தை மாத‌ சிறப்புகள்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை அளிக்கும் தை மாத‌ சிறப்புகள் பற்றிப் பார்ப்போம்.

நம் நாட்டில் பொதுவாக எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது என்பது பழங்காலத்தில் இருந்து வரும் பழக்கம் ஆகும். இம்மாதத்தில் தான் சூரியன் வடஅரைக் கோளப் பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது. 

ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில் தான் அறுவடை செய்யப்படுகிறது. எனவே இது அறுவடை மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

அறுவடையால் மகிழ்ச்சி மிகுந்த மக்கள் தங்கள் கடவுள்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இம்மாதத்தில் பல்வேறு விழாக்களைக் கொண்டாடுகின்றனர். பல்வேறு வழிபாட்டு முறைகளும் இம்மாதத்தில் பின்பற்றப்படுகின்றன.

மக்கள் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம், தைப் பூசம், தை அமாவாசை, ரத சப்தமி போன்ற விழாக்களையும், சபலா ஏகாதசி, புத்ரதா ஏகாதசி, பைரவ வழிபாடு, வீரபத்திரர் வழிபாடு, சாவித்ரி கௌரி விரதம் போன்ற வழிபாட்டு முறைகளையும் இம்மாதத்தில் பின்பற்றுகின்றனர். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

 

தைப்பொங்கல்

தைப்பொங்கல்
தைப்பொங்கல்

மக்கள் நல்ல விளைச்சலுக்கு உதவிய சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதத்தின் முதல் நாளை தைப்பொங்கலாகக் கொண்டாடுகின்றனர்.

இந்நாளன்று அதிகாலையில் எழுந்து புதிய நெல்லில் இருந்து தயார் செய்யப்பட்ட அரிசியில் சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் ஆகியவற்றை தயார் செய்து பொங்கல், செங்கரும்பு, புதுமஞ்சள், பனங்கிழங்கு, காய்கறிகள், பருப்பு வகைகள், பழவகைகள் ஆகியவற்றை சூரிய தேவனுக்கு படையலிட்டு பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சியுடன் ஆராவாரம் செய்து வழிபாடு மேற்கொள்கின்றனர்.

விவசாயம் செய்து நல்ல விளைச்சல் அடைந்தால் அடுத்து இளைஞர்களுக்கு மணமுடிக்கலாம் என்பதால் அவர்களும் தை தை என அத்தை மகள் வந்தாள் எனக் குதூகலமாய் இருப்பார்கள்.

 

மாட்டுப் பொங்கல்

Uzhavar

உழவுத் தொழிலுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இந்நாளன்று மாடுகள் குளிப்பாட்டப்பட்டு சந்தனம், குங்குமம் இட்டு மாலைகள் மற்றும் சலங்கைகள் கொண்டு அலங்கரிக்கப்படுகின்றன. சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் செய்யப்பட்டு அவற்றுடன் செங்கரும்பு, பழவகைகள் ஆகியவை மாடுகளுக்கு படையலிடப்பட்டு வழிபாடு நடத்தி பின் வழிபாட்டுப் பொருட்கள் மாடுகளுக்கு உணவாக வழங்கப்படுகின்றன.

அன்றைய தினம் ஜல்லிக்கட்டு, உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

விளையாட்டு
ஜல்லிக்கட்டு

 

காணும் பொங்கல்

காணும் பொங்கல்
காணும் பொங்கல்

தை மூன்றாம் நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இன்றை தினத்தில் மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களைக் கண்டு உறவாடி மகிழ்கின்றனர்.

ஒற்றுமை மற்றும் பகிர்ந்துண்ணல் போன்றவற்றை வலியுறுத்தும் விழாவாக‌ இவ்விழா அமைகிறது.

 

திருவள்ளுவர் தினம்

திருவள்ளுவர்
திருவள்ளுவர்

திருவள்ளுவர் என்ற முற்றும் அறிந்த ஞானியால் தமிழுக்கும் தமிழகத்திற்கும் மிகப்பெரிய பெருமை உலகளவில் கிடைத்திருக்கிறது .

