சிதம்பரம் ஆகாச அம்சமாகச் சொல்லப்படுகின்றது.
உலகில் உள்ள மக்கள் யாவரும் எல்லைக் கடந்த சோதியில் சேரும் பொருட்டே சிதம்பரத்தில் நடராஜர் காலைத் தூக்கி நடம் புரிந்து காட்டினார். அது தேவ இரகசியம் என்று சொல்லப்படும்.
அதை எளிமையாக அறியலாம்
சுவாசமென்னும் நெருப்பும் வியர்வை என்னும் நீரும் உம்மிடத்தே இருப்பதை அநுபவத்தால் அறிந்து சொல்ல வல்லமை உடையவரானால், எல்லை கடந்த சோதியில் கலந்திருக்கலாகுமே.
நெருப்பை மூட்டி நெய்யை விட்டு நித்தம் நித்தம் நீரிலே
விருப்பமுடன் நீ குளிக்கும் வேதவாக்கியம் கேளுமின்
நெருப்பும் நீரும் உம்முளே நினைந்து கூற வல்லிரேல்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமே. (சிவவாக்கியர்)
(இங்கே நெருப்பென்றது சுவாசமென்னும் மூலக் கனலால் குண்டலி சக்தியைக் எழுப்புவதைக் குறிக்கும். அக்கனலால் வியர்ப்பதை நீரில் குளிப்பதாகப் பொருளாகும்.)
நடராஜ நடனம்
ஒருபாதந் தன்னைத் தூக்கி ஒருபாதந் தன்னை மாற்றி
இருபாதம் ஆடுகின்ற இயல்பைநீ அறிந்தாயானால்
குருபாதம் என்று கூறும் குறிப்பு உனக்குள்ளேஆச்சு
இருபாத நாகை நாதர்மலரடி காண்பாய் நெஞ்சே
(நெஞ்சறி விளக்கம்)
ஒரு பாதம் தன்னைத் தூக்கி – வலது கை மோதிர விரலால் இடது நாசியை மூடி, வலது நாசியில் சுவாசமென்னும் பாதத்தை தூக்கி (இழுத்து) ஐம்பது எண்ணும் வரை நிறுத்தி,
ஒருபாதம் தன்னை மாற்றி – வலது நாசியில் இழுத்து நிறுத்திய சுவாசத்தை, வலதுகைப் பெருவிரலால் வலது நாசியை மூடி, இடது நாசியின் வழியாய் மாற்றி நாலங்குல சுவாசத்தை வெளியில் விட்டு,
இருபாதம் ஆடுகின்ற இயல்பை – இப்படி சுவாசத்தை இடது நாசியில் இழுத்து வலது நாசியில் மாற்றும் தன்மையை
நீ அறிந்தாயானால் – சூட்சும அறிவினால் அறிந்தாயானால்
குரு பாதம் என்று கூறும் குறிப்பு – அது நீயாவாய் என்று குருவினால் உபதேசிக்கப்பட்ட குறிப்பு.
உனக்குள்ளே ஆச்சு – உனக்குள்ளே விளங்கும்.
இருபாத நாகை நாதர் – இடகலை பிங்கலையாய் நடக்கும் நாகமென்னும் சுவாசத்தைக் காட்ட, கால்களைத் தூக்கி நடனம் செய்து காட்டிய நடராஜர்
மலரடி காண்பாய் நெஞ்சே – பாத கமலங்களை தரிசிப்பாய் மனமே.
சுவாசத்திற்கு கால், யக்ஞோப வீதம், பிரம்மசூத்திரம், ஹம்ஸ என்றும், மூச்சு என்றும், நூல் என்றும், உயிர் என்றும், வாசி என்றும், குதிரை என்றும், கயர் என்றும் பலபெயர்கள் உண்டு.
கையிலிருக்கும் உடுக்கையால் ஒலி எழுப்பி மக்களாகிய நம்மை அழைக்கின்றார்.
மறுகையிலிருக்கும் மானைக் காட்டி ஓடி அலைகின்ற மனத்தையும், அதை சாம்பலாக்க ஒருகையில் நெருப்பையும் வைத்து நமக்கு காட்டுகின்றார்.
ஐந்து நாக ஆபரணங்களை அணிந்து பிராணவாயு, அபாநவாயு, உதானவாயு, சமாந, வியாந மென்னும் வாயுக்களாக இருந்து மூக்கின் வழியாக ஓடிக் கொண்டிருக்கும்.
(1. மூக்கின் வழியாக இயங்கி அனைத்திற்கும் ஆதாரமாக உள்ள வாயு 2. மலம், சிறுநீர் போன்றவற்றை வெளியேற்றும் 3. மூளையின் கட்டளையை அனைத்து உறுப்புகளுக்கும் கொண்டு செல்லும் 4. ஒலியை எழுப்பச் செய்யும் 5. உண்ணும் உணவை செரிமானமாக்க உதவும்.)
இப்படி பாம்பு போல் ஓடிக் கொண்டிருக்கும் சுவாசத்தை பாம்பாட்டி போல் அடக்க பயிற்சி செய்யவேண்டும் அதைக்காட்டவே நாகத்தை அபரணமாகக் காட்டுகின்றார்.
மேலும் நம்மைத் தொடர்ந்து வரும் மாயை என்னும் அரக்கனை, காலால் மிதித்து, சூலத்தினால் குத்தி அக்கினியினால் பொசுக்கி நில்லாமல் ஓடும் மனதை சாம்பலாக்கி அதையே தரித்தும், மறுபடியும் அந்த மாயை தம் தலையில் புகுந்து கொள்ளாதபடி அம்மண்டையை மாலையாக தரித்தும் மிகப் பெரிய யோகத் தத்துவத்தைக் காட்டுகின்றார்.
இந்த இரகசியக் கோட்பாடுகளை உணராத நாம் மாய வலைகளில் அகப்படுகின்றோம். அம்மாயயை அவனருளால் பொசுக்கி நீராய் தரிப்போம்.
இவ்வரிய கருத்துகளை ஆய்ந்து அறிவோம். வக்கனை வார்த்தைகளை புறந்தள்ளுவோம்.
இராமமூர்த்தி இராமாநுஜதாசன்
திருநின்றவூர்-602024
கைபேசி: 9444410450
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!