நகத்தின் பயன் உங்களுக்குத் தெரியவில்லை என்றால் இந்த உரையாடல் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
“கணி, என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?”
(வளர்ந்த விரல் நகத்தை வெட்டிக் கொண்டே)
“வாங்க வேதி… எப்படி இருக்கீங்க…?”
“நல்லா இருக்கங்க… நீங்க…?”
“நல்லா இருக்கேன்வேதி. மன்னிச்சிகுங்க! வரும்போது ஏதோ கேட்டீங்களே!”
“என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு கேட்டேன். ஆனா இப்ப தெரிஞ்சுகிட்டேனே!”
“அதுவா… கைவிரல்ல நகம் அதிகமா வளந்துடுச்சி.. அதான் வெட்டிக்கிட்டு இருந்தேன்.”
“கணி, வெட்டிய நகத் துண்டுகள என்ன செய்யப் போறீங்க?”
“இத குப்ப தொட்டியிலதான் தூக்கி போடனும்.வேற என்ன செய்ய முடியும் வேதி?”
“ஆமாம்! நீங்க சொல்றது சரிதான். நம்மால இந்த நகத் துண்டுகள வெச்சு ஒன்னும் செய்ய முடியாதுதான்!”
“வேதி, விரல் நகங்கள பத்தி ஏதோ செய்தி உங்ககிட்ட இருக்குன்னு நினைக்கிறேன். என்ன சரியா?”
“எப்படி கண்டுபிடிச்சீங்க கணி?”
“இல்ல… நகத் துண்டுகள வச்சு நம்மால ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொன்னீங்களே, அந்த தொணியே சொல்லுதே! வேற யாரோ நகங்கள பயனுள்ளதா மாத்தியிருக்காங்கன்னு!
நிச்சயமா இது விஞ்ஞான தகவலாதான் இருக்கனும். நகத்தின் பயன் பற்றி தெரியுமா? நகத்த வச்சு என்ன செய்ய முடியும்? சொல்லுங்க வேதி.”
நகத்தின் பயன்
“சொல்றேன் கணி. விஞ்ஞானிகள், வெட்டப்பட நகத் துண்டுகள பயனுள்ள நானோ பொருளா மாற்றியிருக்காங்க! இந்த தகவலத்தான் சொல்ல வந்தேன்.”
“என்ன! சும்மா குப்பதொட்டியில தூக்கிபோடுர நகத் துண்டுகளிலிருந்து நானோ பொருளா? ஆச்சரியமா இருக்கே!”
“ஆமாம் கணி! நகங்களிலிருந்து நைட்ரஜன் மற்றும் கந்தகம் அணுக்கள் உள்ளடங்கிய கார்பன் நானோப் பொருள எரித்தல் முறையை பயன்படுத்தி தயாரிச்சிருக்காங்க.
இது எப்படி சாத்தியமாச்சுன்னா, விரல் நகங்கள்ள இருக்கும் புரதத்தால்தான். குறிப்பா சொல்லனும்னா கெராட்டீன் புரதம்.”
“வேதி, தலைமுடியிலையும் கெராட்டீன்தான இருக்கு? இத நீங்க ஒருமுறை சொல்லியதாக ஞாபகம்.”
“ஆமாம். ஆனா நகத்துல, தலைமுடியில இருக்கும் கெராட்டீனோட எபிடெர்மல் கெராட்டீனும் இருக்கு. அதாவது, நகத்துல இருக்கும் கெராட்டீனுல கந்தகத்தை உள்ளடக்கிய அமினோ அமிலங்கள் அதிகமா இருக்கு.
ஆக, நகத்துல கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்சிஜன், மற்றும் கந்தகம் அதிகமா இருக்குது. இதனால, நைட்ரஜன் மற்றும் கந்தகம் உள்ளடங்கிய கார்பன் நானோப்பொருள சுலபமா விஞ்ஞானிகளால தயாரிக்க முடிஞ்சிது.”
“நல்லது வேதி. ஆனா இந்த கார்பன் நானோப் பொருளால என்ன நன்மைகள கண்டுபிடிச்சிருக்காங்க?”
“இது முக்கியமான கேள்வி கணி. பொதுவாகவே கார்பன் நானோபொருள் உணர்வீயாகவும், மருந்துப்பொருளிலும், மூலப்பொருள் உற்பத்தியில வினை ஊக்கியாகவும் பயன்படுது.
குறிப்பா இந்த கார்பன் நானோப் பொருள பயன்படுத்தி, மாசுபட்ட நீரில் இருக்கும் குரோமியம் உலோக அயனிகள துல்லியமா கண்டு பிடிச்சிருக்காங்க.
அத்தோட காயங்கள குணப்படுத்துவதற்கும் இது பயன்படும்ன்னு சில ஆய்வுகள் மூலம் தெரிவிச்சிருக்காங்க. காரணம் இந்த கார்பன் நானோப்பொருள் உயிரினங்களுக்கு எந்த தீங்கையும் செய்யறதில்லையாம்.”
“சிறப்பு! இன்னும் ஒரு கேள்வி. அதிக அளவு இந்த கார்பன் பொருள தயாரிக்கனும்ன்னா அதிக அளவு நகத் துண்டுகள் தேவைப்படுமே! இது சாத்தியமா?”
“உம்ம்… மேலை நாடுகள்ல முடித் திருத்தகங்கள் மாதிரி நகத் திருத்தகங்களும் (Nail salon) இருக்கு. அதன் மூலம் நகத் துண்டுகள் சேகரிச்சிப்பாங்க.”
“ஓ…ஓ… அப்படியா? நன்றி வேதி, இந்த தகவல்களுக்கு.”
முனைவர் ஆர்.சுரேஷ்
சென்னை.
அலைபேசி: 9941091461
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!