அன்று புதன்கிழமை. வாரத்தின் நடுநாள். ஆச்சர்யப்பட வேண்டாம். வாரத்தின் ஐந்து நாட்கள் மட்டுமே வேலைநாளாக உள்ளவர்களுக்கு புதன் கிழமை வாரத்தின் நடுநாள்தான். ஆதலால் நான் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் சோர்ந்து போயிருந்தேன்.
அன்றைக்கு செங்கோட்டை ரயிலிலிருந்து மதுரை சந்திப்பில் இறங்கி வெளியே வந்து பேருந்திற்காக காத்திருந்தேன். மாட்டுத்தாவணிக்குச் செல்லும் பேருந்து வந்தது.
பேருந்தில் காலியான இருக்கைகளைப் பார்த்ததும் வேகமாகச் சென்று பேருந்தில் ஏறினேன்.
பேருந்தின் கடைசி இருக்கைக்கு முந்திய இருக்கையில் கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒரு பெண்மணி மட்டும் அமர்ந்திருந்தார். அப்பெண்மணிக்கு அருகே சென்று அமர்ந்தேன்.
பேருந்து மீனாட்சி பஜார் அருகே வந்தபோது அப்பெண்மணி என்னிடம் “சகோதரி, இந்த பஸ் அழகர்கோவில் செல்கிறதா?” என்று கேட்டார். அதற்கு நான் “இல்லை. இது மாட்டுத்தாவணி செல்கிறது” என்றேன்.
“இந்த பஸ் 44 சீரியல் தானே” என்று கேட்டார். “இல்லை. இது 48 ஒய். திருமங்கலத்திலிருந்து மாட்டுத்தாவணி செல்கிறது. நீங்கள் எங்கே இறங்க டிக்கெட் வாங்கியிருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.
பார்வை இல்லா பெண்மணி
அதற்கு அப்பெண்மணி “எனக்கு பாஸ்தான். ஆதலால் டிக்கெட் வாங்கவில்லை” என்று கூறினார். அப்போதுதான் நான் அவர் கையில் மடித்து வைத்திருந்த ஊன்றுகோலைக் கவனித்தேன். அவருக்கு கண்பார்வை இல்லை என்பதை உணர்ந்தேன்.
அப்பெண்மணி கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தவர்களிடம் “இந்த பஸ் மாட்டுதாவணி செல்கிறதாம். நாம் கோரிப்பாளையம் இறங்கி மாறி அழகர்கோவில் பஸ்ஸில் செல்வோம்” என்றார்.
அதற்கு பின்னால் அமர்ந்திருந்த பெண்மணி “அப்படியா. நாம் தமுக்கத்தில் இறங்கி மாறிச் செல்வோம்.” என்று கூறினார்.
என்னருக அமர்ந்திருந்தவர் என்னிடம் “சகோதரி, நீங்கள் எங்கே இறங்க வேண்டும்?” என்று கேட்டார்.
நான் “தமுக்கத்தில் இறங்குவேன்” என்று கூறினேன். “அப்படியானால் எங்களை தமுக்கத்தில் இறங்கி விடுங்கள்” என்று அப்பெண் கூறினார். நானும் சரி என்று கூறினேன்.
பின்னர் சிறிது நேரம் கழித்து அப்பெண்ணிடம் “நீங்கள் அழகர்கோவில் பஸ் பார்த்து ஏறிவிடுவீர்களா?” என்றேன்.
அதற்கு அவர் “அருகில் இருப்பவரிடம் கேட்டுத்தான் ஏறவேண்டும்” என்று கூறினார்.
உடனே “ நான் வேண்டுமானால் உங்களை அழகர்கோவில் பஸ்ஸில் ஏற்றிவிட்டு செல்கிறேன்.” என்று கூறினேன். அதற்கு அவர் சம்மதித்தார்.
தமுக்கம் வந்ததும் பஸ்ஸில் இருந்து இறங்க அப்பெண்ணின் கையைப் பிடித்தேன். இறங்கியபின்தான் கவனித்தேன். அவருடன் இறங்கிய இருவரும் அப்பெண்மணியின் கையை ஒருவர்பின் ஒருவராக பிடித்துக் கொண்டு இறங்கினர்.
அவருடன் இறங்கிய இருவருக்கும் பார்வை இல்லை என்பது என் மனதை ஏதோ செய்தது. கலங்கிய மனதுடன் அழகர்கோவில் பேருந்துக்காக காத்திருந்தேன்.
அன்று ஏனோ கால்மணி நேரம் ஆகியும் அழகர்கோவில் பேருந்து வரவில்லை. சேர்ஆட்டோக்காரர்கள் அழகர்கோவில் செல்வதாக அழைத்தனர்.
அம்மூவரும் அவர்களுக்குள் ஒருவருக்கு பதினைந்து வீதம் நாற்பத்தைந்து ரூபாய் ஆகும் என்று பேசிக் கொண்டனர். பேருந்தில் செல்ல பாஸ் இருப்பதால் செலவு ஆகாது என்பதை உணர்ந்தேன்.
அவர்களிடம் பணம் கொடுத்து ஆட்டோவில் ஏற்றிவிடட்டுமா? என்று கேட்க நினைத்தேன்.
அவர்கள் தவறாக நினைத்துவிடுவார்களோ என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அழகர்கோவில் பஸ் வந்தது.
கண்ணாடி அணிந்த பெண்மணியின் கையை நான் பிடித்து முன்னே செல்ல மற்ற இருவரும் ஒருவர் பின் ஒருவராக அப்பெண்மணியின் கையைப் பிடித்துக் கொண்டு பேருந்திற்குச் சென்றோம்.
பேருந்தில் ஏற்றிவிட்டதும் மூவரும் ஒருமித்த குரலில் “கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்” என்று கூறி நன்றி தெரிவித்தனர்.
பணம் கொடுத்து அவர்களின் சுய மரியாதையை நான் அழிக்கவில்லை. எனக்கு அது மன நிறைவாக இருந்தது.
ஒளியற்ற வாழ்வை வாழும் அவர்கள் பொறுமையாக, ஒற்றுமையாக தங்களின் பயணத்தைத் தொடர்ந்த விதம் என் வாழ்வில் நம்பிக்கை ஒளி பாய்ச்சியது.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!