தோசைப் பொடி சட்னி இல்லாமல் தோசையைத் தொட்டு உண்ண ஏற்ற பொடி வகையாகும். இதனை சுவையாகவும், எளிமையாகவும் வீட்டில் செய்யலாம்.
மொத்தமாக செய்து வைத்துக் கொண்டு தேவைப்படும் போது இதனை உபயோகித்துக் கொள்ளலாம். இனி தோசைப் பொடி செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
உளுந்தம் பருப்பு – 100 கிராம்
கடலைப் பருப்பு – 75 கிராம்
துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்
எள் – 25 கிராம்
கொத்தமல்லி விதை (தனியா) – 2 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – ½ டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – ¼ டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 6 எண்ணம்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வெள்ளைப் பூண்டு – 5 பற்கள் (பெரியது)
உப்பு – தேவையான அளவு
தோசைப் பொடி செய்முறை
மிளகாய் வற்றலை காம்பு நீக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் உளுந்தம் பருப்பைப் போட்டு வறுக்கவும்.
பருப்பு சூடானவுடன் அதனுடன் காம்பு நீக்கிய மிளகாய் வற்றலைச் சேர்த்து சிவக்க வறுக்கவும்.
பின்னர் கடலைப் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை தனித்தனியே சிவப்பாக வறுக்கவும்.
பின்னர் எள்ளைச் சேர்த்து வறுக்கவும்.
எள் படபட என வெடித்ததும் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கொத்தமல்லி விதை, சீரகம், வெந்தயம், மிளகு ஆகியவற்றை ஒன்றாக வறுத்து வறுக்கவும்.
கறிவேப்பிலையை தனியே சுருள வறுக்கவும்.
பூண்டினைத் தனியாக வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த பொருட்களை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து சூடு போக ஆற வைக்கவும்.
பின்னர் மிக்ஸியில் ஆறிய பொருட்களையும், தேவையான உப்பினையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
சுவையான தோசைப் பொடி தயார்.
இதனை காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் பெருங்காயப் பொடி சேர்த்து தோசை பொடி தயார் செய்யலாம்.
அருமை.சோதரி..கைப்பக்குவமே. மெய்ப்பக்குவமென மொழிவர் முன்னோர்..சுவையூறும் அருஞ்சுவை பொடிவகைகளபொடிவகைகளைச் செய்யும் முறைகளை தெள்ளத் தெளிவாக ஒவ்வொன்றையும் விளக்கிக் கூறியிருப்பது மனந்திறந்து பாராட்டக் கூடியது..உங்கள் கைகளுக்கு சபாஷ்