் யாருக்கும் தெரியக்கூடாது. அதே சமயம் மனிதர்களைப் பற்றிப் புரிந்து கொள்வது என்பது அவனையும் சேர்த்து, அது பைத்தியக்கார தனமாக இருந்தாலும், அவன் அறிந்ததைக் கடந்து போவது தான் என்பது அவனுக்குத் தெரிந்தே இருந்தது.

அவன் சிரிக்கலாம். அது இப்பொழுது நிகழாது. அவன் வாழ்க்கையில் இயல்பான ஒரு மாற்றம் நிகழலாம், அல்லது அவன் நினைத்தது கூட நடக்கலாம். அப்பொழுது அவன் சிரிக்கலாம். அவனது முயற்சிகள் அனைத்தும் அங்கே மடிந்து போக அதற்குப் பிறகு அவனது தோற்றம் மற்றும் சொல் எனும் நிலையில், அவனைத் தெரிந்தவர்களுக்கு மட்டும் “ஏன் இப்படி” என்று சொல்லத் தோன்றலாம். தோன்றாமலும் போகலாம்.

முன்னாவைக் காப்பாற்ற ஓர் ஆள் இருந்தான். அவன் முன்னாவைப் பற்றியும் அவனது நடவடிக்கை மற்றும் அவனது நிலையைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தான். முன்னா தன் இஷ்டப்படி இருப்பதற்கும் அதைப்பற்றிய புரிதலுடன் நடந்து கொள்வதற்கும் முடிந்ததே தவிர, ஆனால் அதைப் பற்றிச் சொல்வதற்கு அவனால் முடியவில்லை. அதற்கு ஒரு ஆள் தேவைப்பட்டான்.

அவன் தான் இப்பொழுது முன்னாவைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறான். முன்னாவின் மனதில் என்னவெல்லாமோ தோன்றியது. காலம் அப்படியே உறைந்திருந்தது அந்த அறையில்.

பொழுது எப்படியும் கை நழுவி போய்க்கொண்டேயிருந்தது. அவன் சிறிது சிறிதாக இந்த அறை மற்றும் வீட்டிலிருந்து வெளியேறத் தொடங்கினான்.  அவன் எண்ணமெல்லாம் இங்கு இல்லாமல் இருப்பதுவே அவனுக்கான விடுதலையாக அவன் நினைத்தான். அவன் வீட்டை விட்டு வெளியே போகலாம் என்று கூட நினைத்தான்.

அதே சமயம் அவன் காத்திருந்ததிற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்றும் நினைத்தான். இந்த நினைப்பே அவனுக்குப் பிரதானமாகத் தோன்றியது. இதில் முக்கியத்துவம் ஏதும் இல்லை. அப்படித் தோன்றுகிறது அவ்வளவு தான்.

ஆனால் இதற்கு அப்பால் அவன் வாழ நினைக்கிற அவனது சொந்த அர்த்தமற்ற வாழ்வு அவனுக்கு பெரும் சவாலாக இருந்தது. அது ஒரு உப்பு சப்பற்ற வாழ்க்கை முறை தான் என்பது  அவனுக்குத் தெரியும்.

ஆனாலும் அதற்கு மற்றவர்களைப் போல் வண்ணம் பூசிக் கொள்ள அவன் விரும்பவில்லை. எந்த துணையும் இன்றி எந்த பொருளும் இன்றி அவனுக்குத் தேவையானது மட்டுமே அவனை உயிர் வாழ வைக்கின்ற கருணை அவனுக்கு போதுமானது என்று அவன் நினைத்தான்.
 
அவனுடன் யாரும் இல்லை. அவன் தனியாக இருந்தான். தன்னை சுற்றி நடப்பதை அவன் நன்கு அறிந்தவனாக, பொய்யான மிகப் பெரிய காரியம் செய்யத் துணிந்தவனாக அவனை அந்த தனிமை ஆக்கியது.

ஒற்றை மரத்தை போலக் காலந்தோறும் அது உதிர்ந்து வளரும் தனிமையுடன் என்றும் இருப்பதாய் அவன் இருந்தான். அவனுக்கு இருக்கும் ஒரே அழகியல் அது தான் என்று அவனுக்குத் தோன்றாமல் இல்லை.

அவன் ஒரு பாடலை பாடுவது போலவும், அது அவனது இருத்தலை வார்த்தை வார்த்தையாக ஏற்ற இறக்கங்களுடன் சொல்வது போலவும் அவன் காதில் விழுந்தது. அந்த பாடலை அவன் கேட்டபடியே இருந்தான்.

அவன் யாரைத் தேடுகிறான் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அவன் என்றும் அவனோடு இருப்பவன் தான். இன்று ஏனோ அவனைக் காணவில்லை; கிடைத்து விடுவான். அப்படிக் கிடைக்கவில்லை என்றாலும் ஒன்றும் செய்வதற்கில்லை.

தற்பொழுது அவன் அவனுக்காகக் காத்திருப்பது ஒன்றுதான் ஒரே வழி. திடீரென்று அவனுக்குள் ஒரு அமைதி தோன்றி மறைந்தது. நிச்சயமாக அவன் தேடுகின்ற மனிதன் எங்கேயோ இருக்கிறான். அவன் எங்கிருந்தோ இவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இருந்தாலும் இப்படி வேறு வேறு மனிதர்களுக்கு மத்தியில் அவன் தேடுகின்ற ஒரு மனிதன் கிடைக்கப் போவதில்லை என்றும் நினைத்தான்.

அவன் தேடுகின்ற மனிதன் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருந்தாலும் அந்த மாற்றத்தை அவன் மறந்து விடவில்லை. எப்படியும் அவனை முதலிலிருந்தே அவன் அறிவான் என்பதாலும் அவன் மாற்றத்தை நன்கு அறிந்தவன் என்பதாலும் அவனை நன்றாக அடையாளம் காணமுடியும் என்று நினைத்தான். ஒருவேளை அது இயல்பாக நடைபெறக் கூடிய விஷயமாகவும் இருக்கலாம்.

இப்பொழுது இந்த வீட்டில் இந்த அறையில் அவன் தனித்திருப்பது கூட அவன் தேடுகின்ற மனிதனின் நடமாடத்தை ஒத்திருப்பதாக அவன் உணர்ந்தான்.

ஒரு முதியவர் அந்திமகாலத்தில் பேசும் பேச்சைப் போல் ஏதோ ஒன்று அவன் காதில் கேட்டது. அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். அறையின் சுவர்களில் மின்விசிறியின் காற்று வீணாகப் பட்டுத் தெரித்துக்கொண்டிருந்தது. தேவையில்லாமல் ஜன்னலின் திரைகள் ஆடி அசைந்துகொண்டிருந்தன.

வெறுப்பின் உச்சத்தில் அவன் உடலின் சுமை தாங்காமலும் அவனது கால்களின் வலியைத் தாங்கமுடியாமலும் அறையின் நடுவிலிருந்த நாற்காலியில் இது தான் கடைசி என்பது போல அமர்ந்தான். 
 
கடைசியில் அவன் தேடிய அவன் விரும்பிய அவன் காத்திருந்த மனிதர் வருவது போல், முன் வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. 

இவன் போய் கதவைத் திறந்தான்.

புஷ்பால ஜெயக்குமார்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.