தைமகள் பிறப்பினில் தரணியும் மிளிரட்டும்
வைக்கும் அடியெல்லாம் வெற்றியைக் கொடுக்கட்டும்
வாழ்வும் வளமாக வசந்தமும் வீசட்டும்
மரபும் மரிக்காமல் புதுமையும் செழிக்கட்டும்
மறவர் தமிழரென்று பாரும் போற்றட்டும்
வன்மத்தின் எண்ணங்கள் வலுவிழந்துப் போகட்டும்
வாஞ்சை மட்டுமே வையத்துள் நிலைக்கட்டும்
ஆடியின் விளைச்சலை தையினில் அறுத்தெடுத்து
புத்தடுப்பு பூட்டியே புத்தரிசிக் கூட்டியே
பதமாய் வெல்லமிட்டு மிதமாய் நெய்யுமிட்டு
செம்பானைச் சூடேற செவ்வரிசி பொங்கியும்
பொங்கலோ பொங்கலென்று மனமும் பொங்கவே
ஆதவனும் ஆநிரையும் பொங்கலின் முதற்பொருளாம்
மஞ்சளும் பூக்களும் மங்களம் கூட்டவே
நெஞ்சம் முழுவதும் இன்பம் நிறைந்திடவே
நட்டுவைத்த செங்கரும்பும் நாவினில் இனித்திடவே
எட்டிவைத்த இடமெல்லாம் இன்பமும் பொழிந்திடவே
ஏகாந்தம் நீங்கியே எல்லோரும் சேர்ந்திடவே
சுகந்தமாய் வீசட்டும் வாழ்வினில் நேசமுமே
சுற்றமும் சூழ்ந்திடவே சுமையெல்லாம் நீங்கிடவே
மாற்றமும் நிறைந்திடவே நானிலம் செழித்திடவே
ஈகை பெருகிடவே
இன்பமும் கூடிடுமே
தையும் பிறந்தாலே வழியும் பிறந்திடுமே!
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
6374836353