தைப்பொங்கல்

தைப்பொங்கல் ஆண்டுதோறும் தைமாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பதற்கு பொங்குதல், பொங்கிப் பெருதல் எனப் பொருள்படும். தமிழ்நாட்டில் இத்திருவிழாவானது போகிப் பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

தைப் பொங்கலானது அறுவடை திருநாள், தமிழர் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. தைத்திருநாள் கொண்டாட்டம் சுமார் 1000 வருடங்கள் பழமையானது.
சோழர் காலத்தில் இத்திருவிழா புதுயீடு என்று அழைக்கப்பட்டது. புதுயீடு என்பதற்கு ஆண்டின் முதல் அறுவடை என்று பொருள்.

இந்தியாவின் பிற மாநிலங்களில் இது மகர சங்கராந்தி என்ற பெயரில் குளிர்கால அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கல் இலங்கை, மொரிசீயஸ், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் மற்றும் தமிழர் வாழும் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

இத்திருவிழாக் கொண்டாட்டத்தில் மக்கள் தங்கள் வசிப்பிடங்களை தூய்மைப் படுத்துகின்றனர். வீடுகளுக்கு வர்ணம் பூசுகின்றனர்.

திருமணமான புது மணப்பெண்ணிற்கு தாய் வீட்டிலிருந்து தலைப் பொங்கல் கொண்டாடுவதற்காக புது பொங்கல் பானை, புது அரிசி, பருப்பு, காய்கறிவகைகள், செங்கரும்பு, பனங்கிழங்கு, புது மஞ்சள் மற்றும் மணமக்களுக்கு புதிய ஆடைகள் ஆகியவற்றை சீர்வரிசையாக பரிசளிக்கின்றனர். இச்சீர் வரிசை பொங்கல் சீர் என்று அழைக்கப்படுகிறது.

 

போகிப் பண்டிகை: மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. போகிப் பண்டிகை அன்று மக்கள் தங்கள் வாழிடங்களை தூய்மைப்படுத்துகின்றனர். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப தங்கள் வீட்டில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்துகின்றனர்.

பசு, காளை, எருமை போன்ற உழவுத் தொழிலுக்குப் பயன்படும் விலங்குகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசுகின்றனர். விவசாயிகள் மூலிகைச் செடிகளான துளசி, வேம்பு ஆகியவற்றை தங்கள் விளைநிலங்களின் வடகிழக்கு மூலையில் வைத்து பயிர்களை நோய்கள் தாக்க வண்ணம் இருக்க வழிபாடு நடத்துகின்றனர்.

 

தைப்பொங்கல்: தைப்பொங்கல் அன்று அதிகாலையில் எழுந்து, குளித்து வீட்டின் முற்றத்தில் வண்ணக் கோலமிட்டுகின்றனர். பின் முற்றத்தில் அல்லது வெளியிடத்தில் புது மண்பானை (அல்லது) பித்தளைப் பானையில் புது அரிசியிட்டு, பொங்கலிடுகின்றனர்.

பொங்கல் பொங்கும் போது பொங்கலோ பொங்கல் மற்றும் பொங்கும் பொங்கல் எங்கும் தங்குக என்று குலவையிட்டு மகிழ்கின்றனர். பொங்கலிடும் போது சர்க்கரை சேர்த்து சர்க்கரைப் பொங்கலாகவும் சர்க்கரை சேர்க்காமல் வெண்பொங்கலாகவும் இரு வகைகளில் பொங்கல் தயார் செய்யப்படுகிறது.

சூரியன் உதயத்திற்கு பின் சர்க்கரை மற்றும் வெண் பொங்கல், செங்கரும்பு, புதுமஞ்சள், பனங்கிழங்கு, பழ வகைகள் ஆகியவற்றை உழவுத் தொழிலுக்கு உதவிய சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக படைத்து, எங்கும் மகிழ்ச்சி பொங்கிப் பெருக வழிபாடு நடத்துகின்றனர். புதுப்பானை, புது அரிசி, செங்கரும்பு மற்றும் புது மஞ்சள் ஆகியவை தைப் பொங்கலின் சிறப்பு அம்சமாகும்.

 

மாட்டுப் பொங்கல்:தை மாதம் 2ம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலன்று மாட்டுத் தொழுவங்கள் மற்றும் மாடுகள் தூய்மைப் படுத்தப்படுகின்றன. மாடுகள் சந்தனம், குங்குமம் இட்டு மாலை அணிவித்து, சலங்கைகள் கட்டி அலங்கரிக்கப்படுகின்றன.

சர்க்கரை மற்றும் வெண் பொங்கலிடப்படுகின்றன. பின் பொங்கல், கரும்பு, பழ வகைகள் படைத்து உழவுத் தொழிலுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி செலுத்துகின்றனர். படைக்கப்பட்ட பொங்கல், கரும்பு, பழ வகைகள் மாடுகளுக்கு உணவாக வழங்கப்படுகின்றன.

மாட்டுப் பொங்கலின் போது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறுகின்றது. சீறிவரும் காளைகளை வீரம் கொண்டு இளைஞர்கள் அடக்குகின்றனர். பழங்காலத்தில் இவ்விளையாட்டு மஞ்சு விரட்டு என்று அழைக்கப்பட்டது. அலங்காநல்லூர், பாலமேடு போன்ற இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றவை.

கிராமங்களில் வழுக்குமரம் ஏறுதல், உறி அடித்தல் மற்றும் விளையாட்டுப் போட்டிகள்; மாட்டுப் பொங்கல் அன்று நடத்தப்படுகின்றன.

 

காணும் பொங்கல்: காணும் பொங்கலானது தை மாதம் 3ம் நாள் கொண்டாடப்படுகிறது. காணும் என்பதற்கு காணுதல் என்று பொருள். இவ்விழாவின் போது மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்கின்றனர் அல்லது தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா செல்கின்றனர். இவ்விழாவானது ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல், பகிர்ந்துண்ணல் ஆகியவற்றை வலியுறுத்துகின்றது.

விவசாயத்திற்கு உதவிய சூரியனுக்கும் மற்றும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாயம் சார்ந்த விழாவாக தைப்பொங்கல் என்னும் தமிழர் திருநாள் கொண்டாடப்படுகிறது. நாமும் விவசாயத்தையும் அதனைத் சார்ந்த விழாவான தமிழர் திருநாளையும் தமிழர் பாரம்பரிய வழக்கம் மாறாமல் போற்றுவோம்.

One Reply to “தைப்பொங்கல்”

Comments are closed.