நதியோரம் குறும்படம், கணவன் மனைவி இடையிலான நெருக்கம் எவ்வளவு ஆழமானது என்பதைக் கூறும் படம்.
திருமணமான அந்தக் கணத்தில் வரும் முன்னும் பின்னுமான பொழுதுகள், அலாதியான சுகமும், நினைத்தாலே பரவசத்தையும், இனம் புரியா உணர்வையும் தருபவையாகவே அனைவருக்கும் உலா வருகின்றன.
கணவனின் முதல் முத்தம், உடலில் ஜிவ்வென்று ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது மனைவியிடம். இவ்வாறு நிகழ்வதை, இவ்வளவு நுண்மையாக வேறு எந்தக் குறும்படத்திலும் யாரும் இதுவரை பதிவு செய்யவில்லை என்றே கூறலாம்.
இரண்டாம் முத்தத்தில் அவளும் பங்குபெறும் உளவியல் உந்துதல் – இவ்விடத்தில் இக்குறும்படம் ஒரு காதல் காவியமாக உயர்ந்து நிற்கிறது.
கற்பனைகள் நிஜமாகும் பொழுதுகள். வேறு ஒரு கட்டமைப்பில் வாழ்ந்த அனுபவங்கள் மாறிப் புதிய இணைப்பின் கட்டமைப்பில் ஏற்படும் ஆனந்த லயிப்பை, அந்தப் பொழுதுகளில் முன்னர் எப்பொழுதும் இல்லா மன ஓட்டங்கள் இரத்த நாளங்களை உசுப்பேற்றி ஏதோ செய்யும்.
இதை, இந்த உணர்வை, இந்தக் குதூகலத்தைப் படமாக்க முடியுமா? தனிப்பட்ட ஒவ்வொருவரின் உடலுக்குள்ளும் ஏற்படுத்தும் தாக்கத்தை அப்படியே பிறர் அறியும் வண்ணம் கடத்தி விட முடியுமா?
”முடியும்” என்கிறது நதியோரம் குறும்படம்.
திருமணத்திற்குப் பிறகு ஆணும் பெண்ணும் உணர்ந்து தெளிய வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு. அதனைப் பேசியும், நடத்தையில் புரிந்து கொண்டும் நடக்கும்பொழுது, புனிதமான காதலாகவும், சுகமான வாழ்க்கையாகவும் அது அமைந்து விடுகிறது.
விட்டுக் கொடுக்கும் தருணங்களில் ஏற்படும் வெற்றியின் பெருமகிழ்ச்சி இருவருக்கும் அலாதியானது; ஆராதிக்கத் தக்கது. அதனைச் சரியாக இப்படம் காட்டுகிறது.
நதியோரத்தின் மூலம்
இக்குறும்படம், எழுத்தாளர் சுஜாதாவின் ’ஒரே ஒரு மாலை’ என்னும் சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டதாகும்.
சுஜாதாவின் எழுத்துக்கள், சரியான பாதையை அமைத்து தந்து இருந்தாலும், சின்னச் சின்ன மாறுபாடுகள் இப்பட இயக்குனரின் கதை சொல்லும் முறையால் உணர்வுகளை இன்னும் ஆழப்படுத்தி உள்ளன.
வசனங்கள் பார்வையாளனின் நெஞ்சுக்குள் அவரவர் திருமணப் பேச்சுக்களை மீட்டெடுத்து ஒத்துப்போகச் செய்திருக்கிறன.
சுஜாதா அவர்கள் கதை கூறும் முறையில் இக்கதையில் ஒரு புதுமையை புகுத்தி இருந்தார். அதை அப்படியே குறும்படத்தில் திரைக்கதையாகக் கொண்டு வந்துள்ளனர்.
படத்தின் முடிவுக் காட்சிகள், படத்தின் பாதியிலேயே காட்டப்படுவது சிறப்பான உத்தியாக உள்ளது.
