நடக்கக் கூடாதது!

ரஞ்சனி எது நடக்கக்கூடாது என்று நினைத்தாளோ அது நடந்து விட்டது. பயந்த மாதிரியே ஆகிவிட்டது இப்போது. இருப்புக் கொள்ளமால் தவியாய்த் தவித்தாள்.

நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு, முகூர்த்தத் தேதியையும் குறித்து விட்டிருந்தார்கள் பெற்றோர்கள். திருமணத்திற்கு இன்னும் பதினைந்து தினங்களே இருந்தன.

இந்த சமயத்தில் இப்படி ஓர் இக்கட்டான நிலையா? மாப்பிள்ளைப் பையன் சொந்த அத்தை மகன்தான். என்னதான் நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் அவர்கள் எல்லோர் முன்னாலும் தலைநிமிர்ந்து நிற்க முடியாமல், எவரையும் நேருக்கு நேர் பார்க்க முடியாமல் இப்படி ஏற்பட்டு விட்டதை எண்ணி மனதிற்குள் மருகினாள்.

‘சாரதாஸ்’, ஆனந்தா சில்க் பாரடைஸ்’, ‘கீதா சில்க் அண்டு சாரி பஜார்’ என்று எவ்வளவோ திருச்சியிலிருக்க, அனைத்தையும் விட்டுவிட்டு திருமண ஜவுளிக்காக இரண்டு நாட்கள் முன்பு சென்னை சென்றிருக்கிறார்கள் ரஞ்சனியின் அப்பாவும் அம்மாவும்.

திருமணத்தை முன்னிட்டு நாளை ரஞ்சனியின் அக்காவும் அத்தானும் பெங்களுரிலிருந்து வந்துவிடுவதால், சமையல்காரியும், தோட்டக்காரனும் இருக்கிற தைரியத்தில் தனியாக அவளை விட்டுப் போயிருந்ததால் வந்த வினை.

ரஞ்சனி தன்னைத் தானே நொந்து கொண்டாள்.

‘நாளை மறுநாள் அவள் பெற்றோர்கள் சென்னையிலிருந்து வந்து விடுவார்கள். அவர்கள் முன்பு எப்படி நிற்க முடியும்? அவர்கள் முகத்தில் எப்படி விழிப்பது?’ ரஞ்சனி குழம்பினாள். அத்தை மகன் ராஜேஷ் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவளுக்கு.

இரண்டு நாட்கள் முன்பு நடந்த அந்நிகழ்ச்சி அவளது மனத்திரையில் படமாக ஓடியது.

ரஞ்சனியின் அப்பாவும் அம்மாவும் ஆறேகால் பஸ்சில் சென்னை சென்ற பிறகு, அன்று காலை பத்து மணி அளவில் ராஜேஷ் திருமணப் பத்திரிக்கை புரூபை எடுத்துக் கொண்டு மாமாவைத் தேடி வந்தான்.

வீட்டிற்குள் நுழைந்ததும் அணிந்திருந்த கூலிங் கிளாசைக் கழற்றிய படியே சுற்றிப் பார்த்தான். ஹாலிலிருந்து வெளிப்பட்ட ரஞ்சனி மூலமாக அவளது பெற்றோர்கள் சென்னை சென்றிருப்பதை அறிந்தான்.

இருவரும் ரஞ்சனியின் அறையில் பேசிக் கொண்டிருந்தனர். ராஜேஷின் வருகையை அறிந்த சமையல்காரி, காபி தயாரிக்கச் சென்று விட்டாள்.

அந்த தனிமையான சூழ்நிலையில் அவனது வருகையும், அவன் இருந்த நிலையும் தன்னை எந்த விதத்திலும் பாதிக்காமலிருக்க வேண்டுமே என நினைத்து ரஞ்சனி பயந்தாள்.

நெருங்கிய சொந்தமும் முறைப்பையன் என்கிற உறவும் இருவருடைய நெருக்கத்தையும் பிறர் சந்தேகிக்க முடியாதபடிக் கட்டிக் காத்தது.

