தைப்பூசம்

தைப்பூசம் ஆண்டுதோறும் இந்துக்களால் தைமாதம் பௌர்ணமியோடு கூடிய பூசநட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இவ்விழா தமிழர்களால் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

தைப்பூசம் திருநாளில் மக்கள் முருகன் மற்றும் சிவபெருமானை வழிபாடு செய்கின்றனர்.

இத்திருவிழா இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, மொரீசியஸ், தென்ஆப்பிரிக்கா, மியான்மார், அமெரிக்கா உள்ளிட உலக நாடுகளிலும் உள்ள தமிழர்களால் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

மலேசிய அரசு தைப்பூசத் திருநாளைக் கொண்டாட கோலாலம்பூர், புத்ரா ஜெயா, ஜொகூர், நெகிரிசெம்பிலான், பேராக், பினாங்கு மற்றும் சிலாங்கூர் மாநிலங்களுக்கு அன்றைய தினத்தை பொதுவிடுமுறை நாளாக அறிவித்துள்ளது.

மலேசியாவில் கோலாலம்பூர் அருகே உள்ள பத்து மலை முருகன் கோவிலில் நடைபெறும் தைப்பூச விழாவில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்கின்றனர்.

 

தைப்பூசத்தின் சிறப்புகள்

தைப்பூசத்தன்றுதான் உலகம் முதலில் தோன்றியது கருதப்படுகிறது. அதனால் உலகைத் தோன்றுவித்த இறைவான சிவபெருமானை வழிபாடு செய்கின்றனர்.

அசுர குலச் சேர்ந்த தாரகன் என்னும் அரக்கனை அழிக்க உமையம்மையான பார்வதி தேவி முருகனுக்கு சக்தி வேலானான வேலாயுதத்தை வழங்கிய நாளாக தைப்பூச நன்னாள் கருதப்பட்டு முருகன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

சிவபெருமான் சிதம்பரத்தில் பதஞ்சலி, வியாக்கிரபாதர், தேவர்கள், முனிவர்கள் ஆகியோருக்கு உமையம்மையுடன் ஆடலரசன் நடராஜராக காட்சியருளிய நாள் தைப்பூச நாளாக கருதப்படுகிறது.

சிவபெருமான் முப்புரங்களை அழித்த நாளாகவும் தைப்பூச நாள் கருதப்படுகிறது. சிதம்பரத்தில் தங்கி திருப்பணி செய்த இரணியவர்மன் என்னும் அரசனுக்கு நேரில் ஆடலரசன் காட்சியருளிய நாளாகவும் கருதப்படுகிறது.

வடலூரில் சத்யஞான சபையை நிறுவிய இராமலிங்க அடிகளார் ஒளி வடிவில் இறைவனுடன் இரண்டறக் கலந்ததைப் போற்றும் விதமாக வள்ளலார் வழிபாடும் தைப்பூசத்தன்று மேற்கொள்ளப்படுகிறது.

தேவ குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் ஆதலால் குரு வழிபாடும் அன்றைய தினம் மேற்கொள்ளப்படுகிறது.

 

சிவபெருமான் வழிபாடு

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து நித்திய கடன்களை முடித்து குளிர்ந்த நீரில் நீராடி பஞ்சாட்சரம், ருட்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுகின்றனர்.

அன்றைய தினம் பால் பழத்தினை மட்டும் உண்டு விரதமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. வழிபாட்டின்போது தேவாரம், திருவாசகம் பாடப்படுகிறது. உலக தோற்றத்தில் முதலில் நீர் தோன்றியதாகக் கருதப்பட்டு அன்றைய தினம் சிவன் மற்றும் முருகன் கோவில்களில் தெப்போற்சவம் நடைபெறுகின்றது.

 

முருகன் வழிபாடு

சிவபெருமான் வழிபாட்டினைவிட முருக வழிபாட்டினையே தைப்பூசத்தன்று மக்கள் பெரும்பாலும் மேற்கொள்கின்றனர். இந்நாளில் மக்கள் பாத யாத்திரை மேற்கொண்டு காவடி எடுத்தும், பால் குடம் எடுத்தும், முடிக்காணிக்கை செலுத்தியும், மலர்கள் மற்றும் பழங்களை முருகனுக்கு படைத்தும் வழிபாடு மேற்கொள்கின்றனர்.

