வாழ வேண்டுமா? நகரு

நகரமானாலும் சிகரமானாலும்
நீ நகராமல், உன் ஆயுள் நகராது.
நகர நகர பிணி மூப்பு மரணமும் நகரும்.

நகராத எதுவும் கடந்த காலம்.
நகரும் எதுவும் நிகழும் காலம்.
நகராத நொடிமுள், நிமிடத்தில்
நிற்கும்.மணிநேரம் பொய்க்கும்.
நகராத வாகனத்தை துருவும்
தூசியும் அரிக்கும்.

நகர நகர ஆக்ஸிஜன் ஆனந்த தாண்டவமாட,
நுரையீரல் பூரிக்கும். நுரையீரல் பூரித்தால்
இதயம் முழுதும் உயிர்காற்று உள்ளூர சிரிக்கும்.
இதயத்தின் உயிர்காற்று இரத்தத்தின் வழியே
நாடி நரம்பெல்லாம் உல்லாசப் பயணம் செல்லும்.
உடலின் ஒவ்வொரு செல்லும் துள்ளும்.

கையில் காசில்லையா? நகரு.
வாழ்க்கை கதவுகள் வழியை
அடைத்தாலும் மாற்றுவழியில் நகரு.
வறியவன் ஆகினும் நகர்வலம் வந்தால்
அரண்மனைகள் திறக்கும் நகரு.
கடும்பிணியையும்‌ கொடும்பனியையும்
விரட்டி கதகதப்பாக வாழ ஆசையா? நகரு.

வலிகள் இல்லாத வழியில் வாழவேண்டுமா? நகரு.
வலிகள் திருகிப் போடுகிறதா? மெல்ல நகரு.
உள்ளுக்குள்ளே என்ட்ராஃபின் (Entrophen) சுரக்கும் இன்பம் பிறக்கும்.
வெறும் காலோ சக்கரமோ, எதுவானாலும் நகரு.

நகரும் கிழவனும் இளைஞன்.
நகராத இளைஞனே கிழவன்.
நகர நகர நாடே வசமாகும்.
நகர விருப்பமில்லையா? கதறு.

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.