நண்டுகளும் வளைகளும்

நண்பகல் நேரமது

நண்பனோடு வயலுக்குப் போயிருந்தேன்

வாய்க்கால் வழியே நீரோட்டம்

தண்ணி எங்க போகுது? கேட்டேன்

 

தொலைவிலொரு தோட்டம் காட்டினான்

சுற்றிவிட்டுத் திரும்புகையில் அவன்

சுட்டிய தோட்டம் பார்த்தேன்

தண்ணீரின் அடையாளம் சிறிதுமில்லை

 

நண்பனை நோக்கினேன் வாய்க்காலைப் பார்த்தேன்

மடையிலிருந்து தோட்டம் வருமுன்னே

ஆங்காங்கே தண்ணீர் வெளிப்பட்டு வீணாய்

காரணம் நண்டுகள் அவை செய்த வளைகள்

 

வீடு திரும்பினோம் ரேசன் கடைல சீனி போடுறாங்களாம்

வீதியில் பரபரப்பு

அட்டையுடன் அவசரமாய் வரிசையில் நான்

ஐந்தே நிமிடம்தான்

 

சீனி காலியாயிருச்சு ஊழியரின் பதில்

ஏனோ என் மனதில்

நண்டுகளும் அவை செய்த வளைகளும்

கூடவே பொறுப்பற்றத் தோட்டக்காரனும்

– வ.முனீஸ்வரன்