உமையம்மை முருகனுக்கு ஞான வேலை வழங்கிய இடமாக பழனி கருதப்படுகிறது. அதனால் தைப்பூசத்தன்று குமரக்கடவுள் வழிபாடு பழனியில் சிறப்பாக நடைபெறுகின்றது.

பழனியில் மட்டுமல்லாது முருகனின் அறுபடை வீடுகள் உட்பட எல்லா முருகனின் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. பழனியில் இவ்விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. தேர்த்திருவிழா, தெப்போற்சவம் போன்ற நிகழ்சிகள் சிறப்பு வாய்ந்தவை.

 

பழனியில் தைப்பூசம்

பழனியில் நடைபெறும் தைப்பூச விழாவில் கலந்து கொள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக பாதயாத்திரை மேற்கொள்கின்றனர்.

பாதயாத்திரையின்போது பக்தர்கள் காவடியைச் சுமந்தும் ‘வேல் வேல் வெற்றி வேல்’ எனப் பாட்டுப்பாடி ஆடிக்கொண்டும் பயணத்தினை மேற்கொள்கின்றனர்.

பாதயாத்திரை செல்வோர் மார்கழி மாதக் கடைசியில் மாலையணிந்து காவியுடை உடுத்தி பிரம்மச்சாரியம் மேற்கொண்டு எளிய சைவ உணவினை உண்டு காலையிலும் மாலையிலும் முருக வழிபாடு மேற்கொள்கின்றனர். இரவில் வெறும் தரையில் படுத்து உறங்குகின்றனர். வழிபாட்டின் போது சஷ்டிக்கவசம், சண்முக கசவம் உள்ளிட்ட முருகனின் பாடல்களைப் பாடுகின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு பழனிக்கு வடமேற்கில் ஓடும் சண்முக நதியில் நீராடி பழனி தண்டாயுதபாணியை தரிசிக்கின்றனர்.

பக்கதர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய முருகப்பெருமானுக்கு நன்றி செலுத்தும் வகையில் தைப்பூசநாளில் முடிக்காணிக்கை செலுத்தியும், சேவல், மயில், மச்சம், பால், இளநீர் போன்றவற்றை காவடி வடிவில் எடுத்து வந்து காணிக்கையாகச் செலுத்துகின்றனர். பணம், தங்கம், வேல், மோதிரம் போன்றவற்றை காணிக்கைகளாக உண்டியலில் செலுத்துகின்றனர்.

 

வெளிநாடுகளில் தைப்பூசம்

மலேசியாவில் கோலாலம்பூர் அருகே உள்ள பத்து மலைக் குகைகளில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின்போது பக்தர்கள் காவடிஎடுத்தும், சிறிய வேலினால் கன்னம், உதடுப் பகுதிகளில் அலகு குத்தியும், உடலில் சிறு துவாரம் இட்டு கொக்கிகளை சொருகி அதன்மூலம் சிறுதேரில் வைக்கப்பட்டுள்ள முருகப்பெருமானின் படத்தை இழுத்தும் வருகின்றனர்.

பால்குடங்களை தலையில் சுமந்து வந்து காணிக்கை செலுத்துகின்றனர். முடி காணிக்கையும் வழங்கப்படுகிறது. தீராத நோய்களை தீர்த்து வைத்தும், நினைத்த காரியங்களை நடத்தியும் வைத்த முருகனுக்கு மேற்கண்ட வகையில் வழிபாடு நடத்துவதாக பக்கதர்கள் கூறுகின்றனர்.

மேலும் மலேசியாவின் பினாங்கு, ஈபோ ஆகிய இடங்களிலும் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, மொரீசியஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத்தில் முருக வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

சிறப்பு வாய்ந்த தைப்பூசத்திருநாளில் முருகனை மனமார வழிபட்டு நம்மிடம் உள்ள குறைகள் நீங்கி நல்வாழ்வு வாழ்வோம்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.