சொர்க்க வனம் 10 ‍- நண்பர்களின் உரையாடல்

அன்று மாலை ஆறு மணிக்கு…

வெளிச்சம் மங்கியிருந்தது. சொன்னபடியே, பூங்குருவி கூட்டத்தின் தலைவன் ரெட்விங், ஸ்வாலோ குருவிகள் தங்கியிருந்த மரத்தை வந்தடைந்தது. ரெட்விங்குடன் அதன் மூன்று நண்பர்களும் வந்திருந்தன.

அங்கு, வாக்டெய்ல் தனது புத்தகத்தில் பயண அனுபவங்களைப் பற்றி குறிப்பு எழுதிக் கொண்டிருந்தது.

முதலில் ரெட்விங்கையும் அதன் நண்பர்களையும் பார்த்தவுடன், வாக்டெய்லுக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர், இருன்டினிடே ‘தன் நண்பன்’ வருகை பற்றிச் சொன்னது நினைவிற்கு வந்தது.

உடனே “வணக்கம் ஐயா… வாங்க… வாங்க…” என்று அவைகளை வரவேற்றது வாக்டெய்ல்.

அதற்கிடையில், ஸ்வாலோ குருவிகள் சிலவும் அங்கு வந்து, ரெட்விங்கையும் அதன் நண்பர்களையும் வரவேற்றன.

புன்னகையுடன் “இருன்டினிடே இருக்காரா?” என்று கேட்டது ரெட்விங்.

“இருக்காருங்க…. நீங்க உள்ள வாங்க…” என்று ஒரு ஸ்வாலோ குருவி சொன்னது. அருகில் இருந்த மற்றொரு ஸ்வாலோ குருவி வாக்டெய்லிடம் தலைவர் இருன்டினிடேவை அழைத்து வரும்படி கூறியது.

சட்டென, வாக்டெய்ல் மர உச்சிக்கு சென்று ரெட்விங் வந்துவிட்டதை இருன்டினிடேவிடம் கூறியது.

மகிழ்ச்சியில் “நண்பர் ரெட்விங் வந்துட்டாரா…. இதோ வரேன்” என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டு, கீழே வந்தது இருன்டினிடே.

 

ரெட்விங் மற்றும் அதன் நண்பர்களை நன்கு உபசரித்துக் கொண்டிருந்தன ஸ்வாலோ குருவிகள். “வா… நண்பா” என்று அழைத்து ரெட்விங்கை தழுவிக் கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது இருன்டினிடே.

ரெட்விங்கும் மகிழ்ந்தது. உடன் வந்தவர்களை இருன்டினிடேவிடம் அறிமுகம் செய்து வைத்தது ரெட்விங்.

அவைகளையும் புன்னகையுடன் வரவேற்றது இருன்டினிடே.

பின்னர், நண்பர் ரெட்விங் பற்றிய பெருமைகளை ஸ்வாலோ குருவிகளுக்கு எடுத்துச் கூறியது. மேலும், (சில ஆண்டுகளுக்கு முன்)  ஒரு சிறு பூசலில் தங்களது நட்பு தோன்றியதையும் விவரித்துச் சொன்னது இருன்டினிடே.

இருன்டினிடே சொன்ன செய்திகளை கேட்டு ஸ்வாலோ குருவிகள் எல்லாம் அகம் மகிழ்ந்தன.

அப்படியே சில மணித்துளிகள் ஓடின. அவை தங்களது நினைவுகளை பகிர்ந்துக் கொண்டிருந்தன.

அப்பொழுது,  “சரி நண்பா, சாப்பிடலாமா?” என்று ரெட்விங்கை அழைத்தது இருன்டினிடே.

“என்னப்பா… இவ்வளவு சீக்கிரமா?  நாங்க சாப்பிட நேரம் ஆகும்ப்பா..” என்றது ரெட்விங். அருகில் இருந்த ரெட்விங்கின் நண்பர்களும் அவ்வாறே கூறின.

“சரி நண்பா, நாம மர உச்சிக்கு போகலாமா?” என்று கேட்டது இருன்டினிடே.

“ஓஓ தாராளமா…” என்று சொல்லி தன் நண்பர்களை பார்க்க, அவை “ஐயா, நாங்க இங்க இருக்கட்டுமா?” என்று கேட்டன.

