தேர்தல் திருவிழா தமிழ்நாட்டில் ஆரம்பமாக உள்ளது. ஒவ்வொரு முறையும், கடந்த முறை நடைபெற்றதைவிட அதிக சிறப்புடன் நடைபெறுவது, தேர்தல் திருவிழாவின் வழக்கம்.
எனவே இந்த முறையும், இதுவரை தமிழக வரலாற்றிலே நாம் கண்டிராத வகையில், மிகச்சிறப்பாகத் தேர்தல் திருவிழா அமையப் போவது உறுதி.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல; எல்லா மாநிலங்களிலும் தேர்தல் என்றாலே திருவிழாதான். ஆனால் தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலம் அல்லவா? எனவே இங்கு தேர்தல் திருவிழா கொண்டாட்டம் சற்று தூக்கலாகவே இருக்கும்.
இந்தமுறை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே, எல்லோரும் தேர்தல் வேலைகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆள்பவர்கள், ஆண்டவர்கள் மற்றும் புதிதாய் ஆள விரும்புபவர்கள் எல்லோரும் சுறுசுறுப்புடன் களம் இறங்கி விட்டார்கள்.
கட்சிக்காரர்கள் தங்களுக்குள்ளே கூட்டம் நடத்துகிறார்கள்; தங்கள் பெருமைகளைக் கொட்டம் அடிக்கிறார்கள்; தமிழகத்திற்கான கனவுத் திட்டங்களைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
தமிழனின் காதுகளில் தேன் கொட்டுகிறது.
எப்படி வியூகம் அமைப்பது என எல்லாக் கட்சிகளும் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். யார் யாருடன் கூட்டணி என்பது தெளிவாக இல்லை.
அதிகபட்ச லாபம் பார்ப்பது எப்படி? என எல்லாக் கட்சிகளும் கணக்கு போட்டுக் கொண்டிருக்கின்றன.
கட்சிகளின் அணிவகுப்பு
தமிழகத்தின் பெரிய கட்சிகளை, நீண்ட காலமாக கட்டுக் கோப்புடன் வழி நடத்திய தலைவர்கள் இப்போது நம்மிடையே இல்லை. அவர்களின் மறைவால் உருவான வெற்றிடம் இந்தத் தேர்தலை மிகவும் சுவராஸ்யமாக்கி உள்ளது.
தொடர்ந்து மூன்றாவது முறையும் ஆட்சியைப் பிடித்து, ‘ஹாட்ரிக்’ அடித்துவிட வேண்டுமென ஆளுங்கட்சியினர் அதிக முனைப்புடன் செயல்படுகின்றனர்.
இரண்டு முறை கோட்டை விட்டு விட்டோம்; இந்த முறை எப்படியும் கோட்டையைப் பிடித்தே தீருவோம் என எதிர்க்கட்சியினர் சீறிப் பாய்ந்த வண்ணம் உள்ளனர்.
சிஸ்டம் சரியில்ல; மாத்தணும்; எல்லாத்தையும் மாத்தணும். இப்போ இல்லைனா எப்பவும் இல்லை என்று, புதிய பந்தயக் குதிரையாகத் துள்ளி வருகிறார் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார்.
இந்த உறவு நேற்று வந்ததல்ல; என் பால்ய வயதிலேயே மக்கள் திலகத்தின் பாசம் என் மேல் இருந்தது. எனவே எனக்கே அதிக உரிமை என முழங்குகிறார் உலக நாயகன்.
நாங்கள் இருக்கும் கூட்டணியே வெற்றிக் கூட்டணி என மார்தட்டியது பழைய காங்கிரஸ். பல மாநிலங்களில் வாங்கிய பலத்த அடியால், எப்படியாவது கூட்டணியில் ஒட்டிக் கொள்ள வேண்டுமென பரிதவிப்பது புதிய காங்கிரஸ்.
பாரதம் முழவதும் வெற்றிக் கொடி கட்ட விரும்பி, தமிழ்நாட்டிலும் தடம் பதிக்கப் பகீரத முயற்சிகளை எடுத்து வருகிறது பாஜக.
தனித்து இயங்கும் திறமையை இழந்துவிட்டுத் தத்தளிக்கின்றன கம்யூனிஸ்ட் கட்சிகள்.
எப்போதும் உரிமைப் பிரச்சினைகளை எழுப்பும் பாமக, கடந்த முறை தனித்துக் களம் கண்ட சோர்வில் உள்ளது.
தமிழக அரசியலில் வேகமாக வளர்ச்சி கண்ட தேமுதிக, வேகமாக வீழ்ச்சியையும் சந்தித்துத் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
ஆர்ப்பாட்டம், ஆரவாரம் இல்லாமல் அமைதியாக இருக்கிறது அமமுக.