தான் மணக்கப்போகும் ரஞ்சனியின் அருகாமையும் அந்தத் தனிமைச் சூழ்நிலையும் ராஜேஷின் மனதைச் சலனப்படுத்தியது. தன்னுடையவள் தானே என்ற தைரியம்.

கூச்சப் படாமல் வாய்விட்டே ரஞ்சனியிடம் கேட்டு விட்டான். ரஞ்சனி பேச்சை மாற்றி அவனது கவனத்தைத் திசை திருப்ப முயன்றாள்.

‘ரஞ்சனி, தம்பிக்குக் காபி குடும்மா..’ என்று குரல் கொடுத்தவாறே சமையல்காரி அவர்கள் இருந்த அறையை நோக்கி வர, இருவரும் திடுக்கிட்டுத் தங்கள் நிலை உணர்ந்து விலகினார்கள்.

நல்லவேளையாக சமையல்காரி அறைக்குள் வராமல், எட்டிப் பார்க்காமல் இருந்ததை எண்ணி ஆறதலடைந்தார்கள்.

ராஜேஷ் கண்ணாடியை மாட்டிக் கொண்டு சென்று விட்டான்.

கண்ணிமைக்கும் நேரத்தில் எப்படி நடந்து கொண்டு விட்டான்? அவனால் வந்த வினை தானே இது? என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தாள்.

அவன் சென்ற இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் அவனை இந்த அளவுக்கு அனுமதித்திருக்க வேண்டாமோ என மனம் சஞ்சலம் அடைந்தது.

‘நடந்தது நடந்து விட்டது. இனி என்ன செய்ய முடியும்? அப்பா, அம்மாவைப் பார்க்கும்போது மனசாட்சி குறுகுறுக்கும். அவர்களை நேருக்கு நேர் பார்க்க முடியாது. ஏன்ன பண்ணுவது? தன்னைக் கட்டிக் கொள்கிறவன் தானே!’ என்று ஆறுதலடைய வேண்டியதுதான்.

இப்படியெல்லாம் நினைவலைகளுடன் தள்ளாடிக் கொண்டிருந்தாள் ரஞ்சனி.

‘நாளை அக்காவும் அத்தானும் வந்துவிட்டால் வெளியே எங்கும் செல்ல முடியாது. நாளை மறுநாள் அப்பாவும் அம்மாவும் வந்து விடுவார்கள். இன்றைக்கே நர்மதாவைப் போய் பார்த்து ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டாலென்ன?’ எனத் தோன்றியது ரஞ்சனிக்கு.

நர்மதா அவள் கிளாஸ்மேட். லேடி டாக்டர். தில்லைநகர் பத்தாவது கிராசில் கிளினிக்.

ரஞ்சனி டாக்டர் நர்மதாவிடம் இரண்டு நாட்கள் முன்பு நடந்தவற்றை அப்படியே கூறினாள். தோழிதான் என்றாலும், கூடவே வெட்கமும் கூச்சமும் அவளைத் தடுமாற வைத்தன.

எல்லவாற்றையும் கவனமாகக் கேட்டுக் கொண்ட டாக்டர் நர்மதா, ரஞ்சனியை உள்ளே கூட்டிச் சென்று நன்றாக டெஸ்ட் செய்த பிறகு, ‘பயப்படாதே ரஞ்சனி! நல்ல சமயத்தில் தான் வந்திருக்கிறாய். இன்னும் டிலே செய்திருந்தால் கண்களைத் திறக்க முடியாமல் போயிருக்கும்.

உன் அத்தானுக்கு இருந்த கண்வலி உன்னையும் தொற்றிக் கொண்டு விட்டது. அவ்வளவுதான். இந்த ‘ஐ’ டிராப்சையும், ஆயின்ட்மென்டையும் தினம் இருமறை கண்களில் போட்டுக் கொள். சரியாகி விடும்.’ என்று கூறினாள்.

ரஞ்சனிக்கும் பெரும் பாரத்தைத் தலையிலிருந்து இறக்கி வைத்த உணர்வு ஏற்பட்டது!

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998