அசத்தலான வெளிப்பாடு
அவசரமாக முடிவு செய்யப்பட்டு நடந்து முடிந்த திருமணம். பெண், ஆண் இருவரும் போட்டோக்களைப் பார்த்ததோடு சரி. அடுத்த காட்சி நேராக முதலிரவு தான்.
மனைவியின் உணர்வுக்கு மரியாதை தரும் கணவன். உள்ளங்கள் இணையக் காத்திருக்கிறான் கணவன்.
ஒரு நாள், ”வா வெளியே போய் வரலாம்” என்கிறான். அவளும் கிளம்புகிறாள்.
அழகான நதியோரம் அமர்ந்து உள்ளம் திறக்கிறார்கள் இருவரும். எல்லாம் பேசுகிறார்கள்.
”ஏன் என்னை முதலிரவு அன்று எதுவும் செய்யவில்லை” என்பது முதற்கொண்டு பேசித் தெளிகிறார்கள்.
அந்தப் பேச்சு ஒட்டுமொத்த புரிதலுக்கும் அடிப்படையாய் அமைந்திருக்கிறது. தன் அன்பை மோதிரமாகப் போட்டு விடுகிறான் மனைவிக்கு.
பேச்சின் இடையிடையே நதியையும் இருவரும் இரசிக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் ”நீச்சல் தெரியுமா” என்கிறாள். அதுவே வினை ஆகிறது. ”இருவரும் சேர்ந்து நீந்துவோம் வா” என்கிறான் அவன்.
வராத பொழுது நீண்ட நேரம் அவன் மட்டும் நீந்துகிறான். அப்பொழுது தசைப்பிடிப்பு நோயான ”க்ராம்ஸ்” வந்து விடுகிறது.
நீந்த முடியாத அவனை நதி அடித்துச் செல்லுகிறது. காப்பாற்றப் போன மனைவியும் நதியில் காணாமல் போனாள்.
என்ன சொல்வது விதியை? புரிந்து கொள்ள ஆரம்பித்த அந்தக் கணமே வாழ்க்கை இருவருக்கும் காணாமல் போனது.
காட்சியமைப்பில் இந்த இடத்தில் மனம் வெடவெடத்துப் போகிறது; ஆட்டம் காண்கிறது.
சிந்தனைகள் சுருண்டு போய் விடுகின்றன. சுஜாதாவின் இந்தச் சோகம், இயக்குனரின் இந்தச் சோகம் கையில் கண்ணாடித் துண்டுகளாகத் தெறித்து சிதறி விழுகிறது.
முற்போக்கும் பிற்போக்கும்
திருமணத்திற்குப் பிறகு மனைவியைப் படிக்க வைக்க விரும்புகிறான். பெண் விரும்பும் பொழுதுதான் உடலுறவு செய்து கொள்ள நினைப்பது, பூணூல் போட மறுப்பது, கடவுள் மறுப்பு, பழமைப் போக்கிற்கு எதிராகக் கோபப்பட்டுப் பேசுவது எனக் கதாநாயகன் முற்போக்குச் சிந்தனை கொண்டவனாக இக்குறும்படத்தில் காட்டப் பெற்றிருக்கிறார்.
தாலியைக் கழற்றினால் சாமி தண்டிக்கும், கணவன் உயிருக்குத் தீங்கு ஏதும் ஏற்படும் எனும் பழமை வாதம், பூணூல் போட வலியுறுத்துவது, பெரியவர்கள் எது கூறினாலும் எதிர்த்துக் கூறக்கூடாது எனக் கொள்கைகள் கொண்டவளாக கதாநாயகி காட்டப்படுகிறார்.
இவர்கள் இருவரும் இருமுனைகள் ஆக இருந்தாலும், பேசித் தீர்த்துக் கொள்வதற்கு முக்கியத்துவம் தருகின்றனர். இந்த இரண்டு எதிர்முனைகளும் பேசிப் பேசி உடன்படாகி ஒன்றிப் போய்விடுகிறார்கள்.
