நமக்கும் கீழானோர் உலகில் உண்டு என்ற கதையிலிருந்து நாம் செயல்படும் விதத்தை அறிந்து கொள்ளலாம்.
பசுஞ்சோலை என்ற காட்டில் உயரமான மலை ஒன்று இருந்தது. அம்மலையின் அடிவாரத்தில் அழகிய ஏரி இருந்தது. அம்மலையில் முயல்கள் கூட்டமாக வாழ்ந்து வந்தன.
அவைகள் மிகவும் சாதுவானவைகளாக இருந்தன. மற்ற விலங்குகளைப் பார்த்தாலும், சிறுசப்தம் கேட்டாலும் அவை ஓடி ஒளிந்து கொள்ளும்.
இவ்வாறு அவை மற்ற விலங்குகளுக்கு பயந்து வாழ்வது அவைகளுக்கு பிடிக்கவில்லை. எனவே முயல்கள் எல்லாம் ஓரிடத்தில் ஒன்று கூடின.
தங்களின் பயம் மற்றும் அதனை எவ்வாறு போக்குவது? என்பது பற்றி தங்களுக்குள் பேசிக் கொண்டன. இறுதியில் உயரமான மலைப் பகுதியை விட்டு கீழே இருக்கும் ஏரிக்கரைக்கு சென்று வாழ்வது தான் தங்களின் பயத்தைப் போக்கும் வழி என்று முடிவு செய்தன.
தங்களுடைய முடிவினை செயல்படுத்த எண்ணி எல்லா முயல்களும் ஒரே நேரத்தில் மலையிலிருந்து ஏரிக்கரைக்கு தாவி குதித்தன.
முயல்கள் குதித்தால் ஏற்பட்ட அதிர்வினால் ஏரிக் கரையில் இருந்த தவளைகள் பயந்து ஏரியின் தண்ணீருக்குள் சென்று ஒளிந்தன.
இதனைக் கவனித்த ஒரு முயலானது மற்ற முயல்களிடம் “நண்பர்களே, சற்று நில்லுங்கள். நாம் தான் மற்ற விலங்குகளின் சப்தத்திற்கு பயந்து வேறு இடத்திற்கு செல்ல முயல்கிறோம்.
ஆனால் நம்முடைய காலடிச் சத்தம் கேட்டு அஞ்சி இங்குள்ள தவளைகள் ஏரி நீருக்குள் சென்று பதுங்கியதைப் பார்த்தேன். ஆதலால் வீண் பயம் தேவை இல்லை” என்று கூறியது.
நாம் நம்முடைய நிலையை நினைத்து மிகவும் மனம் வருந்தி, எந்நேரமும் தாழ்வு மனப்பான்மையில் இருப்பதைக் கைவிட வேண்டும்.
நம்முடைய சூழ்நிலைகளை ஏற்றுக் கொண்டு, அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றியும், அவற்றை எவ்வாறு மேம்பாடு செய்வது என்பது பற்றியும் நிதானமாக யோசிப்போம்.
பயத்தோடு செயல்பட வேண்டாம்; எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செயல்பட வேண்டாம் என்று சொன்னது.
எல்லா முயல்களும் அது சரி என்று சொல்லி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிப் பொறுமையாக யோசிக்க ஆரம்பித்தன.
நமக்கும் கீழானோர் உலகில் உண்டு கதையின் நீதி
நம்மை விட பலசாலிகளையும், உயர்ந்தவர்களையும் எண்ணிப் பார்க்கும்போது, நம்மைவிட தாழ்ந்தவர்களும், பலமில்லாதவர்களும் உலகில் உண்டு என்பதை நாம் நினைவில் வைத்து, பதற்றமில்லாமல் செயல்பட வேண்டும்.