தமிழை தரணியில் தலைநிமிர்ந்து நிற்கச் செய்திருப்பதுடன் இவர் இயற்றிய திருக்குறள் நம் தமிழன்னையின் கிரீடமாக அழகு செய்கின்றது. அதைப் போற்றும் விதமாகத் திருவள்ளுவர் தினம் கொண்டாடப் படுகிறது.

 

தைப்பூசம்

தைப்பூசம்
தைப்பூசம்

இவ்விழா தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூச நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமான் மற்றும் முருக்கடவுள் ஆகியோர் வழிபாடு செய்யப்படுகின்றனர்.

சிதம்பரம் பொன்னம்பலத்தில் இறைவன் ஆடலரசனாக உலக மக்களுக்கு காட்சியருளிய நாள் தைப்பூசம் என்றும், உமையம்மை வேலவனுக்கு சக்தி வேலை வழங்கிய நாள் தைப்பூசம் என்றும் கருதப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இவ்விழா உலகெங்கும் உள்ள தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

 

தை அமாவாசை

நீத்தார் கடன்
நீத்தார் கடன்

தை அமாவாசை அன்று மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் எனப்படும் நீத்தார் கடன் வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் இவ்வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

உத்திராண்ய காலத்தின் முதல் மாதமான தை மாத அமாவாசையும், தட்சியாண காலத்தின் முதல் மாதமான ஆடி மாத அமாவாசையும், புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையும் முன்னோர்களுக்கான வழிபாட்டிற்கு உகந்தவை எனக் கருதப்படுகின்றன.

இவ்வழிபாட்டின் மூலம் தாங்கள் செய்த பாவங்கள் நீங்குவதாகவும், குழந்தைப்பேறு, குடும்பத்தில் ஒற்றுமை, சுபிட்சம், மகிழ்ச்சி ஆகியவை கிடைப்பதாகவும் கருதப்படுகிறது.

 

ரத சப்தமி

சூரியன்
சூரியன்

ரத சப்தமி என்பது தை மாதத்தின் வளர் பிறையில் வரும் சப்தமி திதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில்தான் சூரியன் தனது வடஅரைக்கோளப் பயணத்தைத் தொடங்குகிறார்.

இந்நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி தீபம் ஏற்றி சூரிய வழிபாடு செய்ய வேண்டும். அன்றை தினத்தில் தங்களால் இயன்ற தானங்களைச் செய்யலாம்.

இந்நாளில் விரத முறை கொள்வதால் ஆரோக்கியம், நோய் இல்லாமை, செல்வம், புத்திரப்பேறு, நீண்ட ஆயுள், பகைவர்களை வெல்லும் சக்தி, வெற்றி, நிலம், தானியம், புண்ணியம் ஆகியவை கிடைக்கும். மனக்கவலை, வியாதி ஆகியவைற்றை நீக்கும். வழியில்லாமல் தவிக்கும்போது வழி காட்டும் என்று கருதப்படுகிறது.

 

சபலா ஏகாதசி

பெருமாள்
பெருமாள்

தை மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசி சபலா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இந்நாளில் உணவின்றி விரத முறை மேற்கொண்டு வழிபாடு செய்ய நாம் செய்யும் பாவங்கள் எல்லாம் நீங்கும்.

அன்றைய தினம் பழங்களை தானம் செய்வதால் ஒளி மயமான வாழ்க்கை அமையும். இல்லறம் இனிக்கும். லும்பகன் என்னும் இளவரசன் இவ்விரதத்தைக் கடைப்பிடித்து பாவங்கள் நீங்கி அரச பதவியைப் பெற்று பின் வைகுந்த பதவியையும் பெற்றான்.

 

புத்ரதா ஏகாதசி

தை மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி புத்ரதா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இந்நாளில் ஏகாதசி விரத முறை மேற்கொண்டு வழிபாடு செய்ய புத்திர‌ பாக்கியம் கிடைக்கும்.

