தேவேந்திர ஜகாரியா பாராலிம்பிகில் இரண்டு முறை தங்கம் வென்ற இந்திய விளையாட்டு வீரர் ஆவார். இவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் விளையாடி வருகிறார்.
ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை, ஒலிம்பிக்கில் தங்கம், உலக சாம்பியன்சிப் போன்றவற்றை தன்வசப்படுத்திய சாதனையாளர்.
தேவேந்திர ஜகாரியா சுமார் 12 ஆண்டு கால இடைவெளிக்குப்பின் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதோடு தனது முந்தைய ஒலிம்பிக் உலக சாதனையை முறியடித்துள்ளார்.
பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்ற இரண்டாவது வீரர் என்ற பெருமை இவரைச் சாரும். இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதினைப் பெற்ற பாராவிளையாட்டு வீரர். இவரின் சோதனைகள் அவற்றை சாதனைகளாக மாற்றிய விதத்தினைப் பற்றிப் பார்ப்போம்.
பிறப்பு மற்றும் இளமைக்காலம்
இவர் 10.06.1981-ல் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரு மாவட்டத்தில் ஜாட் குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது 8-வது வயதில் மரத்தில் ஏறிய போது எதிர்பாராத விதமாக 11,000 வோல்ட் மின்சார கம்பியைத் தொட நேர்ந்தது.
இவ்விபத்தில் தனது இடது கையில் கீழ்பகுதியை இழந்தார். ஆனாலும் பெற்றோரின் ஊக்கம் மற்றும் முயற்சியினால் விளையாட்டில் ஆர்வம் செலுத்தினார்.
விளையாட்டு வீரராக
பத்தாவது படிக்கும் போதே தினமும் பயிற்சியில் ஈடுபட்டார். இதன் விளைவாக உடல்தகுதியானவர்களுடான போட்டியில் ஈடுபட்டு மாவட்ட அளவில் சாம்பியன்சிப் பட்டம் பெற்றார்.
இந்நிகழ்வே இவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. எல்லோரையும் விட பலசாலி என்பதனை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணமே இவருக்கு விளையாட்டில் சாதிக்க ஊக்கமளித்தது.
மாவட்ட, மாநில, கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கங்களைக் கைபற்றினார்.
1997-ல் துரோணாச்சாரியர் பட்டம் வென்ற ஆர்.டி.சிங் என்பவரால் பள்ளி விளையாட்டுப் போட்டியில் அடையாளம் காணப்பட்டார். அது முதல் அவரிடம் பயிற்சி பெற்றார்.
சாதனைகள்
2002-ல் தென்கொரியாவில் நடைபெற்ற ஊனமுற்றோருக்கான தூர கிழக்கு மற்றும் தெற்கு பசிபிக் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்றார். இந்நிகழ்வு தன்னால் சர்வதேசப் போட்டிகளிலும் சாதிக்க இயலும் என்ற நம்பிக்கையை அவருக்குத் தந்தது.
பின் 2004-ல் ஏதேன்சில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் பங்கேற்று ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார். இப்போட்டியில் இவர் 62.15மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து முந்தைய சாதனையை (59.77மீ) முறியடித்து உலக சாதனை செய்தார்.
பின் 2013-ல் பிரான்சின் லியோனில் நடைபெற்ற ஐபிசி உலக சாம்பியன்சிப் போட்டியில் தங்கம் வென்றார். 2014-ல் தென்கொரியாவின் இங்கியோனில் நடைபெற்ற பாரா ஆசியன் போட்டியில் வெள்ளி வென்றார்.
2015-ல் தோகாவில் நடைபெற்ற ஐபிசி உலக சாம்பியன்சிப் போட்டியில் வெள்ளி வென்றார்.
2016-ல் பிரேசிலின் ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் பங்கேற்று ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார். இப்போட்டியில் இவர் 63.97மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து தனது முந்தைய சாதனையை (62.15மீ) முறியடித்து புதிய உலக சாதனை செய்தார்.
சொந்த வாழ்க்கை
இவர் முதலில் இரயில்வேயில் பணிபுரிந்தார். தற்போது ஸ்போட்ஸ் அத்தாரட்டி ஆப் இந்தியாவில் பயிற்சியாளராக பணிபுரிகிறார். இவருக்கு மஞ்சு என்ற மனைவியும், ஜியா என்ற ஆறு வயது மகளும், கவ்யான் என்ற மகனும் உள்ளனர். இவரது மனைவி முன்னாள் தேசிய கபடி விளையாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் விளையாட்டுக்கு கோ ஸ்போர்ட்ஸ் என்ற அமைப்பு ஆதரவளித்தது.
விருதுகளும், பெருமைகளும்
2004-ல் விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
2012-ல் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ வழங்கப்பட்டது. இதனைப் பெற்ற முதல் பாராவிளையாட்டு வீரர் என்ற பெருமை இவரைச் சாரும்.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சம்மேளனம் 2014-ம் ஆண்டிற்கான பாராவிளையாட்டு வீரராக இவரை அறிவித்து பெருமைப்படுத்தியது.
சாதனை செய்வதற்கு ஊனம் தடை இல்லை என்றும், தன்னால் தொடர்ந்து விளையாட்டில் சாதனை செய்ய முடியும் என்பதினை உலகுக்கு உணர்த்திய தேவேந்திர ஜஜகாரியா எல்லோருக்கும் முன்மாதிரியாக இருப்பார் என்பதில் ஐயமில்லை.
– வ.முனீஸ்வரன்
மறுமொழி இடவும்