ஒவ்வோரு ஆண்டும் மே மாதம் 20ம் நாள் உலக தேனீக்கள் நாள் என்று ஐக்கிய நாடுகள் அவையால் (United Nations) அங்கீகரிக்கப்பட்டு உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
https://www.un.org/en/observances/bee-day
எதற்காகத் தேனீக்களுக்கு இத்தனை சிறப்பு?
வாருங்கள் அறிந்து கொள்வோம்.
இலக்கியத்தில் தேன்
தேன் – நினைத்தாலே இனிக்கிறது!
‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்று தமிழ் நாட்டின் மேன்மையையும் தமிழ் மொழியின் இனிமையையும் தேனுக்கு ஒப்பிட்டான் பாரதி.
வான் கலந்த மாணிக்கவாசக, நின் வாசகத்தை
யான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே
என்று இராமலிங்க அடிகளார் திருவாசகத்தின் இனிமையை தேன் சுவையோடு ஒப்பிட்டார்.
சிலப்பதிகார நாயகன் கோவலனோ புதிதாய் திருமணம் செய்து கொண்ட தன் மனைவி கண்ணகியை
‘மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! காசறு விரையே! கரும்பே! தேனே!’ எனப் புகழ்ந்தான்.
ஆழ்வார்களும், நாயன்மார்களும் தேவார, திருவாசக, திவ்வியப் பிரபந்தப் பாசுரங்கள் பலவற்றில் இறைவன் தம் மேல் கொண்ட அன்பும் தாம் இறைவன் மேல் காட்டும் பத்தியும் தேன் சுவை ஒக்கும் என்பர்.
தனித்தனி முக்கனி பிழிந்து வடித்தொன்றாய்க் கூட்டிச்
சர்க்கரையும் கற்கண்டின் பொடியுமிகக்கலந்தே
தனித்த நறுந் தேன்பெய்து பசும்பாலுந் தெங்கின்
தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும்விரவி
இனித்த நறுநெய்யளைந்தே இளஞ்சுட்டினிறக்கி
எடுத்த சுவைக்கட்டியினும் இனித்திடும் தெள்ளமுதே
என்று தேன் சுவையையும் கலந்து திருநாவுக்கரசர் சிவபெருமானைப் போற்றிப் பாடினார்.
திரைப்படத்தில் தேன்
திரைப்படப் பாடல்களிலும் தேனுக்குப் பஞ்சமில்லை.
‘தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே’ என்றும்,
‘தேன் கிண்ணம் தேன் கிண்ணம் பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம்’ என்றும்,
‘தேனுண்ணும் வண்டு மாமலரைக் கண்டு திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு பூங்கொடியே நீ சொல்லுவாய்’ என்றும்
காதலர்கள் ஒருவரை ஒருவர் தித்திக்கும் தேன் ஒழுகும் வார்த்தைகளால் வர்ணித்துக் கொள்ளும் திரைப் பாடல்கள் எத்தனை எத்தனையோ.
கண்ணதாசனோ இன்னும் மேலே ஒரு படி போய்
‘பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன், அன்று உனைத்தேன் என நான் நினைத்தேன், அந்த மலைத்தேன் இவரென மலைத்தேன்’ என்று ஒரு முழுப் பாடலையும் தேனிலே தோய்த்து எழுதினார்.
இவ்வாறு பலவாறாக இலக்கியங்களிலும், திரைப் படங்களிலும் மற்றும் பல கவிதைகளிலும் புகழப்பட்டதும் நம் உணவிலும் மருத்துவத்திலும் இன்றியமையாத பங்கு வகிக்கும் தேனை பூக்களிலிருந்து சேகரித்து நமக்கு அளிக்கும் தேனீக்களுக்கு என்றென்றும் நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டவர்கள் அன்றோ?
மருத்துவத்தில் தேன்
தேனில் உள்ள மருத்துவ குணங்களால் பண்டைக் காலம் தொட்டே சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற நம் பாரம்பரிய மருத்துவ முறைகளில் தேன் ஒரு முக்கியப் பங்கு வகித்து வருகிறது.
அது போலவே கசப்பான மருந்துகளைக் கண்டு முகம் சுளிப்போர்க்கு அம்மருந்தை தேனில் குழைத்துத் தருவதுமுண்டு.