“சரி நண்பர்களே நீங்க இங்க இருங்க.” என்று ரெட்விங் கூறியது.

பின்னர், இருன்டினிடேவும் ரெட்விங்கும் மர உச்சியை நோக்கி நகர்ந்தன.

 

போகிற வழியில், “இங்க ஒரு குட்டி, புத்தகத்துல எழுதிகிட்டு இருந்துச்சே அது யாரு?” என்று கேட்டது ரெட்விங்.

“ஓஓஒ… அது பேரு வாக்டெய்ல்… இந்த வயசுலேயே வாக்டெய்லுக்கு அறிவு அதிகம்தான்…” என்று கூறி பெருமிதம் அடைந்தது இருன்டினிடே.

“ஆமா… பார்க்கும் போதே தெரியுதே” என்று இருன்டினிடேவின் வார்த்தைகளை ஆமோதித்தது ரெட்விங்.

அதற்கிடையில் அவை இரண்டும் மர உச்சியை வந்தடைந்தன. அங்கு, நிலவின் வெளிச்சம் பரவியிருந்தது. இரவு வானத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன.

குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. ஓய்வின்றி நகர்ந்துக் கொண்டிருந்த கடல் அலைகளின் ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது. அந்த இதமான சூழலில் நண்பர்களின் உரையாடல் ஆரம்பமானது.

“நண்பா இருன்டினிடே. இப்பவும் தெற்கு நோக்கி தான் பயணம் போறீங்களா?”

“ஆமாம் ரெட்விங்… இந்த முறை தெற்குல இருக்கிற சொர்க்க வனத்துக்கு போகிறோம்”

“அப்படியா வாழ்த்துகள் இருன்டினிடே… சிறப்பா போயிட்டு வாங்க…”

“நன்றி ரெட்விங்…”

“சரி நண்பா… உங்க வாழ்க்கை எப்படி இருக்கு..?”

“ஆஆம்… நல்லா இருக்கு ரெட்விங்க்.. உங்களுக்கு….?”.

“உம்ம்.. எனக்கும் நல்லாதான் இருக்கு. ஆனா….”

“என்ன ஆச்சு ரெட்விங்க். உங்க முகத்துல ஏதோ கவல தெரியுது. எதாவது பிரச்சனையா?”

“அப்படிதான்னு நினைக்கிறேன்..”

“என்னப்பா சொல்ற…”

 

“நண்பா இருன்டினிடே. நம்ம சந்ததிகள பற்றித்தான் கவலையா இருக்கு.  அவங்க எதிர்காலம் எப்படி இருக்கும்னு தெரியல?”

“ரெட்விங்… ஏன் இப்படி சொல்றீங்க”

“ஆமாம் நண்பா… பருவநிலை மாற்றத்தால நம்மல தேடி புதுபுது பிரச்சனைகள் வருது.”

“உம்ம்…. ”

“உங்களுக்கு தெரியுமா இருன்டினிடே… இங்கிருந்து கொஞ்ச தொலைவுல ஒரு புல்வெளி இருந்துச்சு. என்னோட பூங்குருவி நண்பர்கள் பலபேரு அங்கதான் வாழ்ந்து வந்தாங்க.

கடந்த மூன்று வருடமா அங்க மழையே இல்ல. அதனால அந்த புல்வெளி பாலைவனம் போல மாறிடுச்சு. மேற்கொண்டு அங்க வாழ முடியாத சூழ்நிலையில, நம்ம நண்பர்கள் புறப்பட்டு இங்க வந்திருக்காங்க.

வழியில உணவு கிடைக்காம சில பேரு இறந்துட்டாங்க. இன்னும் சில பேரு தொடர்ந்து பறந்ததுனால உடல் பாலவீனம் அடைஞ்சு இறந்துட்டாங்க.”

“ஐயோ..கேட்பதற்கே ரொம்பவும் துயரமா இருக்கு.”

“அப்ப நாங்க ரொம்ப மன வருத்தத்துல இருந்தோம். அத்தோட, நாங்க தங்கும் இடத்துக்கு வேற போட்டி வந்துடுச்சு.”

“என்னது தங்குற இடத்துக்கே பிரச்சனையா?”

