தொந்தி குறைக்க சுலபமான வழிகள்

தொந்தி குறைக்க சுலபமான வழிகள் என்ற‌ இக்கட்டுரை, டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா எழுதிய, தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள் என்ற நூலில் இடம் பெற்ற கட்டுரை ஆகும்.

இன்று நல்ல நாள்!

உங்கள் எண்ணத்திலே புதிய எழுச்சி, புரட்சி! அதன் விளைவாக எழுந்த முயற்சி…. மகிழ்ச்சி!

என்றோ ஒருநாள் தொடங்கி, தொடர்ந்து, வளர்ந்து, சுமையாக மாறிவிட்ட இந்தத் தொந்தியை, எப்படியாவது தொலைத்துத் தலைமுழுகி விடவேண்டும் என்ற வேகத்தின் வெள்ளத்திற்குக் கரைகட்டி விட்ட கடமை நிறைந்த நாள் இந்நாள்.

ஆமாம், புதிய முயற்சி வெள்ளம் பொங்கிப் புரண்டு, நுங்கும் நுரையுமாக செல்வதை, கரைகட்டி விட்டதுபோல,  நல்லவழி காட்டவே தொந்தியை குறைக்க சுலபமான வழிகள் வரும் வாரங்களில் வரவிருக்கிறது.

 

பெருகேறிய உடல், நமது உடல்.

அழகான அங்க அமைப்பு நிறைந்த உடல், பல்லாண்டு காலமாக பரிணாம வளர்ச்சியின் விளைவாக, பரிபூரணப் பொலிவுடன் விளங்கும்.

நம் உடலிலே புகுந்து விட்ட இந்த வேண்டாத தொந்தியை, விரட்ட வேண்டும் என்று நீங்கள் எடுத்த முடிவு இருக்கிறதே, அதைத்தான் ஆரம்பத்தில் புரட்சி என்றேன். எழுச்சி என்றேன்.

‘வாழ்வைத்தான் வளர்க்க வேண்டும் வயிற்றை அல்ல’ என்பதை இன்று நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.

 

‘உங்கள் விசாலமான மனமும், குறுகுகிற இடுப்பும் இடம் மாறுகிற பொழுது, உங்களுக்கு வயதாகிவிட்டது என்று அர்த்தம்’ ஒரு மேல் நாட்டறிஞர் கூறுகின்றார்.

இடுப்பு பெரிதாகி, மனம் குறுகிவிட்டது. முதிர்ந்து போன வயதானதினால் என்பது அல்ல, உடலின் நயம், லயம், மயம் கெட்டு விட்டது என்பதே பொருத்தமாகும்.

நல்ல உடலில்தான் நல்ல மனம், நல்ல குணம் விளங்கும். நல்ல நினைவுகள், நல்ல செயல்கள் என்றும் துலங்கும். நல்ல செயல்கள் நல்ல வாழ்வு முறைகளை அமைத்துத் தரும்.

எனவே, இடுப்புப் பகுதியின் அளவை விரிவுபடுத்தாமல் இருக்க வேண்டுமானால், என்ன செய்வது? என்ற உங்கள் கேள்விக்குப் பதிலளித்துப் பாதை காட்டுகிறது வரும் வாரங்களின் பதிப்புகள்.

 

உடல் உள்ளவரை கடல் கொள்ளாத கவலை வரும் என்பது பழமொழி.

அலை ஓய்வது எப்பொழுது? தலை முழுகுவது எப்பொழுது? என்பது போல் கவலையெல்லாம் தீர்ந்த பிறகு,  இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முயலலாம் என்று நினைப்பவர்களே அதிகம்.

நூலில்லாமல் மாலை கோர்க்கப் பார்க்கும் நூதன புத்திசாலிகள் போல, உடலைக் காக்காமலேயே உலக வாழ்க்கையை அனுபவிக்க முயல்பவர்கள்தான் அதிகம் இருக்கின்றார்கள்.

‘இரவல் சேலையை நம்பி இடுப்புச் சேலையைக் களைந்து எறிந்தவள்’ கதைபோல, நாளை வரும் நிறைய இன்பம் என்றும் மனப்பால் குடிக்கும் மக்களும் இருக்கத் தான் இருக்கிறார்கள்.

அவர்கள்  இன்றைய வாழ்க்கையை இன்னலோடு கழித்து, உடலையும் கெடுத்துக் கொள்கின்றனர்

என்ன செய்வது? அன்றாடம் அல்லாடி, தள்ளாடி இறுதியிலே ஆடி ஒய்ந்த பம்பரம் போல, அலுத்துக் களைத்துப் அவதியைத் தான் அவர்கள் அடைகின்றனர்.

தண்ணீரிலே பிறந்த உப்பு, இறுதியிலே தண்ணீரில் தான் கரையும் என்பார்கள்.

அதுபோல, உடலால்தான் உலக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதை உணர்ந்து, முடிவில் உடலைக் காக்க உழைப்பும், உடற்பயிற்சியுமே தேவை என்று உணர்கின்ற உன்னத நிலைக்கு இன்று எல்லோரும் வந்துவிட்டனர்.

தொந்தி குறைக்க சுலபமான வழிகள்

வந்துவிட்ட தொந்தியை இருவகையாகப் பிரிக்கலாம்.

ஒன்று பஞ்சு தொந்தி.

இன்னொன்று இரும்புத் தொந்தி.

பஞ்சுத்தொந்தி என்பது பசுமையானது. தொளவென்று தளதளத்துத் தோன்றும். இது ஆரம்பகாலத்தில் அழகு முகம் காட்டி, ஆனந்த சும் காட்டி, சொகுசு காட்டும் தன்மையது.

மிகக் குறைந்த முயற்சியினாலும் பயிற்சியினாலும் விரட்டி விடலாம். முளையிலே கிள்ளி எறிகின்ற முள்செடியை போல இந்த முயற்சி.

இரும்புத்தொந்தி என்பதோ வேர் விட்டுப் பாய்ந்து, கிளைவிட்டு உயர்ந்து, நன்றாக ஊன்றி உறுதி பெற்று வைரம் எறிய மரம் போன்றது.

இரும்புத் தொந்தியை அகற்ற வேண்டுமானால் அவசரப்படுவது தவறு. அதற்கென்று முறைகளை அன்றாடம் கடமையென உணர்ந்து, உண்மையாக செய்து வரவேண்டும்.

நித்தம் பெற்றால் முத்தம் சலித்துப் போகும் என்பார்கள். உடற்பயிற்சிக்கு இது பொருந்தாது.

பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். இதுவும் பயிற்சிக்கு ஏற்புடைதக்கது அல்ல.

பட்டை தீட்டத் தீட்ட வைரம் ஒளிவிடுதல் போல, பயிற்சி செய்யச் செய்ய உடல் பளபளக்கும். உறுப்புக்கள் செழிக்கும். வலிமை கொழிக்கும். வாழ்வு சிறக்கும்.

உண்ணுதல், உறங்குதல், உடை உடுத்தல், அலுவலகம் செல்லுதல், போன்ற பழக்க வழக்கங்களை எவ்வாறு அன்றாடம் மேற்கொள்ளுகின்றீர்களோ, அவைகளைப் போலவே பயிற்சியையும் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனால் தொந்தியும் குறையும். தோன்றிவரும் நோய்களும் மறையும். தள‌ர்ந்து போயிருக்கின்ற உடலும் நிமிரும் உறுதி பெறும்.
வாழ்வைச் சுவைத்து மகிழ நல்ல வாய்ப்பினை அளிக்கும் வழியானது  பிறந்து விட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

 

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத் துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.