நன்றி கடன்

சுப்புலாபுரம்.

இன்னும் ஒரு வாரத்தில் சுந்தரத்திற்கு திருமணம்.

சுந்தரம் சென்னையில் தனியார் ஐ.டி. அலுவலக வேலை. கை நிறைய சம்பளம். குடும்பத்தோடு சென்னையில் செட்டில் ஆகி விட்டான்.

திருமணதிற்காக தான் தன் சொந்த ஊர் மதுரை சுப்புலாபுரத்துக்கு அத்தை மகளை திருமணம் முடிக்க தான் குடும்பத்தோடு வந்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு வரை இங்கு தான் படித்தான். அதன் பிறகு தந்தையின் தொழிலுக்காக ஊரை விட்டு சென்னைக்கு சென்றனர்.

நீண்ட வருடதிற்கு பிறகு இப்போது தான் ஊருக்கு வருகிறான் சுந்தரம்.

கார் ஊருக்குள் செல்லும் போது, தான் படித்த பள்ளியை பார்த்த சுந்தரத்திற்கு அதிர்ச்சி.

தான் படித்த சுப்புலாபுரம் அரசு பள்ளி மிகமோசமான நிலையில் இறுதி கட்டத்தை எட்டி இருந்தது.

பள்ளி மாணவர்களை வெளியில் அமர வைத்து பாடம் சொல்லி கொடுத்து கொண்டிருந்தனர்.

உடனே அங்கே இறங்கினான் சுந்தரம். குடும்பத்தினரை அனுப்பி வைத்து விட்டு பள்ளியை நோக்கி வந்தான்.

சுந்தரம் கண்களில் கண்ணீர் சொட்ட ஆரம்பித்தது.

சுந்தரத்தின் பள்ளி நினைவுகள் கண் முன் வந்தன.

“தம்பி யார பாக்கணும்?“ என்று முதியவர் அவன் தோளை தட்டி கேட்டார்.

“ஐயா! நான் வந்து…” என்று அவரை பார்த்து பேச ஆரம்பிக்க, தோள் மீது கை வைத்தவர் கணக்கு வாத்தியார் நாராயணன்.

அவரை பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி சுந்தரத்திற்கு.

“நாராயணன் சார்! நான் தான் உங்க மக்கு சுந்தரம்! 99 பேட்ச், என்னை மக்கு மக்கு சுந்தரம்ன்னு சொல்லுவீங்க. ஞாபகம் இருக்கா?” என்று ஆர்வமாக கேட்டான் சுந்தரம்.

“கொஞ்சம் ஞாபகம் இருக்கு சுந்தரம்! என்னப்பா பள்ளிகூடத்தை இப்படி ஆச்சரியமாக பார்க்கிறாய்?“ என்று நாராயணன் வாத்தியார் கேட்டார்.

“சார்! பள்ளிக்கூடம் இப்படி மோசமான நிலைல இருக்கு. அரசாங்கம் எதுவும் நடவடிக்கை எடுக்கலையா?“ என்று விசாரித்தான் சுந்தரம்.

“அரசாங்க பள்ளிகூடத்தில் யாரும் படிக்க ஆர்வம் காட்றது இல்ல. எல்லாரும் தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறாங்க.

அதான் அரசாங்கம் மாணவர்கள் எண்ணிக்கை கம்மியா இருக்குன்னு சொல்லி இந்த வருசத்தோட பள்ளிகூடத்தை மூட சொல்லி இருக்கு.

அதான் என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்.

மாணவர்கள்ல நிறைய பேர் தனியார் பள்ளிக்கூடத்தில் சேர்ந்துட்டாங்க. இப்போதைக்கு கொஞ்சம் பிள்ளைங்க தான் இருக்காங்க. அவர்களை வைத்து தான் பள்ளிக்கூடம் நடத்திட்டு இருக்கோம்.