“ஆமாம் நண்பா… இந்த வருட தொடக்கத்துல, திடீர்ன்னு பல்வேறு பறவை இனங்கள் இங்க வந்து கூடு கட்டி முட்டை வச்சுட்டாங்க. அப்புறம் நம்ம கூட்டதுல இருக்குற குருவிகள் கூடு கட்ட இடம் இல்லாம போயிடுச்சி.

ஒருவழியா இப்ப நாங்க இருக்குற குன்று பகுதிய கண்டுபிடுச்சு குடிபெயர்ந்தோம். அப்படியே வாழ்க்கை போயிட்டு இருக்கு…”

 

“ரெட்விங், எதனால திடீர்ன்னு தங்குமிடத்துக்கு போட்டி வந்துடுச்சு?”

“பொதுவா வருட தொடக்கத்துல இங்க வெப்பமான சூழ்நிலை இருக்காது. ஆனா பருவநிலை மாற்றத்தால இந்த வருடம் கொஞ்சம் சூடான காலநிலை இருந்துச்சு.

அதனால இங்கிருந்து வெளிநாட்டுக்கு நம்ம பறவைகள் இடம் பெயரல. அதேசமயத்துல, முன்கூட்டியே வெளிநாட்டு பறவைகளும் இங்க வந்து முட்டை வைக்க தொடங்கிட்டாங்க. அதனால் வந்த பிரச்சனை தான் இது.”

“அடடா…கடினமான சூழ்நிலை தான்.”

“இந்த வருடம் எப்படியோ சமாதானம் செஞ்சி பறவைகளுக்குள்ள ஏற்பட்ட பிரச்சனைகள தீர்த்துட்டோம்… எல்லா நேரமும் இது சாத்தியமான்னு தெரியல. அதான் வருத்தமா இருக்கு, இருன்டினிடே”

“கவலபடாதீங்க ரெட்விங்… எல்லாம் சரியாயிடும்..”

“பருவநிலை மாற்றம் சரியானா தான் இதெல்லாம் சரியாகும்…”

“ஆமா ரெட்விங்.. நீங்க சொல்றது உண்மை தான்…”

 

நண்பர்களின் உரையாடல் கவலையுடன் நீண்டு கொண்டே இருந்தது. அப்பொழுது வாக்டெய்லும். இரண்டு மூத்த குருவிகளும் அங்கு வந்து, ரெட்விங்கையும், இருன்டினிடேவையும் இரவு உணவிற்காக அழைத்தன. அதனை அடுத்து அவை அங்கிருந்து மரத்தின் கீழ் கிளைக்கு சென்று உணவு அருந்தின.

எல்லாம் உணவு உண்டு முடித்தன.

“நண்பா நீங்க எலோரும் நாளைக்கு எங்க இடத்துக்கு வறீங்க. நாளை மதிய உணவு எங்க வீட்டுல தான்” என்றது ரெட்விங்.

ஒரு சிறிய யோசனைக்குபின் “இல்ல நண்பா உங்களுக்கு ஏன் சிரமம்?” என்றது இருன்டினிடே.

“ஒன்னும் சிரமம் இல்ல” என்றது ரெட்விங்.

“நாங்க எண்பது பேரு இருக்கோம் அதான்…” என்றது இருன்டினிடே.

“நண்பா நான் தான் சிரமம் இல்லைன்னு சொல்லிட்டேன் தயக்கம் வேணாம், நாளைக்கு எல்லோரும் வறீங்க. நானே இங்க வந்து உங்கள கூட்டிட்டு போறேன்.” என்றது ரெட்விங்.

பின்னர் “சரி நண்பா” என்று சொல்லி ரெட்விங்கின் அழைப்பை ஏற்றுக் கொண்டது இருன்டினிடே. நண்பர்களின் உரையாடல் நாளையும் தொடரலாம்.

“நல்லது இருன்டினிடே, அப்ப நாங்க புறப்படுறோம். நேரம் இப்பவே பதினொன்னு ஆயிடுச்சி” என்றது ரெட்விங்.

“சரி நண்பா.. பத்திரமா போயிட்டு வாங்க…” என்று இருன்டினிடே கூறஇ எல்லா ஸ்வாலோ குருவிகளும் அன்புடன் ரெட்விங்கையும் அதன் நண்பர்களையும் வழியனுப்பி வைத்தன.

(பயணம் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com

 

இதைப் படித்து விட்டீர்களா?

சொர்க்க வனம் 9 ‍- நண்பனை சந்தித்த இருன்டினிடே

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.