நரம்பு புடைக்க உரிமைக் குரல் எழுப்பும் நாம் தமிழர் கட்சியும், சற்று அமைதியாய் இருப்பதாகவே தோன்றுகிறது.
பம்பரமாய்ச் சுற்றாமல் பதுங்கிய புலியாய் இருக்கிறது மதிமுக.
அதிரடிக் கருத்துக்களும் அதிகமான விமர்சனங்களுமாய் வேகம் காட்டுகிறது விசிக.
விறுவிறுப்பாய் செயல்படுகிறது புதிய தமிழகம்.
நாட்டாமைக்கு கொரோனா என்பதால் சத்தமில்லாமல் இருக்கின்றது அஇசமக.
நான் சொல்லாமல் விட்ட கட்சிகள் என்னை மன்னிக்கட்டும். அவர்களும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் தமிழகத் தேர்தல் திருவிழா சிறக்க உத்வேகத்துடன் கிளம்பியிருக்கிறார்கள் என்று நம்புவோம்.
தமிழகத் தேர்தல் திருவிழா எப்படி நடைபெறுகிறது என விளக்க முயற்சி செய்கிறது இந்தக் கட்டுரை. நான் சொல்வதை விட உங்களுக்கு அதிக விபரங்கள் தெரிந்தால், கட்டுரைக்குக் கீழே உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
தேர்தல் களப்பணி
அலங்காரமாய் அணி வகுத்து நிற்கின்றன அரசியல் கட்சிகள். அதிகாரத்தை அடைவதற்கான போர் ஆரம்பமாக உள்ளது.
தேர்தல் முடிகின்ற வரையில் இனி தொண்டர்களுக்குக் கொண்டாட்டம்தான். தலைவர்கள் எல்லோரும் தொண்டர்களைத் தேடி வருவார்கள். அவர்களுக்கு பிரியாணி, குவாட்டர் எல்லாம் வாங்கித் தருவார்கள்.
ஒரு சில தலைவர்கள் தொண்டர்களுக்கு இருசக்கர வாகனங்கள்கூட வாங்கிக் கொடுப்பது உண்டு. தொண்டர்கள் காட்டில் அடிக்கடி பணமழை பெய்யும்.
தேர்தல் திருவிழாவின் நாயகர்களாகிய பொது மக்களுக்கும் கொண்டாட்டம்தான்.
ஓடிப் போனவர்கள் தங்கள் வீட்டை மறந்து இருப்பதைப் போல், தங்கள் தொகுதிகளை மறந்து வாழ்ந்த தலைவர்களெல்லாம் பின்னங்கால் பிடதியில் பட அவசர அவசரமாய் தொகுதிக்கு ஓடி வருவார்கள்.
தொகுதிக்கு உழைத்திருக்க வேண்டிய வருடங்களை எல்லாம் வீணாக்கிவிட்டு, இப்போது வந்து உறவு கொண்டாடுவார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர்களும் காது குத்து விழா முதற்கொண்டு எல்லாவற்றிலும் தலையைக் காட்டி பாசத்தை வளர்ப்பார்கள்.
பலநாள் முயன்றும் பார்க்க அனுமதிக்காதவர்கள், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் என சத்தியம் செய்வார்கள்.
அம்மா என்பார்கள், அய்யா என்பார்கள், அன்பை டன் கணக்கில் அள்ளித் தெளிப்பார்கள். கும்பிட்ட கையோடு பவனி வருவார்கள். சிறியவர், பெரியவர் என அனைவருக்கும் வணக்கம் செய்வார்கள்.
முகத்தில் சிரிப்பை சிந்தியபடி வருவார்கள். கோவில்களுக்கு நன்கொடை அள்ளி தருவார்கள். ஆரத்தி எடுத்தால் அன்பாய் கவனிப்பார்கள். பொதுக்கூட்டம் போனால் பார்த்து பார்த்து கவனிப்பார்கள்.
சாதாரண நாட்களில் மனதில் மறைந்திருக்கும் சாதி ,தேர்தல் வந்ததும் முழுநிலவாய் வெளி வரும். ‘நல்லவன் நான்’ ‘எனக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்று வேட்பாளர் ஓட்டுக் கேட்பதில்லை. ‘உன்னவன் நான்’ ‘எனக்கே உன் ஓட்டு’ என்று உரிமையாய் கேட்கிறார்கள்.
வனத்தில் திரிந்தாலும் இனத்தில் அடைவது தானே நம் மரபு. எனவே நாமும் என்னவனே நீயே என் தலைவன் என சிந்து பாடுகிறோம்.
