மனநிறைவு என்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்று. முத்தையா எவ்வாறு மனநிறைவு கொண்டார் என்பதை தேடி வந்த தெய்வம் என்ற இக்கதை மூலம் அறிந்து கொள்ளுங்கள்.
கந்தசஷ்டிக்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. முத்தையனுடைய அலுவலக நண்பர் குமரனின் திருமணம் திருச்செந்தூரில் நடப்பதாக இருந்தது.
திருச்செந்தூருக்கு குடும்பத்தினரோடு சென்று, செந்திலாண்டவனை கண்குளிர வழிபட வேண்டும் என்பது முத்தையாவினுடைய நீண்ட நாள் ஆசை.
குமரன் முத்தையனின் நெருங்கிய நண்பனாதலால், நண்பரின் திருமணத்தில் குடும்பத்தோடு பங்கேற்று முருகனையும் தரிசிக்க முத்தையா திட்டம் இட்டார். மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளான வாணி, ராணியுடன் திருச்செந்தூருக்குச் சென்றார்.
நண்பரின் திருமணத்திற்குச் சென்று மணமக்களை வாழ்த்தி விருந்து உண்டபின், திருச்செந்தூரானை வழிபட திருக்கோவிலை நோக்கி குடும்பத்தினரோடு சென்றார் முத்தையா.
‘குழந்தைகளோடு கடலில் காலை அலசிவிட்டு திருகோவிலுக்குள் செல்லலாம்’ என்றெண்ணியபடி கடற்கரை அடைந்தார்.
கடலினைப் பார்த்ததும் குழந்தைகள் உற்சாகத்தில் துள்ளினர். குழந்தைகளோடு சிறிது நேரம் கடலலையில் கால்களை நனைத்துவிட்டு, முருகனை தரிசிக்கக் குடும்பத்தினர் கோவில் வளாகத்திற்கு வந்தனர்.
அங்கே தர்ம தரிசனம், 20 ரூபாய், 100 ரூபாய், 250 ரூபாய் டிக்கட் என்று தனித்தனி வரிசை நின்றிருந்தது. எல்லா இடங்களிலும் மக்களின் தலைகள் முந்திரிக் கொத்துகளாக கொய்யென இருந்தன.
குழந்தைகள் கூட்டத்தைப் பார்த்ததும் கோவிலுக்குள் செல்ல வேண்டாம் என்று கூறினர்.
‘என்னடா, செந்திலாண்டவனைப் பார்க்க வேண்டும் என்று கோவிலுக்கு வந்தால், கூட்டம் அதிகமாக இருப்பதோடு, குழந்தைகளும் கூட்டத்தைப் பார்த்து பயந்து கோவிலுக்குள் வரமறுக்கின்றனர். கடவுளே, உன்னை கண்டு ஆசியைப் பெற இயலாதோ’ என்று மனத்திற்குள் குமைந்தார் முத்தையா.
அப்போது கோவிலின் மணியடியில் இருந்த உற்சவரை தரிசிக்க மக்கள் விரைந்து கொண்டிருந்தனர்.
கூட்டத்தைவிட்டு சற்று தூரத்தில் நின்றபடி தூணின் உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்த செந்திலாண்டவனை குழந்தைகளுக்கு காண்பித்து வணங்கச் சொன்னார் முத்தையா.
உடனே குழந்தைகள் இருவரும் உரத்த குரலில்
“பச்சை மயில் வாகனே, சிவபாலசுப்பிரணியனே வா,
இச்சை எல்லாம் உன்மேலே வைத்தேன்.
எள்ளளவும் பயமில்லையே” என்று பாடத் தொடங்கினர்.
குழந்தைகளின் பாடல் உள்ளத்தை உருக்குவதாக இருந்தது.
‘இவ்வளவு தூரம் வந்தும் முருகனின் கடைக்கண் பார்வை கிடைக்கவில்லையே’ என்ற ஏக்கம் மனதிற்குள் தொடர்ந்தது.
குழந்தை வாணியை கையில் பிடித்தவாறே முத்தையா அங்கிருந்து கிளம்பினார்.
தங்கத்தேர் வளாகத்திற்கு அருகில் செல்லும்போது வாணி முத்தையாவின் கையிலிருந்து தன்பிடியை விடுவித்து ஓடமுற்பட்டாள்.
குழந்தையைப் பிடிக்க திரும்பிய முத்தையாவின் நெற்றியில் கண் இமைக்கும் நேரத்தில் காவடி ஏந்திய ஒருவர் திருநீற்றினை முருகனின் நாமத்தை சொல்லியவாறே இட்டார்.
முத்தையாவுக்கு முருகனே நேரில் வந்து வாழ்த்தியது போல் இருந்தது.
முத்தையாவின் குழந்தைகளும், மனைவிக்கும் காவடி தூக்கியவர் முருகனின் நாமத்தை சொல்லியபடி திருநீற்றினை இட்டார்.
குழந்தைகள் காவடியைக் கண்டதும் “பச்சை மயில் வாகனனே… சிவபாலசுப்பிரமணியனே வா…” என்று பாடத் தொடங்கினர்.
முத்தையாவும் செந்திலாண்டவன் தன்னை தேடி வந்து ஆசிவழங்கியதாக மனநிறைவு பெற்றார்.
தேடி வந்த தெய்வம் என்று செந்திலாண்டவனை எண்ணியவாறே உள்ளுக்குள் கரையத் தொடங்கினார் முத்தையா.