குழந்தைகள் நாவில் தேன் தடவினால் சிறு வயதிலேயே நன்கு பேசும் திறனைப் பெறுவார்கள் என்று பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு தேனை தினம் சிறிது ஊட்டுவதுண்டு.
குளுக்கோஸ், ப்ரக்டோஸ் என்னும் சர்க்கரைகள் அதிக அளவில் இருந்தாலும் தேனில் சில நுண்ணூட்டச் சத்துக்கள் கணிசமாக இருப்பதால் தினமும் சிறிய அளவில் தேன் சாப்பிடுவது உடல் நலத்துக்கு நல்லது என பரிந்துரைக்கப் படுகிறது.
சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றிலிருந்து நம் மூதாதையர் அன்றாட உணவில் தேனும் தினைமாவும் இன்றியமையாதிருந்ததாக அறிகிறோம்.
தேனிலும் மலைத்தேன், கொம்புத்தேன் என்று பல வகைகள் உண்டு. ஒவ்வொரு தேனுக்கும் ஒரு தனிச் சுவையும் சிறப்புத் தன்மையும் உண்டு.
உணவளிக்கும் தேனீக்கள்
பூக்களின் மகரந்த சேர்க்கையில் தேனீக்கள் ஆற்றும் அத்தியாவசியப் பங்கை நாம் அனைவரும் அறிவோம்.
தேனீக்கள் இல்லையென்றால் இன்று நமக்குக் கிடைக்கும் பல விதமான தானியங்களும், காய்கறிகளும், கனி கிழங்கு வகைகளும் கிடைக்க வாய்பில்லை.
அது போலவே, நாம் வளர்க்கும் பசு, எருது, ஆடு, குதிரை போன்ற கால்நடைகளின் தீவனமாகவும் காட்டில் வாழும் மான், யானை, காண்டாமிருகம் போன்ற தாவரங்களை மட்டுமே உண்டு வாழும் பல விலங்குகளுக்கு உணவாகவும் பயன்படும் பல்வேறு தாவர வகைகளின் இனப்பெருக்கத்திற்கும் தேனீக்கள் பேருதவி செய்கின்றன.
இது மட்டுமல்ல. பல வகையான தாவரப் பரிணாம வளர்ச்சியிலும் மாற்றங்களிலும் (evolution and origin of species) தேனீக்களின் பங்கு மகத்தானது.
இவ்வுலகில் ஆயிரக்கணக்கான தாவர வகைகள் தம் இனப்பெருக்கத்திற்கு தேனீக்களையே முழுவதும் நம்பி இருக்கின்றன.
இவ்வகைத் தாவரங்களின் பூக்களின் அமைப்பு தேனீக்களுக்காகவே வடிவமைக்கப் பட்டது போல் தோன்றும். இத்தாவரங்கள் தம் பூக்களில் (நெக்டர்) தேனை சுரப்பது தேனீக்களைக் கவர்வதற்கே.
தேனீக்கள் இல்லையென்றால் இத்தாவரங்கள் இனப்பெருக்கம் செய்ய வழியின்றி அழிந்து விடும்.
இதன் காரணமாகவே இன்று பல வணிக அளவில் பயிரிடப்படும் பழ, காய்கறித் தோட்டங்களில் செயற்கை முறையில் தேன் கூடுகளையும் தேனீக்களையும் வளர்க்கிறார்கள்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் தேனுக்கு தேனும் ஆயிற்று, தேனீக்களால் தோட்டத்தில் பழத்துக்குப் பழமும் ஆயிற்று.
வாழ்வியலில் தேனீக்கள்
நேரடியாக மட்டுமில்லாமல் தேனீக்கள் மறைமுகமாகவும் நமக்கு பல வழிகளில் உதவி செய்கின்றன.
தேனீக்கள் போன்று சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று பிள்ளைகளை ஊக்கப் படுத்துகிறோம்.
தேனீக்கள் போல குடும்பத்திலும் சமுதாயத்திலும் ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்று தேனீக்களை சான்றாக எடுத்துக் கொள்வோம்.
சிறு சேமிப்பின் மேன்மையை உணர்த்த தேனீ போல சிறுகச் சிறுக சேமிக்கும் பழக்கத்தை சிறுவர்களுக்கு அறிவுறுத்துவோம்.