அதிகாரத்தை அடைவதற்கான போர் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது.
நாம் எதற்கு அடிமை?
தேர்தல் நாள் நெருங்க நெருங்க திருவிழா உச்சமடைகிறது. கொள்கையை, அன்பை, சாதியைத் தூண்டிலாய் வீசினாலும் ஓட்டு மீன் பிடிபடவில்லை என்பதைத் தலைவர்கள் புரிந்து கொள்ளும் நேரம் இது.
நாம் எதற்கு அடிமை என்று நமது தலைவர்களுக்கு தெரியாதா என்ன? அப்படித் தெரியாமல் இருந்தால் அவர்களால் தலைவர்களாக இருக்க முடியுமா?
தமிழன் பணத்திற்கு அடிமை; இலவசத்திற்கு அடிமை. கோடிக்கணக்கில் வீட்டில் பணமிருந்தாலும் நூறு ரூபாய் இலவசமாய் தருகிறார்கள் என்றால் இரண்டு வேளை சாப்பிடாமல் பட்டினி கிடந்து அதனை வாங்குபவன்தான் தமிழன்.
அதனால்தான் தேர்தலுக்கு முந்தைய நாளே வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். பணம் வைத்திருக்கும் வேட்பாளர்கள் அள்ளிக் கொடுப்பார்கள். ஓட்டுப் போடும் வாக்காளர்கள் ஓடி ஓடி வாங்குவார்கள்.
ஓட்டுக்குப் பணம் கொடுப்பது தவறு என்று தேர்தல் ஆணையம் சொல்லும். பணம் கொடுப்பவருக்கும் லாபம். பணம் பெறுபவருக்கும் லாபம். இதில் எங்கே தப்பு இருக்கிறது? இதுதான் நமது பொதுப்புத்தி.
தாகம் அதிகம் கொண்ட குடிமகன்களை, வித விதமான மதுபானம் வாங்கிக் கொடுத்துக் கவனிப்பார்கள்.
தேர்தல் நாள்
தேர்தல் நாள் அன்று எல்லோரும் பரபரப்பாக இருப்பார்கள். எல்லாக் கட்சித் தொண்டர்களும் போர்க் கோலத்தில் இருப்பார்கள். பணம் பத்திரமாக எல்லா வாக்காளர்களுக்கும் போய் சேர்ந்து விட்டதா எனக் கண்காணிப்பார்கள்.
பணம் வீட்டிற்கு வரவில்லை என்று புகார்கூறி, கண் சிவக்க வந்து நிற்கும் வாக்காளர்களுக்கு அவசர அவசரமாய் பணம் கொடுப்பார்கள்.
வாக்காளர்கள் தெளிவானவர்கள். தங்கள் தெருவில் எந்த கட்சிக்காரர்கள் எல்லாம் பணம் கொடுக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வார்கள்.
தனக்கு இருப்பது ஒரு ஓட்டு என்றாலும், பத்து கட்சிகள் பணம் கொடுத்தால் பத்து பேரிடமும் வாங்கிக் கொள்வார்கள்.
தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று வாக்களிக்க வருமாறு வாக்காளர்களை அழைப்பார்கள். வேலை இருப்பதாகச் சொல்லி இப்போது வருகிறேன்; அப்போது வருகிறேன் என தொண்டர்களை அலைக்கழிப்பார்கள் வாக்காளர்கள்.
தான் வாக்குச்சாவடிக்குச் சென்று வந்து விட்டால், தனக்குக் கிடைக்கும் அத்தனை ராஜ உபச்சாரமும் போய்விடும் எனத் தெரியாதவனா தமிழன்.
ஒருவழியாக வாக்குச் சாவடிக்குச் செல்ல தயாராகி விட்டால் ஆதார் அட்டை, வாக்குப் படிவம் என ஞாபகப்படுத்தி தொண்டர்படை வழி நடத்தும். வாக்குச் சாவடிக்குச் செல்ல வாக்காளருக்கு இருசக்கர வாகனம், ஆட்டோ அல்லது கார்கூட ஏற்பாடு செய்யும் தொண்டர் படை.
வாக்குச் சாவடிக்குச் செல்லும் வழி எல்லாம் தங்கள் சின்னத்தை ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள் தொண்டர்கள். வாக்குச் சாவடிக்கு நூறு மீட்டர் முன்பு விலகிக் கொள்வார்கள்.
வாக்குச் சாவடியில் நுழைந்ததும் வரிசையில் நிற்க வேண்டும்.
