தொலைந்ததை நாளும் தேடுகிறேன்
துணையாய் நீ வர வேண்டுகிறேன்…
அலைகள் கரைத்த கடலினைப் போல்
அனைத்தும் மறைந்திட ஏங்குகிறேன்
ஓலைக் குடிசையில் இருந்தாலும்
ஓவிய சூரியன் நடந்தாலும்….
மாலை வெயிலின் தோழமையும்
மஞ்சள் வானமும் போனதெங்கே?
தொலைந்ததை நாளும் தேடுகிறேன்
துணையாய் நீ வர வேண்டுகிறேன்….
காற்சட்டை கந்தல் என்றாலும்
கண்டிட நேரம் இல்லாமல்…
தோளினில் புழுதிகள் படர்ந்தாலும்
துடைத்திட நீர் தரும் ஆறெங்கே?
தொலைந்ததை நாளும் தேடுகிறேன்
துணையாய் நீ வர வேண்டுகிறேன்….
வெள்ளரி கடலை சிறுபயர்கள்
விளைவித்த மண்ணின் வாசனைகள்….
அள்ளித் தந்து பசியாற்றும்
அன்னை தாய்மண் போனதெங்கே?
தொலைந்ததை நாளும் தேடுகிறேன்
துணையாய் நீ வர வேண்டுகிறேன்…
அகத்திக்கீரை அதனூடே
ஆத்தூர் வெற்றிலை கொடிபடர…
சிவந்த கோவை பழம் தேடி
குதித்து வருகின்ற கிளிகளெங்கே?
தொலைந்ததை நாளும் தேடுகிறேன்
துணையாய் நீ வர வேண்டுகிறேன்….
கோவிலின் படித்துறை தாமரைப்பூ
குவளை மலரின் சிரிப்பொலிகள்…
கூவிடும் குயிலின் கானங்கள்
கேட்டு ரசித்த காதுகளெங்கே?
தொலைந்ததை நாளும் தேடுகிறேன்
துணையாய் நீ வர வேண்டுகிறேன்….
இயற்கை தந்த வரங்களிதை
இழந்த இளைய தலைமுறைகள்…
செயற்கை வாழ்வில் (உணவு, உடை, பழக்க வழக்கங்கள் ) சிதைந்து போக
சிந்திக்க மறந்த மனம் எங்கே???
தொலைந்ததை நாளும் தேடுகிறேன்
துணையாய் நீ வர வேண்டுகிறேன்….
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942