அதுவும் வகுப்பறை சரி இல்லை. அதான் இப்படி பள்ளிகூட நடுவுல பந்தல் போட்டு உட்கார வைத்து பாடம் நடத்துறோம்.

அவ்வளவு தான் மூணு மாசத்தில் பள்ளிகூடத்தை முடிச்சிருவோம்!“ என்று நாராயணன் வாத்தியார் கூறினார்.

“பள்ளிக்கூடம் இந்த நிலைல இருந்தா யார் வந்து படிப்பாங்க நாராயணன் சார்! பள்ளிகூடம் மாதிரியா இருக்கு. நாங்க படித்த போது எப்படி இருந்துச்சு.

நவீன உலகத்திற்கு தகுந்த மாதிரி பள்ளிக்கூடமும் மாறுனா தான படிக்க வருவாங்க சார். அரசாங்க பள்ளியில படிச்சு பெரிய நிலைக்கு போனவங்க லட்ச கணக்குல இருக்காங்க!” என்று சுந்தரம் கூறினான்.

“ஆமா சுந்தரம்! நான் அரசாங்க பள்ளிகூடத்தையோ, அரசாங்கத்தையோ குறை சொல்லவில்லை.

அரசாங்க பள்ளிக்கு அரசு தான் நிதி உதவணும் என்பதிற்கு பதிலாக அதில் படித்த மாணவ, மாணவியர்கள் ஏதும் உதவி புரிந்தால் நல்லா இருக்குமே.

பள்ளியில் படித்தவர்கள் தங்களால் முடிந்த உதவி செய்தால் நன்றாக இருக்கும்.

இந்த மாதிரியான செயல்கள் அரசுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். இந்த செயல் நல்ல உதாரணமாக அமையும்.” என்று நாராயணன் வாத்தியார் சுந்தரத்திற்கு விளக்கம் அளித்தார்.

“நிச்சயமாக , நாராயணன் சார்! இது எனது நன்றி கடன். என்னை நல்ல மனிதனாக மாற்றிய இந்த பள்ளியை நல்ல நிலைக்கு கொண்டு வருவேன். இல்லை நல்ல நிலைக்கு கொண்டு வருவோம்!“ என்று தன்னுடன் படித்த நண்பர்களை வாட்ஸ் அப் மூலமாக தொடர்பு கொண்டான் சுந்தரம்.

“நன்றி கடன் செய்வோமா!” என்று நண்பர்களிடம் நாராயணன் வாத்தியார் கூறிய செய்தியை பரிமாறினான்.

செய்தி காட்டு தீ போல ஒருவர் தொடர்பில் இருந்து ஒருவராக பயணம் நீண்டு கொண்டே சென்றது.

இறுதியில் அனைவரும் தங்களால் இயன்ற உதவி செய்வதாக சொன்னார்கள்.

உதவி செய்ததோடு மட்டும் இல்லாமல் சுந்தரத்தின் திருமணதிற்கு வருகிறோம்; அன்று அனைவரும் சந்திப்போம் என்றும், தங்களை நல்ல நிலைக்கு வளர்த்து விட்ட பள்ளிகூடத்தை நாங்கள் அனைவரும் நல்ல நிலைக்கு கொண்டு வருவோம் என்று கூறினார்கள் நண்பர்கள்.

நாராயணன் வாத்தியார் இதனை எதிர்பார்க்கவில்லை. மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

‘பள்ளிக்கூடம் மீண்டும் நல்ல நிலைமைக்கு வர போகிறது!’ என்று மகிழ்ச்சி அடைந்தார் நாராயணன் வாத்தியார்.

இந்த நன்றி கடன் அனைவருக்கும் உண்டு. நன்றி கடனை நம்மால் முயன்றவரை செய்வோம். நமது பள்ளி நமது கடமை.

மாதா பிதா குரு தெய்வம்

மணிராம் கார்த்திக்
மதுரை
கைபேசி: 9842901104

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.