நமஸ்கார் தண்டால் செய்வது எப்படி?

நமஸ்கார் தண்டால் செய்வது எப்படி? என்ற‌ இக்கட்டுரை, டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா எழுதிய இந்திய நாட்டு தேகப் பயிற்சிகள் என்ற நூலில் இடம் பெற்ற கட்டுரை ஆகும்.

பெயர் விளக்கம்

நேர் தண்டால் செய்வதுபோல முதலில் செய்து, பிறகு முன்நெற்றித் தரையில் படுமாறு தண்டால் செய்யும்பொழுது, கீழே விழுந்து வணங்கி, பெரியவர்களை நமஸ்காரம் செய்வது போலத் தோன்றும்.

இந்த‌ அமைப்பினால் நமஸ்கார் தண்டால் அல்லது வணங்கும் தண்டால் என்று பெயர் பெற்றது.

சூரிய நமஸ்காரத் தண்டால் முறையின் ஒருபகுதி முறையாகவும் இது அமைந்திருக்கிறது.

செய்முறை

முதல் நிலை : நேர்த் தண்டாலின் ஆரம்ப நிலையில் முதலில் இருக்க வேண்டும்.

பின்புறமாகக் கால்களை நீட்டிவிட்டு நெஞ்சினை முன்தள்ளி, உள்ளங்கைகளுக்கு இடையில் இருப்பதுபோல வைத்து, தரைக்கு இணையாக உடலை நேர்க்கோட்டிலும் வைத்திருக்க வேண்டும்.

இரண்டாம் நிலை : இந்த முதல் நிலையிலிருந்து, முழங்கைகளை நன்கு உடலுடன் ஒட்டி வருவது போல மடக்கி, தரையினைத் தொடாதவாறு உடலை கீழ்ப்புறமாகத் தாழ்த்தி முன் நெற்றியால் தரையைத் தொட வேண்டும்.

தரையைத் தொட்டபிறகு மீண்டும் தொடக்க நிலைக்கு எழுந்து வரவேண்டும்.

குறிப்பு

இதுபோல் மீண்டும் பலமுறை செய்ய வேண்டும்.

தரைநோக்கி உடல்போகும் பொழுதும், முழங்கைகளை மடக்கும் பொழுதும், அவசரமில்லாமல் நிதானமாக தண்டாலை செய்ய வேண்டும்.

முன் நெற்றியால் தரையினைத் தொடும்பொழுது, நெற்றி மட்டுமே தரையைத் தொடவேண்டும்.

முன்பாதங்களையும் உள்ளங்கைகளையும் தவிர வேறு உடலின் எந்தப் பகுதியும் தரையின்மேல் படக்கூடாது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.