கோடீஸ்வரனாக இருந்தாலும் சரி, கோவணாண்டியாக இருந்தாலும் சரி ஒரே வரிசைதான்.
நல்ல கோடைகாலத்தில்தான் பெரும்பாலும் தேர்தல் நடக்கும். கோடை வெயிலில் வேர்த்து வழிந்து, ஜனநாயகக் கடமையாற்ற வரிசையில் மெதுவாகச் செல்ல வேண்டும்.
ஒருமணி நேரம் வரிசையில் நின்று ஓட்டுப் போடுவதற்குப் பயந்து, ஓட்டுப் போடவே செல்லாத பல வாக்காளர்கள் தமிழ்நாட்டில் உண்டு. அரசைத் தேர்ந்தெடுக்க சிறிதும் அக்கறை காட்டாத அவர்கள்தான், தொட்டதற்கெல்லாம் அரசை குறைகூறிக் கொண்டே இருப்பார்கள்.
ஒருவழியாக ஓட்டுப் போடும் அறைக்குள் நுழைந்ததும், வாக்காளர் அடையாளம் சரிபார்க்கப்பட்டு விரலில் மை வைக்கப்படும். உச்சக்கட்டமாக வாக்கு இயந்திரத்தில் உங்கள் வாக்கைப் பதிவு செய்ய வேண்டும்.
உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாட்டில் தன் கடமையைச் சரியாகச் செய்ததாகப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
ஓட்டுப் போட்டதும் வாக்காளருக்குத் தேர்தல் திருவிழா முடிவிற்கு வந்து விட்டதாக அர்த்தம். அவருக்கு கிடைத்த ராஜ உபச்சாரம் அந்த நிமிடத்தோடு முடிந்து விடும்.
ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு மீண்டும் 5 வருடம் கழித்து தேர்தல் வரும் அல்லவா என நினைத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்ல வேண்டும்.
தொண்டர்களுக்கு இன்னும் தேர்தல் திருவிழா முடியாது. அவர்கள் அன்று மாலை வரை வாக்காளர்களை அழைத்து வர வேண்டும்.
பணம் வாங்கிய யாரும் ஓட்டுப் போடத் தவறி விட்டார்களா எனக் கண்காணிக்க வேண்டும்.
திருவிழா முடிவு
தேர்தல் நேரம் முடிந்தாலும், வாக்குச் சாவடியிலிருந்து வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் வரை, (அது இரவோ இல்லை அதிகாலையோ அதுவரை) அங்கேயே இருக்க வேண்டும்.
அதற்குப் பிறகு வாக்கு எண்ணும் நாளன்று, தலைவர்களும் தொண்டர்களும் வாக்கு எண்ணும் மையத்திற்குச் செல்வார்கள்.
வாக்கு எண்ணிக்கைக்கு ஒருசில தொண்டர்கள் மட்டும் அதிகாரிகளுடன் இருப்பார்கள். நேரம் ஆக ஆக முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
வெற்றி பெறும் தலைவர்களும், கட்சித் தொண்டர்களும் உற்சாகமாய் இருப்பார்கள்; இனிப்பு கொடுப்பார்கள்; வேட்டு வெடிப்பார்கள்; மகிழ்ச்சியில் திளைப்பார்கள்.
தோல்வி பெறும் தலைவர்களும், கட்சித் தொண்டர்களும் கவலையுடன் கலைந்து செல்வார்கள்.
அவர்கள் வாக்கு எந்திரம் முறைக்கேட்டுக்கு உள்ளானது என்பார்கள்; பலபேரைக் குறை சொல்வார்கள்; தங்கள் குறையைப் பற்றி மட்டும் நினைக்கவே மாட்டார்கள்.
சில சமயங்களில் மக்கள் தெளிவாக ஒரு கட்சிக்கோ, ஒரு கூட்டணிக்கோ பெரும்பான்மை கிடைக்குமாறு வாக்களிப்பார்கள். அப்படி அமைந்தால் அந்தக் கட்சியின் எம்எல்ஏக்கள் ஒன்று கூடி முதல்வரைத் தேர்ந்தெடுப்பார்கள்.
ஒரு கட்சிக்கோ கூட்டணிக்கோ பெரும்பான்மை இல்லை என்றால், சூழ்நிலைக்கு ஏற்ப கட்சிகள் அணிமாறி முதல்வரைத் தேர்ந்தெடுத்து ஆட்சி அமைக்க உதவுவார்கள்.
இத்தோடு தொண்டர்களுக்கும் தேர்தல் திருவிழா முடிந்து விடும்.
வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் அனைவருக்கும், அடுத்த ஐந்து ஆண்டுகளும் திருவிழாதான்.