சுகேது மான் என்ற அரசன் பிள்ளை இல்லாக் குறையை இவ் ஏகாதசி விரத முறையைப் பின்பற்றி நல்ல மகனைப் பெற்றான். தன் நாட்டில் உள்ளோரும் இவ்விரத முறையைப் பின்பற்றச் செய்தான். இவ் ஏகாதசி வம்சாவளியைப் பெருகச் செய்யும் சந்தான ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

 

சாவித்ரி கௌரி விரதம்

தை இரண்டாம் நாள் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. பதினாறு வயது மார்க்கண்டேயருக்கு நீண்ட ஆயுளைப் பெற சிவபிரான் அருளிய விரதம் இது.

இவ்விரத்தின் சிறப்பினை மார்க்கண்டேயர் தருமருக்கு கூறி அதனை தருமர் பின்பற்றினார் என்று கூறப்படுகிறது.

இவ்விரத முறையில் தை இரண்டாம் நாள் அன்று விரதமிருப்போர் அதிகாலையில் நீராடி களிமண்ணால் செய்த சாவித்திரி அம்மனை பூஜை செய்ய வேண்டும்.

அன்றைய தினம் ஒன்பது முடிச்சுக்கள் போடப்பட்ட கயிற்றினைக் கையில் கட்டி மௌன விரதம் இருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒன்பது நாட்கள் பூஜையைச் செய்ய வேண்டும்.

பின் மேற்கூறிய முறையில் தொடர்ந்து ஒன்பது வருடங்கள் பூஜையைச் செய்ய வேண்டும்.

ஒன்பதாவது ஆண்டு முடிவில் ஒன்பது முறங்களில் ஒவ்வொன்றிலும் வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள் கிழங்குகள் என அனைத்தும் ஒன்பது எண்ணங்களுடன் வைத்து ஒன்பது சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், முறம் ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் நீண்ட ஆயுள், சந்தான பாக்கியம், நீடித்த செல்வம் ஆகியவை கிடைக்கும்.

 

பைரவ வழிபாடு

பைரவர்
பைரவர்

தை மாதத்தில் வரும் முதல் செவ்வாய் கிழமை முதல் தொடங்கி செவ்வாய் கிழமைகளில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இவ்விரத்தின்போது பைரவருக்கு வடை மாலை அணிவிக்கப்படுகிறது. இதனால் சகல நன்மைகளும் கிடைக்கும்.

 

வீரபத்ர வழிபாடு

வீரபத்திரர்
வீரபத்திரர்

வீரபத்ர வழிபாடு என்பது செவ்வாய் தோறும் ஓர் ஆண்டு காலம் கடைப் பிடிக்கப்படுகிறது. ஓராண்டு வழிபட முடியாதவர்கள் தை மாத செவ்வாய் கிழமையில் மட்டுமாவது இவ்வழிபாட்டினைக் கடைப்பிடிக்கலாம். இவ்வழிபாட்டை மேற்கொள்வது நீங்காத தடையை நீக்கும். தீராத பகையைத் தீர்க்கும். நவகிரக பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும்.

 

தை வெள்ளி வழிபாடு

நாச்சியாரம்மன்
அம்மன்

உத்திராண்ய காலத்தின் ஆரம்ப மாதமான தையில் வரும் வெள்ளிக் கிழமையில் அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்றைய தினங்களில் அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி உள்ளிட்ட அம்மன் குறித்த பாடல்களைப் பாடி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் தை தேய்பிறை பஞ்சமியில் ராமர் பாதம் எய்தினார்.

தை மாத‌ சிறப்புகள் பற்றி அறிவோம். தை மாதத்தின் திருவிழாக்களைக் கொண்டாடி வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி இறையருள் கிடைக்கப் பெற்று வளமான வாழ்வு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

One Reply to “தை மாத‌ சிறப்புகள்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.