நன்மை சேருமடி!

கும்மியடிப் பெண்ணே கும்மியடி
ஆனந்தம் பொங்கிட கும்மியடி
ஆண்டாளின் பேரைச் சொல்லியடி
ஆடிப்பாடி ஒன்று கூடியடி

ஆடிபூரத்தில் உதித்தவளை
ஆயர்க் குலவேந்தன் நாயகியை
ஆவலாய் அன்புடன் கூடிநின்று
ஆய்ச்சியாய் மாறி கும்மியடி

அன்று உலகம் அளந்தவனை
கண்ணுடன் கண்ணாய் கலந்தவளை
குங்குமம் அப்பியே கும்மியடி
மங்கலம் தங்கிட சொல்லியடி

நம்முடை நாயகி கோதையடி
நன்மையை செய்பவள் பாருங்கடி
நாரணன் நம்பி நாயகியை
நாட்திசை சூழ்ந்தே கும்மியடி

மாதவி விரித்த மை விழியில்
மாதவன் வீழ்ந்தான் மெய் வலையில்
மாப்பிள்ளையாகவே கைப்பிடிக்க
திருமாலிருஞ் சோலையான் வந்து நின்றான்

காதலினால் கோதை மெய் மெலிந்தாள்
காத்திருந்து திருவரங்கனை
கைப் பிடித்தாள்
பாதங்கள் தீர்க்கும் இவர்
திருபாதங்களை பேதமில்லாமல்
சேர்வோம்! நன்மை சேருமடி!!

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

தா.வ.சாரதி அவர்களின் படைப்புகள்