நன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11

ஒரு சிறிய வாளியில் நீர் நிரப்பிக் கொண்டு, கூடவே, ஒரு தட்டில் ஒரு பிடி அரிசியும், ஒரு இட்லியும் எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றேன்.

மே மாதம், அதுவும் மதியப் பொழுது என்பதால், வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

வாளியில் இருந்த நீரை மாடியில் வைத்திருந்த ஒரு அகண்ட வாயுடைய மட்பாண்டத்தில் வழிய வழிய ஊற்றினேன்.

அருகிலேயே, அரிசியையும் மேல்தளத்தில் தூவி பரப்பினேன். அந்த இட்லியை நன்றாக பிசைந்து, பக்கத்தில் வைத்தேன்.

பின்னர், மொட்டை மாடியின் வடக்கு திசையில் இருந்த கைப்பிடிச் சுவற்றின் அருகில் சென்றேன். அங்கு தான் தென்னை மரத்தின் நிழல் இருந்தது. மேல்நோக்கி மரத்தை பார்க்க, மரக்கிளைகள் அசையாமல் இருந்தன.

திடீரென ஒரு காகம், அந்த மட்பாண்டத்தின் அருகில் வந்து நின்றது. மிகுந்த எச்சரிக்கையுடன், அதிலிருந்த நீரைப் பருகியது.

அடுத்து பக்கத்திலிருந்த இட்லியை கொத்தி எடுத்து, விழுங்கியது. மீண்டும் ஒருமுறை நீர் அருந்திவிட்டு “கா..கா.. கா..கா..” என்று கரையத் துவங்கியது.

அடுத்த சில நொடிகளில் மேலும் சில காகங்கள் அங்கு வந்து சேர்ந்தன.

அதற்கிடையில் எனது கவனம் மீண்டும் தென்னை மரத்தின் மீது திரும்பியது. தேங்காய்களையும், ஓலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் அரிசி, இட்லி வைத்திருந்த இடத்தைப் பார்த்தேன். அங்கு காகங்கள் இல்லை.

இட்லியும் ஒரு சில துணுக்குகளே இருந்தன. அருகில் சென்று பார்க்க, மட்பாண்டத்தில் இருந்த நீர் ததும்பிக் கொண்டிருந்தது. அதில் சில இட்லி துணுக்குகளும் இருந்தன.

“இட்லி எப்படி தண்ணில போச்சு?” என்று யோசித்தேன்.

என்ன குழப்பம்?

“சார், ஏதோ குழப்பமா இருக்கீங்க போல?” என்றது நீர்.

உடனே, “நீர் தானா?” என்றேன்.

“ஆமாங்க… என்ன குழப்பம்?”

“தரையில இருந்த இட்லி எப்படி தண்ணீல வந்துச்சு?”

“காகங்கள் தான், இட்லி துணுக்குகள தண்ணில போட்டு ஊர வச்சு சாப்புட்டிச்சீங்க”

“அப்படியா! ஆச்சரியமா இருக்கே?”

“சார், இட்லி என்னிக்கு பண்ணினது?”

“நேற்று இரவு”

“அதான், வற‌ண்ட இட்லி துணுக்குகள தண்ணீல ஊர வச்சு காகங்கள் சாப்புடுதுங்க”

“அப்படி ஒன்னும் இட்லி வற‌ண்டு போயில்லையே”

“காகங்களுக்கு எப்படி இருந்திச்சோ? தெரியல.”

அப்பொழுது என்னுள் ஒரு சந்தேகம் எழுந்தது. நாம குடிக்கர நீர் ‘நன்னீர்’. ஆனா, காகங்களுக்காக இப்ப எடுத்துக்கிட்ட வந்த நீர் ‘கடின நீரா’ இருக்கலாம்.

ஏன்னா, அத வீட்டு குழாயில புடிச்சிக்கிட்டு தான் வந்தேன். இந்த நீர நாங்க சமைப்பதற்கும், குடிப்பதற்கும் பயன்படுத்துவதில்ல.

நன்னீர் என்றால் என்ன?

“என்ன சார் மறுபடியும் குழப்பமா?” நீர் கேட்டது.

“இது நன்னீர் இல்ல. இருந்தாலும் இத காகங்கள் குடிக்குதே, அதான் யோசிச்சேன்.” என்றேன்.

“நன்னீரா? எதனால எனக்கு இந்த பேரு?”

“ஓ..ஓ… உனக்கு தெரியாதுல்ல… சொல்றேன். பூமியில மூன்றில இரண்டு பங்கு நீ தான் இருக்க. ஆனா, ஒட்டு மொத்த நீர்லயும், வெறும் 2.5% மட்டுமே நன்னீரா இருக்க. இதுலயும், பெரும்பாலும் பூமியோட துருவப் பகுதியில பனிப் பாறைகளா உறைஞ்சிருக்க. ஆக மொத்தத்துல 1% க்கும் குறைவாகத்தான் மனித பயன்பாட்டிற்கு நீ, நன்னீரா கிடைக்கிற.”

