நண்டு வளர்த்த மரம்

அந்த வனத்தில் வசித்த வயதான நண்டு நல்லக்காள் பகல் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த நெல்லை சமைத்து சாதமாக்கி தன் குழந்தைகளுக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தாள்.
அப்போது எதிரே வந்த குரங்கு குப்புசாமி நல்லக்காள் நண்டு சாதம் கொண்டு வருவதை கவனித்து இதை எப்படியாவது ஏமாற்றி இந்த சாதம் முழுவதையும் தின்றுவிட வேண்டும் என மனதில் திட்டம் போட்டு நண்டு நல்லக்காளிடம்

 

‘நண்டே! நண்டே! நல்லக்கா – நீ

நகர்ந்து செல்வதும் அழகக்கா!

உண்டிடத்தானே இச்சாதம்

உடனே எனக்கு கூறக்கா!’ என்று கேட்டது.

 

‘குரங்கண்ணா! குப்பண்ணா!

குசும்போ உனக்கு ரொம்பண்ணா – என்

குஞ்சுகள் பசியில் கிடக்கண்ணா

பளிச்சென இருக்கும் இச்சாதம் – அதன்

பசிக்கு விருந்தாய் இருக்கண்ணா’ என பதில் கூறிவிட்டு தன் வழியே நண்டு நல்லக்காள் நடக்கத் தொடங்கியது.

 

உடனே குரங்கு குப்பண்ணாவின் மனதில் புதிய திட்டம் ஒன்று உருவானது. அது வேகமாக சென்று ஒரு கொட்டையுடன் கூடிய இளம் மாங்கன்று ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு மீண்டும் நண்டின் முன்னே சென்று நின்றது.

 

‘நண்டே! நண்டே! நல்லக்கா – நீ

நகர்ந்து செல்வதும் அழகக்கா

கண்டாயோ நீயும் மாங்கன்றை – அது

கனிந்த மாங்கனி தருமக்கா

இதுதான் அதன் விதையக்கா

எடுத்துச் சென்று நீ வளருக்கா

பதிலாய் சாதம் எனக்குத்தான்

பசிக்காய் தந்தால் போதுமக்கா’ என குரங்கு குப்பண்ணா நண்டிடம் கூறியது.

 

இதைக் கேட்ட நண்டு நல்லக்காள் சிறிது யோசித்து குரங்கு சொல்வதிலும் தனக்கு இலாபம் இருப்பதாக அது கருதியது. சாத உருண்டையை கொண்டு சென்றால் தன் குடும்பத்தார்க்கு ஒரு வேளைக்கு மட்டுமே பசியாற முடியும். இந்த மாங்கன்றை வளர்த்தால் தன் குடும்பம் உணவுக்காக கஷ்டப்படத் தேவையில்லையே என அது நினைத்தது.

 

‘குரங்கண்ணா! குரங்கண்ணா – நீ

சொல்வதும் மெத்த சரியண்ணா

கொட்டையுடன் மாங்கன்றை

கொடுத்திட சாதம் தருவேன் நான்

என்று குரங்கைப் பார்த்து கூறியதும் குரங்கும் தனது எண்ணம் நிறைவேறியது என மகிழ்ந்து தன்னிடமிருந்த மாங்கன்றை கொடுத்துவிட்டு சாத உருண்டையை வாங்கிக் கொண்டு விரைந்து மறைந்தது.

 

மாங்கன்றுடன் தன் வீட்டை அடைந்த நண்டு நல்லக்காள் ஆழமான ஒரு குழியினை தோண்டி அதற்குள் மாங்கன்றினை நட்டு பின் மண்ணால் மூடி வைத்து நீர் தெளித்துச் சென்றது. அன்று முதல் தவறாது தண்ணீர் ஊற்றி வளர்த்தது.

 

‘மண்ணில் கிடக்கும் மாங்கன்றே

மரமாய் என்று வருவாயோ?

தின்னப் பழங்கள் தருவாயோ?

திகட்டும் இனிப்புச் சுவையோடு’ என்று மாங்கன்றினைப் பார்த்து கேட்டது.

 

‘நண்டு அக்கா நல்லக்கா

நலமாய் நானும் வளர்வதற்கு

அண்டை வீட்டின் பசுங்கன்றின்

அருமைச் சாணம் வேணுங்கா’ என்று மாங்கன்று கூறியது.

 

நண்டு வேகமாகச் சென்று தன் பக்கத்து வீட்டில் குடியிருந்த பசுவிடம் சென்று

‘பாசமுள்ள பசுவம்மா

நேசம் உனக்கு நிறையம்மா

குரங்கு குப்பு தன் திட்ட

கொட்டை மரமாய் முளைப்பதற்கு

உரமாய் உந்தன் சாணம் தா

உனக்கும் கொஞ்சம் மாங்கனிகள்

கணக்காய் தருவேன் நானம்மா’ என்று கூறியது.