இதே போன்றே ஒரு நாட்டின் வளமையையும் செழுமையையும் சொல்லும்போது பாலும் தேனும் பெருகி ஓடுகிறது என்று வர்ணிப்போம்.
நம் பணத்தையோ பொருளையோ நம்பி ஒப்படைத்த ஒருவர் அதில் கொஞ்சம் களவாடல் செய்துவிட்டால், தேனை வழித்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா என்று அங்கலாய்த்துக் கொள்வதுமுண்டு.
தேனீக்களின் சுறு சுறுப்பைப் பற்றி சொல்லத் தேவையில்லை. ஓய்வில்லாமல் காலை முதல் மாலை வரை பல நூற்றுக்கணக்கான மலர்களை நாடிப் பறந்து சென்று தேனை உறிஞ்சி, கூட்டுக்கு கொண்டு சென்று, நேர்த்தியாக மெழுகு போன்ற ஒரு வகைப் பொருளால் கட்டப்பட்ட தேன்கூட்டு அறைகளில் சேமிக்கும் அழகை வியக்காமல் இருக்க முடியாது.
அறிவியலில் தேனீக்கள்
நம் அன்றாட வாழ்வில் மட்டுமல்லாமல் அறிவியலிலும் தேனீக்கள் பலவாறாக பயன்படுகின்றன.
தேனீக்கள், தட்டான், கொசு, ஈக்கள் போன்ற சிறிய வகைப் பூச்சியினங்கள் மிக வேகமாகவும் அதே சமயம் வெகு லாவகமாகவும் முன்னும், பின்னும், மேலும், கீழும் இமைப் பொழுதினும் மிகக் குறைந்த நேரத்தில் தங்களுடைய பறக்கும் வேகத்தையும், உயரத்தையும், திசையையும் மாற்றிக் கொள்ளும் ஆற்றல் படைத்தவை.
இது போன்ற ஆற்றல் தேனீக்கள் போன்ற பூச்சிகளுக்கு எப்படி சாத்தியமாகிறது என்று அறிவியல் அறிஞர்கள் ஆராய்ந்து இது போன்ற ஆற்றலை தொழில் நுட்பம் வாயிலாக ட்ரோன்கள் எனப்படும் சிறிய வகை பறக்கும் எந்திரங்களில் புகுத்தி வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தேனீக்களின் சுறுசுறுப்பைப் பற்றி சொல்லத் தேவையில்லை. ஓய்வில்லாமல் காலை முதல் மாலை வரை பல நூற்றுக்கணக்கான மலர்களை நாடிப் பறந்து சென்று தேனை உறிஞ்சி, கூட்டுக்கு கொண்டு சென்று, நேர்த்தியாக மெழுகு போன்ற ஒரு வகைப் பொருளால் கட்டப்பட்ட தேன்கூட்டு அறைகளில் சேமிக்கும் அழகை வியக்காமல் இருக்க முடியாது.
நாம் பொதுவாக பூவில் சுரக்கும் இனிய திரவத்தை தேன் என்று சொன்னாலும் அறிவியல் ரீதியாக இதை நெக்டர் (nector, அமிழ்தம்) என்று குறிப்பிடுகிறார்கள்.
தேனீக்கள் இதைப் பூக்களிலிருந்து உறிஞ்சி தம் உடலில் உற்பத்தியாகும் என்சைம்கள் எனப்படும் கிரியா ஊக்கிகளால் தம் வாயில் பதப்படுத்தி, நீரை நீக்கிப் பின் உமிழ்ந்து தேனடைகளில் சேமிக்கும் திரவமே அறிவியல் அடிப்படையில் ‘தேன்’ என்று அழைக்கப்படுகிறது.
தேனீக்களால் பதப்படுத்தப்படுவதாலேயே தேன் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கிறது.
தேனீக்கள் மற்ற தேனீக்களுடன் தொடர்பு கொள்ள உபயோகிக்கும் வழி முறைகளும் வியப்பிற்குரியன.
