நந்தியாவட்டை பூ கைப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. முக்கியமாகக் கண் நோய்களுக்குப் பயன்படும் பல மருந்துகளில் இது சேர்கின்றது. கண்காசம், படலம், மண்டைக்குத்தல் ஆகியவை கட்டுப்படும்.
நந்தியாவட்டை பால், வேர், ஆகியவை காரச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. நந்தியாவட்டை பால் வெட்டுக் காயங்களைக் குணமாக்கும். நந்தியாவட்டை வேர், புழுக்களைக் கொல்லும்.
நந்தியாவட்டை புதர்ச்செடியாகவோ அல்லது குறுஞ்செடியாகவோ காணப்படும். நந்தியாவட்டை இலைகள், எதிர் அடுக்கில் அமைந்தவை. கரும்பச்சை நிறமானவை. பளபளப்பானவை. ஈட்டி வடிவமானவை.
நந்தியாவட்டை மலர்கள், நுனியில் தொகுப்பாக அமைந்தவை. வெண்ணிறமானவை. 5 இதழ்களுடன் கூடியவை. மலர் இதழ்கள் தட்டு போன்று விரிந்தவை. திருகு இதழ் வடிவமானவை. ஆண்டு முழுவதும் பூக்கள் மலர்ந்து கொண்டிருக்கும்.
நந்தியாவட்டை சமவெளிகள், கடற்கரை பகுதிகளில் பயிரிடப்படுகின்றன. நந்தியாவட்டை அழகுச் செடியாகவும், இதன் மருத்துவப் பயன்பாட்டிற்காகவும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. அடுக்கிதழான மலர்களைக் கொண்ட நந்தியாவட்டையும் உண்டு. ஆனால் 5 இதழ்களைக் கொண்ட பூக்களே மருத்துவத்தில் பயன்படுவதாகும்.
திருக்கோயில் நந்தவனங்களில் நந்தியாவட்டைச் செடி கட்டாயமாக வளர்ந்திருக்கும். நந்திபத்திரி, நந்தியாவர்த்தம், சுயோதனன் மாலை ஆகிய முக்கியமான மாற்றுப் பெயர்களும் உண்டு. நந்தியாவட்டை பால், பூ, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.
நந்தியாவட்டை பூ இதழ்களிலிருந்து சாறு எடுத்து சம அளவு தாய்ப் பாலுடன் கலந்து 2 துளிகள் கண்ணில் விட கண் சிவப்பு குணமாகும்.
நந்தியாவட்டை பூவால் ஒற்றடம் கொடுக்க வேண்டும். அல்லது 2 துளி பூச்சாற்றை கண்ணில் விட கண் எரிச்சல் குணமாகும்.
பல்வலி குணமாக ஒரு துண்டு வேரை வாயிலிட்டு 10 நிமிடங்கள் நன்கு மெல்ல வேண்டும். பிறகு துப்பி விடலாம்.
நந்தியாவட்டை வேர் ஒரு துண்டை நன்கு நசுக்கி ஒரு டம்ளர் நீரில் போட்டு ½ டம்ளர் அளவாக காய்ச்சி இரவில் மட்டும் ஒரு வேளை குடிக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்.