இதனைக் கேட்ட பசு தன் கன்றின் சாணத்தை நண்டு நல்லக்காளிடம் கொடுத்து அனுப்பி வைத்தது. அதனை மிகவும் கஷ்டப்பட்டு தூக்கி வந்து அந்த மாங்கன்றின் அருகில் அதனைக் கொட்டியது. அதனை கண்ட மாங்கன்று சிறிய செடியாக வளர்ந்தது. அது மறுபடியும் நண்டு நல்லக்காளை அழைத்தது.

 

‘நண்டு அக்கா நல்லக்கா

நலமாய் நானும் வளர்வதற்கு

கொண்டு வருவாய் நீ எனக்கு

கொழுத்த மூங்கில் தடியக்கா – என்

தண்டுடன் அதனை நட்டு வைக்க

தானாய் நானும் வளர்வேனே’ என்றது.

 

அது கேட்ட நண்டு நல்லக்காள் அந்த காட்டின் ஓரத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த மூங்கிலை அடைந்தது. தனக்கு ஒரு நல்லதொரு கிளையை தருமாறு கேட்டது.

 

‘ எட்டா உயரம் வளர்ந்தேனே

முற்றிய மூங்கில் மரத்தவனே

கொட்டையில் முளைத்த மாங்கன்று

சட்டென தானும் வளர்வதற்கு – நீ

வெட்டி தருவாய் உன் கிளையை

வெல்லம் போல் இனிக்கும் பழத்தை

விரும்பி தருவேன் உனக்கும் நான்’ என்று மூங்கில் மரத்திடம் கூறிவிட்டு வளர்ந்த கிளையை அது கொடுத்தது. அக்கிளையை கொண்டு வந்த நல்லக்காள் மாஞ்செடியினை ஒட்டி நட்டு வைத்தது. அதனை பிடித்தவாறே மாஞ்செடியும் வளர்ந்து மரமானது.

 

சில நாள்கள் கழித்து மாமரத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கின. அப்போது மீண்டும் நண்டு நல்லக்காளை அம்மாமரம் அழைத்தது.

 

‘நண்டு அக்கா நல்லக்கா!

நலமா நீயும் கூறக்கா

இன்று எந்தன் உடல் தனியே

எத்தனை எத்தனை மலரக்கா

இத்தனை மலரும் காய்த்திடவே

இனிய தேனியை அழைத்திட்டு

கனிவாய் எந்தன் உடல்மீது

காய்த்திட்ட மலர்களை காட்டக்கா’ என்று கூறியது. அது கேட்ட நண்டு நல்லக்காள் தேனீயை தேடி அதன் கூட்டுக்குச் சென்றது.

 

‘தேனாய் இனிக்கும் தேனம்மா

திரும்பி என்னை பாரம்மா

தானாய் உன்னை அழைத்து வர

சொன்னது எந்தன் மாமரமும்

 

சீராய் அதனில் மலர்களுமே

சிறந்த உணவை உனக்களிக்கும்’ என்று அழைத்ததும் தேனீயும் தன் கூட்டத்தோடு அங்கு சென்று மாமரத்தை மொய்த்தன. மாமரமும் காய்த்து தொங்கியது.

 

மாங்கனிகள் நிறைந்த மாமரத்தை கண்ட குரங்கு குப்பண்ணா விரைந்து மரத்தில் ஏறி கனிந்த பழங்களை பறித்து தின்னத் தொடங்கியது. அதனைக் கண்ட நண்டு நல்லக்காள் தரையில் நின்றபடி தனக்கும் சில கனிகளை பறித்து போடுமாறு குரங்கு குப்பண்ணாவிடம் கேட்டது.

 

‘சரி’ என்று கூறிய குரங்கு குப்பண்ணா நல்ல காய்களை பறித்து நண்டின் மீது குறி பார்த்து எறிந்தது. குரங்கு எறிந்த காய்களினால் நண்டு நல்லக்காளின் உடலில் காயங்கள் உண்டாயின. குரங்கு குப்பண்ணாவின் தீய எண்ணத்தை புரிந்து கொண்ட நண்டு நல்லக்காள் தன் காயத்தோடு தனது உதவி செய்தவர்களிடம் சென்று மீண்டும் உதவி கேட்டுச் சென்றது.

 

‘பசுவே! பசுவே! பசுவம்மா

பாசம் உனக்கு அதிகமம்மா!

