நகரமயமாதல் என்பது கிராமப்புறங்களில் இருந்து மக்கள் நகரத்திற்கு குடியேறுவதாகும். வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் மற்றும் சொந்த காரணங்களுக்காக மக்கள் நகரங்களை நோக்கி வருகின்றார்கள்.
விவசாயம் என்பது ஒரு லாபகரமான தொழிலாக இல்லாமல் போய்விட்டது. கிராமப்புறங்களில் வேறு தொழில்களும் சரியாக அமையவில்லை. எனவே கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்கு வருகின்றார்கள்.
நகரமயமாதலை ஊக்குவிக்கும் காரணிகள் தொழில்மயமாதல், வர்த்தகமயமாதல் மற்றும் அதிகப்போக்குவரத்து சேவைகள் மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகியவை ஆகும்.
நகரமயமாதலை விவசாயமல்லாத மற்றத்தொழில்களைச் செய்பவர்களின் எண்ணிக்கை மற்றும் மிகுந்த மக்கள்தொகை அடர்த்தியைக் கொண்டு அறியலாம்.
தமிழ்நாட்டின் நகரமயமாதலின் அளவு 2011 மக்கள் தொகை கணக்குப்படி ஏறக்குறைய 48.4 விழுக்காடு ஆகும். இந்தியாவில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு நகரமயமாதலில் முதல் இடத்தில் இருக்கிறது.
தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய பகுதிகள் வேகமான தொழில் வளர்ச்சியாலும் , சென்னை நகருக்கு அருகாமையில் இருப்பதாலும் அதிவேகமாக நகரமயமாக்கப் பட்டிருக்கிறது. இதனால் அந்தப் பகுதிகள் அதிவேகமாக சுற்றுச்சூழல் சீர்கேட்டினை சந்தித்து வருகின்றன.
நகரமயமாதலினால் ஏற்படும் விளைவுகள்
அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்புகள், காலியாக உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான இடங்களில் முறைப்படுத்தப்படாத குடிசைகள் பெருகுதல் ஆகியவை நகர்புறச் சூழலுக்கு பல்வேறு சீர்கேடுகளை ஏற்படுத்துகின்றன.
நகரமயமாதலின் காரணமாக நகரப்பகுதிகளைச் சுற்றிலுள்ள விவசாய நிலங்கள் மற்றும் புல்வெளிகள் ஆகியவை தொழிற்சாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.
பெருகிவரும் போக்குவரத்தும் அதன் நெரிசலும் சுற்றுசூழல் மாசுபடக் காரணமாகின்றன.
எரிபொருள் தேவைக்காக மரங்களும் புதர்களும் அழிக்கப்படுவதால் பசும்புல்வெளிகள் குறைந்து மழைப்பொழிவு குறைகின்றது.
உயிரினங்கள் வாழும் இடங்களான பசுமைப்பகுதிகள் அழிக்கப்படுவதால் நகர்பகுதிகளில் பிராணவாயுவின் அளவு குறைந்து காற்று மாசுபடுகின்றது.
வேகமாகப் பெருகிவரும் நகர்புற மக்கள் பெருக்கத்தினால் மாநகர, நகர, சுகாதார வசதிகள் பாதிக்கப்படுவதோடு சேவை வசதிகளின் குறைபாடுகளும் உண்டாகின்றன.
நிலத்தின் தேவைக்கு ஏற்படும் போட்டியினால் நிலத்தின் மதிப்பீடு அதிகரித்து வீட்டு வாடகையும் அதிகரிக்கிறது.
நகரமயமாதலைக் குறைப்பது எப்படி?
கிராமம் தான் இந்தியாவின் இதயம் என்றார் காந்தி. அத்தகைய கிராமங்களை வளப்படுத்தினால் நகரமயமாதல் குறையும்.
அரசு விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அரசின் திட்டங்களில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் செழிக்க அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும். அரசின் திட்டங்கள் கிராமப்புறங்களில் சிறப்பாகச் செயல்படுமாறு கவனிக்க வேண்டும்.
அரசு கிராமப்புறங்களில் இருக்கும் தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படும் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் இருக்கும் தொழிற்சாலைகளின் கழிவுகள் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.
தரமான கல்வி மற்றும் மருத்துவம் கிராம மக்களுக்குக் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
மேலும் கிராமத்து மக்களும் தங்கள் ஊரின் வசதிகளை அதிகரிக்கத் தங்களாலான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளும் சீராக வளரும்போது மக்கள் ஒரு சில இடங்களில் குவிவது குறையும்.
– வ.முனீஸ்வரன்
மறுமொழி இடவும்