நமிநந்தியடிகள் நாயனார்

நமிநந்தியடிகள் நாயனார் – தண்ணீரால் விளக்கு ஏற்றியவர்

நமிநந்தியடிகள் நாயனார் எண்ணெய்க்குப் பதிலாக குளத்துத் தண்ணீரைக் கொண்டு கோவில் முழுவதும் விளக்கு ஏற்றியவர்.

இறைவனாரால் ‘உலக மக்கள் அனைவரும் சமமே’ என்று அறிவுறுத்தப்பட்டவர் நமிநத்தியடிகள்.

சோழ நாட்டில் திருவாரூக்கு அருகில் இருந்த ஏமாப்பேருரில் வேதியர்கள் பலர் வசித்து வந்தார். அவர்களில் நமிநந்தியடிகளும் ஒருவர். ஏமாப்பேரூர் தற்போது திருநெய்ப்பேர் என்று வழங்கப்படுகிறது.

அவர் சிவபெருமானிடம் மாறாத பக்தியும் சிவகைங்கரியத்தில் இடைவிடாத ஈடுபாடும் உடையவராக விளங்கினார். வேத நூற் பயிற்சியும் ஒழுக்கச் சிறப்பும் இரவும் பகலும் இறைவனின் திருவடியையே சிந்தித்து வாழும் இயல்பும் கொண்டிருந்தார் அவர்.

அவர் தினமும் தன்னுடைய வீட்டில் சிவ வழிபாட்டினை முடித்து விட்டு, அருகிலிருந்த திருவாரூரில் வீற்றிருக்கும் இறைவனான வீதிவிடங்கரை தரிசித்து, பகலில் சிவலாயத்தில் தொண்டுகள் செய்து, இரவு வீடு திரும்பி சிவவழிபாடு மேற்கொண்டு உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

நீரால் விளக்கு ஏற்றுதல்

திருவாரூர் கோவிலில் பல சந்நிதிகள் உண்டு. அதில் திருக்கோவிலின் மதிலுக்கு அருகில் திருவாரூர் அறநெறி என்பதுவும் ஒன்று. அங்கிருக்கும் இறைவனாருக்கு அறநெறியப்பர் என்பது திருப்பெயராகும்.

அவ்வாறு ஒருநாள் திருவாரூர் கோவிலில் பகலில் தொண்டுகள் செய்து கொண்டிருந்தார் நமிநந்தியடிகள். மாலை வேளை நெருங்கியது. அப்போது நமிநந்தியடிகள் அறநெறியப்பருக்கு திருவிளக்குகள் ஏற்ற என்று எண்ணி விருப்பம் கொண்டார்.

அவர் கையில் நெய் இல்லை. அவரின் இருப்பிடமோ தொலைவில் இருந்தது. ஆதலால் திருக்கோவிலின் அருகே உள்ள வீட்டில் நெய்யைப் பெற்று அறநெறியப்பருக்கு திருவிளக்கு ஏற்ற எண்ணம் கொண்டார்.

அச்சமயத்தில் சமணர்கள் பலர் திருவாரூரில் வாழ்ந்து வந்தனர். நமிநந்தியடிகள் திருவாரூர் திருக்கோவிலின் அருகில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்று அறநெறியப்பருக்கு விளக்கு ஏற்ற நெய் கொடுத்துதவுமாறு வேண்டினார்.

அவ்வீடு ஓர் சமணர் வீடு. ஆதலால் அவர்கள் நெய் கொடுக்க மறுத்ததோடு “உங்கள் இறைவன்தான் கையில் தீயை வைத்துள்ளாரே. அவருக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்? அவ்வாறு விளக்கு ஏற்ற வேண்டுமாயின் நெய்க்குப் பதிலாக தண்ணீரைக் கொண்டு விளக்கு ஏற்றுங்கள்.” என்று ஏளனம் செய்தனர்.

ச‌மணர்கள் கூறியதைக் கேட்டதும் நமிநந்தியடிகள் மனம் கலங்கினார்.