உந்தன் கன்றின் சாணத்தில்

உயரே வளர்ந்தது மாமரமும்

எண்ணிலா கனிகள் அதன் மீதே

ஏறிப்பறிக்குது குரங்கண்ணா

எனக்கு கொஞ்சம் கேட்டதற்கு

எறிந்தது காய்களை என்மீது

வலியும் வந்தது அதனாலே

நீ வருவாய் எனக்கு துணையாக

பொல்லாக் குரங்கை விரட்டிவிட்டு

பறிப்போம் மாங்கனி நமக்காக!’ என்று அழைத்ததும் பசுதான் வருவதாக ஒப்புக் கொண்டது. ஆனாலும் தனக்கு உதவியாக மூங்கிலையும் அழைத்து வருமாறு நண்டு நல்லக்காளை அனுப்பி வைத்தது.’சரி’ என்று கூறிய நண்டு மூங்கிலிடம் சென்று அழைக்க ஆரம்பித்தது.

 

‘முற்றிய மூங்கில் அண்ணாவே – என்

முகத்தை சற்றே காண்பாயா?

எத்தன் குரங்கு குப்பண்ணா

என்னை அடித்ததை அறிவாயா?

உந்தன் கிளையின் துணையுடனே

உயிரே வளர்ந்தது மாமரமும்

உண்டிட கனிகளும் தாராளம்

பயமே எனக்கு மரம் ஏற

பாய்ந்து தாவுது குரங்கதிலே

பழங்களை தானாய் தின்பதற்கே

எனக்கும் கொஞ்சம் கேட்டதற்கு

எறிந்தது காய்களை என்மீதே

வலியும் காயமும் அதனாலே –நீ

வருவாயோ எனக்கு துணையாக

பொல்லாக் குரங்கினை விரட்டிவிட்டு

பறிப்போம் கனிகளை நமக்காக!’ என்று அழைத்ததும் சரி என ஓப்புக் கொண்ட மூங்கில் துணையாக தேனீக் கூட்டத்தினரையும் அழைத்து வரச்சொன்னது. நண்டு நல்லக்காளும் தேன் கூட்டிற்கு விரைந்து சென்றது. முதுகில் எற்பட்ட காயத்தோடு தேனீயை அழைத்தது.

 

‘தேனாய் இனிக்கும் தேனம்மா

திரும்பி என்னை பாரம்பா

வீணாய் உனக்கும் தொல்லைதான்

வேறு வழியும் எனக்கில்லை

காய்கள் மிகவும் பழுத்ததினால்

கனிகள் நிறைய மரமதிலே

பாய்ந்தே தாவி அதைப்

பறித்தே தின்னும் குப்பண்ணா

அய்ந்தாறு குட்டிகள் எனக்குண்டு

என்றே நானும் கேட்டதற்கு

அடித்தது காய்களை என்மீது

அதிகம் வலிக்குது அதனாலே

பொல்லாக் குரங்கினை விரட்டிடவே

துணையாய் நீயும் வருவாயோ?

எல்லாக் கனிகளும் நாம் பறித்து

இனிதாய் தின்று மகிழ்ந்திடலாம்’ என்று நண்டு கூறியதைக் தேட்ட தேனீயும் தன் கூட்டத்தோடு வருவதாக ஒட்டிக் கொண்டது. அதன்படியே நல்லக்காளை தொடர்ந்து தேனீக் கூட்டமும் மூங்கில் மரமும் பசுவும் வந்து மாமரத்தை அடைந்தன.

 

மரத்தின் கனிகளை வயிறு புடைக்க தின்ற அங்கேயே உறங்கிக் கொண்டிருந்த குரங்கு குப்பண்ணாவை தேனீக் கூட்டம் கொட்ட ஆரம்பித்தது. அதனைத் தாங்க இயலாத குரங்கு பதறியபடியே வேறு மரத்திற்கு தாவ முயன்றது.

 

அப்போது மூங்கில் அதனை ஓங்கி அடித்தது. மூங்கிலின் அடியை தாங்க இயலாத குரங்கு குப்பண்ணா மரத்தை விட்டு கீழே இறங்கியதும் பசுமாடு அதனை துரத்த ஆரம்பித்தது. வெகு நேரம் மூச்சிரைத்தபடியே ஓடிய குரங்கு குப்பண்ணா அந்த காட்டை விட்டே வெளியேறிவிட்டது.

 

பின்னர் நண்டு நல்லக்காள் தேனீக்கள், பசு என அனைத்தும் மூங்கில் துணையுடன் கனிந்த மாங்கனிகளை பறித்து பங்கிட்டு உண்டு ஒற்றுமையாக வாழ்ந்தன.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.