அவளின்றி அசையாது
அணுவின் துகளொன்றும்
அசைந்திடும் பொழுதிலே
விசையென எழுந்திடுவாள்!
திசையின் பக்கமெல்லாம்
இசையென நிறைந்திடுவாள்
பிசையும் மனதிற்கு
பிடிப்பொன்றைத் தந்திடுவாள்!
மாதொரு பாகனின்
சரிபாதி சக்தியவள்
மனித குலத்தின்
முத்தாய்ப்பு யுக்தியவள்!
எழுநிலை பருவத்தில்
ஏழ்பிறவியும் அடக்கிடுவாள்
நடுநிலை வழுவாது
நாயகமாய் வாழ்ந்திடுவாள்!
தேர்க்கால் சக்கரமாய்
வலிமையும் கொண்டிடுவாள்
வேர்போல் நீர்த்தேடி
வளமையும் கண்டிடுவாள்!
ஈட்டியின் கூர்முனை
விழிகளில் காட்டிடுவாள்
ஈட்டிய பொருளனைத்தும்
வீட்டிற்கு சேர்த்திடுவாள்!
சிறுதுளி பெருவெள்ளம்
வறுமையை வென்றிடுவாள்
சிறுமையின் குணமென்றால்
மறுகணம் அகன்றிடுவாள்!
கடிகார முள்கடந்து
காலத்தை வென்றிடுவாள்
சதிகார மனம்கடந்து
சாதனை புரிந்திடுவாள்!
விதியென்று வாழ்க்கையை
வாழ்ந்திட மறுத்திடுவாள்
மதிகொண்டு வாழ்வினை
மாற்றிடத் துணிந்திடுவாள்!
அதிகாரம் செய்திடில்
அடிமனம் கலங்கிடுவாள்
பரிகாரம் எதுவெனில்
அன்பினால் விளங்கிடுவாள்!
நிதிநிலை அறிக்கை
வீட்டினுள் வாசிப்பாள்
அதிலொரு தொகையை
அறமென யோசிப்பாள்!
ஞாலத்தின் விளக்காய்
ஞானத்தில் விளங்கிடுவாள்
நாணத்தைக் கடந்து
நம்பிக்கை ஊட்டிடுவாள்!
க.வடிவேலு
தகடூர்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!