ஆனால் விதி அவர்களை வாழத்தான் விடவில்லை. இருவரும் மனதாலும் உடலாலும் ஒன்று சேர நினைத்தனர். ஆனால் அது முடியாது இழப்பால் ஒன்றிப் போயினர்.
காட்சி அமைப்புகள்
நதியில் வாத்துகள் பிரிந்து பிறகு சேர்ந்து நீந்துவது, குருவிகள், பறவைகள் பறந்து செல்வது இவையெல்லாம் கதையோடு ஒன்றிப் போய்க் குறியீடாக நின்று கதை கூறுகின்றது. இது சிறப்பான வெளிப்பாடாகும்.
மோதிரம் இலைமேல் நதியில் கிடப்பது கதாநாயகியும் இறந்தாள் எனக் குறிப்பாகக் காட்டும் இடமாக உள்ளது. இவ்வாறாகக் குறியீடாகச் சில காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கைதேர்ந்த இயக்குனராக அன்பிலாமதி இக்குறும்படத்தின் மூலம் வெளிப்படுள்ளார்.
இயற்கை அழகு படம் முழுவதும் பேசுகிறது; அழுகிறது; சிரிக்கிறது. நம்மை எங்கோ அழைத்துச் சென்று மனதை அலைய விடுகிறது.
ஒளிப்பதிவு படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணியாக உள்ளது. திலீபன் பிரபாகர் இதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
சேரனின் இசையில், மெல்லிய உணர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதற்றத்தைப் வயலின் மென்று துப்பி இருக்கிறது. பியானோவின் கரங்கள் படம் முழுவதும் கட்டி அணைத்து இருக்கிறது. அருமையான இசை
திருமணமான இருவரின் மனதில் எழும் உணர்வுப் பெருக்கை உண்மையில் படமாக்குவது சாதாரண விஷயமல்ல. சுஜாதாவே இந்தக் கதையை எழுதும் பொழுது, ”இந்தச் சமயத்தில் நடப்பது முழுவதும் சொல்வது கடினமான காரியம்” என்கிறார். அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி ஆனது.
ஆத்மா, இந்துமதி ஆக நடித்த கண்ணிக ரவி ஸ்ரினி இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். அய்யங்கார் பாஷையில் பாதி பேசுகின்றனர். வழியப் பேசுவது போல் சில வசனங்கள் இருக்கின்றது.
கொஞ்சம் சிரமம் பார்க்காமல் நதியோரம் படப்பிடிப்பை நடத்தி இருக்கலாம். அமைதியான மெளனமான நதியாக இது இருக்கிறது .
குறும்படம் குறித்து ஒரு வாசகர் கூறும்பொழுது, “முதலில் கேமராமேனுக்கு சிறப்புக் கைதட்டல்கள். எல்லாக் கோணங்களும் இருப்பிடங்களும் அருமை, குறிப்பாக நீண்ட ஷாட் அருமை… மிக நீண்ட காலத்திற்குப் பிறகு நான் எனது நண்பரிடமிருந்து பெற்ற ஒரு ஷார்ட்ஃபில்மைப் பார்த்தேன் … solla vathaiyillai.anyhow வாழ்த்துக்கள் முழு குழுவும், இயக்குனருக்குச் சிறப்பு வாழ்த்துக்களும், ” என்கிறார்.
படக்குழு
எழுதி இயக்கியவர்: அன்பிலா மதி
ஒளிப்பதிவு: திலிபன் பிரபாகர்
இசை: சேரன்
எடிட்டிங்: சதீஷ்
தயாரிப்பு நிர்வாகி: ஹென்றி குமார்
நதியோரம் குறும்படம் பாருங்கள்
குறும்படத்தைக் காண கீழே உள்ள காணொளியை சொடுக்கவும்.
(குறும்படம் விரியும்)
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!