“சார், நன்னீரா, நான் எவ்வளவு இருக்கேன்னு இப்ப சொன்னீங்க. ஆனா நன்னீருக்கான விளக்கத்தை சொல்லலையே.”

“ஆமாம்ல… சொல்றேன். நன்னீர் என்பது, உப்புக்கள் மிகவும் குறைந்த அளவில் கரைந்துள்ள நீராகும். இன்னும் குறிப்பா சொல்லனும்னா, ஆயிரத்துக்கு, 0.5 பகுதி கரைந்த உப்புக்களைக் கொண்டுள்ள நீரே நன்னீருன்னு சொல்றாங்க.”

“நல்லது சார். ஆனா நான் எல்லா இடத்துலேயும் ஒரே மாதிரி இருப்பதில்லையே”

“ஆமாம். நீ சரியாத் தான் சொல்றே. வெப்பநிலை, அமிலத் தன்மை, மற்றும் கரைந்திருக்கும் வேதிச் சேர்மங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள பொறுத்து உன்னோட, அதாவது நன்னீரோட தரம் மாறுது.”

“அப்படியா, அப்ப உங்களுக்கு எங்க நன்னீர் கிடைக்குது?”

“இம்..ம்ம்…ஏரி, ஆறு, நீரோடை, ஈரநிலங்கள், மற்றும் சில இடங்களிலுள்ள நிலத்தடி நீர் முதலியன நன்னீர் மூலங்களாக எங்களுக்கு பயன்படுது. எல்லாத்துக்கும் மிக முக்கியமான மூலம் மழை தான்.”

“சரிங்க சார். இதுல ஒரு சந்தேகம்.”

“என்னது கேளேன்?”

“நிலத்தடி நீருன்னு புதுசா சொல்றீங்களே. அதுபத்தி சொல்ல முடியுமா?”

“ஆம்… மேற்பரப்பு நீர், தரையில இருந்து, மண் போன்ற நுண்ணிய பொருட்கள் மூலமா ஊடுருவிச் சென்று, பூமியின் ஆழத்துல இருக்கும் பாறையின் இடுக்குகள்ல தேங்கியிருக்கும். இந்த நீருக்கு பேரு தான் நிலத்தடி நீர்.”

“ஓ… இதுக்குப் பேருதான் நிலத்தடி நீரா?”

“ஆமா…. இம்ம் சொல்ல மறந்துட்டேன். கடலுக்கருகில, சில இடங்கள்ல, கிணறு தோண்டினா கூட, நன்னீர் கிடைக்க வாய்ப்புண்டு. அதுக்கு கடற்கரையிலும் நிலத்தடி நன்னீரா இருக்கனும்.”

நன்னீர் பயன்கள்

“சரி தான். ஆக, நீங்க அருந்துவதற்கும் சமைப்பதற்கும் நான், நன்னீரா இருக்கும் போது பயன்படுறேன். இல்லையா?”

“ஆமா. அதுமட்டுமில்ல… வேளாண்மை, மின்சார உற்பத்தி, மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல வகைகளிலும் நன்னீரைத் தான் நாங்க பயன்படுத்துகிறோம். அத்தோட, சுற்றுச்சூழலுக்கும், மனித நாகரிக வளர்ச்சிக்கும் நன்னீர் தான் முக்கிய பங்காற்றுகிறது.

உலகில், 10% விலங்குங்கள் நன்னீர் சூழ்நிலைகளில மட்டுமே வாழ்கின்றன. சுருக்கமா சொல்லனும்னா, நன்னீர் உயிரினங்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒரு வளமாகும்.”

“நல்லது. நான் உங்களுக்கு நன்னீராக பயன்படுவதில ரொம்ப மகிழ்ச்சி” என்றது நீர்.

“நாங்க தான் உனக்கு நன்றிகள் சொல்லனும்” என்றேன்.

அப்பொழுது தான், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்திருந்ததை நான் உணர்ந்தேன். தளம் நன்றாக சூடாகியிருந்தது. அதனால் தொடர்ந்து அங்கு நிற்க முடியவில்லை.

தவிர சில குருவிகளும் கைப்பிடிச் சுவற்றின் ஓரத்தில் கூட்டமாக வந்து கீச்சிட்டபடியே இருந்தன. அவை அரிசி உண்பதற்கு ஏதுவாக, உடனே, அங்கிருந்து புறப்பட்டேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

இதைப் படித்து விட்டீர்களா?

மின்னாற்பகுப்பு நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 12

நீருடன் ஓர் உரையாடல் 10 – வெந்நீர்

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

One Reply to “நன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.