அறநெறியப்பரின் சந்நதியை அடைந்து, “இறைவா, சமணர்கள் கூறிய வார்த்தைகளால் என்னுடைய மனம் மிகவும் வருத்தமுற்றுள்ளது. இம்மொழிகளைக் கேட்பதற்கு என்ன பாவம் செய்தேனோ?” என்று மனதிற்குள் வேண்டினார்.

அப்போது இறைவனார் அசீரியாக, “வருந்தாதே. திருக்குளத்தில் உள்ள நீரை முகர்ந்து வந்து விளக்கு ஏற்று.” என்று அருளினார்.

அதனைக் கேட்டதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் எழுந்த நமிந்தியடிகள் திருக்கோவிலிருந்த தேவாசிரிய மண்டபத்தை அடுத்த உம்ம சங்குத் தீர்த்தம் என்ற திருக்குளத்தை நோக்கி ஓடினார்.

‘நமசிவாய’ என்னும் திருவைந்தெழுத்தை உச்சரித்தபடி திருக்குளத்து நீரை எடுத்துக் கொண்டு வந்து விளக்கில் ஊற்றி, திரியை முறுக்கிவிட்டு விளக்கை ஏற்றினார்.

நமிநந்தியடிகள் நீர்விட்டு ஏற்றிய விளக்கு, நெய் விளக்கினைவிட அதிகப் பிரகாசத்துடன் ஒளிர்ந்தது. இதனைக் கண்டு பரபவசம் அடைந்த நமிநந்தியார், குளத்து நீரினைக் கொண்டு திருக்கோவில் முழுவதும் விளக்குகளை ஏற்றினார்.

இரவு முழுவதும் விளக்குகள் எரியும் வண்ணம் எல்லா விளக்குகளிலும் நிரம்ப நீரினை ஊற்றி வைத்தார். இதனைக் கண்ட அனைவரும் வியப்பில் ஆழந்தனர். நீரால் நமிநந்தியடிகள் விளக்கு ஏற்றியதைக் கேள்விப்பட்ட சமணர்கள் வியந்தார்கள்.

இரவு நெடுநேரம் அறநெறியப்பரின் சந்நிதியில் இருந்துவிட்டு நமிநந்தியார் தமது இருப்பிடம் திரும்பி சிவவழிபாட்டினை முடித்துவிட்டு நித்திரை கொண்டார். மறுநாள் வழக்கம்போல் காலையில் சிவவழிபாட்டினை வீட்டில் முடித்துவிட்டு திருவாரூர் திருக்கோவிலை அடைந்தார்.

புற்றிடங்கொண்ட பெருமானை வணங்கிவிட்டு திருக்கோவிலுக்கு உள்ளும் புறமும் தொண்டுகள் பல செய்தார். மாலை வேளையில் குளத்து நீரால் திருவிளக்குகளை கோவில் முழுவதும் ஏற்றினார்.

அறியாமை நீங்குதல்

இறையருளால் பல நாட்களாக நமிநந்தியடிகள் நீரால் விளக்கு ஏற்றியதைக் கேள்வியுற்ற சோழ மன்னன், திருவாரூர் திருக்கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பினை நமிநந்தியாருக்கு வழங்கினான்.

அதனை ஏற்றுக் கொண்ட அவர், வீதிவிடங்கர் திருவிளையாடலைக் காட்டும் விழாவையும் பங்குனி உத்திர விழாவையும் சிறப்பாக நடத்தினார்.

ஆண்டுக்கொருமுறை வீதிவிடங்கர் ஏமாப்பேரூரை அடுத்த மணலி என்ற ஊருக்கு எழுந்தருளுவது வழக்கம். அந்தாண்டும் வீதிவிடங்கர் மணலிக்கு வழக்கம்போல் எழுந்தருளினார்.

