தேவை நீதிபதிகள்

தேவை நீதிபதிகள்; ஏனென்றால் நீதி தேவை என்றால் நீதிபதிகள் தேவை. இதை அரசு உணர வேண்டும்.

ஆல மரத்தடியில் நீதி கிடைத்தது போய் அரசின் மூலம் தான் நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்து விட்டோம்.

கிராமங்களில் எளிய மக்களுக்களின் சின்னச்சின்னப் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்த நமது பாராம்பரிய நீதி வழங்கும் முறை மறைந்து விட்டது.

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நீதி மன்றம்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்பது தான் இன்றைய நிலை.எனவே நிறைய நீதி மன்றங்களும் நிறைய நீதிபதிகளும் தேவை.

ஆனால் நம் நாட்டில் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கைக்கும் அவற்றை ஆராய்ந்து தீர்ப்பு சொல்லும் நீதிபதிகளின் எண்ணிக்கைக்கும் நிறைய இடைவெளி உள்ளது.

அதிக எண்ணிக்கையில் வழக்குகள் பதிவாகின்றன. ஆனால் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே நீதிபதிகள் உள்ளனர்.
இதனால் நீதி கிடைப்பது தாமதமாகிறது.

ஒரு வழக்கு முடிய 20 ஆண்டுகள், 30 ஆண்டுகள் ஆகின்றன. இதனால் பாதிக்கப் பட்டவருக்கு உரிய நேரத்தில் நீதி கிடைப்பதில்லை. பொதுமக்களுக்கு நீதித்துறையின் மீது மற்றும் சமூகத்தின் மீது நம்பிக்கை போய்விடுகிறது.

தப்பு செய்தவர்களுக்கு உரிய நேரத்தில் தண்டனை கிடைப்பதில்லை. இதனால் குற்றம் செய்பவர்களுக்கு காவல் துறையைப் பார்த்தோ, நீதி மன்றங்களைப் பார்த்தோ பயம் ஏற்படுவதில்லை.

அரசன் அன்றே கொல்வான் என்ற அச்சம் இல்லவே இல்லை. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கின்ற நிலை தான் இன்று உள்ளது.

50,000 நீதிபதிகள் இருக்க வேண்டிய நிலையில் வெறும் 18000 நீதிபதிகள் தான் பணியில் இருக்கின்றார்கள்.

உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 60,260 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றை விசாரிக்க வெறும் 31 நீதிபதிகள் உள்ளனர்.

உயர் நீதிமன்றத்தில் 38,68,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன; 434 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. மாவட்ட நீதிமன்றங்களின் நிலையும் மிகமோசம்.

சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதான எண்ணம் பொதுமக்களிடம் இல்லை.தெய்வம் நின்று கொல்லும் என்ற நம்பிக்கையில்தான் மக்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். தேவைப்பட்டால் இன்னும் அதிக அளவில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும். நீதிபதிகள் வழக்குகளை விரைந்து முடிக்கத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.

தகவல் தொழில் நுட்பம் உட்பட பல புதிய நுட்பங்களைத் தேவையான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவற்றை எல்லாம் சிறப்பாகச் செய்து சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டினால் தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று நாம் சொல்லிக் கொள்ள முடியும்.

இல்லையென்றால் மக்களாட்சி அல்ல காட்டாட்சி தான் நடக்கும் என்பதுதான் உண்மை.

நீதிபதிகள் கொடுப்போம் நீதிமன்றங்களுக்கு!
நீதி கொடுப்போம் மக்களுக்கு!

– வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.