ரீங்கார ஒலி, நடனம், ஒன்றோடொன்று உரசிக் கொள்ளுதல், வேதிக் குறியீடுகள் (chemical indicators) போன்ற பல வழிகளில் தான் கண்டு பிடித்த மலர்கள் எந்தப் பக்கம் இருக்கிறது எவ்வளவு தொலைவில் உள்ளது என்பன போன்ற தகவல்களை பரிமாறிக் கொள்ளும் ஆற்றல் படைத்தன.
தேனீக்களின் ஒற்றுமை
தன்னலமற்ற உயரிய பண்புக்கு எறும்புகளையும் தேனீக்களையும் சான்றாக எடுத்துக் காட்டுவோம்.
கூட்டுக் குடும்பமாக வாழும் ஒரு தேன்கூட்டில் பல்லாயிரக்கணக்கான தேனீக்கள் ஒருங்கிணைந்து வாழ்கின்றன. இவைகளுக்குள் எவ்வித சண்டை சச்சரவோ, பிணக்கமோ இல்லை.
எல்லாத் தேனீக்களும் எல்லா வேலைகளையும் செய்வதில்லை. கார் உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையில் பல்வேறு தொழிலாளர்கள் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு முடிவில் ஓட்டுவதற்குத் தயாரான காரை எப்படி உருவாக்குகிறார்களோ அது போன்றே ஒவ்வொரு வேலையையும் செய்ய ஒரு தேனீக்கள் குழு உண்டு.
இராணித் தேனீக்கு சேவகம் செய்யவென்று சில தேனீக்கள், இராணித் தேனீ இடும் முட்டைகளையும், பொரிந்த பின் வெளி வரும் குஞ்சுகளையும் வளர்க்கவென்று பல தேனீக்கள், தேன் கூடுகளைக் கட்டுவதற்கென்றும் பராமரிப்பதற்கென்றும் பல தேனீக்கள், வெளியே பறந்து சென்று தேனை சேகரித்து வரும் தேனீக்கள், எதிரிகளிடமிருந்து தம் கூட்டையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் தேனீக்கள் என்று பல்வேறு வேலைகளை சிறப்பீடு (specialisation) முறையில் பகிர்ந்து கொண்டு செயல்படுகின்றன.
இவ்வாறு எறும்பு தேனீ போன்ற உயிரினங்கள் தங்கள் தனித்துவம் விடுத்து ஒற்றுமையாக ஒருங்கிணைந்து தன்னலம் இன்றி ஒரு குடும்பமாக செயல்படுவதை அறிவியல் அறிஞர்கள் மேன்மைசார் உயிரினம் (Super organism) என்று குறிப்பிடுவர்.
தேனீக்களின் எதிர்காலம்
இன்று உலகில் 20000 வகைத் தேனீக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக பூமியில் வாழும் தேனீக்கள் இன்றைய நவீன உலகில் பல விதமான சவால்களை எதிர்கொண்டுள்ளன.
பூமி வெப்பமயமாதல், வானிலை மாற்றம், திடீர் பருவக் கோளாறுகள், காற்றில் அதிகரித்து வரும் மாசு, விளை நிலங்களில் அதிக அளவில் செயற்கை உரங்கள், பூச்சி கொல்லிகள் உபயோகித்தல், காடுகளை அழித்தல், மரபணு மாற்றப்பட்ட தாவரங்களை பயிரிடுதல், புதிய வகை நோய்கள் போன்ற பல்வேறு காரணங்களால் தேனீக்களின் எண்ணிக்கையும், தேனீ வகைகளின் பன்முகத் தன்மையும் (diversity) குறையும் அபாயமுள்ளது.
தேனீக்களைப் போற்றுவோம்
தேனீக்கள் குறைந்தால் அது மனித இனத்திற்கும், இயற்கைக்கும் ஒரு பேரிழப்பாகும். சுருங்கக் கூறின் நம் எதிர்காலம் கணிசமான அளவு தேனீக்களின் கையில் (அல்லது வாயில்) இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
தேனீக்களைப் போற்றுவோம்;
தேனீக்களைப் பாதுகாப்போம்;
தேனீக்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவோம்.
நாம் சிறு வயதில் படித்த ஒரு விடுகதை:
ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்ட
ஒருவன் கண் பட்டு உடைந்ததாம் மண்டபம்,
அது என்ன?
விடை: தேன் கூடு
நக்கசேலம் சிட்னி ஜெயச்சந்திரன்