சொல்லாதீர்கள்!

நண்பர்களே,

என் தந்தை விற்ற பரம்பரை சொத்தின்
தற்போதைய விலையை சொல்லாதீர்கள்!
வீட்டு வாடகை கொடுக்கும் போது
கை நடுங்குகிறது…

பொதுவாய் இருக்கும் நண்பர்கள் யாரேனும்
இறந்து விட்டால் உடனே அழைத்து
என்னிடம் சொல்லாதீர்கள்!
என் நினைவிலாவது அவன்
கொஞ்ச நாள் உயிரோடு இருந்து விட்டுப் போகட்டும்…

என் முன்னாள் காதலி இப்போதும் இளமையாய்
இருப்பதை என் மனைவி முன் சொல்லாதீர்கள்!
உழைத்து உழைத்து ஓடாய்ப் போய் எங்களுக்காக
உதிரம் கொட்டிய அவள் மௌனத்தில் இருந்து
மீண்டெழ ஒரு வாரம் ஆகி விடுகிறது…

நண்பர்களே,
என்னிடம் பொய் சொல்லாதீர்கள்!
உங்களின் எந்த செயலிலும் எனக்கு வருத்தமில்லை!
எதுவும் நிலை இல்லை என்பதால்
இப்போது நிஜத்தைக் கூட நான் நம்புவதில்லை…

முனைவர் க.வீரமணி
சென்னை
கைபேசி: 9080420849

முனைவர் க.வீரமணி அவர்களின் படைப்புகள்

Comments

“சொல்லாதீர்கள்!” மீது ஒரு மறுமொழி

  1. காயத்ரி

    சில நிகழ்வுகளை பற்றி பேசாமல் அமைதி காப்பது மிகநல்லது என்பதை தெளிவுபடுத்தி உள்ளீர்கள். அருமை சார்