அப்போது அவரை வழிபட தொண்டர்களும் அன்பர்களும் என எல்லோரும் ஜாதிமத பேதமின்றி கலந்து கொண்டனர். அவர்களுடன் நமிநந்தியடிகளும் கலந்து கொண்டு வீதிவிடங்கரை வழிபட்டார்.

மாலை வேளையில் வீதிவிடங்கர் திருக்கோவிலுக்கு எழுந்தருளினார். நமிநந்தியாரும் வீதிவிடங்கருடன் திருக்கோவிலுக்குச் சென்றுவிட்டு வழிபாடு மேற்கொண்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பினார்.

வீட்டுத் திண்ணையில் படுத்து விட்டார். அதனைக் கண்ட அவரது மனைவியார் வெளியே படுத்திருக்கும் காரணத்தை வினவினார்.

அதற்கு நமிநந்தியார் “மணலியில் எழுந்தருளிய வீதிவிடங்கரைத் தரிசிக்க ஜாதி பேதமின்றி மக்கள் எல்லோரும் கூடினர். ஆதலால் தூய்மை கெட்டுவிட்டது. நான் குளிப்பதற்கு தண்ணீர் கொண்டு வா. குளித்துவிட்டு வீட்டிற்குள் வருகிறேன்” என்றார்.

அவ்வம்மையாரும் கணவர் குளிப்பதற்காக தண்ணீர் கொண்டுவர உள்ளே சென்றார். அதுசமயம் இறையருளால் நமிநந்தியாருக்கு தூக்கம் உண்டானது.

அவருடைய கனவில் இறைவனார் தோன்றி “திருவாரூரில் இருப்பவர்கள் எல்லோருமே எம் கணத்தவர். அவர்களுடன் நீ கலந்து எம்மை தரிசித்தது பற்றி உனக்கு ஏன் இவ்வாறான எண்ணம் ஏற்பட்டது? உண்மையை திருவாரூரில் நாளை காண்பாயாக.” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

உடனே கண் விழித்த நமிநந்தியார் தாம் எண்ணியது தவறு என்று நினைத்துக் கொண்டு, மனைவியிடம் இறைவனார் அறிவுறுத்தியதை எடுத்துக்கூறி குளிக்காது வீட்டிற்குள் சென்று வழிபாடு செய்து நித்திரை கொண்டார்.

மறுநாள் காலையில் எழுந்து வீட்டில் வழிபாடு மேற்கொண்டுவிட்டு திருவாரூர் சென்றார்.

அப்போது அங்கியிருந்தோர் எல்லோரும் சிவகணங்களாகக் காட்சியளித்தனர். ஆவர்களைக் கண்டதும் தலைமேல் கைகுவித்து தரையில் வீழ்ந்து வழிபட்டார்.

‘இந்த உண்மையை இதுவரையிலும் அறியாமல் போனேனே’ என்று வருந்தினார். ‘உண்மையை அறிவுறுத்தியதோடு இச்சிவகணக் காட்சியும் நமக்கு இறைவனின் கருணையால் கிடைத்ததே’ என்று மகிழ்ந்தார்.

அதுவரையிலும் சிவகணங்களாகக் காட்சியளித்தவர்கள் மீண்டும் பழைய உருவிற்கு வந்தனர். ‘எம் பெருமான் என்னுடைய அறியாமையைப் போக்கும் பொருட்டு எனக்கு இவ்வாறு காட்சியளிக்கச் செய்தான்’ என்று எண்ணியபடி திருக்கோவிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார்.

இவ்வாறு பலகாலம் இறைவனுக்கு திருவிளக்குத் தொண்டு உள்ளிட்ட பலதொண்டுகளைச் செய்த நமிநந்தியடிகள் நாயனார் இறைவனின் திருவடியில் கலந்து பேரின்பப் பெறுவாழ்வு பெற்றார்.

நமிநந்தியடிகள் நாயனார் குருபூஜை வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பின்பற்றப்படுகிறது.

இறையருளால் தண்ணீரால் விளக்குகள் ஏற்றிய நமிநந்தியடிகள் நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்’ என்று போற்றுகிறார்.